Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

"பிறகு" சினிமா மிருக உணர்ச்சிக்குப பதில் மனித உணர்ச்சியை தட்டியெழுப்புகின்றது

பிரசன்ன விதானகே இயக்கிய "பிறகு" (சிங்களத்தில் "ஒப நத்துவா ஒப எக்கா" ஆங்கிலத்தில் "வித் யூ, வித்அவுட் யூ") கதையானது, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வெவ்வெறு மொழி பேசுகின்ற இருவர் இணைந்த வாழ்க்கையைச் சுற்றிய கதையாகும்.

சிங்களவரான சரத்சிறி மலையகத்தில் அடகுகடை நடத்துகின்றார். உணர்ச்சியை இனம் காண முடியாது விறைத்துப்போன வெறுமையுடன், மோட்டார் சைக்கிளும் அமெரிக்கா வகை மல்யுத்த சண்டையை பார்ப்பதையுமே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவன்.

தமிழரான செல்வி யாழ்ப்பாணத்திலிருந்து வந்து இதே ஊரில், தன் மொழி பேசும் ஒருவர் வீட்டில் தங்கி வாழ்கின்றாள். சோகத்தையும் இயலாமையையும் தன் வாழ்வாக கொண்ட ஒருவராக, தொடர்ந்து சிறிய நகைகளை அடகு வைப்பவராக வாழ்கின்றார். இதனால் சரத்சிறியின் கடைக்கு நகைகளை அடகு வைக்க வரும் அவள், வறுமையின் நிமித்தம் வயது முதிர்ந்தவரை மணக்க வேண்டிய சூழலும் உருவாகின்றது.

இந்த இரண்டு மனிதர்களைச் சுற்றிய வாழ்க்கையின் வெறுமை, பரிதாபம், ஒரு ஈர்ப்பு இருவரையும் இணைக்கின்றது. செல்வி முதியவரை திருமணம் செய்யும் சூழலை அறியும் சரத்சிறி, செல்வியிடம் தனது காதலை கூறி, தன் வாழ்க்கைத் துணைவியாக வருமாறு வேண்டுகிறான்.

இனம், மதம், மொழி, சாதி, நிறம், சமுதாய வரம்புகள் என அனைத்தையும் கடந்து இவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். இது அவர்கள் வாழ்க்கையை தடுத்து நிறுத்தவில்லை. இரண்டு மனிதனின் இணைவுக்கு இது எதுவும் தடையில்லை என்ற இயற்கையின் நியதியை, கதை தன் மைய அச்சாகக் கொள்கின்றது.

இருவரும் இணைந்த பின்பாக, கடந்த யுத்தகாலத்தில் தங்கள் சமுதாயம் சார்ந்து ஆற்றிய பங்கு பற்றி படிப்படியாக தெரிந்து கொள்கின்ற போது நடக்கும் போராட்டமும் உளவியல் சிதைவுமே பிந்தைய கதை.

இது தனிப்பட்ட இருவருக்கான முரண்பாடல்ல. இரண்டு இனம் சார்ந்து அவர்கள் சந்தித்த வாழ்க்கையை ஒட்டிய, அவரவர் பார்வை சார்ந்த புரிவும் அதையொட்டிய சமூக விழிப்பையும் மாற்றத்தையும் கதை முன்தள்ளுகின்றது. தனக்கும், தன் மொழிக்குள், தன் இனத்துக்குள், தன் பாலியல் எல்லைக்குள் புரிந்து கொண்ட ஒன்றை, பொதுமைப்படுத்தி ஒன்றுபட்ட முடிவை வந்தடையும் வாழ்க்கையே காதல் என்ற உண்மையை வந்தடையும் வாழ்க்கைப் போராட்டம் கதையாக்கப்பட்டு இருக்கின்றது.

செல்வியின் வறுமையும் சோகமும் யுத்தத்தின் கொடுமையாலானது என்பது சரத்சிறிக்கு தெரியவருகின்றது. செல்வி தன் நெருங்கிய உறவுகளை இழந்துள்ளது தெரிய வருகின்றது. செல்விக்கு ஏற்பட்ட  துயரத்துக்கு காரணமான இராணுவத்தைச் சேர்ந்தவனே, தன் கணவன் சரத்சிறி என்பது செல்விக்கு தெரிய வருகின்றது.

அதே நேரம் செல்விக்கு ஏற்பட்ட இழப்பை "பயங்கரவாத" செயலாக கூற முனையும் சரத்சிறிக்கு, இல்லை அவர்கள் சாதாரண பொதுமக்கள் என்று புரிய வைக்கும் செல்வியின் இயல்பான தவிர்க்க முடியாத கோபம் மனித உணர்ச்சியை தட்டிவிடுகின்றது. அதேநேரம் தனது இராணுவச் செயற்பாட்டை தன் வேலை என கூற முனையும் சரத்சிறியின் பரிதாபகரமான நிலையும் அது சார்ந்த எதார்த்த உணர்வும்.

இருவரும் தமக்கு இடையில் ஒத்த கருத்தை வந்தடைய முனையும் வாதங்களும், மொழியற்ற உளவியல் உணர்ச்சிகளும் அவர்களை கடந்து பார்வையாளன் உணர்வாக மாற்றுகின்றது.

மறுபக்கத்தில் சரத்சிறி சேர்ந்த இராணுவக்குழு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதையும், அதை மூடிமறைத்ததையும், அதனால் இராணுவத்தைவிட்டு விலகியதும் செல்விக்கு தெரிய வருகின்றது. இராணுவத்தின் குற்றங்களுக்கும் சரத்சிறிக்கும் சம்பந்தமில்லாத அந்த இடைவெளியை கடந்து பொதுப் புரிதலை வந்தடைய முனையும் செல்வியின் போராட்டமும், அதில் ஏற்பட்ட மனச் சிதைவும் தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றது.

இந்தக் கதை இரண்டு சமூகங்களும் கடந்தகாலச் சம்பவங்களையும் காட்சிகளையும் எப்படி சமூகம் புரிந்து வைத்து இருக்கின்றதோ, அதை எதிர்மறையில் முன்னிறுத்தி தகர்க்கின்றது. யுத்தப் பாதிப்பை அரசும் இனவாதிகளும் கூறுவதை புரிந்து வைத்திருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தின் முன் இந்த படம் அதிர்வைக் கொடுக்கின்றது. புலி மூலம் இராணுவத்தை தமிழ்ச் சமூகம் புரிந்து கொண்டதற்கு முரணாக, அவர்கள் தம்மையொத்த மனிதர்கள் தான் என்பதையும் கூலிக்குச் சென்ற மனிதர்கள் தான் என்பதையும், அங்கும் மனிதத் தன்மை இருக்க முடியும் என்பதை அழகாக எடுத்துக் கூறி இருக்கின்றது.

படத்தின் கதை மூலமாக அறிமுகமாகும் இரு பிரதான கதாபாத்திரங்களும், நிஜ உலகில் கற்பனையானதல்ல. இங்கு இருவரையும் இணைத்துவிட்டு கதை சொன்ன போது கூட, தனித்தனியாக நிஜத்தில் அவர்கள் வாழ்கின்றனர் என்பதை சமூகத்துடன் இணைந்து வாழ்கின்றவர்கள் இனம் காண முடியும்.

இன்று தமிழ்-சிங்கள மொழி பேசும் மக்களுக்கு இடையில், யுத்தத்துக்கு முந்தைய வேலி கிடையாது. இரண்டும் மக்களும் ஏதோ விதத்தில் இணைந்து வாழ்கின்ற சூழலே காணப்படுகின்றது. யுத்தம் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினர், இரண்டு தரப்பிலும் வாழ்கின்றனர் என்பதும், அதை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாது உள்ளதுமே இன்றைய எதார்த்தமாகும்.

படம் இதைத்தான்  புரிய வைக்க முனைகின்றது. இது தான் இந்தப் படத்தில் மையக் கரு. இதனால் தான் தமிழ் - சிங்கள இனம் சார்ந்த இனவாதிகள் இந்தப் படத்தை குறிப்பாக எதிர்க்கின்றனர். யுத்தம் மூலம் வேலி போட்டு மக்களை பிரித்த இனவாதம், பரஸ்பரம் உண்மையை மூடிமறைத்ததன் மூலம் "சிங்களவன்" "தமிழனை" புரியவில்லை என்றும், "தமிழன்" "சிங்களவனை" புரியவில்லை என்ற எதிர்நிலை அரசியலை கட்டமைக்க முடிகின்றது. இந்தப் படம் அதைக் கேள்விக்குள்ளாக்கி தகர்க்கின்றது.

யுத்தம் முடிந்து விடவில்லை, யுத்தம் வாழ்வியல் ஊடாக பல முனையில் தொடர்வதையும், வாழ்வியல் ஊடான உளவியல் சிக்கல்களையும் படம் உணர்த்தி நிற்கின்றது.

நிஜ வாழ்க்கை என்பது வறுமையுடனும், உழைப்புடனும் தொடங்குகின்றது. யுத்தத்தினால் தன் உறவுகளை இழந்து தனிமைப்பட்டு போன பெண், தன் வாழ்க்கையை நடத்த வறுமையுடன் போராடுகின்ற எதார்த்தமும், அதையொத்த சமூகத்தை பார்வையாளன் முன்கொண்டு வருகின்றது.

சமூக அக்கறையுள்ளவர்களை உணர்வு ரீதியாக ஒன்றிணைக்கும் படம், வாழ்க்கையில் எதார்த்தத்தை கடந்து சிந்திப்பதையும் செயற்பட முனைவதையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது.

இந்தப் படத்தின் விமர்சனமானது, தன் எல்லையை கடந்த பார்வையாளனிடம் செல்லுகின்ற போது ஏற்படுகின்றது. உதாரணமாக மொழி வழக்கை எடுக்கலாம்.