Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிறப்புரிமையை மறுக்கும் "ஜனநாயகம்" குறித்து..!

குமார் குணரத்தினம் தனது பிறப்புரிமையான பிரஜாவுரிமையைக் கோரியதால் கடந்த ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மனிதவுரிமை மீறலுக்கு எதிராக நீண்ட தொடர்ச்சியான போராட்டங்கள் தொடருகின்றது. 

குமாரை சிறையில் அடைத்து வைத்திருக்கும் தண்டனைக் காலம் சட்டரீதியாக முடிவுக்கு வருகின்றது. "நல்லாட்சி" வழங்கிய சிறைத் தண்டனைக்கு பின்பாகவும், அவரை மீண்டும் தண்டிக்க முனைகின்றது. அதாவது அவரின் பிறப்புரிமையான பிரஜாவுரிமையை மறுத்து நாடு கடத்த முனைகின்றது. நாட்டின் சட்டம், நீதி, ஜனநாயகம் எல்லாம் இருண்டதாக தொடருகின்றது. மக்களை ஒடுக்குவதே அரசு. சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்வதே அரசு. இதை நிறுவுகின்ற திசையில் "நல்லாட்சி" தொடர்ந்து இயங்குகின்றது.              

ஒரு மனிதன் தான் பிறந்து வாழ்ந்த நாட்டில் ஏதோ ஒரு காரணத்தால் வாழமுடியாத போது தான், வேறு நாடுகளில் சென்று வாழ்வதற்கான சூழல் உருவாகின்றது. இப்படியான ஒரு நிலை உருவாவதற்கான பொறுப்பினை, அந்த நாடும் அதை ஆண்ட அரசுகளும் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் மக்களுக்கான உண்மையான அரசினது தார்மீகக் கடமை. இதுவே தான் மக்களுக்கான நல்லாட்சியாக இருக்க முடியும். 

கடந்தகால அரசுகளின் இனவாதங்களுக்கு இதுவரை பொறுப்பு ஏற்காத "நல்லாட்சி" அரசால், கடந்தகால சமுதாய விளைவுகளுக்கு தீர்வு காணமுடியாது. தொடர்ந்து மக்கள் விரோத இனவாதக் கொள்கையை கொண்டு இயங்கும் இந்த அரசால் எந்த பிரச்சினைக்கும் தீர்வை காண முடியாது. அரசியல்கைதிகளின் விடையத்திலும் இது தான் நடக்கின்றது. பிரஜாவுரிமை விடையத்திலும்  இதுதான் நடக்கின்றது.   

அரசியல் காரணங்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறுகின்றவர்களின் பிறப்புரிமையான பிரஜாவுரிமையை இலங்கை அரசு பறிக்கின்றது. 

சொந்த நாட்டில் வாழ முடியாது வேறுநாடுகளில் சென்று வாழ்கின்ற போது, அந்த நாடுகள் தங்கள் ஜனநாயக மரபுக்கு அமைவாக அந்த நாடு தனது நாட்டுப் பிரஜாவுரிமையை வழங்குகின்றது. இதைக் காரணம் காட்டி பிறப்புரிமையாக வந்த பிரஜாவுரிமையை பறித்து விடுகின்ற போது மறுத்த நாட்டின் ஜனநாயகம் குறித்த அடிப்படைக் கேள்வியாக மாறுகின்றது. போராடிப் பெறுவதைத் தவிர வேறு வழி கிடையாது. 

இப்படி பிறந்த நாட்டின் பிரஜாவுரிமைப் பறிக்கின்ற இலங்கை அரசின் சட்டமானது இலங்கையை ஆண்ட இனவாத அரசுகளின் கடந்தகால இனவாதக் கொள்கையின் நீட்சியாகும். குறிப்பாக மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்க கொண்டு வந்த இனவாத அடிப்படையிலான பிரஜாவுரிமை சட்டங்களின் தொடர்ச்சியாகும்.

இப்படி பறித்த பிரஜாவுரிமையை அனைவரும் மீளப் பெற்றுக்கொள்ள முடியாது. அனைவரும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாத வண்ணம் அதை சட்டரீதியாகவே இலங்கை மறுக்கின்றது. 

இதை மீறி பிரஜாவுரிமையை மீளப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றால் பெரும் தொகையான சொத்தை (பணத்தை) இலங்கையில் வைத்திருக்க வேண்டும். இப்படி இலங்கை விண்ணப்பிக்கக் கோரும் இரட்டைப் பிரஜாவுரிமையானது சொத்துடைய வர்க்கங்களுக்கு வர்க்க ரீதியாக மட்டும் வழங்குகின்றது. 

இதற்கு விதிவிலக்காக வயது முதிர்ந்தவர்களுக்கு (55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு) வழங்கும் பிரஜாவுரிமை கூட அடிப்படையில் வர்க்க ரீதியானதே. உழைத்து ஓய்ந்தவர்களின் ஓய்வூதியத்தையும் சொத்தையும் குறிவைத்து வழங்குகின்றது. 

பிறப்புரிமையை தானாக கொடுத்து விடுவதில்லை. இங்கும் தெரிவுகள் மூலம், பிறப்புரிமையை மறுக்கின்றனர். இப்படி இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமைச் சட்டமானது வர்க்க ரீதியானதே ஒழிய பிறப்புரிமையை அடிப்படையாகக் கொண்டதல்ல. வர்க்க ரீதியான பிறப்புரிமையைப் மீளப்பெற்றுக் கொள்ள பெரிய தொகைப் பணத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். 

அதேநேரம் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்பவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்க முடியாது தடுக்கின்ற அளவுக்கு இரட்டை பிரஜாவுரிமைச் சட்டமானது அரசியல் உள்நோக்கம் கொண்டது. பிரஜாவுரிமையை பறித்தல், வழங்குதல் அனைத்தும், வர்க்க ரீதியானதும், அரசியல் உள்நோக்கம் கொண்டதுமாகும்.               

பிறப்புரிமையான பிரஜாவுரிமையை குமாருக்கு மறுத்து சிறையில் வைத்திருக்கும் ரணில் அரசு அண்மையில் புலம்பெயர்ந்த இலங்கையரை நாட்டுக்கு மீள வருமாறு கோருகின்றது. இங்கு பிறப்புரிமையை கொண்டவர்களை அல்ல மாறாக வர்க்க ரீதியான சொத்துடைய வர்க்கங்களையே வருமாறு கோருகின்றார். 

இதனால் தான் அனைத்து இலங்கை மக்களின் பிறப்புரிமையிலான பிரஜாவுரிமைக்காக குமார் போராடுவதும், இதற்காக அவர் சிறையில் இருப்பதும் தொடருகின்றது. இலங்கை அனைத்து மக்களின் அடிப்படை மனிதவுரிமையை மறுத்து வர்க்கரீதியான வர்க்கங்களின் “நல்லாட்சி” யாக நீடிக்கின்றது.