Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

வடகிழக்கு சிறு வியாபாரிகளை நாசமறுக்கும் ராணுவம்

வடக்குக்கிழக்கில் இன்றைய நிலையில் மக்களின் வருமான மூலங்கள் பற்றிய ஆய்வுக் கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள கடமைகளுக்கான நிலையத்தில் நடைபெற்றது. பல்துறை சார்ந்தவர்கள் பங்கேற்ற இக் கலந்துரையாடலிலே  வடக்கு கிழக்கு மக்கள் இன்று முகம் கொடுக்கும் பல வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் காணப்படும் வளங்களை அங்குள்ள மக்கள் பயன்படுத்தி எதாவது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். தொடர்ச்சியான இழப்புக்களைச் சந்தித்துள்ள மக்கள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியாது தென்னிலங்கை பெரு முதலாளிகளின் படையெடுப்புக்களும் பாதுகாப்புத்தரப்புக்களது வணிக முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வடக்குக் கிழக்கில் உள்ள எமது மக்கள் தொடர்ச்சியாக யுத்தத்தினால் நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக மக்களுக்கு போரினால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகள் ஏதும் வெளியுலகிற்குக் காட்டிக்கொள்ளப்படுவது போன்று எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினைப் போக்குவதற்கான திட்டங்கள் உண்மையில் வடக்குக் கிழக்கில் நடைபெறுவதாக விளம்பரப்படுத்தப்படும் அபிவிருத்திகளுக்குள் கிடையாது. யதார்த்தம் இவ்வாறிருக்க தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் என சகலதையும் இழந்துள்ள எமது மக்களிடம், தெற்கில் இருந்து பெருமுதலாளிகள் படையெடுத்து அங்குள்ள எம்மவர்களைச் சுரண்டும் வகையில் வர்த்தகம் நடைபெறுகின்றது.

இவற்றுக்கு மேலாக படைத்தரப்பினர் மேற்கொள்ளும் வணிக முயற்சிகள் மக்களுக்கு தொழில் செய்வதற்கு இருக்கக் கூடிய இடைவெளிகளை அற்றுப் போகச்செய்கின்றது. யதார்த்தம் இதுவாக இருக்கையில் போலித்தனமாக எமது பகுதிகளில் அபிவிருத்திகளுக்கு முன்னுரிமையளிப்பதாகக் கூறுகின்றனர்.

உதாரணமாக வடக்குக் கிழக்கில் உள்ள சுற்றுலா மற்றும் மகிழ்ச்சிக்குரிய பொழுதுபோக்கும் இடங்களாக அமைகின்ற பகுதிகளை படைத்தரப்பினர் சுற்றுலா வலயங்களாகவும் தமது பராமரிப்பிற்கும் வணிகத்திற்கும் உரிய பகுதிகளாக தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இவ்வாறாக படைத்தரப்பின் ஆளுகைக்குள் காணப்படும் கடற்கரைகளில் சாதாரணமாக அப்பிரதேசத்திற்கு உரிய மக்கள் வியாபார முயற்சிகளைக் கூட செய்ய முடியாதுள்ளது. அங்கு படைத்தரப்பினரே வணிகம் செய்கின்றனர். இது மக்களது வாழ்வாதாரத்தை அபகரிப்பதாக அமைகின்றது. அடிப்படையில் அவ் அவ் பிரதேசங்களுக்கு உரிய வருமானத்திற்குரிய முக்கிய பிரதேசங்கள், அவ் அவ் பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்கள் போன்றவற்றின் பராமரிப்பிற்காக வழங்கப்பட்டு அங்கு பிரதேச மக்கள் தொழில் முயற்சிகளை நடத்தத் தக்கதாகவும் உள்ளுராட்சி நிறுவனங்கள் பெறும் வருவாய்கள் பிரதேச அபிவிருத்திக்கும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவெதுவும் வடக்குக் கிழக்கில் நடைபெறவில்லை.

இந் நிலையில் வடக்குக் கிழக்கில் மக்களது தொழில் முயற்சிகளை முடக்கும் வகையிலான சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தமது பகுதியில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு அவர்களது வாழ்வாதாரத்தினைக் காப்பாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டுமென ஜனநாயகக் கடமைகளுக்கான நிலையத்தின் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.