Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாவீரர்களின் உணர்வுகளைத் தோற்கடித்த மாவீரர் நாள் 2011!

ஒவ்வொரு ஆண்டினதும் நவம்பர் மாதம் யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்களின் நினைவுக் காலமாக பிரித்தானியா மற்றும் கொமன்வெல்த் நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நினைவுகூரப்படுகிறது. முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நவம்பர் 11 1918 இன் ஞாபகார்த்தமாக, இந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக இத்தினம் நினைவுகூரப்படுகிறது. ஆனால் அதன் பின் இன்று வரை நடைபெறும் யுத்தங்களில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களும் நினைவுகூரப்படுகின்ற பொதுவான நினைவு நாளாக இந்நாள் மாறியுள்ளது.

 

நவம்பர் மாதத்தில் உக்கிரமான யுத்தம் நடைபெற்ற களங்களில் பூத்துக் குலுங்கிய பொப்பி மலர்ச்செண்டை அணிந்து கொள்வது இந்நினைவுநாளின் குறியீடாகி உள்ளது. இரத்தம் தோய்ந்த யுத்த களத்தின் பிரதிபலிப்பாக இரத்தச் சிவப்பு நிற பொப்பி மலர்கள் அமைவதைப் பிரதிபலித்த ‘In Flanders Fields’ என்ற கவிதை இந்த நாளில் பொப்பி மலர்ச்செண்டை அணிவதை குறியீடாக்கியது. இக்காலத்தில் இராணுவ வீரர்களின் கல்லறைகள் சுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் மரியாதையுடன் கெளரவிக்கப்படுகின்றனர். விசேட இராணுவ அணிவகுப்புகளும் நடைபெறுகின்றது.

இன்று பிரித்தானியாவிலும் ஜரோப்பாவிலும் இது ஒரு கலாச்சாரமாக்கப்பட்டு உள்ளது. இம்மாதத்தில் விற்பனை செய்யப்படுகின்ற பொப்பிச் செண்டுகளும் அதன் மூலம் சேகரிக்கப்படுகின்ற நிதியும் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் செலவிடப்படுகிறது. இந்நாள் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நாளாகவும் அமைந்துள்ளது. பலவேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு மதங்களைச் சேர்ந்த வீரர்களும் இந்த யுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே இந்த நவம்பர் 11 யை நினைவுநாளாக ஏற்றுக்கொண்டு ஒன்றுபட்டு நினைவுகூர்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான, பல ஆயிரக்கணக்கான போராளிகள் வெவ்வேறு அமைப்புகளில் தங்களை இணைத்துக்கொண்டு தாங்கள் நம்பிய உயர்ந்த இலட்சியத்திற்காக, தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர். இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிர்களை இழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு தினங்களில் தங்கள் அமைப்பில் இருந்து உயிர்நீத்த போராளிகளதும், மக்களதும் நினைவாக தியாகிகள் தினம், வீரமக்கள் தினம், மாவீரர் தினம் என்ற பெயர்களில் நினைவு நாள்களை நிகழ்த்தி வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்ற மாவீரர் தினம் நிகழ்வு, அவர்களே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஏகபோக போராட்ட அமைப்பாக தங்களை வரித்துக்கொண்டதால் மிகவும் முக்கியத்துவம் பெற்ற அரசியல் நிகழ்வாக இருந்தது. அதன் தலைவர் வே பிரபாகரன் உயிரோடு இருந்து, மாவீரர் தின உரையை நிகழ்த்தி, நடாத்திய 2008 மாவீரர் தினத்துடன் அதன் அரசியல் முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. தற்போது அது போராளிகளின் பொதுமக்களின் நினைவுநாள் மட்டுமே.

இந்த மாவீரர் தினம் அதன் நோக்கத்திற்கு அமைந்த போராளிகளின், பொதுமக்களின் நினைவு தினம் என்பதற்கு அப்பால் ஒரு கேளிக்கை நிகழ்வாகவும், பணச்சடங்காகவுமே நடாத்தப்பட்டு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவை பொருளாதார மற்றும் நோக்கங்களுக்காக இதுவரை மறைத்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல்வேறு பிரிவுகளும், இம்மாவீரர் நாளை தங்களின் ஏகபோகம் என உரிமைகோருவதில் விடாப்பிடியாக உள்ளனர். இப்போட்டியில் இரு பிரதான அணிகள் ஈடுபட்டு உள்ளன. ஒன்று ‘அனைத்துலகச் செயலகம்’ இவர்கள் ‘தமிழர் ஒருங்கிணைப்புக் குழு’ என்ற பெயரில் கடந்த காலங்களில் மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்து லண்டனில் நடாத்தியவர்கள். இரண்டாம் அணியினர் ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் இயங்குபவர்கள். (இவ்அணிகள் பற்றிய விரிவான கட்டுரை லண்டன் குரல் பத்திரிகையிலும் தேசம்நெற் இலும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.)

நவம்பர் 27 2011இல் மாவீரர் தினத்தை தலைமைச் செயலகத்தினர் வழமையான எக்சல் மண்டபத்தில் நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் தற்போது எக்சல் மண்டபம் இவர்களது நிகழ்வு அங்கு நடைபெறுவதை இரத்துச் செய்து அவர்கள் செலுத்திய முற்பணத்தை மீளழித்துள்ளது. தற்போது தலைமைச் செயலகத்தினர் தங்கள் மாவீரர் தினத்தை முத்துக்குமார் திடலில் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் வெவ்வேறு இடங்களில் மாவீரர் தினத்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் இருந்த போதும் ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ, அரசோடு இணக்க அரசியல் செய்ய முற்பட்டவர்களோ மாவீரர் தினத்தை அவமதிக்கும் செயல்களிலோ, அதனைத் தடுத்து நிறுத்தும் செயல்களிலோ ஈடுபட்டு இருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவினாலும், சேறுவீசும் செயல்களினாலும் 2011 மாவீரர் நாள் எக்சல் மண்டபத்தில் நடத்த முடியாத நிலையேற்பட்டு உள்ளது.

”எங்களுடைய மாவீரர்களின் நினைவைக் கொண்டாட முடியாதவாறு செய்தது இலங்கை அரசு அல்ல. சக தமிழர்களே. புலிகளைச் சேர்ந்தவர்களே” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் எக்சல் மண்டப மாவீரர் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர். முன்னாள் போராளியான இவர், உடலில் ஏற்பட்ட பாரிய காயங்கள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். கடந்த மாவீரர் தினங்களில் எக்சல் மண்டபத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டவர்.

முன்னர் மாவீரர் தினங்களை ஏற்பாடு செய்து நடத்திய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் (தனம், கமல், ரூட் ரவி) அதனை ஒரு கேளிக்கை நிகழ்வாக நடத்தியதுடன் நிகழ்வு பற்றிய கணக்கு வழக்குகளையும் வழங்குவதில்லை என்று தலைமைச் செயலகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் எக்சல் மண்டபத்தில் மாவீரர் தினத்தை நடத்துவதற்கு எதிராக பலமுறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சனல் – 4 தொலைக்காட்சியில் வெளியான ‘சிறிலங்காவின் கொலைக்களம்’ பதிவு பற்றிய மனித உரிமை விடயத்துக்கு 400 மின் அஞ்சல்கள் வந்ததாகவும், ஆனால் எக்சல் மண்டபத்தில் மாவீரர் தினத்தை தடுத்து நிறுத்துவதற்கு 2000 மின் அஞ்சல்கள் வரை அனுப்பி வைக்கப்பட்டதாக தலைமைச் செயலகம் குற்றம் சாட்டுகின்றது.

எக்சல் மண்டபத்தை முன்கூட்டியே பதிவு செய்யாததால் வழமையாக மாவீரர் நிகழ்வை நடாத்துகின்ற பெரிய மண்டபம் ‘ரொப் ஹியர்’ நிகழ்வுக்கு பதிவு செய்யப்பட்டது. அதனால் இம்முறை மாவீரர் தினத்தை நிகழ்த்த சிறிய 5000 பேர்களைக் கொள்ளக் கூடிய மண்டபமே ஏற்பாடு செய்யப்பட்டது.

எக்சல் மண்டபத்தில் மாவீரர் தினத்தை வைக்க அனுமதித்தால் அந்நாளன்று ஆயிரக்கணக்கில் திரண்டு அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக எக்சல் நிர்வாகம் மிரட்டப்பட்டு உள்ளது. மே 27இல் பிரித்தானியாவில் பிரபல்யமான ரொப் ஹியர் நிகழ்வும் எக்சல் மண்டபத்தில் நடக்க இருப்பதால் எக்சல் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகவும் கவனமாக உள்ளது. பாராளுமன்றத்துக்கு முன் நிகழ்ந்தது போன்ற போராட்டங்கள் எக்சல் மண்டபத்தின் முன் நிகழ்வதை எக்சல் நிர்வாகம் விரும்பவில்லை.

எக்சல் மண்டபத்தில் மாவீரர் நிகழ்ச்சியைத் தடுப்பதில் பாராளுமன்றத்துக்கு முன் உண்ணாவிரம் இருந்த சு பரமேஸ்வரன் உம் ஈடுபட்டு உள்ளார். ”தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள். பல விடயங்களில் நாம் வெகு நாட்களாக பொறுமைகாத்து வருகின்றோம். தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெறியப்படும்” என தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக இவர் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “குழப்பி விடுவதற்கு பலர் வருவார்கள் அவதானமாக இருங்கள். அழுத்தமாக கூறுவதானால் பழைய செயற்பாட்டாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், புதிதாக எவரையும் அனுமதிக்காதீர்கள், ஆதரிக்காதீர்கள் அதுவே நீங்கள் தேசியத்திற்கு செய்யும் நன்மை” என்றும் சு பரமேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த எக்சல் மண்டப மாவீரர் நிகழ்வைத் தடுக்கும் அணியில் இணைய ஆசிரியர் சி சந்திரமெளலீசன் என்பவரும் ஈடுபட்டு உள்ளார் என எக்சல் மண்டப மாவீரர் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக சி சந்திரமெளலீசன் உடன் தொடர்பு கொண்ட போது “மாவீரர் தினத்தை நடத்துகின்ற எந்த அணியுடனும் தனக்கு தொடர்பு இல்லை எனவும் யார் சார்ந்தும் தான் செயற்படவில்லை” எனவும் தெரிவித்தார். ”ஆனால் எக்சல் மண்டபத்தில் வழமைக்கு மாறாக சிறிய மண்டபமே ஏற்பாடு செய்திருந்தமையால் ஏற்படக்கூடிய சுகாதார மற்று பாதுகாப்பு (Health and Safety) தொடர்பான சந்தேகங்களை நான் எழுப்பி இருந்தேன்” எனத் தேசம்நெற் க்குத் தெரிவித்த சி சந்திரமெளலீசன் இவ்விடயத்தை ஜீரிவி இல் தோண்றி அனைவரையும் எக்சல் மண்டபத்துக்கு வரும்படி கேட்டுக்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் பா உ, அமைச்சர் தயாபரனிடமும் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்தார்.

சி சந்திரமெளலீசன் க்கும் எக்சல் மண்டப நிர்வாகத்துக்கும் இடையே பரிமாறப்பட்ட மின் அஞ்சல் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது:

From: URGENT -Time is running out [mailto:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.]
Sent: 05 October 2011 15:17
To: Info
Subject: Health and Safety Concern

Dear Sir/Madam,

Whoever reading this mail is here by requested to pass this mail to appropriate Health and Safety delegates

I am writing this to alert you about an event booked for Tamil national remembrance day 2011 at your premises on 27th Nov 2011.  I have seen their adverts at following web site http://www.tnrf.co.uk/

I am sure your administration is well aware of the number of people attend at this event as this event has been happening at your premises . it is attended by well above 20 000 sometime up to 50 000.

Knowing this projected number of people attending the event the event organizers has booked a hall which is very much smaller which cannot contain the expected 20 to 30 thousand people .

According to information I have , I understand you have allowed them to book a hall which can contain only 5000 people.

1.please confirm or deny this information as this , negligence of health and safety and also possible fraud of selling large amount of tickets (up to 20 Thousand) .
2.please let me know according to your health and safety regulation what you plan to do .
3.please also provide with me the contact details of health and safety authority which have governance over your premises so that I can alert them about this an catastrophic waiting to happen .

S.Santhiramoulesan

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

._._._._._.

On 5 October 2011 17:18, James Rees <This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.> wrote:

Dear S.Santhiramoulesan

Thank you for your email below which has been brought to my attention.

As you may be aware, ExCeL London hosts this event each year and consequently we have a detailed understanding of the event and the necessary procedures required to maintain a safe environment. As with previous years, we are planning this event in detail with the organisers and in accordance with the necessary Local Authority regulations.

Thank you for bringing your concerns to our attention but I confirm that the procedures and restrictions we are putting in place will be appropriate to maintain a safe environment as usual.

Yours sincerely

James Rees

Director of Conferences & Events

சி சந்திரமெளலீசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர். அவ்வமைப்பின் உருவாக்கத்தில் ஈடுபட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய போராளிகளில் ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வெளியேறிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் நிகழ்வுகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொள்பவர். இணையங்களில் எழுதிவருபவர்.

தமிழ் அமைப்புகளிடையே காணப்படுகின்ற குழுநிலைவாத ஓட்டங்களை வன்மையாகக் கண்டிக்கும் இவர் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பு விடயங்களைக் கவனத்தில் கொள்வதை தங்களுக்கு எதிரானதாக அர்த்தப்படுத்துவது தவறான குழுநிலைவாத மனநிலை என்கிறார்.

தற்போது முருகதாசன் நினைவுத்  திடலில் மாவீரர் தினத்தை நிகழ்த்த தலைமைச்செயலகம் ஏற்பாடு செய்திருப்பது பொதுமக்களின் சுகாதாரம் பாதுகாப்பு விடயங்களை திருப்திப்படுத்துவதாக உள்ளதாகவும், தனது நோக்கம் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நிகழ்வைத் தடுப்பது அல்ல எனவும் சி சந்திரமெளலீசன் தெரிவித்தார்.

இதற்கிடையே மாவீரர் தின நிகழ்வில் எந்த அணிக்கு ஆதரவு வழங்குவது என்ற சர்ச்சையில் ஐபிசி வானொலி அறிவிப்பாளர்களிடையே பிளவு ஏற்பட்டு உள்ளது. தலைமைச் செயலகத்துக்கு ஆதரவானவர்கள் ஐபிசி இல் தொடர ஏனையவர்கள் வெளியேறி உள்ளதாகத் தெரியவருகிறது. எக்சல் மண்டப நிகழ்வுக்கு சார்பாக கருத்து வெளியிட மறுத்து, மக்களை அருகில் நடைபெறுகின்ற மாவீரர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த, அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் ஐபிசி இல் கடுமையான தனிநபர் தாக்குதலுக்கு இலக்காக்கி உள்ளார்.

இதற்கிடையே சிவயோகம் தேர் எரித்த சம்பவமும் அரசியல் மயப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் ரூற்றிங் முத்துமாரி அம்பாளை ஆலயத்தில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை இலங்கை அரசாங்கத்தின் சதி என்றும் உதவி உயர்ஸ்தானிகர் ஹம்சாவின் கைங்கரியம் என்றும் சிவயோகம் பிரச்சாரம் செய்தது. ஆனால் இந்தப் பிரச்சாரம் பெருமளவில் எடுபடவில்லை. தலைமைச் செயலகமோ, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவோ கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சிவயோகத்துக்கு எதிராக ஒரு பேப்பர் – தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு சார்பான ஊடகம் எழுதியதால் தேர் எரிக்கப்பட்டதை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மீது பழி சுமத்துகின்ற முயற்சியை சிவயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி ஊடகவியலாளர் தேசம்நெற் க்கு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்தார். அத்தாக்குதலைத் தொடர்ந்து இன்றுவரை 10 வரையான தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் அவை தலைமைச் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற் க்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இச்சம்பவங்கள் தொடர்பாக ஸ்கொட்லண்ட் யாட் யைச் சந்தித்து தங்கள் முறைப்பாட்டை அண்மையில் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த மண்டபங்களில் ஹரோ மண்டபத்தின் உரிமையாளர் ஒருவரின் கார்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக செய்தி வந்தள்ளது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

இச்சம்பவங்கள் எக்சல் மண்டபத்தில் நடக்க இருந்த மாவீரர் நிகழ்வைத் தடுத்து நிறுத்த உபயோகிக்கப்பட்ட சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என தலைமைச் செயலகத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். எக்சல் மண்டப நிர்வாகத்தக்கு இவ்வாறான நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மின் அஞ்சல்கள் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டதாக தலைமைச் செயலகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

தலைமைச் செயலகத்தின் முக்கிய நபர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இலங்கை, இந்திய அரசுகளின் கண்காணிப்பில் உள்ளதாகவும்; அதனால் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராகவே செயற்படுவதாகவும்; தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் ஆதரவாளர்களும் தெரிவிக்கின்றனர். தலைமைச் செயலகத்தின் செயற்பாடுகள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட செயற்பாடு என இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கடந்த காலங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் முரண்பாடுகள் கொண்டவர்களும் தலைமைச் செயலகத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை எவ்வித கணக்கு வழக்குகளையும் முன் வைக்காதவர்கள் தொடர்ந்தும் மாவீரர் தினத்தை நடத்த தகுதியற்றவர்கள் என தலைமைச் செயலகம் குற்றம்சாட்டுகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாக தங்களை இணைத்துக்கொள்ளாத தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், தங்கள் வசூல் க்கு ஆபத்து வந்தவிட்டது என்பதனாலேயே கொதிப்படைந்து உள்ளதாகவும் தலைமைச் செயலகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களே தேசவிரோத சக்திகள் எனவும் தலைமைச் செயலகத்தினர் பதில் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இலங்கை அரசுடன் செயற்படுபவர்கள் எனத் தலைமைச் செயலகமும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த மாவீரர் தின அணி சேர்க்கையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பமடைந்து உள்ளனர். நீண்ட கால போராட்ட ஆதரவாளரான சட்டத்தரணி ஒருவர் தேசம்நெற் க்கு கருத்துத் தெரிவிக்கையில் “மாவீரர் தினத்தைக் கொண்டாட இவர்கள் யாருக்குமே தகுதி இருப்பதாக தான் கருதவில்லை” எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “மக்கள் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து அல்லது ஆலயங்களுக்குச் சென்று அந்த மாவீரர்களை நினைவு கூறவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களை இனங்கண்டு உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பொது மக்களில் பலரும் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அணிகள் பற்றி பெரிதாக அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அந்த ஆர்வமும் இருக்கவில்லை. அன்றைய தினத்தில் அந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு வேறு எந்த அரசியல் அபிப்பிராயமும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக எக்சல் மண்டபத்துக்கு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்று வந்த கிழக்கு லண்டனைச் சேர்ந்த குடும்பத்தினர், ”இத்தடவையும் தாங்கள் தங்கள் கடமையைச் செய்வோம்” என்றனர். “நவம்பர் 27 தாங்கள் வழமைபோல் எக்சல் மண்டபத்துக்கு செல்ல இருந்தோம். ஆனால் இப்போது அங்கு நடைபெறவில்லை என்பதால் அன்று காலையில் தான் எங்கு செல்வது என முடிவெடுப்போம்” எனத் தெரிவித்தனர்.

தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அமையும் வீரர்களின் நினைவு நாள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மாவீரர் தினத்தை ஏகபோகமாக்கிக்கொள்ளும் போட்டியாக அமைந்துள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், தலைமைச் செயலகமும் உலகின் தலைநகராக விளங்கும் லண்டனில் நடத்தும் மாவீரர் தினக் கயிறுழுத்தல் போட்டியில், யார் வெல்கிறார்கள் என்பது ஏனைய நாடுகளிலும் தங்கள் ஸ்தானத்தை உறுதிப்படுத்த உதவும் என்பதால், லண்டனில் போட்டி பலமாகவே உள்ளது. ஆனால் இப்போட்டியில் யார் வென்றாலும் மாவீரர்களினதும் அவர்களினது குடும்பங்களினதும் உணர்வுகள் போட்டி என்று வந்ததுமே தோற்கடிக்கப்பட்டு விட்டது. மாவீரர் தினத்தை அனைவரும் இணைந்து ஒற்றுமையாக உணர்வுபூர்வமாக நடத்தி இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பாக உள்ளது.

 : த ஜெயபாலன்

www.thesamnet.co.uk