Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த பாசிச மன்னனுடனும், இந்திய எஜமானர்களுடனும் சேர்ந்து மக்களை முட்டாள்களாக்கும் கூட்டமைப்பின் கூத்து!

பாசிச அரசையும், அதிகார திமிர் பிடித்து ஆடும் மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சியையும் நாட்டின் அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது இலங்கை மக்களே. நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் குடும்ப சொத்தாக்கி, இந்த கும்பல் போடும் கூத்து எல்லை தாண்டிவிட்டது. கடத்தல், கொலை, மிரண்டல் என்று மக்களை மறைமுகமாக அச்சுறுத்தி வைத்து கொண்டு, சிறு உயிரைக் கூட கொலை செய்யக் கூடாது என்று வாழ்ந்த புத்தபிரானின் அவதாரங்கள் தாங்கள் தான் என்று பொய் முகத்தினை வெளியில் காட்டிக் கொண்டிருப்பவர்கள் தான், இந்த மகிந்த கும்பல்.

புலிகளை வெல்ல பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த இந்த கும்பல் இன்று மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் கொன்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டால் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது காணாமல் போய்விடுகிறார்கள். அண்மையில் கொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தையான அப்பாவி மீன்பிடித் தொழிலாளி அன்டனி பெர்ணான்டோ தனதும், மக்களினதும் உரிமைகளுக்காக போராடியதால் மகிந்த பாசிச சர்வாதிகாரத்தினால் கொலை செய்யப்பட்டார். இதனால் மக்கள் குழப்பமடைந்து கிளர்ந்தெழுந்து விடக் கூடாதென்பதற்காக பொலிஸ் படை கொண்டு அடக்கி வைத்தது இந்த அரசு. மகிந்த அரசும், இராணுவமும் நாட்டு மக்கள் மீதும், அரச ஊழியர்கள் மீதும் தனது சர்வாதிகார செயற்பாட்டினை திணித்து வருகிறது. அரசு, இராணுவம், எடுபிடி அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் என மகிந்த சர்வாதிகாரம் சங்கிலி தொடராக செயற்பட்டு இறுதியில்  மக்கள் தலையில் வந்து விழுகிறது. மகிந்தாவின் நலன் வேண்டி ஆலயங்கள் தோறும் நடாத்தப்படும் பிரார்த்தனைகள், ஜெனீவாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்; அரசினதும் அதன் கூலிப்படைகளினதும் அச்சுறுத்தலின் நடவடிக்கைகளே.


இப்போது ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள இலங்கைக்கெதிரான மனித உரிமை கூட்டத்தொடர், நாட்டு மக்களிடையே இனவாதத்தினை வளர்க்கும் செயற்பாடு என்பது இலங்கை அரசு, கூட்டமைப்பு சம்பந்தர் போன்ற அரசியல்வாதிகளின் கருத்து. இதில் உண்மை இல்லாமல் இல்லை. நாட்டு மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ளாமல் எடுக்கும் எந்த செயற்பாடும் மக்கள் நலனுக்கு எதிரானதே. ஆனால் இதில் வேடிக்கையானது என்னவெனில் இதனை கூட்டமைப்பு சம்பந்தன் கூறுவதுதான். ஜெனீவாவின் செயற்பாடு இனத் துவேஷத்தினை வளர்க்குமாம். இனவாத அரசியலால் மக்களை கூறு போட்டு இத்தனை அழிவு ஏற்பட கூட்டணி பின்னர் கூட்டமைப்பு என்று தொடங்கி இறுதியில் புலிகளோடு நின்று இனவாத அரசியலில் பிழைப்பு நடாத்திய சம்பந்தர் இனத் துவேஷம் பற்றி பேசுவது நகைச் சுவையானது. இதனால் குழப்பமடைந்துள்ள மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் தெளிவுபடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறாராம். தனது சுயலாப அரசியல் நலன் கருதி இந்திய ஆளும் வர்க்க எஜமானர்களையும், மகிந்தாவையும் பகைத்து கொள்ள விரும்பாது ஜெனீவா சந்திப்பினை தவிர்த்து கொண்ட சம்பந்தன், அதை மறைத்து தன்னை நியாப்படுத்த எத்தனை கூத்துக்கள் ஆடுகிறார்.

காலம் காலமாக இந்த அரசியல்வாதிகள் இரட்டை முக வேடம் பூண்டு அரசியல் நடாத்துபவர்களே. அரசுக்கு தலையையும், மக்களுக்கு வாலையும் காட்டி பிழைப்பு நடாத்துவது தான் இவர்களின் செயற்பாடாகும். படித்து பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்ற தகமைகளை நம்பி சாதாரண மக்கள் இவர்களிடம் ஏமாந்து போவதால் இவர்களுக்கு மக்களை ஏமாற்றுவது இலகுவாகிவிட்டது. 50களின் ஆரம்பத்தில் இருந்து பார்த்தால், இந்த தமிழ்த் தேசியவாதிகளால் மக்களின் எந்த பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது..? எதுவுமே இல்லை. மாறாக மக்களுக்கிடையில் பிளவையும் துவேஷத்தை ஏற்படுத்தியதும் இல்லாமல் பாரிய மக்கள் அழிவையும் ஏற்படுத்தி மக்கள் மீதான சுமையினை பன்மடங்காக்கியுள்ளார்கள். அத்தோடு இளைஞர்களை துப்பாக்கி ஏந்த வைத்து தவறான பாதையில் அவர்களை பயணிக்க வைத்து மகிந்தா போன்ற இன அழிப்பு அரசியல்வாதிகளுக்கு இலகுவாக தமிழ் மக்களை கொன்று குவிக்க வழி அமைத்துக் கொடுத்தது இந்த தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் தான்.


இப்போது ஜெனீவாவில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் சம்பந்தமாக நடைபெறும் கூட்டத் தொடர் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல. இலங்கை அரசிற்கும், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடு தான் இந்த கூட்டத் தொடர்.

இதில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கலந்து கொள்வதாலோ அல்லது கலந்து கொள்ளாததாலோ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் இதில் கூட்டமைப்பு காட்டிக் கொண்ட இரட்டை முகத்தினை மக்கள் தெரிந்து கொள்ள இது நல்ல சந்தர்ப்பம். மகிந்தாவின் சர்வாதிகாரத்திற்கும் இன அழிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்களை திரட்டி  போராடும் எத்தகைய அரசியல் வழிமுறைகளும் இவர்களிடம் கிடையாது. மாறாக கூட்டமைப்பு மேல் மக்களுக்கு ஏற்பட்ட அதிரிப்தியினை போக்கி மக்களின் வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐ.நா மனித உரிமை பேரவையில் உறுப்பு நாடுகளான 47 நாடுகளுக்கும் நீண்ட கடிதமென்றை அனுப்பியுள்ளார். சம்பந்தனின் குழப்பநிலையினை இக் கடிதம் நன்றாக எடுத்துக் காட்டுகிறது. தங்களை யாராலும் குழப்ப முடியாது என்று பிபிசி தமிழோசைக்கு கூறும் சம்பந்தனின் பேட்டியும் பேச்சும் அவரது பதட்டத்தையும் குழப்பத்தையும் நன்றாக எடுத்து காட்டுகிறது. இனவாத தமிழ் தேசியவாத அரசியலைத் தவிர வேறெதும் நிலையான கொள்கையாக கொள்ளாத கூட்டமைப்பின் உறுப்பினர்களால் ஒரே கருத்துக்குள் செயற்பட முடியாது என்பது யதார்த்தம். சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய கருத்து முரண்பாட்டினை பிபிசி தமிழோசை நிருபர் கேட்கும் போது கூட்டமைப்பின் பொறுப்புள்ள தலைவரால் தெளிவாகவோ பொறுமையாகவோ பதிலளிக்க முடியவில்லை. தன்னுடைய ஆற்றாமையினை நன்றாகவே கொட்டித் தீர்த்துள்ளார். அதே சமயம் சுரேஸ் பிரேமச்சந்திரனின் பேட்டியில் இருந்து அவர்களுக்குள் இருக்கும் கருத்து முரண்பாட்டை தெரிந்து கொள்ளலாம்.


மக்கள் அவல நிலையில் இருக்கிறார்கள் கண்டதுகளை சொல்லி மக்களை குழப்பாதீர்கள் என்று கூறும் சம்பந்தன், மக்களின் இன்றைய அவல நிலையினை ஐ.நாட்டிற்கு எடுத்து காட்டுவதன் மூலம் தங்களை மக்கள் மேல் கரிசனை கொண்ட அரசியல்வாதிகளாக வெளிக்காட்ட முற்படுகின்றார். கூட்டமைப்பு இதுவரை எந்த மக்களின் பிரச்சனையை தீர்த்து வைத்தார்கள் அல்லது அது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள். கொலைகாரனிடம் நியாயம் கேட்பது போல் மகிந்தாவிடம் உறுதி மொழி கேட்டார்களாம். வன்முறை பாதைக்கு செல்லாது தீர்வு காண விரும்பும் சம்பந்தனும் அவர் கூட்டமைப்பு எந்த அடிப்படையில் புலிகளோடு கைகோர்த்து நின்றார்கள். சந்தர்ப்பத்துக்கு தக்க மாதிரி புரட்டு அரசியல் நடாத்தும் இவர்கள் தாங்கள் மக்கள் பிரதிநிதிகளாம்..!


ஐக்கிய நாட்டிற்கு கடிதமெழுதித் தான் சொந்த மக்களின் பிரச்சனையினை தீர்க்க வேண்டுமாயின் இத்தனை மக்கள் பிரதிநிதிகள் எதற்கு..? மக்களை குழப்பி அவர்களின் அறியாமையில் பிழைப்பு நடாத்துவர்கள் தான் இந்த தமிழ் தேசியவாதிகள். இன்று ஊடகங்களைப் பார்த்து மக்களை குழப்பாதீர்கள் என்று சம்பந்தன் சீறி விழுவது அவரது மனப்பயமே. மக்கள் தெளிவடைந்து விடுவார்களே என்ற மனப்பயம். இத்தனை வருடங்கள் தமிழ்த் தேசியத்தினுள் தங்களை மறைத்து தாங்கள் நடாத்திய ஏமாற்று அரசியல் மக்களுக்கு அம்பலப்பட்டு விடுமோ என்ற பயம் சம்பந்தனுக்கு.


இன்று ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் படுகுழிக்குள் புதைத்து வரும் மகிந்த சர்வாதிகாரத்தினை எதிர்த்து குரல் கொடுக்க முதுகெலும்பில்லாத இந்த அரசியல்வாதிகள் மக்களின் அவலத்தினை போக்கப்போகிறார்களாம். மக்களின் அழிவிலும் அவலத்திலும் பிழைப்பு நடாத்தும் இந்த தமிழ் தேசியவாதிகளை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சம்பந்தனாலும் கூட்டமைபினாலும் தான் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்த்து வைக்க முடியும் என்ற தவறான கருத்தியல் தமிழ் மக்கள் மனதில் அடியோடு மாற வேண்டும். மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளை மக்கள் இனங்கண்டு கொள்வதே மக்களின் விடிவுக்கான முதற்படியாக அமையும்.

- தேவன்.
03/03/2012