Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்!!

“எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்”என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள்,  மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.

 

கடந்த காலத்தில் இவர்களில் பலர் விடுதலைப் போராட்டத்திற்கு மானசீகமாக உழைத்தவர்கள் அல்ல. மக்களை வற்புறுத்தி அச்சுறுத்தி பணம் சேர்த்த இவர்கள், தாம் சேர்த்த பணத்தில் 20% த்தினை கமிசனாக பெற்றுவந்துள்ளனர். அதாவது புலிகளிற்கு சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள் தான் இவர்கள். மேலும் சிலர் புலிகளின் முதலீடுகளிற்கு பினாமிகளாக இருந்து, தமது பெயர்களில் வியாபார நிறுவனங்களை நடத்தினார்கள். புலிகளின் அழிவின் பின்னால் அவற்றினை தமது உடமையாக்கியுள்ளனர். இவர்கள் விடுதலைப் போராட்டத்திற்க்காக ஒரு மயிரைத்தானும் தங்களிடமிருந்து இழந்தவர்கள் அல்லர். மாறாக மக்கள் இரவு பகலாக கஸ்டப்பட்டு உழைத்த பணத்தினையும், விடுதலை ஆர்வத்தினால் மக்கள் வங்கிகளில் கடனாகப் பெற்றுக் கொடுத்த பணத்தினையும், வர்த்தக நிறுவனம் (சிறு கடைகள்) நாடாத்துவோரிடம் மிரட்டி பறித்த பணத்தினையும் விடுதலையின் பேரில் தமதாக்கி சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்பவர்களே.

புலிகளால் புலம் பெயர்ந்த நாடுகளில் நினைவு கூறப்பட்டு வந்த மாவீரர் நிகழ்வு என்பது மக்களை அரசியல் மயப்படுத்தும் அல்லது மக்களின் அபிலாசைகளை வெளிக்கொண்டு வருவதற்கான நிகழ்வாகவோ அல்லது உயிர் துறந்த வீரர்களின் இலட்சியங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான ஒரு நிகழ்வாகவோ கொண்டாடப்படுவதில்லை. மாறாக மாவீரர் நிகழ்வை வைத்து பணம் சம்பாதித்தலே நடைபெற்றது. அன்று அவ்வாறு சேர்த்த பணத்தில் பெரும் பகுதி ஆயுதம் வாங்க பயன்படுத்தப்பட்டது. இன்று நிலைமை வேறு. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கும் எஞ்சியுள்ள புலிகளிற்கும் மறுவாழ்வுக்கான உதவிகள் நிரம்பவே தேவைப்படுகின்றன. இவற்றினைப் பற்றி இவர்கள் கதைப்பது அரிது. சிலர் தம்மிடமுள்ள புலிகளின் பினாமி சொத்துக்களை காப்பாற்ற; தாம் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலையாகியும் கைதாகியும் உள்ள புலிகளின் மீது அக்கறை கொண்டவர்களாக நாடகமாடி வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் புலம்பெயர் மக்களிடம் தமக்கு ஊடாக உதவும்படி கோரிக்கையினை வைத்து மீண்டும் “வசூல் ராஜாக்களாக” வலம்வருகின்றனர்.

அன்று தாம் புலி அமைப்பினைச்  சேர்ந்தவர்கள் என்று தம்மை தாமே தம்பட்டம் அடித்துக் கொண்ட பலர், இன்று புலிகள் அமைப்பை பற்றி எதுவும் கதைப்பது கிடையாது. அரசு பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுகின்றது என மகிந்தா மாமா பற்றி புகழ்பாடுகின்றனர்.

ஆக மொத்தத்தில் இந்த புலம்பெயர்ந்த வியாபாரிகளின் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்த எதுவித பிரஞ்சைகளும் அற்று பினாமி சொத்துக்களுக்கான நாய்ச் சண்டையிலும் மக்களை ஏய்த்து விடுதலையின் பேரால் இன்னும் ஏதாவது சுரட்டக் கூடிய வழிவகைகளை கண்டறிவதிலுமே தமது நேரத்தினை செலவிடுகின்றனர்.

இவ்வாறு மக்களை ஏமாற்றி கடந்த காலங்களில் வயிறு வளர்த்த கூட்டம் இன்றும் அதனை தொடர முயற்ச்சிப்பதனை மக்கள் தடுத்தாக வேண்டும்.

மாவீரர்களின் கனவுகள் நினைவாக்கப்பட வேண்டும் என்று கூறும் இவர்கள் முதலில் யார் என்பதை மக்கள் உணர வேண்டும். உண்மையாக மக்களை நேசிப்பவர்கள் யார் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாவீரர்கள் எனக் கூறுபவர்களின் கனவினை உண்மையான மக்கள் நலன் கொண்டவர்கள் மூலம் நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

இதை விடுத்து 27ம் திகதி மாவீரர் நாள், அதை கொண்டாடும் இடத்திற்கு சென்று பற்றுச்சீட்டு வாங்கி அந்த நிகழ்வுகளை பார்த்துவிட்டு, வெளியில் விற்கும் கொத்துரொட்டியையும் சாப்பிட்டுவிட்டு, வீடு திரும்பும் போது அந்த நிகழ்வு நன்றாக இருந்தது, இந்த நிகழ்வில் அவரின் நடனம் சரி இல்லை எனக் விமர்சனம் செய்தபடி வீடு வந்து குளிருக்கு நன்றாக போத்தி படுத்துவிட்டு, மறுநாள் காலை வழமைபோல தமது வேலைகளுக்கு செல்வதுடன் ஒவ்வோருவரின் கடமையும் முடிந்துவிடவில்லை.

எமது போராட்டம் எந்தவகையில் நியாயமானது? அதில் புலிகளின் அரசியலற்ற இராணுவாதப் போக்கு எந்தளவு தவறனது? என்பதை ஒவ்வோரும் விமர்சன ரீதியில் ஆராய முற்பட வேண்டும். அவ்வாறு ஆராய முற்படும் போது போலிப் பிழைப்புவாதிகள் முதலில் இனம் காணப்படுவார்கள். அவர்களை இனங்கண்டு தூக்கி எறிவதன் மூலம் தான் அடுத்த கட்ட அரசியலை நோக்கி நகர முடியும் .

புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாது பார்வையாளர்களாகவே வைத்திருந்தனர். இன்று புலிகளின் முன்னாள் போராளிகளை வடகிழக்கு மக்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்துவதில் இருந்து நாம் மக்கள் எந்த அளவிற்கு கடந்த காலத்தில் அரசியல உணர்வுடன் பங்களிப்பு செய்திருந்தனர் என்பதனை கண்டுகொள்ளலாம்.

ஒரு போராட்டம் ஒரு இனத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்டதாயின் அந்த போராட்டம் தோற்கடிக்கப்படின்; போராட்டத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கும், போராளிகளுக்கும் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும். ஆனால் வடகிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளுக்கோ அல்லது புலிப்போராளிகளுக்கோ மக்கள் ஆதரவு இன்று இல்லை. இது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி சிந்தியுங்கள்.

புலிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாததால், போராட்டத்துக்கு மக்கள் தாமாக முன்வந்து எந்த செயற்பாடையும் செய்யாததால் மக்களை வலுக்கட்டாயமாக தமது போராட்டத்தில் இணைத்தனர்.  இதனால் மக்கள் புலிகள் மீது ஒரு பயத்திலான ஆதரவு நிலையினையே எடுத்திருந்தனர். இவற்றை எல்லாம் விட இறுதி கட்ட யுத்தத்தின் போது மக்களை இலங்கை அரசு கொன்று குவித்தது போதாதென்று புலிகளும் தம்மை காப்பாற்றுவதற்காக, தம்முடன் நிற்க மறுத்த மக்களை கொன்றனர். புலிகளின் உண்மை முகத்தினை வன்னியில் நின்ற மக்கள் கண்டு கொண்டனர். புலிகள் தம்மை பாதுகாக்க, எந்த மக்களின் விடுதலைக்கு போராடுவதாக கூறினரோ அந்த மக்களை கொலை செய்ததனை நேரில் மக்கள் கண்டு கொண்டனர். மக்கள் விரோதிகளாகவே மக்கள் புலிகளை அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த உண்மைகளை புரிய இயலாதவாறு புலி வெறி ஊட்டப்பட்ட ஒருபகுதி புலம்பெயர் சமூகத்திடம், இந்த அரசியல் வியாபாரிகளின் பிழைப்பு இன்னமும் எடுபடுவது வேதனை அளிக்கும் அதேவேளை, ஏனைய புலம்பெயர் மக்களிடம் இவர்களின் முகச்சாயம் வெளிறத் தொடங்கி விட்டதனை காணவும் முடிகின்றது.

இந்த வியாபாரிகள் முள்ளிவாய்க்காலின் பின்னர் தமக்குள்  பல பிரிவுகளாக பிளவுண்டுகிடக்கின்றனர். ஒரு பகுதி ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளாக தோற்றம் பெற்றுள்ளனர். சொந்த மக்களின் அரசியலுக்கான செயற்பாடுகளை கைவிட்டு விட்டு வல்லரசுகளின் பிராந்திய நலனுக்கான அரசியல் காய்நகர்த்தல்களிற்கு பயன்படுபவர்களாக மாறி, தமிழ் மக்களின் விடுதலையின் பேரால் விபச்சாராம் செய்கின்றனர். ஏனையோர் தமக்குள் குத்து வெட்டுக்களுடன் மகிந்த அரசுடன் மறைமுகமான  தொடர்வுகளை கொண்டவர்களாக மாறிவிட்டனர்.

இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்ற புலம்பெயர் வியாபாரிகளுக்கிடையேயான சண்டைகள் ஒரு திட்டவட்டமான ஒரு செய்தியினை வெளிக்காட்டியுள்ளது. அது இவர்களின் தலைவன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்து படுகொலை செய்யப்பட்டு விட்டான். புலிகள் இயக்கம் பிரபாகரனை, தமது தலைவர் என்பதனை பிரதானமான தாரகமந்திரமாக வைத்து கட்டப்பட்டது. இந்த மந்திரத்திற்கு கடந்த காலத்தில் புலிகளை விடுதலை அமைப்பு என நம்பிய அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர். புலிகளின் அரசியலுக்காக அல்ல. தனிமனிதனை சுற்றி சுற்றி கட்டப்பட்ட அமைப்பு அந்த மனிதன் உயிருடன் இல்லை என்று தெரிந்ததும் சின்னா பின்னமாவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமே அல்ல.

இந்த வியாயாரிகள் உண்மையிலேயே மாவீரர்களை மதிப்பவர்களாயின் கிழே உள்ளவற்றினை செய்ய தயாராக இருக்க வேண்டும். செய்வார்களா?

1.    புலம்பெயர் தேசமெங்கும் பினாமி சொத்துக்களாக குவிந்துகிடக்கின்ற புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை பொதுநிதியமாக்கி போரினால் பாதிப்புக்குள்ளாகிய வன்னி மக்கள் மற்றும் போராளிகளின் வாழ்க்கையினை மேம்படுத்த வழி செய்ய வேண்டும்.

2.  புலிகளின் தோல்விக்கு பிரதான காரணமான மக்கள் விரோத அரசியலை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

3. புலிகளின் (இவர்களின்) தலைவன் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

-ஜெகதீசன் & சீலன்-

27/11/2011