Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்த ராசபக்சவுக்கு சனியன் பிடித்து விட்டதாம்- நல்லூரிலும் நாகவிகாரையிலும் விசேட பூசை!

நாட்டிற்கு நன்மை வேண்டி ஆலயங்களில் ஆலயமணி!...  இது அரசின் கட்டளை!

நாட்டுக்கு ஆசீர்வாதம் வேண்டி சகல ஆலயங்களிலும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மணி ஒலிக்க விடுமாறு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஊடாக பிரதேச செயலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இலங்கையிலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பௌத்த விகாரைகளில் பிரித் பாராயணம் இடம்பெற வேண்டும். இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் மணி அடித்து வழிபாடுகள் நடக்க வேண்டும். முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் விசேட தொழுகை நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது பகுதியில் உள்ள சகல ஆலயங்களுக்கும் அறிவித்து இந்த வழிபாட்டை இயற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த வாரம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய கடமை நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அரச ஊழியர்கள் கோயில்களுக்குச் சென்று விசேட பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

எட "கடவுளுக்குக் கூட கண்டிப்பான உத்தரவு"! காலை 9-மணிக்கு மணி அடிபடும், நான் கேட்பதைத் தா… சொல்வதைச் செய்! இது சர்வாதிகாரத்தின் உச்சமாக தெரியவில்லை?...எம்நாட்டின் அடக்கி-ஒடுக்கியுள்ள மக்களுக்கும், சர்வதேசத்திற்குத்தான் வெருட்டென்றால், திக்கற்ற மானிடத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமான பரம்பொருளுக்கும் அல்வாவா வெள்வெருட்டு!

கந்தபுராணத்தின் சூரன் தான் வாங்கிய வரத்தால், மாபெரும் சர்வாதிகாரியானான்! சூரியனுக்கு சொன்னான், என் மாளிகை சுற்று வட்டாரத்திற்கு வெளிச்சம்கொடு, ஆனால் வெப்பம் இருக்கக்கூடாதென்று! சந்திரனுக்கு சொன்னானாம் உன் தேய்பிறை வளர்பிறை உன்ர பிரச்சினை,  நீ எப்போழுதும் குளிருடன் கூடிய முழுமதியாகி, என்பிரதேசத்திற்கு; பிரசன்னமாகவேண்டும்! என்றானாம்! இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒவ்வோர் ஓடர்!

ஒப்பீட்டளவில் நம்நாட்டிலும் சூர நிலைதான். மகிந்தாவின் மாபெரும் தமிழினப் படுகொலைககளுக்கு பாபம்-களைய பிராயச்சித்தம், ஆசீர்வாதம் வேண்ட, அரசு-அரச-இயந்திரம் முதல், மந்திரி பிரதானிகள், கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மதகுருமார் ஈறாக, தெய்வங்கள் வரை பயமுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இளவரசனான சித்தாத்தனின் துறவறத்திற்கான பெரும்காரணி அன்றைய அரச அதிகாரததின்; திமிர்கொண்ட கட்டளையை ஏற்க மறுத்ததும், பல உயிர்கள் பலியாவதை தடுப்பதற்காகவுமேயாகும்;. இது பௌத்த-சிங்கள மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல! மகிந்த வெறியின் முள்ளிவாய்க்காலை அறியாதவர்களுமல்ல! இன்றைய இச்சூரனின் சர்வாதிகாரத்தை புரியாதவர்களுமல்ல! ஆனால் எம்நாட்டின் சமகால தேச-கால-வர்த்தமானம் அவர்களையும் அடக்கி ஒடுக்குகின்றது! ஆனால் அவர்கள் இன்றல்ல…நாளை இவ்வரசிற்கெதிராக "சூரன்போரை" செய்வார்கள்.  இப்போரில் நாமும் அவர்களுடன் இச்சூர அரசை இல்லாதாக்க…..எம் பங்கையும் பகிர்ந்தளிப்போம்!

11/03/2012