Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பயங்கரவாதி, பயங்கரவாதத்தை ஒழிக்க பிரசங்கம்! -

ஞாபகங்களை அழிக்கும் அரசியல் கொடியது – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்

அண்மையில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் இலங்கை ஐனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிராக பெரும் கதாப்பிரசங்கம் செய்துள்ளார்! அத்தோடு உலகில் பயங்கரவாதத்தை எப்படி இல்லாதாக்குவது என்பதற்கு பேருபதேசம் செய்து தன் பேச்சின் பெரும் நேரத்தை செலவு செய்துள்ளார். அதே நேரம் இவருக்கு பதில் சொல்லும் வகையில்; இவரின் முன்னாள் இந்தியக் கூட்டாளி இவருக்கு எதிராக ஜெனீவாக் கூட்டத்தில் பெரும் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 18வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை; அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே உரிமைகள் பறிக்கப்படவும், வன்முறைக் கலாசாரம் தலையெடுக்கவும் காரணமாவதாகவும் சுட்டிக் காட்டினார். இலங்கையை உதாரணத்துக்கு காட்டிய நவநீதம்பிள்ளை அங்கு தொடர்ந்தும் அமுலில் உள்ள பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து வகையான சட்டங்கள் பற்றியும் விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்று கடுமையாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். இலங்கை மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தின் கொடுமையான பாதிப்புகளுக்கு முகங் கொடுக்க வேண்டியேற்பட்டது என்றாலும், அந்நாட்டில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் பதில் நடவடிக்கைகள் சுயாதீனமான நிறுவனங்களின் பணிகளையும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் மழுங்கடிங்கும் விதத்திலேயே அமைந்ததாகக் நவநீதம்பிள்ளை கூறினார்.

இதன்போது சில அவசரகால ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவை சுட்டிக்காட்டிய ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் இலங்கையில் நடைமுறையிலுள்ள எல்லாவகையான பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் தடுப்புக் காவல்கள் பற்றி விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.


சர்வதேச மன்னிப்புச் சபையின் வேண்டுகோள்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளது .

மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டொனால்ட் இந்த மனுவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளார். போரின் போது விடுதலைப் புலிகளும் அரச படையினரும் போர்க் குற்றங்களையும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருந்தனர் எனவும் மனுவில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஐக்கியநாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளது எனவும் இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின் போது இருதரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்படவேண்டும்  எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்க வேண்டும் எனவும், அதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான நகர்வில் முதலடியை எடுத்து வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவைக் கையளித்தால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை தமக்குஅறிவித்துள்ளது எனவும் ஜிம் மக் டொனால்ட் தெரிவித்துள்ளார்.  எனினும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கும் போர்க் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்துவருகிறது.

அவை அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என அவை கூறுகின்றன.

ஊரில் கள்ளச்சாராயம், விற்பவன், கசிப்பு காச்சுபவன், பக்கத்திலுள்ள பொலிசு பொறுப்திகாரிக்கு சாராயம் கசிப்பு கொடுக்காவிட்டால் எது நடக்குமோ அதேபோல் ஊருலகில்  மகிந்தாவிற்கு எதிராக உள்ளவர்கள் எல்லாம் பெட்டிசம், வழக்கு, நீதிமன்ற விசாரணை, பிடிவிறாந்து என்ற “றேஞ்சில்” நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். அந்தளவிற்கு எங்கும் எதிலும் குற்றவாளி! மகிந்தாவிற்கு இதெல்லாம்; கழுதைக்கு காதுக்கை சொன்னாலும் எப்படியோ….அப்படித்தான் என உந்த உபதேசிகளுக்கும், நடவடிக்கைக்கராரர்களுக்கும் விளங்குவதில்லை. புரிந்திருந்தால் முள்ளியவாய்க்காலின் பின் இன அழிப்பை, இனச்சுத்திகரிப்பை மர்மமனிதன், பூதமென்று பதிய வழியில் தொடர்ந்திருக்குமா?  அவர்களின் இயல்பு வாழ்க்கையை இல்லாதாக்குமா? இப்போ அடுத்தொரு புதிய நடவடிக்கையால் (வடகிழக்கில் காணிப்பதிவு) வடகிழக்கின் தமிழ் மக்கள் தாயகப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்!

வடகிழக்கின் காணிப்பதிவு!


ஆண்டாண்டு காலமாக தமிழர் தாயகத்தில் காணி உரித்துரிமை உடையோர், அதை மீண்டும் நிருபிக்க வேண்டியுள்ளது. அதற்கு புதிய சுற்று நிருபங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நடைமுறைசசாத்தியமற்ற தவறுகள்  உள்தை பல வழக்குரைஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். தற்போதுள்ள பல அரசியல் அசௌரியக் காரணங்களால் தம் வீடுகளில் இல்லாதிருக்கின்றனர். இதைப் பயன்படுத்தி சொந்த வீடுகளில் இல்லாதோர்களின் வீடுகளை அபகரிக்கவே இப்புதிய நடைமுறை. இதன்முலம் அகப்படும் நிலங்களை அரசாங்க சொத்தாக்கி, வாடகை வீடுகளிலுள்ள சிங்கள மக்களுக்கு கொடுக்கவே என்ற அபிப்பிராயங்களில் உண்மைகள் இல்லாமலில்லை.

அண்மையில் யாழ் சென்று வந்த தீவுப்பகுதியைச் சேர்ந்த நண்பரொருவர் மேல்கண்டவாறு சொன்னார். “யுத்தகாலத்தில் தனது குடும்ப்மும் இன்னும் சில குடும்பங்களும்  வன்னியில் இருந்து ஒருவாறு உயிர்தப்பி யாழ் நகரில் உறவினர் சிலரின் வீடுகளில் வாடகைக்கு இருந்தனராம். தற்போதுள்ள இக்காணிப் பதிவால் ஏதோ கொஞ்சம் நின்மதியாக இருந்தவர்கள் தற்போது தம் காணிகளைப் பாதுகாக்க மீளக்குடி பெயர்ந்து தீவுப்பகுதியிலுள்ள தம் காணிகளுக்குள் சென்று “முள்ளியவாய்க்காலின் முட்கம்பி வாழ்க்கை வாழ்ந்தார்கள்” தான் சென்ற பின்பே சிறிய வீடுகளில் வாழ்கின்றார்கள். இதுபற்றி “வடக்கின் வசந்தத்திடம்” கேட்டபொழுது நான் ஐனாதிபதியை சந்திக்கப் போகின்றேன் அதன்பின எல்லாம் சரியாகிவிடும் என்றராராம். டக்கிளசின் “குத்தகை அரசியல்” இப்படித்தானென வாக்களித்த மக்களே சொல்லிக் கவலைப்படுகின்றார்களாம். அத்துடன் தமிழ்மக்களின் சமகால கொடிதான அரசியல் நிலையை புடம் போடுகின்றார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர்:

ஞாபகங்களை அழிக்கும் அரசியல் கொடியது – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்


ஞாபகங்களை அழிக்கும் அரசியல் மிகவும் கொடியது என்றும் ஒரு சமூகத்தின் கூட்டுணர்வான வரலாற்றையே அது அழிக்கிறது என்றும் யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் பா. அகிலன் தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு உரையாற்றல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பா. அகிலன் இவ்வாறு தெரிவித்தார். ஈழத்தில் நடைபெற்ற யுத்தம் பற்றிய ஞாபகங்களை அடிப்படையாக் கொண்டு ஞாபகங்களையும் அழிக்கும் அரசியல் என்ற தொனிப்பொருளில் அவர் உரையாற்றினார்.

அரசியல், வரலாறு, யுத்தம் போன்றவற்றுடன் ஞாபகம் பெறும் தொடர்பையும் அதனை அழிக்கும் பொழுது வரலாற்றில் ஏற்படும் வெறுமையையும் அவர் சுட்டிக் காட்டினார். யுத்தம் காரணமாக உறவுகளையும் அவர்களின் ஞாபகங்களையும் இழத்தல் பற்றியும் ஈழத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை அழித்தலின் அரசியல் பற்றியும் கவிதை மற்றும் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு எடுத்துக் காட்டினார்.

ஈழத்து சமூகம் இன்று தமது தொல்லியல் அடையாளங்களையும் கலை அடையாளங்களையும் வாழ்வியல் ஊறுகளுடன் தொடர்புடைய தொன்மங்களையும் பாதுகாக்க பல வகையில் முயன்று வருகிறது என்றும் இது வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் இழக்கபட்ட ஞாபகங்களால் ஏற்பட்ட வளர்ச்சி என்றும் குறிப்பிட்டார். ஈழத்தில் அழிக்கப்பட்ட பல்வேறு ஞாபகச்சின்னங்களையும் அவர் காட்சிப்படுத்தி சமகால ஈழத்தில் அவற்றுக்கு ஏற்பட்ட நிலமையை விபரித்தார்.

குட்டக் குட்ட குனியிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுறவனும் மடையன் என மகிந்தாவும் சொல்கின்றார்” இதுவும் தனக்கு பொருந்தாது என்ற நினைப்போ?

அகிலன்

05/10/2011