Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜ.நாவும்... ஈழத்தமிழ் அரசியலும்...

ஜ.நாவில் எடுக்கப்பட்ட இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான முடிவுகளை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று தமிழ் நாட்டிலும், ஏகாதிபத்தியங்கள் போர்க்குற்றங்களிற்கு மகிந்தாவுக்கும் அவருடன் கூடி முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்தவர்களுக்கும் தண்டனை கொடுக்கும் என இன்னமும் மக்களை புலி மற்றும் பிரபாகரன் பெயரால் ஏமாற்றிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ்த்தேசியவாதிகள் ஜ.நா முன்றலிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜ.நா மனித உரிமைச்சபையில் இலங்கை அரசின் ஆதரவுடன் அமெரிக்கா முன்வைத்த தீர்மானம் ஒன்று நேற்றைய தினம் (01/10/2015) நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் சாதாரண மக்களிடத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனபடுகொலை குறித்த கோபமும் அதற்க்கான நீதி வேண்டிய ஆக்கிரோசமும் இருக்கின்றது. அது நியாயமானது. ஒரு சரியான வழிகாட்டும் அரசியல் தலைமை இந்த சாமானிய மக்களிற்கு இல்லாத இடத்தில் தமிழ் நாட்டில் உள்ள ஓட்டுப்பொறுக்கும் கட்சிகளும், மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள தனிநபர்களும் தமது அரசியல் நோக்கங்களிற்க்காக ஈழப் பிரச்சனையில் உண்மையான உணர்வுள்ள மக்களின் போராட்டங்களை பயன்படுத்துவதே பல சகாப்தங்களாக நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்புக்காக தமிழ் நாட்டில் போராட்டம் நடத்துபவர்களாகவும், புலம்பெயர் தமிழ்தேசியவாதிகள் சுருட்டியுள்ள அப்பாவி மக்களின் பணத்தில் வெளிநாடுகளுக்கு வந்து உணர்ச்சிப் படம் காட்டுபவர்களாகவும், கூடியிருந்து குழிபறிப்பவர்களாகவும் இருக்கின்றனரே ஒழிய உருப்படியாக ஏதாவது செய்தது உண்டா? குறைந்த பட்சம் இவர்களால் போராட்டங்களை முன்னெடுத்து அமெரிக்க குண்டானாபே சித்திரவதை முகாமிற்கு சமமாக பேசப்படுகின்ற இந்தியாவில் கைது செய்யப்படுகின்ற சந்தேகத்திற்கு இடமான ஈழத்தமிழ்ர்களை தேசிய பாதுகாப்பு என்னும் பெயரில் சித்திரவதை செய்வதற்க்காக சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டு இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சித்திரவதைக் கூடமான "சிறப்புமுகாமை" மூடி அதில் சிறைப்பட்டுள்ளவர்களிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இது மத்திய அரசு விடயம் நாம் தலையிட முடியாது, போராட முடியாது என நழுவுவதே போக்காக உள்ளது.

மக்களின் உணர்வுகளை தமது சொந்த நலனுக்காக வியாபாரம் செய்யும் இந்த வியாபாரிகளை தான் எமது புலம்பெயர்ந்த தமிழ்த்தேசியவாதிகள் கூட்டி வந்து ஜ.நாவிற்கு வெளியில் தாம் ஒழுங்கு செய்யும் கூட்டங்களில் பேச விட்டு விட்டு, ஜ.நாவில் தமிழ் நாட்டிலிருந்து வந்த வெங்காயம் ஒன்று பேசியதாக தமிழ்த்தேசிய ஊடகங்கள் வாயிலாக மக்களை ஏமாற்றுவதுடன் அவர்களின் போராடும் போர்க் குணாம்சத்தை இல்லாது ஒழிந்து போகும் கைங்கரியத்தை செய்கின்றனர்.

புலம்பெயர்ந்த தேசங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது உறவுகளை இழந்து போரின் கொடுமையினை அனுபவித்தவர்களாகவும் அதன் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீள முடியாதவர்களாகவுமே உள்ளனர். தமக்கு நிகழ்ந்த அநியாயங்கள் மற்றும் கொடுமைகளிற்க்காக நீதியை வேண்டி போராடும் மக்களாகவே இன்னமும் இருக்கின்றனர். இந்த மக்களின் அரசியல் மீது கடந்த காலத்தில் செல்வாக்கு செலுத்திய புலி, பிரபாகரன் மற்றும் தமிழ்த்தேசிய வெறியினை விட்டு வெளியில் வந்து இன்றைய உலகமாற்றத்தினை பார்க்க முடியாதவர்களாகவும் ஏனைய போராடும் சர்வதேச மக்களுடனும் இணைய முடியாதவர்களாகவும் இருக்கின்ற நிலையில், பிழைப்புவாத தமிழ்தேசியவாதிகளின் பிழைப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஜ.நா அது உருவாகிய நோக்கத்திலிருந்து திசைமாறி பயணிக்கத் தொடங்கி மிக நீண்ட காலமாகி விட்டது. இதனை ஈழத்தமிழ் இன அழிப்பில், பலஸ்த்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில், ஆப்கானிஸ்த்தான் மற்றும் ஈராக் மீதான மேற்குலக ஆக்கிரமிப்பில் என நாம் இனம் கண்டு கொண்டிருக்கின்றோம். எனவே ஜ.நா பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியை பெற்றுத்தரும் என இன்னமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது மக்களிற்கு செய்யும் மாபெரும் துரோகம்.

ஜ.நா முன்றலில் நின்று “எமது தலைவர் பிரபாகரன், எமக்கு வேண்டும் தமிழீழம்”, “இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா”… போன்ற கோசங்களுடனான கூத்தும் அதனை சுற்றிய புலம்பெயர் ஊடகங்களின் பிரமாண்டமான பில்ட்அப்புகளும் கேலியானதா இருக்கின்றது.

ஜ.நா முன்றலில் நடக்கும் போராட்டங்கள் ஜ.நாவின் போலி முகத்தை திரை கிழிப்பதானதாக இருக்க வேண்டும். அது உலக மக்களின் கவனத்தை அக்கறையினை எம்மீது திசை திருப்பும். தமிழ் மக்களிற்கு நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கான நியாயத்தை கேட்கின்ற பாரிய மக்கள் சக்தியை உருவாக்கும். அதனை விடுத்து அமெரிக்க, பிரித்தானிய ஏனைய மேற்குலக நாடுகளின் கொடிகளை ஏந்திக் கொண்டு போராட்டத்திற்கு சம்பந்தமில்லாத, கால நேரத்திற்கு பயன்படாத மந்திரம் போன்ற கோசங்களை உச்சரித்துக் கொண்டு, தமிழ் நாட்டு பிழைப்புவாத அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு போராடினால் மேற்குலக பாராளுமன்ற உறுப்பினர்களும், தொண்டு நிறுவனங்களும், தரகர்களுமே இந்தப் போராட்டத்தினால் ஈர்க்கப்படுவர். தமிழ் மக்களின் போராட்டம் உலக அரங்கிலிருந்து முற்றாக துடைத்து எறியப்பட்டுவிடும். ஏறத்தாழ இன்று அதுதான் நிலையாகி கொண்டுள்ளது.

இந்தியாவிலும் புலம்பெர்ந்த தேசங்களிலும் ஈழத்தமிழர்களின் பிரச்சனை என்பது  ஒரு சிறந்த வியாபாரப்பொருளாக மாறிவிட்டது.

இதிலிருந்து மீள முடியாதா? நிச்சயமாக வழி இருக்கின்றது. அது மிகவும் கடினமானது. பல தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் அதற்கு தேவை. எமது பிரச்சனையின் நியாயத்தினை இலங்கையில் உள்ள சிங்கள, முஸ்லீம் மற்றும் ஒடுக்கப்படுகின்ற மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் போராட்டங்களுடன் இணைந்து கொள்வதன் மூலமும்; சர்வதேசங்களில் உள்ள போராடும் மக்களிடமும் கொண்டு சென்று அவர்களின் போராட்டங்களுடன் இணைந்து கொள்வதன் ஊடாகவும் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான நீதியையும், அரசியல் உரிமைகளையும் நிச்சயம் வெற்றி கொள்ள முடியும்.

பந்து எப்போதும் தமிழ் மக்களின் கையில் தான் உள்ளது. அதனை எம்மை வைத்து பிழைப்பு நடத்தும் 1% ஆன மக்களின் எதிரிகளின் கைகளிற்கு தொடர்ந்தும் கொடுக்கப் போகின்றோமா? அல்லது 99% மான போராடும் மக்களுடன் இணைந்து நின்று, ஒரு மாற்றத்தின் பக்கம் பந்தினை கொடுத்து இனவாதம், மதவாதம், நிறவாதத்தால் பிளவுண்ட உலகினை மாற்றி அமைக்கும் போராட்டத்தில் இணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு போகின்றோமா? என தீர்மானித்தாக வேண்டியது எம் கைகளில் தானுள்ளது மக்களே!