Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் இந்துத்துவமும் - சாதிய அடிப்படைவாதமும் தன்னியல்பானதா!?

தமிழ் மொழி பேசும் வடகிழக்கு மக்கள் மத்தியிலான இனவாத அரசியலானது இன்று இந்துத்துவமாக சாதியமாக மேலெழுந்;து வருகின்றது. இது வெள்ளாளிய இந்துத்துவ சாதிய சமூகத்தின் தன்னியல்பான சுய எழுச்சியா? சாதியிலான தமிழ் சமூகத்தின் சுய எழுச்சியே ஒழிய, இதற்குப் பின்னால் புறநிலையான சக்திகளின் தலையீடு கிடையாது என்று அரசியல் முன்வைக்கப்படுவது மெதுவாகக் தொடங்கி இருக்கின்றது.

யுத்தத்தின் பின்பாக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்த இராணுவத்திற்கு பதில் இன்று இந்தியாவின் தலையீடு என்பது எல்லாத் துறையிலும் நடந்தேறுகின்றது. தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில், இதுதான் இன்றைய பொதுவான எதார்த்தமாக இருக்கின்றது. மாறிவரும் இந்த எதார்த்தம் பொதுவாக பேசப்படாத ஒன்றாக இருந்து வருகின்றது.

இதற்கு எதிரான எமது அரசியலானது இதை பேசுபொருளாக மாற்றி வருகின்றது. தமிழ் சமூகமானது இந்துத்துவமாக சாதியமயமாகும் பொதுப் பின்னணியில், இந்தியாவின் பங்கு குறித்தான எமது அரசியல் நிலையை மறுதளிக்கும் வண்ணம் புறநிலையான சக்திகளின் தலையீடு கிடையாது என்ற கருத்துகளை முன்வைக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

1. சாதியும் இந்துத்துவமும் சமூகத்தில் உள்ளிருப்பதே ஒழிய, வெளியில் இருந்து வரவில்லை. அது அகநிலையானதும் தன்னியல்பானதும் என்கின்றனர்.

2. இன்று மத அடிப்படைவாதங்கள் உலகளாவியதே ஒழிய தமிழருக்கு (இந்துக்களுக்கு) மட்டும் குறிப்பானதல்ல.

இந்திய தலையீடுகள் மூலம் இந்துத்துவ சாதிமயமாக்கல் நடப்பதை மறுதளிக்கும் அரசியல் முன்வைக்கப்படுவது தொடங்கி இருக்கின்றது. இன்று இந்திய தலையீடுகளின் ஊடாக இந்துத்துவம், சாதியமயமாக்கலைக் காண்பதா அல்லது இந்து சாதிய சமூகம் ஊடாக குறுக்கிக்கொள்வதா எமது அரசியல். இதை விரிவாக பார்ப்போம்.

மத அடிப்படைவாதங்கள் உலகளாவியது

இன்றைய உலகில் மத அடிப்படைவாதங்கள் உலகளாவியதாக இருக்கின்றது. இதுவொரு பொது உண்மை. பொது உண்மை என்பது, குறிப்பானதை மறுதளிப்பதில்லை. குறிப்பானது பொது உண்மைக்குள் இயங்குகின்றது.

சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பொதுப் பின்னடைவு என்பது, வர்க்கப் போராட்டமானது சமூகத்தில் ஏற்படுத்திய வளர்ச்சியை இல்லாதாக்கி வருகின்றது. இந்த வகையில்

1. சமூக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளையும், சமூக நல அடிப்படையிலான பொருளாதார கொடுப்பனவுகளையும், சுரண்டும் வர்க்கம் இன்று பறித்து வருகின்றது.

2. வர்க்கப் போராட்டத்தை வழிநடத்திய மார்க்சியத் தத்துவமானது, சமூகத்தில் பகுத்தறிவுடன் கூடிய பொது அறிவியல் வளர்ச்சியையும், வாழ்வியல் ரீதியான மனித நடைமுறைகளையும் கொண்டு வந்தது. உதாரணமாக மத அடிப்படைவாதம் முதல் சகல பிற்போக்குத்தனங்களுக்கும் எதிரான சமூக வளர்ச்சியானது, எல்லாத் துறையையும் முற்போக்கான வளர்ச்சிக்கு வித்திட்டது. குறிப்பாக மதக் கண்ணோட்டத்திலான ஆணாதிக்கத்தில் இருந்து பெண்ணை விடுவிப்பது தொடங்கி பகுத்தறிவான அறிவியல் வளர்ச்சிக்குரிய வாழ்க்கை முறைக்கும் வித்திட்டது.

வர்க்கப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, உலகளவில் மத அடிப்படைவாதத்திற்கு வித்திட்டதுடன் பிற்போக்கான கலாச்சாரத்துக்கு வித்திட்டு இருக்கின்றது.

உதாரணமாக உலகளாவிய வர்க்கப் போராட்டத்தால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதிகளில் அரபு உலகப் பெண்கள் முக்காடுகளை போடுவதை கைவிட்டு வாழ்ந்த காலம் உருவாகியது. உலகெங்கும் பெண்கள் தாங்கள் சார்ந்திருந்த மத அடிப்படைவாதத்தில் இருந்து வெளியேறி வாழ்ந்த காலமும்; கூட. இன்று அரபு நாடுகள் முதல் காத்தாங்குடி வரை, பெண்கள் முக்காடு போடுவது மட்டுமின்றி, முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு மத அடிப்படைவாதம் சமூகம் மீது ஆதிக்கம் பெற்று வருகின்றது.

இது எல்லா மதங்கள் சார்ந்தும் வெளிப்படுகின்றது. இந்த பின்னணியில் கட்சிகள் முதல் அரசியல் வரை இயங்கத் தொடங்கி இருக்கின்றது. இலங்கையில் எல்லா மத அடிப்படை வாதங்களும் இந்த உலகப் பின்னணியில் தன்னை முன்னிறுத்துகின்றது. உலகளாவிய இந்தப் போக்குதான் இலங்கையில் தன்னியல்பான இந்துத்துவமாக்கலையும், சாதியமயமாக்கலையும் வீரியமாக்குகின்றது என்பது தவறானது. அரசியல் கட்சிகள், புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் முதல் இந்தியா வரை இதன் பின் இயங்குகின்றது என்பதே உண்மை.

உதாரணமாக அரபு உலகில் அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகள் தங்கள் அரசியல் பொருளாதார நலனுக்காக, இஸ்லாமிய அடிப்படைவாத மதக் குழுக்களை உருவாக்கியது போன்றதே. இஸ்லாமிய அடிப்படைவாத மதக்குழுக்களுக்கு பணமும் ஆயுதப் பயிற்சியும் வழங்கியதுடன் 1980 களின் பின்னான அரபுலக யுத்தங்கள் அனைத்தும் இந்தப் பின்னணியில் நடந்து வருபவைதான். அரபுலக இஸ்லாமிய மத அடிப்படைவாதம் அந்த சமூகத்தின் மதம் சார்ந்து தன்னியல்பாக உருவானவையல்ல. இதுபோல் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதமாக்கலுக்கு பணம் உட்பட பல உதவிகள் வெளியில் இருந்து வருகின்றது. பொதுபலசேனா என்ற பௌத்த மத அடிப்படைவாதக் கும்பலுக்கு, நோர்வே பணம் வழங்கியது போன்றது தான், இந்தியாவின் அனுசரணையில் இந்துத்துவ சாதியமயமாக்கல்.

இப்படி உண்மைகள் இருக்கின்றது. மத அடிப்படைவாதமானது உலகளவில் பொதுவானதே ஒழிய, இலங்கைக்கு அது சிறப்பானது அல்ல என்ற அரசியல் தர்க்கமானது, இந்திய தலையீட்டுடனான இந்து மத அடிப்படைவாதம் மூலம் சாதியை முதன்மை முரண்பாடாக்குவதை மறுக்கின்றது. இதன் மூலம் இந்தியாவின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒடுக்கப்பட்ட கலை இலக்கியத்தை பாதுகாக்க முனைகின்றனர்.

இந்துத்துவமும் - சாதியமாக்கலும் அகநிலையானதே ஒழிய - புறநிலை சார்ந்ததல்ல என்பது சரியானதா?

தமிழ் மொழி பேசும் மக்கள் (முஸ்லீம் மக்களை விடுத்து) சாதியச் சமூகம் தான். இந்து - கிறிஸ்துவ மதங்கள் சாதி மேல் தான் இயங்குகின்றது. இதுவொரு உண்மை. இந்த இந்து மத சாதிய சமூகம், தன்னியல்பாக இந்துத்துவத்தை சாதியமாக்கலை செய்வதாக கூறுவது முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முனையும் அரசியல் பித்தலாட்டம்.

அதேநேரம் தன்னியல்பான செயற்பாட்டுக்குள் வெளித் தலையீடாக சிவசேனாவின் தலையீடு தொடங்கி இருப்பதாக கூறுவது திரிபு. சிவசேனா மூலம் இந்தியாவின் செயற்பாட்டை மறுக்கின்ற, அரசியல் பித்தலாட்டம். அரபு உலகில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அவர்களின் முஸ்லீம் மதத்தில் இருந்து தன்னியல்பாகத் தோற்றி வளர்ந்ததாக கூறுவதற்கு நிகரானது. இது அமெரிக்கா தலைமையான மேற்கு உலகின் அனுசரணையை மறுக்கின்ற ஏகாதிபத்திய அரசியலாகும்.

இதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் மீதான இந்தியாவின் செயற்பாடுகளால் ஆனதல்ல இன்றைய மாற்றங்கள் என்று கூறுகின்ற அதேநேரம், சிவசேனாவின் வருகைக்கு எதிராக செயற்படுவதே சரியானது என்கின்றனர். இந்த வகையில் இலங்கையில் இந்தியாவின் செயற்பாட்டை அரசியல் ரீதியாக இல்லாதாக்கி விடுகின்ற அதேநேரம் சிவசேனாவை ஒற்றையாக எதிர்க்க கோரும் அரசியல் பித்தலாட்டம்.

கூர்மையாகும் சாதிய முரண்பாடு தன்னியல்பானதல்ல

குறிப்பாக தமிழர்கள் மத்தியில் தோன்றி வரும் புதிய அரசியல் சூழல் என்பது, யாழ் மேலாதிக்க வெள்ளாளிய சமூக அமைப்பின் சொந்த சுய எழுச்சியல்ல. மாறாக இது இந்தியாவின் நேரடித் தலையீடுகள் மூலம் இன்று மேல் எழுந்து வருகின்றது.

குறிப்பாக தமிழ் மக்களுக்குள் இந்தியாவின் செயற்பாடுகள் என்னவாக இருக்கின்றது? குறிப்பாக வடக்கில் இந்தியத் தூதரகம் எந்த வகையில், எப்படியான அணுகுமுறைகளை கொண்டு செயற்படுகின்றது? யாழ் மேலாதிக்க வெள்ளாளியத்தின் தன்னியல்பான சுய எழுச்சி மீது இந்தியா செயற்படுகின்றதா? அல்லது இந்தியாவானது வெள்ளாளிய எழுச்சியை உருவாக்குகின்றதா?

வரலாற்றினை பின்நோக்கிப் பார்ப்போம். 1980களில் சமூக விடுதலை அடிப்படையிலான ஜனநாயக கூறுகளை முன்னோக்காகக் கொண்ட தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியை அழிக்க, இந்தியா இராணுவ பயிற்சியையும், ஆயுதத்தையும், பணத்தையும் வழங்கியது. இதன் மூலம் தனக்கான கைக்கூலிப் போராட்டமாக போராட்டத்தை சிதைத்து ஜனநாயக விரோதக் கூறுகளை வீரியமாக்கியதன் மூலம் தமிழ் இனவாதத்தையே போராட்டமாக்க மாற்றியது.

இதே அடிப்படையில் இன்று தமிழ் மக்கள் மத்தியில் பெருமெடுப்பிலான இந்திய அனுசரணையானது, கலாச்சார மற்றும் பண்பாட்டுத்தளத்தில் நடாத்துகின்றது. இதன் மூலம் இனவாதத்தின் கீழ் தமிழ் சமூகத்தில் உறங்கிக் கிடந்த இந்துத்துவ மற்றும் சாதியக் கூறுகளை சமூகத்தின் மேல் நிலைக்கு கொண்டு வருகின்றது.

1980 களில் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைத்து இனவாதமாக்கிய இந்தியா, 2009 பின் அதை வெள்ளாளிய இந்துத்துவமாக மாற்றி வருகின்றது.

அதேநேரம் இந்துத்துவ சாதியமாக்கலுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தனித்துவமாக சுயமாக உருவாகாத வண்ணம் அதற்கும் அனுசரணை வழங்குகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இந்தியாவில் இருந்து புதிய கலை கொண்டு வந்து அறிமுகம் செய்வது முதல் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்வது மட்டுமின்றி, கலை இலக்கிய சஞ்சிகை கொண்டு வர உதவுவது வரை இந்தியா அனுசரணை வழங்குகின்றது.

அன்று ஆயுதப் போராட்டத்துக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி, ஆயுதம், பணம் வழங்கிய போது, இது தான் விடுதலை என்று நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் அணிதிரண்டது போல் - இன்று இந்தியா அனுசரணையுடன் "ஒடுக்கப்பட்ட" கலை - இலக்கியம் (இது போல் இதற்கு தன்னார்வ மற்றும் மேற்குநாடுகளின் அனுசரணையும் உண்டு) பின்னால் பலர் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட கலை இலக்கியம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலில் இருந்து அவர்களின் பொருளாதார அடித்தளத்திலானது.

ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட இரு தளத்திலும், இந்தியாவின் தலையீடுகள் மூலம் இந்துத்துவமயமாதல் தொடங்கி இருக்கின்றது. இதுதான் ஒடுக்கப்பட்ட கலை - இலக்கியம் என்கின்ற, ஒரே நேர் கோட்டில் எதிர்மறையான அரசியல் முன்னெடுப்பை அரசியல் ரீதியாக இனம் கண்டுகொள்வதற்கு எதிரான கோட்பாடுகளையும் அரசியலையும், இன்று இனங்கண்டு கொள்வது அவசியமானது.