Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?

சிம்பாப்பேயின் றொபேர்ட் முகாபே, தனது சொந்த இராணுவ உயரதிகாரிகளினால் பிரயோகிக்கப்பட்ட பாரிய அழுத்தத்தின் காரணமாய் மூன்று தசாப்தங்களுக்கு மேலான தனது ஆட்சியதிகாரத்திலிருந்து பதவி விலகிக் கொண்டுள்ளார். இவர் பதவி விலகிக்கொண்டதான அறிவிப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் கிளர்ந்தெழுந்தன.

முகாபேயின் சொந்தக் கட்சிக்குள்ளேயே முகாபே மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த வேளையின் மத்தியில், முகாபே தனது இந்த பதவிவிலகல் அறிவிப்பினை வெளியிட்டார். பதவிவிலகும் கணத்தில் உலகநாடுகளின் தலைவர்களில் வயதில் எலலோரையும் விட மூத்தவரான முகாபேக்கு வயது 93 ஆகும். கடவுளால் மட்டுமே தன்னை அதிகாரத்திலிருந்து நீக்க முடியும் என்று அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். சிம்பாப்பே நாட்டினுடைய விடுதலை இயக்கத்திற்கு தலைமை வழங்கிய அதிபர் முகாபே அந்நாடு சுதந்திரம் அடைந்த 1980 ம் ஆண்டிலிருந்து பதவியிலிருந்து வருகிறார். 1987 இல் சிம்பாப்வே ஜனாதிபதி முறைமைக்கு மாறியது. ஐனாதிபதி முறைக்கு மாறும் வரைக்கும் முகாபே நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

 

இன்று 93 வயது முதுமை கொண்ட முகாபேயின் ஆட்சிக்காலம் என்பது பொருளாதார நெருக்கடி மற்றும் எதிரிகள் மீதான அடக்குமுறைகள் கொண்டதாக இருந்தது. தேர்தலில் வெல்லும் வழிமுறைகளாக அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் கைக்கொண்டே முகாபேயும் அவரது ஆதரவாளர்களும் ஆட்சியில் நிலைகொள்ள முடியுமாயிருந்தது.

இன்று பதவிவிலகுவதாய் அறிவித்துக்கொண்ட முகாபே ஆரம்பத்தில் பிரதமராகவும் அதன் பின்னர் நாட்டின் அதிபராகவும் ஏறத்தாழ 37 வருடங்கள் சிம்பாப்வேயினை ஆள்பவராய் இருந்தார். பிரித்தானியாவிடமிருந்து சிம்பாப்வேயை விடுவிக்கும் விடுதலைப் போராட்டத்தினை வழிநடாத்துவதற்கு பல வருடங்களை தன் வாழ்நாளில் அர்ப்பணித்திருந்தார். சிறைவாசம், வெளிநாட்டுத் தலைமறைவு வாழ்க்கை என்பன இதற்குள் அடங்கும்.

முகாபேயின் வீழ்ச்சி சிம்பாப்பேக்கான சகாப்தம் ஒன்றின் முடிவை தொட்டு நிற்கும் அதேவேளை, தொடர்ந்து நாட்டில் நிகழப்போவது என்ன என்பது இன்னும் தெளிவானதாக இல்லை. 

முகாபேயின்  நங்கக்வா உடனான சர்ச்சை, இராணுவ படைகளுக்குள் பதட்டம் மேலெழக் காரணமாகியது. முகாபே தன்னுடன் மிக நெருங்கிய சில வலுவான சகாக்களையும், தன்னுடைய சொந்தக் கட்சிக்குள்ளான பல சக்திகள் உள்ளடங்கலாக அவர்களது ஆதரவை இழந்துபோக வைத்தது.

பிரிட்டனிமிருந்து விடுதலை பெறுவதற்கான 1970 காலப்பகுதியிலான போராட்டங்களில் முகாபேயுடன் தோளோடு தோள் நின்று போராடிய, 2000ம் ஆண்டுகளில் வெள்ளையினத்தவர்களுக்கு சொந்தமென்றாக்கப்பட்டிருந்த வர்த்தகப் பெரும் பண்ணைநிலங்களை பறித்து மீள்நிலப்பகிர்வு செய்யும் நடவடிக்கையில் தலைமை தாங்கி நின்ற முன்னைநாள் போராளிகள், தாங்கள் அன்று மேற்கொண்ட புரட்சிக்கு அதிபர் முகாபே துரோகம் இழைத்து விட்டதாக நீண்டகாலமாக கூறி வந்தனர். முகாபே பதவிவிலகலுக்கு முன்பான வாரத்தில், இம் முன்னைநாள் நெருங்கிய போராளிகள் முகாபே பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று பலத்த கோரிக்கை வைத்தனர். 

“றொபர்ட் முகாபே தான் சிம்பாப்பேயின் அதிபர்” என்ற இடத்தை தற்போது கைப்பற்றிக்கொண்ட “முதலை” என்ற புனைபெயரால் பெரிதும் அறியப்பட்ட எமேர்சன் நங்காக்வா என்ற மனிதன் பற்றி நாம் என்ன அறிந்திருக்கின்றோம்? 

எமேர்சன் நங்காக்வா சிம்பாப்வேயின் இணை உதவி அதிபராகவும், நீதியமைச்சராகவும் இருந்தார். அத்துடன் சிம்பாப்வே என்ற நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்தவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

 “முதலை” என்ற புனைபெயர் அவரது அரசியல் சூழ்ச்சித்தன்மை காரணமாகவும் மற்றும் சிம்பாப்வேயின் சுதந்திரத்துக்கான போரில் தலைமையேற்று வழிநடாத்தியதில் இவரது பங்களிப்பைப் பெற்றுக்கொண்ட கெரில்லாக் குழுவின் பெயராலும் இப் புனைபெயர் அவரை ஒட்டிக்கொண்டது. எமேர்சன் நங்காக்வா சிம்பாப்வேயில் அஞ்சப்பட்ட நபராக இருந்தார். றொபேர்ட் முகாபேயுடனான நெருக்கம் மட்டுமல்ல இதற்குக் காரணம். சிம்பாப்பேயின் இராணுவ இயந்திரத்தினை தன்பிடிக்குள் கொண்டிருந்தவர் என்பதும் காரணமாகும்.

1980 ம் ஆண்டுகளில் சிம்பாப்வே நாட்டின் உளவுத்துறையின் தலைவராக இருந்தார். குகுறாகுண்டி என அறியப்பட்ட மற்றபேலான்ட்டில் என்றவிடத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் எதிராளிகள் மீது வடகொரியப் பயிற்சியளிக்கப்பட்ட 5 வது பிரிகேடியர் பிரிவு மேற்கொண்ட பயங்கரம் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது உளவுத்துறையின் தலைவராக இவரே இருந்தார்.

இந்தப் படுகொலைகள் சிம்பாப்வேயில் இன்னும் ஆறாத காயங்களாகவே இருக்கின்றது. ஆனால் நங்காக்வா இப் படுகொலைகளில் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தி தனக்கு சம்பந்தமேதுமில்லை என்று மறுத்தே வந்திருக்கிறார். தசாப்தங்களாக முகாபேயின் வலக்கரமாக இருந்து அவரது கட்டளைகளை அமுலாக்கியவர் என்ற இவரது இப்பாத்திரம் தந்திரபுத்தி கொண்டவர், ஈவிரக்கமற்றவர் எனவும், பல்வேறு மட்டங்களிலுமுள்ள அதிகாரங்களின் நெம்புகோல்களை கையாளும் திறனுடையவர் என்பதாகவுமே இருந்தது.

மக்கள் மத்தியில் இவரது பிரபலத்தை விட மக்கள் இவர் மேல் கொண்டிருந்த அச்சமே பெரிதாக இருந்தது. ஆனால் இராணுவ மற்றும் பாதுகாப்பு படைகள் மத்தியில் இவருக்கு நெருங்கியவர்கள் இருந்தனர்.

75 வயதுடைய நங்காக்வா வின் வாழ்க்கையின் திருப்பங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.

2014 ம் ஆண்டிலிருந்து இன்று ஒரு மாதம் முன்னர் வரை அதாவது சிம்பாப்வேயின்  தலைமைக்கான நெருக்கடி எழுந்த காலம் வரை முகாபேயுடன் துணை அதிபராக இருந்தார். இந்த நெருக்கடி தோன்றிய கணத்தில் “நம்பகத் தன்மையின் அறிகுறிகள்” புலனாகியதெனக் கூறி முகாபேயினால் இவர் பதவியிலிருந்து விலத்தப்பட்டார். ( சிம்பாப்வேயின் முதற்பெண்மணி கிரேஷ் முகாபே பிரதியீடாக இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற வதந்தியும் இருந்தது).

நங்காக்வா சிம்பாப்வேயை விட்டு தப்பி சென்றிருந்தார். முகாபேக்கு எதிரான எழுச்சியொன்றுக்கு தலைமை தாங்குவதற்கு தான் நாட்டுக்கு திரும்புவேன் என்ற சபதத்துடன் அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.

தற்போதைய ஆளும் கட்சியான ZANU-PF கட்சி, முகாபேயை பதவியிலிருந்து விலத்திய பின் முகாபேயின் இடத்துக்கு நங்காக்வா யை கட்சியின் தலைவராக சில நாட்களுக்கு முன்னராக நியமித்தது. அடுத்த 2018 செப்டம்பர் நடக்கவிருக்கும் தேர்தல் வரைக்கும் மிஞ்சியிருந்த முகாபேயின் பதவிக்காலம் வரைக்கும் நங்காக்வா சிம்பாப்வேயின் அதிபராக பணியாற்றுவார்.

முகாபேக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பித்த ஒரு மாதத்துக்கு முன்னரான காலம் வரை, நங்காக்வா முன்னைய அதிபரின் அதாவது முகாபேயின் மிகவும் நம்பகமான லெப்டினன்ட்களில் ஒருவராகவும், முகாபே சிறையிலிருந்த போது அவரோடு கூடவே சிறையில் உடனிருந்தவராகவும், யுத்தத்தில் உடனிருந்தவராகவும், முகாபேயின் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவராகவும் இருந்தார்.

சிம்பாப்வே சுதந்திரம் பெற்ற நாளிருந்து ஒவ்வொரு நிர்வாகங்களிலும் பங்குகொண்டவராய் உள்ளக பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர் மட்டுமல்லாது பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற பல நிர்வாகங்களில் அதிகார உயர்மட்டத்தில் இருந்தவர்.

1960 களில் பிரிட்டிஷ் அதிகாரத்தினால் நாசவேலைகளில் ஈடுபட்டார் என மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிடப்பட்டிருந்த காலத்தில் தான் நங்காக்வா அரசியலைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்.

அன்றைய றோடேசியாவில் (சிம்பாப்வே) வெள்ளையர்களின் காலனித்துவ ஆட்சிக்கெதிராக நடாத்தப்பட்ட கெரில்லாப் படை அலகு ஒன்றில் இவர் இருந்தபோது பிடிபட்டு சிறையிடப்பட்டார்.

மரணதண்டடைக்குரிய குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், பத்தொன்பது வயதுடையவராக அன்றிருந்தபடியால் சிறைத்தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டார். மற்றைய முக்கிய தேசியவாத தலைவர்களோடு முகாபேயும் இருந்த அதே சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

1975 இல் சிறையிலிருந்து விடுபட்ட பின்னர் சம்பியா நாட்டுக்கு சென்றார். அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்று தொழில் புரிய ஆரம்பித்திருந்தார். அங்கிருந்து மொசாம்பிக் சென்றார். அப்போது தான் மார்க்சிய மொசாம்பிக் சுதந்திரமடைந்திருந்த வேளையாகும். அங்கு சென்ற கையோடு முகாபேயின் உதவியாளராகவும், மெய்ப்பாதுகாவலராகவும் இருந்துகொண்டு, கெரில்லா அமைப்பினை வழிநடாத்திச் செல்லும் பொறுப்பிலும் ஈடுபடுபவரானார். 1979 இல் முகாபே இலண்டனிலுள்ள லங்காஸ்ரர் இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தவேளை அவருடன் கூடவே நங்காக்வா அங்கு சென்றிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையே பிரிட்டிஷ் றோடேசியாவுக்கு முடிவுகட்டி சிம்பாப்வே யின் பிறப்புக்கு வழிவகுத்தது.

1980 இல் சிம்பாப்வே தன்னாட்சியுடன் விடுதலை பெற்றபோது அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சராக  நங்காக்வா நியமிக்கப்பட்டார். மிகவும் சர்ச்சைக்குரியதாக குறிக்கப்படுவது எதுவெனில், யோசுவா என்குமோ என்கின்ற முகாபேயின் எதிராளியானவருக்கு ஆதரவான கலகக்காரர்களுக்கு எதிராக, வடகொரிய பயிற்சி பெற்ற படைப்பிரிவை 1980 களின் மத்தியில் முகாபே நிறுவியபோது, நங்காக்வா உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பொறுப்பானவராக இருந்தார்.

அரசுப் பத்திரிகையான சிம்பாப்வே ஹெரால்ட், நங்காக்வா பெரிதான எதிர்பார்ப்புகளை எதிர்கொள்கிறார், ஆனால் சிம்பாப்வேயினை முன்னோக்கி நகர்த்தும் பணியைத் தொடங்கும் வேளை, தேனிலவுக் காலம் சுருங்கிவிடும் என்று வருணித்திருந்தது.

இங்கு இருக்கும் கேள்வி என்னவெனில், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு அல்லது இராணுவம் தன்னுடைய இந் நடவடிக்கைக்கு தானே வழங்கிய பெயரான “இரத்தம் சிந்தாத மாற்றம்”  என எதுவாக இருந்தபோதிலும், இது சிம்பாப்வே மக்கள் சார்பில் நடத்தப்பட்டதா அல்லது இராணுவத்தின் சௌகரியத்திற்காக நடாத்தப்பட்ட ஒன்றா என்ற கேள்வியே ஆகும்.  

றொபர்ட் முகாபேயின் பதவிவிலகலைத் தொடர்ந்து நடந்த கொண்டாட்டங்களால் எழுந்த தூசிகள் மெதுவாகப் படிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், எதிர்பார்த்தளவு மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என மக்கள் உணருவார்கள். அதே அரசியல் கட்சியே ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கிறது. அதிகார அடுக்குகளில் இருந்த முக்கிய நபர்களில், ஒருவருக்குப் பதிலாக, இரண்டாம் நிலையிலிருந்த மற்றவர் அதே அதிகாரத்துக்கு வந்திருக்கின்றார் அவ்வளவே தான். பொருளாதாரம் தாறுமாறாகியுள்ளது. எதிர்க்கட்சி புதிய அதிபரின் ஆட்சிக்கு எதிராக தரக்கூடிய எந்தச் சவாலும் என்ன வழிமுறைகளில் எதிர்கொள்ளப்படும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் சூடு கண்ட பூனைகள்.

நிறைவேற்று அதிகாரத்தினை இடுப்புப்பட்டியிலும், வலிமையான இராணுவத்தினை தனக்குப் பின்னாலும் கொண்டிருக்கும் “ முதலை” யானது கூர்மையான பற்களைப் பெற்றிருக்கின்றது.

உண்மை நிலபரம் எதுவோ அது சிம்பாப்வேயின் சாதாரண மக்களை மிக விரைவில் தாக்கவே போகிறது. தாங்கள் முன்னர் இருந்த நிலவரத்துக்குள்ளேயே இப்போதும் கட்டுண்டு இருக்கிறோம் என்பதையும்;, இராணுவமானது நாடளாவிய ரீதியில் தனது பிடியை நுணுக்கமாக இறுக்கியுள்ளது என்பதையும் மக்கள் உணரவே போகிறார்கள்.

வெறுமனே முகமாற்றங்கள் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தரப்போவதில்லை.; இப்படியான மாற்றங்கள் எந்த நேரத்திலும் மக்களைப் பற்றியதானது இல்லை என்பதனை உணர்தலுக்கு முன்னரான ஒரு குறுகிய இடைவெளி மட்டுமே தான் இது.