Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆளும் வர்க்கத்தின் நெம்புகோல் தான் "ஆவாக் குழு"

கிறிஸ் மனிதன் தொடங்கி "ஆவாக் குழு" வரை, மக்களை அடக்கியாள்வதற்கான ஆளும் வர்க்கத்தின் கருவிகளே. மக்களை பிரித்து வைத்திருக்கவே இனவாதம், மதவாதம் இருப்பது போன்று, மக்களை அச்சுறுத்தவும் அடக்கியாளவும் வன்முறைக் கும்பல்களை அரசுகளே உருவாக்குகின்றன.

உதாரணமாக 1987 ஆண்டில் "அமைதிப்படை" என்ற பெயரில், இலங்கையில் வந்திறங்கியது இந்திய ஆக்கிரமிப்புப் படை. ஆனால் அவர்கள் புலிகளை அழிக்க முனையவில்லை ஏன்? 2009 களின் பின் இலங்கை அரசுக்கு ஆவாக் குழு தேவைப்பட்டது போல், இந்திய அரசுக்கு  புலிகளின் இருப்பு தேவையாக இருந்தது என்பதே உண்மை. 

இலங்கையில் இந்திய இராணுவம் தொடர்ந்து தங்கி இருக்க வேண்டுமானால், புலிகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். யுத்தம் தொடர வேண்டும். புலிகளை இந்திய இராணுவம் அழிக்காது பாதுகாத்த உண்மை தான், புலிகள் இந்திய இராணுவத்தை தோற்கடித்த கதை. 

1987ம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்புப் படையானது புலிகளை அழிக்கும் யுத்தத்தை நடத்தியது போன்று ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கியதே ஒழிய, புலிகளை முற்றாக அழிக்காது யுத்தத்தையே நடத்தியது. புலிகள் இருக்கும் வரைதான், இலங்கையில் இந்தியப் படைகள் இருக்க முடியும் என்ற உண்மை தான், 2009 வரை புலிகளை வாழ வைத்தது. 

இந்தப் பின்னணியில் தான் இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஜே.வி.பியின் எழுச்சியை ஒடுக்க இந்தியாவுக்கு எதிரான கோசத்துடன் இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஜே.வி.பியை ஒடுக்க புலிகளுடனான இலங்கை அரசின் ஒப்பந்தமானது, இந்தியாவை இலங்கையில் இருந்து வெளியேற்றியது. 

புலிகளை அழிக்காத போலியுத்தம் மூலம் தன்னை நிலைநிறுத்த முனைந்த இந்தியக் கொள்கையானது, இலங்கை அரசினால் முடிவுக்கு வந்தது. இருந்தபோதும் "தமிழீழத்தை" பிரகடனம் செய்தது. தமிழ் தேசிய இராணுவத்தையும் இந்தியா உருவாக்கியது. இறுதியில் அதிலும் தோல்வி பெற்றது. 

இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் ஆளும்வர்க்க நலன் சார்ந்த மோசடிகள் என்ற உண்மைகளை போட்டு உடைக்கின்றது. இதேபோன்று  மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், மக்கள் மேல் அரச பயங்கரவாத ஆட்சியைத் திணிக்கவும் "ஆவாக் குழு" போன்ற கும்பல்கள் தேவைப்படுகின்றது. சமூகத்தில் இருந்து லும்பன் குழுக்கள் தோன்ற வேண்டும் அல்லது அரசே அவற்றை தோற்றுவித்து விடுகின்றது.

இந்த வகையில் ஆளும் வர்க்கங்கள் தங்கள் தேவை கருதி, மட்டுப்படுத்திய யுத்தங்களையும், தமக்கு எதிரான குழுக்களையும் உருவாக்குகின்றனர். இந்த வகையில் ஆவாக் குழு மகிந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. 

கிறிஸ் மனிதன் மூலம் சமூகத்தில் பீதியை உருவாக்கி இராணுவ ஆட்சியை தொடர்ந்து நிலைநிறுத்த முனைந்த பொதுப் பின்னணியில், பொது மக்கள் தன்னியல்பாகவே கிறிஸ் மனிதனை துரத்தி பிடிக்க முனைந்தனர். இந்த சூழலில் அரசு தான் கிறிஸ் மனிதன் என்றது அம்பலமாக, கிறிஸ் மனிதன் செயற்பாட்டை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. 

இதையடுத்து உருவாக்கப்பட்டது தான் வாள்வெட்டுக் கும்பல்கள். யாழ் சமூகத்தில் யுத்தத்திற்கு முன்பு பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து உருவான வாள்வெட்டுக் கும்பல்கள் காணப்பட்டது. இதைப் போன்ற குழுக்களை மீள சமூகத்தில் உருவாக்கும் வண்ணம், ஆவாக் குழு அரசால் தோற்றுவிக்கப்பட்டது. 

அன்று ஒடுக்கப்பட்ட சாதிகளில் தோன்றிய வாள்வெட்டுக் குழுக்கள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான பாரம்பரியத்தில் இருந்து உருவான லும்பன் குழுக்களே. இந்தக் குழுக்கள் பெரும்பகுதி தமிழ் "தேசியம்" பேசிய அரசியல் கட்சிகளின் எடுபிடிகளாக மாறி இருந்தனர். இயக்கங்கள் தோன்றிய போது சிலர் இயக்கத்தின் அங்கமாக மாற, சிலரை "சமூக விரோதியாக" முன்னிறுத்தி மின்கம்பத் தண்டனைகள் மூலம் இயக்கங்களால் கொல்லப்பட்டனர்.    

இன்று வாள்வெட்டுக் குழுக்கள் முந்தைய சமூக அடிப்படையில் இருந்து தோன்றவில்லை. மாறாக நவதாராளவாத நுகர்வுக் கலாச்சாரத்தை உழைப்புக்கு வெளியில் நுகர விரும்பிய லும்பன்கள் தேர்ந்தெடுத்த வடிவம் தான் வாள்வெட்டு. நுகர்வுக்கு தேவையான பொருளாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான வழிமுறை தான் வாள்வெட்டுக் கும்பல்களை ஒருங்கிணைக்கின்றது. அரசு தனது அரசியல் தேவை கருதி இதை ஒருங்கிணைக்க உதிரி லும்பன்களின் சுயாதீனமான செயற்பாடுகளும் கொண்டதாக, இன்று வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுகின்றன. 

சிவில் சட்ட அமைப்பு முறைக்கு மேலாக இராணுவம் - பொலிஸ் ஆட்சியை வடக்கில் தொடர்ந்து நிலைநிறுத்தும் அடிப்படையில், "ஆவாக் குழு" போன்றவற்றை மகிந்தா அரசு கையாண்டது.

அதாவது மகிந்த அரசு சிவில் சட்ட ஆட்சிமுறைக்குப் பதில் சர்வாதிகார ஆட்சியை நீடிக்க வைக்கவே வாள்வெட்டுக்களை நடாத்தியது. முகமாற்ற ஆட்சி மாற்றமானது, யாழ்ப்பாணத்தில் சிவில் ஆட்சியை கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நீதிபதி இளஞ்செழியனின் "வீரமிக்க" அறைகூவல்களுடன், அரசு வாள்வெட்டுக் குழுக்களை வேட்டையாடத் தொடங்கியது. 

அதேநேரம் முந்தைய மகிந்தவின் பொலிஸ்-இராணுவ ஆட்சி மூலம் லாபம் அடைந்தவர்களைக் கொண்ட அரசு இயந்திரமும், மைத்திரி-ரணில் சிவில் அரசின் கொள்கைக்குமான முரண்பாடுகளின் பின்னணியில், "ஆவாக் குழு" குறித்த தகவல்கள் முதல் கைதுகள் வரை அரங்கேறுகின்றது. 

அரசு அமைப்பை பாதுகாக்கும் ஆளும்வர்க்க அதிகார உறுப்புகள் வன்முறையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பொதுப் பின்னணியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை அரங்கேறியது. "ஆவாக் குழு" வைத் தேடிய துப்பாக்கிச்சூட்டு வன்முறை வேட்டை மூலம் அரசு அமைப்புமுறை அம்பலமாக "ஆவாக் குழு" பெயரில் வாள் வெட்டு நடத்திய "ஆவாக் குழு" வை அம்பலமாக்கி இருக்கின்றது.

"ஆவாக் குழு" உரிமை கோரிய துண்டுப்பிரசுரம் 'தமிழ் கலாச்சாரம்" குறித்துப் பேசிய நிலையில் இன்று கைதாகியுள்ள "எழுக தமிழ்" பிரமுகர் "ஆவாக் குழுவாக" கைதாவது காண முடிகின்றது. 

மகிந்த அரசால் உருவான "ஆவாக்குழு" முகமாற்ற ஆட்சிக்கு தேவையற்ற ஒன்றாகும் போது, அது சுயாதீனமாக மாறுவதும் தனது இருப்பை தக்கவைக்க தமிழ் அரசியல் அல்லது தமிழ் அரசியல் கட்சிகளைச் சார்ந்து செயற்படுவதும் தவிர்க்க முடியாததாக மாறுகின்றது.  

இது "ஆவாக் குழு"வுக்கு விதிவிலக்கல்ல. இன்று இந்தியாவில் இருந்து வடக்கிற்கு கொண்டு வரும் போதைவஸ்து தொழிலுக்கும், தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பது போல், வடக்கில் நடக்கும் எல்லா "மாமாத் தனத்துக்கும்" தமிழ் தலைவர்களுக்கும் தொடர்புண்டு.  

1977க்கு முன்பு செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் இருந்த "தமிழ் தலைவர்கள்", தமக்கு பின்னால் ரவடிகளையும், வாள்வெட்டு குழுக்களையும் கொண்டிருந்த வரலாறுகளுடன், இன்றைய சூழலையும் ஒப்பு நோக்க முடியும்;.      

இன்று தேர்தல் கட்சிகளின் தொண்டர்களாக இருப்பவர்களுக்கான தகுதியும் வேலையும் வன்முறை தான். தேர்தல் கட்சித் தலைவர்களின் சட்டவிரோத தொழில்கள் முதல் லஞ்சம் ஊழல் வரையான கட்டைப்பஞ்சாயத்தை அவர்களின் தொண்டர்களாக இருக்கும் வன்முறைக்  குழுக்கள் தான் கையாளுகின்றனர். 

"ஆவாக் குழு" போன்றன ஆளும் வர்க்கங்களின் சொந்தத் தேவைகளை பூர்த்தி செய்யும் ரவுடிகளாகவும், பொது மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்கு பயன்படும் அரசியல் கருவிகளாகவும் இயங்குகின்ற உதிரி வர்க்க லும்பன்களே. ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் மக்கள் விரோத தேர்தல் கட்சிகளைக்; தோற்கடிப்பதன் மூலம் தான் தொங்குதசைகளையும் அழிக்க முடியும்.