Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

பரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் (பகுதி-2)

இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் றீகன் வடக்கு தீவுப்பகுதிகளில் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவக் கட்டளையாளராக பணியாற்றிவந்தார். அவரது பிரதேசத்துக்கான அரசியல் ஆணையாளராக கஸ்ட்ரோ இருந்தார். 1990 ஆகஸ்ட் – செப்ரம்பர் காலப்பகுதியில் இராணுவ – கடற்படை கூட்டுத் தாக்குதலான “ஒப்பறேசன் மேஜர்” எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்ட தாக்குதல் காரணமாக எல்.ரீ.ரீ.ஈ தீவகத்திலிருந்து பின்வாங்க நேர்ந்தது. றீகன் திரும்பவும் காயமடைந்தார்.

 

அவர் மருத்துவ சிகிச்சைக்காக திருட்டுத்தனமாக படகு மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் அங்கு பல மாதங்களாகத் தங்கியிருந்தார். அப்போதுதான்  1991 மே 21ல் எல்.ரீ.ரீ.ஈ யினர் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தார்கள். அங்கு மிகப்பெரிய கலவரம் உருவானதால் றீகன் கேரளாவுக்கு நகர்ந்து தன்னைப் பற்றிய சுயவிபரங்களை அடக்கி வாசிக்கலானார்.

இந்த ராஜீவ் கொலை நிகழ்வுக்கு பின்பு உருவான நிலைமாற்றங்களினால் விரக்தியுற்ற றீகன் இயக்கத்தை விட்டு வெளியேற முடிவுசெய்தார். அவர் தலைமையுடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டு தனது சொந்த முயற்சியினால் பிரான்சுக்குப் பயணமானார். பரிசிலும் அவர் தன்னைப்பற்றிய சுயவிபரங்களை அடக்கமாகவே பயன்படுத்தியதுடன் பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயின் கிளைகளுடன் எதுவிதத் தொடாபையும் ஏற்படுத்திக் கொள்ளாதிருந்தார்.

அந்தக் காலத்தில்தான் அப்போதைய எல்.ரீ.ரீ.ஈயின் உதவித் தலைவர் மாத்தையா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, பிரபா – பொட்டு அம்மான் இரட்டையர்களால் துரோகி பட்டம் சூட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர் அவர் கொல்லப்பட்டார். பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈ யுடன் கருத்து வேறுபாடு கொண்ட சிலர் மாத்தையா நடத்தப்பட்ட விதத்தைக் குறித்து எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாரீசில் அதைப்பற்றிய சுவரொட்டிகளையும் ஒட்டினார்கள். றீகனும் இதில் சம்பந்தப் பட்டிருந்தார்.

லோறன்ஸ் திலகர் எல்.ரீ.ரீ.ஈயின் சர்வதேசப் பேச்சாளராக அப்போது பாரீசைத் தளமாகக் கொண்டு இயங்கிவந்தார். அவர் றீகனின் இந்தத் தொடர்பைப்பற்றி ஸ்ரீலங்காவிலுள்ள தலைமைக்கு முறையிட்டார். இதன் விளைவாக றீகன் பாதுகாப்பு அற்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன் பாரீசை விட்டு வெளியேறவேண்டியும் ஏற்பட்டது. அதன்பின் றீகன் அரசியலில் எந்தத் தொடர்பையும் மேற்கொள்ளாது தனிமையை விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.

பாரீசில் இருந்து வெளியெறியது பயனுள்ள ஒன்றாக அமைந்தது. சிலவருடங்களுக்குப் பின் மாசுபடாத றீகன் பிரெஞ்சு பிராஜா உரிமையைப் பெற்றுக் கொண்டதோடு ஒரு பிரெஞ்சுக் கடவுச்சீட்டுக்கும் உரித்தாளரானார்.

ஒஸ்லோவின் உதவியுடன் உருவான யுத்த நிறுத்தம் 2002ல் ஒரு அமைதியான நிலையை தோற்றுவித்தது. மதீந்திரன் இப்போது ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிக்கு விஜயம் செய்ய விரும்பினார். அவர் தன்னுடைய முன்னாள் தோழர் கஸ்ட்ரோவை தொடர்பு கொண்டபோது அவர் எல்.ரீ.ரீ.ஈ தலைமையிடமிருந்து அனுமதியை பெற்றுத் தந்ததோடு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தையும் வழங்கினார்.

றீகன் எனப்படும் மதீந்திரன் அதன்பின் பிரான்சிலிருந்து ஸ்ரீலங்காவுக்குப் பயணமானார். அவர் சிலநாட்கள் கிளிநொச்சியில் தங்கியிருந்தபோது எல்.ரீ.ரீ.ஈயின் காவல்துறை தலைவரான நடேசன் என்றழைக்கப்படும் பாலசிங்கம் மகேந்திரனைச் சந்தித்தார். நடேசன் றீகனுடன் நடத்திய உரையாடலில் இருந்து அவர் ஒரு பிரெஞ்சுப் பிரஜை என்பதை அறிந்து கொண்டார்.

பணித்துறை வெற்றிடம்

எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு நிருவாகப் பொறுப்பு கேபி யிடமிருந்து கஸ்ட்ரோவிடம் கையளிக்கப் பட்டிருந்தது. அதன் திருப்பமாக கஸ்ட்ரோ அப்போது பொறுப்பிலிருந்த கிளை அலுவலர்கள் அனைவரையும் அவர்கள் கேபியின் விசுவாசிகள் எனக்கருதி நீக்கி வந்தார். பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈயின் தலைமைப் பொறுப்பிலிருந்த மனோ என்றழைக்கப்படும் வேலும்மயிலும் மனோகரனும் அப்போது நீக்கப்பட்டிருந்தார். பிரான்சில் ஒரு பணித்துறைக்கான வெற்றிடம் நிலவியது.

எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் பிரபாகரனுடன் நடேசன் அந்த வெற்றிடத்துக்கு றீகனை நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கினார். கஸ்ட்ரோவும் அதற்கு ஒத்து ஊதினார். றீகன் எல்.ரீ.ரீ.ஈயிலிருந்து வெளியேறிய சூழ்நிலைகளையும் மற்றும் மாத்தையா சம்பவம் பற்றிய எதிர்ப்பு சுவரொட்டிக் காட்சிகள் அரங்கேறியிருந்தபோதும் அவைகளைத் தவிர்த்து றீகன் அதற்குப் பொருத்தமானவர்தான் என்று பிரபாகரன் எண்ணினார்.

நடேசன் மற்றும் கஸ்ட்ரோ ஆகியோர் றீகனைச் சந்தித்து அந்த வாய்ப்பை வழங்கினார்கள், ஆனால் மதீந்திரன் அதைப்பெற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டினார். பின்னர் அவரது முன்னாள் தோழர்கள் மற்றும் சிரேட்ட தோழர்களான பானு மற்றும் ஜெயம் ஆகியோர் மதீந்திரனைச் சந்தித்து அதை ஏற்றுக்கொள்ளுவதற்கு அவரை இணங்கவைக்க முயன்றனர். ஆனால் றீகன் அதை பிரபாகரனிடமிருந்து நேரடியாகக் கேட்க விரும்பினார்.

ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் றீகன் தலைவரை நேருக்கு நேர் சந்தித்தார். பிரபாகரன் நேரடியாகவே அந்த வாய்ப்பை வழங்கியபோது மதீந்திரனால் அதை மறுக்க முடியவில்லை. அவர் அதை ஏற்றுக்கொண்டு பிரான்சின் எல்.ரீ.ரீ.ஈ தலைவரானார்.

இளங்குமரன் மற்றும் தமிழேந்தி ஆகியவர்களின் முயற்சியினால் எல்.ரீ.ரீ.ஈ இப்போது இயக்கத்திலுள்ள பெயர்களையும் மற்றும் கலைச்சொற்களையும் தமிழ் மயப்படுத்திக் கொண்டிருந்தது. ஏனவே மதீந்திரன் இயக்கத்துக்குள் திரும்ப உறிஞ்சப்பட்டபின் அவரது இயக்கப்பெயர் றீகன் என்பதிலிருந்து சூரியன் எனப்பொருள்படும் பரிதி என மாற்றியமைக்கப்பட்டது.

பரிதி

பரிதி என்று இப்போது அறியப்படும் மதீந்திரன் 2003ல் நகரத்தின் வெளிச்சத்துக்கு வந்து பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிரான்சின் முன்னணி அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(ரி.சீ.சீ)வின் கீழ் எல்.ரீ.ரீ.ஈ இயங்கி வந்தது. அதன் தலைமையகம் பரீசில் உள்ள பைரனீஸ் வீதியில் 341ம் இலக்கத்தில் அமைந்துள்ளது. பரிதி பிரான்சின் ரி.சீ.சீ யின் புதிய தலைவரானார்.

குறிப்பிடத்தக்க முன்னைய விதிமுறைகளையெல்லாம் கடந்துவந்த பரிதி எதிர்காற்றினை எச்சரிக்கையுடன் தூக்கி எறிந்துவிட்டு  செய்தி வெளியீடுகள், அறிவிப்புகள் மற்றும் மேடை நிகழ்வுகள் என்பனவற்றை ரி.சீ.சீ யினை ஒரு மறைப்பாகப் பயன்படுத்தாது எல்.ரீ.ரீ.ஈ – பிரான்ஸ் என்ற தலைப்பிலேயே வழங்கத் தொடங்கினார். நீண்டகால நடைமுறையில் இத்தகைய திடீர் நகர்வுகளை உணர்ந்து கொள்ளத் தவறிய பிரபாகரன் மற்றும் கஸ்ட்ரோவினால் இம் முயற்சிகள் பெரிதும் வரவேற்கப்பட்டன.

ஆனால் இத்துடன் இது நின்று விடவில்லை. பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ முன்னெப்போதுமில்லாத வகையில் செயற்படத் தொடங்கியது.  அவர்கள் காணத்தவறிய உண்மை என்னவென்றால் அவர்கள் வாழும் நாடாகிய பிரான்ஸ் சுதந்திரம், சமத்துவம், மற்றும் தோழமை என்பனவற்றுக்கு உலகளாவிய வகையில் பிரசித்தம் பெற்ற நாடு என்பதை.

புலிகள் இதை மறந்து தாங்கள் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் பயன்படுத்திய ஒரேமாதிரியான முறைகளையும் உத்திகளையும் இங்கேயும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். புரட்சிகரமான பிரான்சிய வரலாற்றின் தலையையே துண்டிப்பதைப்போல ஒரு பயங்கரவாத ஆட்சி அங்குள்ள தமிழ் மக்கள்மீது ஏவி விடப்பட்டது.

பாரீசில் உள்ள தமிழரின் சனத்தொகை சுமார் அறுபதிலிருந்து அறுபத்தைந்தாயிரம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேவேளை பிரான்சிலுள்ள மொத்த தமிழ் மக்களின் எண்ணிக்கை சுமார் எழுபதிலிருந்து எழுபத்தைந்தாயிரம் வரையாக இருக்கலாம் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது. அவர்களில் 25 விகிதமானவர்கள் கடும்போக்குள்ள எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள். அதேவேளை இன்னொரு 25 விகிதமானவர்கள் தீவிரமான  எல்.ரீ.ரீ.ஈ எதிர்ப்பாளர்கள். மீதமுள்ள 50 விகிதமான தமிழ் மக்கள் எந்தவித கடும்போக்கோ தீவிர எதிர்ப்போ இல்லாத எல்.ரீ.ரீ.ஈ சார்பானவர்களோ அல்லது எதிர்ப்பாளர்களோ அல்ல.

வெளிப்பணியாளர்

பரிதியின் கீழ் பரிசில் இயங்கிய எல்.ரீ.ரீ.ஈயினர் அச்சுறுத்தல், கப்பம் பெறல், உடல் ரீதியான வன்முறைகள் மற்றும் புலி – எதிர்ப்பு செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக சட்டவிரோத தடுத்து வைப்பு மற்றும் பணம் வழங்குமாறு தமிழ் மக்களை கட்டாயப்படத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாயினர். நிதி சேகரிக்கும் பணியானது, சேகரிக்கப்பட்ட பணத்தின் 20 விகிதம் அவர்களுக்குத் தரகுப் பணமாகத் தரப்படும் என்கிற நிபந்தனையில் வெளிப் பணியாளர்களான சில தமிழ் கும்பல்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் முன்னணியில் உள்ள இரண்டு கும்பல்களில் ஒன்று “வெண்ணிலா” குழு மற்றது “முக்காபலா” குழு ஆகும்.

ஒவ்வொரு குடும்பமும் வருடாந்தம் குறைந்தது 2,000 யுரோக்களைச் செலுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள் வருடாந்தம் 6,000 யுரோக்களைச் செலுத்த வேண்டும். ஆனால் நேரத்துக்கு நேரம் விசேட சேகரிப்புகள் நடத்தப்பட்டு பெரிய தொகைகள் கோரப்படும். ஒரு மதிப்பீட்டின்படி வருடாந்த சேகரிப்புகள் மூலம் ஆறுமில்லியன் யுரோக்களும் விசேட சேகரிப்புகள் மூலம் 20 மில்லியன் யுரோக்களும் சேகரிக்கப்பட்டு வந்துள்ளன.

இந்தப் பணத்தின் பெரும்பகுதி தவணை முறையில் செலுத்தப்பட்டு வந்துள்ளது. கும்பல்களும் அதேபோல வழமைக்கு மாறான சுறுசுறுப்பு உள்ள எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களும் பணம் கறப்பதற்காக சாத்தியமானளவு பாதிக்கப்பட்டவர்கள் மீது அழுத்தம் பிரயோகித்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மக்களைக் கட்டாயப் படுத்தவதற்காக வீடுகளுக்குச் செல்லும்போது இரும்புகளுடனும் பொல்லுகளுடனும் மற்றும் போத்தல்களுடனுமே சென்றனர். சில அடிகளைப் பரிமாறல், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தல், ஸ்ரீலங்காவிலுள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கு ஊறு விளைவிக்கப் போவதாக அச்சுறுத்தல் மற்றும் தளபாடங்களையும் வாகனங்களையும் சேதப்படுத்தல் போன்ற உத்திகளே வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதில் மோசமானது என்னவென்றால் ஆட்களை கடத்திக் கொண்டுசென்று அவர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பது. பரிசின் சுற்றுப்புறப் பகுதியில் ஒரு பண்ணையொன்று இதற்காகவே இவர்களால் வாங்கப்பட்டுள்ளது. கோஷ்டிகளால் அல்லது எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களால் கடத்தப்படும் தமிழர்கள் அங்கு கொண்டு செல்லப்படுவார்கள். அவர்களை விடுதலை செய்வதற்காக பாதிக்கப் பட்டவரின் குடும்பத்தினரிடமிருந்து பெருந்தொகையான பணம் கோரப்படும். பண்ணையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் அடித்து துன்புறுத்தப் படுவார். இதில் அதிர்ச்சி ஊட்டுவதாக உள்ளது என்னவென்றால் எல்.ரீ.ரீ.ஈ ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் என்ன செய்தார்களோ அதை ஐரோப்பாவிலும் பரப்புவதற்கு எண்ணியதுதான்.

பயங்கரவாத எதிர்ப்பிற்கான துணை இயக்குனரகம்

பின் விளைவுகளுக்கு அஞ்சுதல், காவல்துறையினரின்மீது நம்பிக்கை குறைவு, தமிழர் பிரச்சினை பற்றித் தவறான நம்பிக்கை உருவாகிவிடலாம் என்கிற உணர்வு போன்ற பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர் தமிழர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்வதை அலட்சியப்படுத்தினார்கள். ஆனால் ஒரு தமிழர் அந்தப் பண்ணையில் வைத்து பயங்கரமாகத் தாக்கப்பட்டு அதனால் அவர் தனது உடற் சிகிச்சை மருத்துவரிடம் தனக்கு எப்படி இந்தக் காயங்கள் எற்பட்டன என்ற உண்மையை எடுத்துக்கூறியபோது இந்த ஆபத்தான குமிழ் உடைபட்டு விடயம் அம்பலத்துக்கு வந்தது. உடற் சிகிச்சை மருத்துவர் காவல்துறையினரை எச்சரிக்கை செய்ததும் எஸ்டிஏரி  விரைவாகவே இதில் உள்நுழைந்தது.

எஸ்டிஏரி  எனப்படும் பயங்கரவாத எதிர்ப்பிற்கான துணை இயக்குனரகம் பிரெஞ்சு உள்நாட்டு அமைச்சின் கீழுள்ள பயங்கரவாத எதிர்ப்பிற்கான விசேட பிரிவாகும். விரைவாகவே எஸ்டிஏரி  அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரையும் மற்றும் அவரைப்போல பாதிக்கப்பட்ட வேறு இருவரையும் ஒருவழியாக இணங்கச்செய்து ஒரு இரகசிய முறைப்பாட்டை 2006 நவம்பரில் பதிவு செய்தனர்.

இந்த அமைப்புமுறை பிரான்ஸ் எல்.ரீ.ரீ.ஈ க்குள்ளே ஒரு முறையான தீவிர விசாரணைக்கு இயக்கம் கொடுத்தது. ரிதி தனது அளவுக்கும் மிஞ்சி வெகுதூரம் போய்விட்டார். சட்ட அமலாக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது பிரான்ஸ் எல்.ரீ.ரீ.ஈ பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது. பரிதி கூடக் கைது செய்யப்பட்டார்.

தமிழில்:எஸ்.குமார்

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

நன்றி:  தேனி.காம்