Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊருக்கு உபதேசம் தனக்கும் தனது சகாக்களுக்கும் இல்லை என்கிறார் ராஜபக்ஸ

அபிவிருத்தியடைந்த நாடுகள்,  கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

 

இதே ராஜபக்ஸ பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் இறுதிநிகழ்வில் கலந்து கொள்ளச் செல்லும் போது, அங்கே இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா வழங்கியுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான திட்டத்தின் நிலைவரம் ஆகியவை குறித்து ஆராயப்படும் எனவும் மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் சந்திக்கவுள்ளார் எனவும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பில் சோனியா காந்தி இனப் பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையை முன்வைப்பது குறித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.

ஊருக்கு உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் தான் மேற்குறிப்பிட்ட செய்தி . நாட்டு மக்களிடம் கடன் வாங்கக் கூடாது என கூறுவதன் மூலம் தன்னை ஒரு தேசியவாதியாக வேடமிட்டு காண்பிக்கும் ராஜபக்ஸ மறுபக்கத்தில் இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்கத்தை இலங்கையில் நிறுவி அதன் மூலம் இலங்கையின் அனைத்து செல்வங்களையும் கொள்ளையிட்டு செல்ல துணை நிற்பதுடன்,  இந்திய அரசு முதலிட்ட தொகைக்கு பணத்திற்கு கணக்கு காட்டவும் தனது குடும்பத்துக்கு வர வேண்டிய தரகுப் பணத்தினை வேண்டவும் மேலதிகமாக கையேந்தவும் படையெடுக்கிறார்.

மேலும் இந்திய ஆளும் வர்க்கம் தமது பிராந்திய வல்லாதிக்கத்தினை நோக்கில் கொண்டு இலங்கையின் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுப் பொட்டலத்தினை திணிக்கவுள்ளனர். அதன் சூட்சுமத்தினை விளக்கவுள்ளனர்.

தேசியவாதம் மற்றும் இனவாதம் போன்ற வாய்ச்சவடால்களை வானுயர முழங்கி பொது மக்களை தம் பின்னால் ஆட்டு மந்தைகள் போன்று கட்டி வைத்துக் கொண்டு மறுபுறத்தே தமது அந்நிய எஜமானர்களிற்கு விசுவாசமாக தமது வாலை ஆட்டுவதே,  இவர்களது  இன்றைய அரசியல் செயற்பாடாகும்.