Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் சுதந்திரதினமாம்!!!

தமிழ் தேசியவாதிகள் கூறுகின்றனர் இது “சிங்களவனின்” சுதந்திர தினம் என்று. நாங்கள் கூறுகின்றோம், அதுவுமில்லை என்று. தமிழன், சிங்களவன் என்று எவனுக்கும், இலங்கையில் சுதந்திரம் கிடையாது. ஆம் இலங்கை மக்களுக்கு சுதந்திரமில்லை. இது தானே உண்மை.

இப்படியிருக்க குறுகிய தமிழ் இனவாதம் மூலம் சுதந்திரத்தைப் பற்றிய குறுகிய இனவாதப் பிரச்சாரம், சுதந்திரம் மறுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு எதிரானது. இது இனவாத அரசுக்கு சார்பானது. இது தமிழ் மக்களுக்கு எதிரானது. தமிழனை சுரண்டும், தமிழ் சுரண்டும் வர்க்கத்தை முன்னிறுத்தும், தமிழ் வலதுசாரியமாகும்.

 

இலங்கையின் சுதந்திரம் யாருடையது?.  அது சுரண்டும் வர்க்கத்தின் சுதந்திரமாகும். இது இனம் கடந்து சுரண்டும் சுதந்திரம். ஆம் மூலதனத்தின் சுதந்திரம். இதற்கு எல்லை கிடையாது. அதுவோ உலகம் தளுவியது. இதற்கென்று குறுகிய அடையாளமும் கிடையாது. இனம் கிடையாது. மதம் கிடையாது, சாதி கிடையாது …

இப்படியிருக்க இந்த சுதந்திரத்துக்கு குறுகிய அடையாளமிட்டுக் காட்டுவது, (சொந்த) மக்களை ஏமாற்றி சுரண்டுவது தான். மற்றவனை ஒடுக்கியோ, எதிரியாக காட்டியோ சுரண்டுவது தான். மக்களை பிளந்து, அவர்களை மோதவிட்டு, அவர்களை ஏமாற்றி சூறையாடுவது தான்.

சுதந்திரமோ மூலதனத்துக்கு தான். இந்த சுதந்திரத்தை அனுபவிப்பவன் யார்? சுரண்டும் வர்க்கமும், அதற்கு தலைமை தாங்கும் ஆளும் வர்க்கமுமாகும். இந்த உண்மையை மறுத்து முன்னிறுத்தும் சுதந்திரமும் சரி, சுதந்திர எதிர்ப்பும் சரி, மக்களை மொட்டை அடிக்கும் அரசியலாகும்;. இது  மக்களுக்கு சுதந்திரத்தை மறுக்கும், சுரண்டும் வர்க்க அரசியலாகும்;. இது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஆதரவும் மட்டுமல்ல, எதிர்ப்பு அரசியலுமாகும்.

இப்படி இலங்கையில் பேரினவாதம், குறுகிய தமிழ்த் தேசியவாதம் இனவாதத்தைத் தூண்டிவிடுகின்றன. இதன் மூலம் மக்களைப் பிளந்து மோதலைத் தூண்டி, சுதந்திரம் பற்றி ஆதரவுப் பிரமைகளையும், எதிர்ப்புப் பிரமைகளையும் கட்டமைக்கின்றனர். இதன் மூலம் சிங்கள – தமிழ் சுரண்டும் வர்க்கமோ, மக்களை ஒடுக்கி சுரண்டி வாழ்கின்றன.

இலங்கையின் ஆளும் வர்க்கமோ பேரினவாதிகளாக தம்மைக் காட்டியபடி, தமிழ் மக்களை மட்டும் ஒடுக்கவில்லை, சிங்கள மக்களையும் ஒடுக்கின்றது. இலங்கை மக்கள் அனைவர் மீதும் பாசிசத்தை ஏவுகின்றது.  சட்டத்தின் ஆட்சியையே மக்களுக்கு மறுக்கின்றது. அனைத்தையும் தனக்கு ஏற்ப வளைத்துப் போடுகின்றது.

இன்று அரசை விமர்சிக்கும் ஊடகத்துக்கு இலங்கையில் சுதந்திரம் கிடையாது. அரச எதிர்ப்பாளர்களை இனந்தெரியாதவர்கள் கடத்துவது, படுகொலை செய்வது அன்றாட செய்தியாகின்றது.

இது தமிழன் சிங்களவன் என்று எந்த இனப் பாகுபாடுமற்றது. அது தமிழக மீனவர்களையும் கூட இதே அடிப்படையில் தான் கொல்லுகின்றது. பாசிசத்தின் மொழி அது. இதன் மூலம் சுரண்டும் வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தி, பாசிசத்தை மக்கள் மேல் ஏவியபடி இது தான் சுதந்திரம் ஜனநாயகம் என்கின்றது. இதை இலங்கை மக்களின் சுதந்திரமாக காட்ட, சுதந்திர தினத்தை முன்னிறுத்தி கொண்டாடுகின்றது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

(துண்டுப்பிரசுரம் 04.02.2011)