Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பொழிப்புரை எழுதும் பெரியவாச்சான்பிள்ளைகள்

வைஸ்ணவ பிரபந்தங்களிற்கு பெரியவாச்சான்பிள்ளை, சிறியவாச்சான்பிள்ளை என்று இருவர் பொழிப்புரை எழுதினார்கள் என்று சொல்லுவார்கள். சமவுரிமை இயக்கம், முன்னிலை சோசலிசக்கட்சியின் கோசங்களிற்கு, அறிக்கைகளிற்கு இன்று சில வாச்சான்பிள்ளைகள் பொழிப்புரை எழுதுகிறார்கள். அன்றைய வாச்சான்பிள்ளைகள் பிரபந்தத்தில் என்ன சொல்லியிருந்ததோ அதை விரித்து, விளக்கமாக எழுதினார்கள். இன்றைய வாச்சான்பிள்ளைகள் சமவுரிமை இயக்கம் சொன்னதிற்கு நேரெதிராக விளக்கம் எழுதுகிறார்கள். சமவுரிமை இயக்கம் இனங்களின் ஒற்றுமைக்காக போராடும் போது இந்த வாச்சான்பிள்ளைகள், சமவுரிமை இயக்கமும் அதன் தோழமை அமைப்புக்களும் இனவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற சமவுரிமை இயக்கத்தின் முழக்கம் தரும் செய்தி என்னவாக இருக்கும். 1983 இல் நடந்த தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை இன்னொருமுறை, இனியொருமுறை வேண்டவே வேண்டாம் என்பது தான் என்றது பச்சைக்குழந்தைக்கும் விளங்கியிருக்கும். இனப்படுகொலையை வேண்டாம் என்று சொல்பவர்கள், அதற்கான கையெழுத்து போராட்டம் ஒன்றை நடத்துபவர்கள், இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் என்பதும் எந்தக் குழந்தைக்கும் விளங்கியிருக்கும்.

ஆனால் இந்த அரசியல் விற்பன்னர்கள் கேட்கிறார்கள் "இவர்கள் கூறும் செய்தி என்ன?. இன, மத, தேசிய ரீதியாக அடையாளப்படுத்த பௌத்த சிங்கள பெருந்தேசியத்தை தவிர வேறு ஒரு தேசியங்களிட்கும் உரிமை இல்லை என்று கூறுகிறார்களா?. இது என்ன கொடுமை. "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்பதிலே எங்கேயிருந்து சிங்கள பெருந்தேசியவாதத்தை இவர்கள் கண்டுபிடித்தார்கள். ஆட்டுக்கு மாட்டை விடுபவனுக்கு கூட அறிவு என்பது கொஞ்சமாக இருக்கும். "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்று இலங்கையின் தலைநகரத்தில், சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரத்தில், இலங்கை இனவாத அரசின் மையத்தில் நின்று கொண்டு போராடுபவர்கள் இனவாதிகள். போராடும் அவர்களின் அமைப்பு இனவாத அமைப்பு என்று சொல்பவர்களை விட புலம்பெயர் தொலைக்காட்சிகளில் அரசியல் ஆய்வு செய்யும் "அறிவாளிகள்" எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

"இனியும் ஒரு சிங்கள தேசத்திற்கு (ஒட்டு மொத்த சிறிலங்காவிற்கும்) இடையூறு வரக்கூடாது, வந்தால் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை மற்றைய தேசிய இனங்களிட்கு வரும் என்று மிரட்டுகிறார்களா"?. இது அரசியல் அறிஞர்களின் அடுத்த வியாக்கியானம். தமிழ்ப்பட கதாநாயகன் தான் "ஒரு முறை சொன்னால் நூறுமுறை சொன்னது மாதிரி" என்று பஞ்சு டயலாக் பேசுவான். ஆனால் இவர்கள் ஒரே ஒரு வசனத்திற்கு நூறு விளக்கங்களை அள்ளி வீசுகிறார்கள். "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்று இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டவர்களை, அதற்கு துணை போனவர்களை, இனப்படுகொலை நடந்தபோது கண்டும் காணாமலும் கடந்து போனவர்களை இந்த சுவரொட்டி மிரட்டுகிறதா? இல்லை சிங்கள பெருந்தேசியத்தின் சார்பாக நின்று கொண்டு மற்றைய தேசிய இனங்களை மிரட்டுகிறதா? என்பதை ஒரு அ.தி.மு.க அமைச்சர் பெருமகனிடம் கேட்டால் கூட சரியாக சொல்லி விடுவார்.

அளுத்கமவில் இரண்டு நாட்களில் எவ்வளவு பேரழிவினை பொதுபல சேனாவும் அதன் எஜமானர்களான இலங்கை அரசும் உண்டாக்கினார்கள் என்ற யதார்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் எவரும், இனங்களின் ஒற்றுமைக்காக பாடுபடுபவர்களை பகைவர்களாக நினைக்க மாட்டார்கள். யதார்த்தம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், நடைமுறையில் வேலை செய்வதை நினைத்தும் பார்க்காதவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள் தான் இப்படி எழுதி நடைமுறையில் வேலை செய்யாததற்கு நியாயம் கற்பிப்பார்கள்.

அளுத்கம, பேருவளையில் நடந்த முஸ்லீம் மக்களின் கலவரங்களிற்கு எதிராக எந்த முஸ்லீம் கட்சியோ, முஸ்லீம் அமைப்போ போராட முதல், சமவுரிமை இயக்கமே பெரும் போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்து போராடியது. இணையத்தில் இயக்கம் நடத்துபவர்கள் இலங்கையின் பயங்கரவாத அரசிற்கெதிராக போராடுபவர்களை இனவாதிகள் என்று கொச்சைப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசிற்கே துணை போகிறார்கள். இனங்கள் ஒற்றுமைப்பட்டு இலங்கையின் மக்கள் விரோத அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்று சொல்பவர்களை இனவாதிகள் என்று சொல்பவர்கள், இனங்களின் ஒற்றுமையை குலைப்பவர்களிற்கே துணை போகிறார்கள். அடுத்தமுறை அரசியல் ஆய்வு செய்ய தொடங்க முதல் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அன்புடனும் பட்சத்துடனும் வேண்டிக் கொள்கிறோம். {jcomments on}