Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

நவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்

கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்ற கருத்து தமிழ் அரசியல் அரங்கில் பொதுவாக காணப்படுகின்றது. அதேநேரம் "மாற்றுத் தலைமை" வேண்டும் என்ற அறைகூவல்களும், விவாதங்களும் கூட நடக்கின்றது. கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து ஒடுக்குவதற்கான காரணம் என்ன? இந்த அடிப்படைக் கேள்வியில் இருந்து, "மாற்றுத் தலைமை" கோரப்படுகின்றதா எனின் இல்லை. இப்படி இருக்க கூட்டமைப்புக்கு பதில் "மாற்றுத் தலைமையால்" என்ன மாற்றம் நடந்து விடும்?

மாற்று அரசியலை முன்வைக்காமல், "சுற்றிச் சுற்றி சுப்பர் கொல்லைக்குள்" சுற்றுவதற்கே தொடர்ந்து வழிகாட்டப்படுகின்றது என்பதே உண்மை. உண்மையில் தமிழ் சிந்தனைமுறையானது, முழு அரசியலையும் வரலாற்றோடு பகுத்தாய்வதில்லை. 1948 முதல் தமிழ்மக்களின் தோல்விக்கு, இந்த தமிழ் சிந்தனை முறைதான் வழிகாட்டுகின்றது.

கூட்டமைப்பு அரசுடன் ஏன் கூடி நிற்கின்றது என்பதை புரிந்து கொள்வதே, மாற்று அரசியலுக்கான வித்தாகும். போராடுகின்ற மக்களை ஒடுக்குமாறு, அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பு முன்வைத்த கருத்துக்கள், வெளிப்படையாகவே இதற்கான காரணங்களை போட்டுடைக்கின்றது. அதேநேரம் போராடும் மக்களை ஒடுக்கக் கோரும் கூட்டமைப்பின் கருத்துக்களுடன், "மாற்றுத் தலைமையை" கோருவர்கள் முரண்படவில்லை என்பதே மற்றொரு உண்மையாகும். அரசுடன் சேர்ந்து நிற்கும் காரணங்கள் தமிழ்ச் சிந்தனைமுறையின் ஓரு கூறாக இருப்பதால், போராடுபவர்களை ஒடுக்குமாறு அரசிடம் கோரிய கூட்டமைப்பின் கருத்துகள் இன்றுவரை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. இதை விரிவாக ஆராய்வோம்.

 

1.சுமந்திரன் நவதாராளவாதத்தை எதிர்த்து நாடுதளுவிய அளவில் போராடுகின்றவர்களை குற்றவாளியாகப் பிரகடனம் செய்வதன் மூலம், அவர்களைத் தண்டிக்க கோருகின்றார். சுமந்திரன் கூறுகின்றார்.

"அரசாங்க மருத்துவ அதிகாரிகள் - சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமானவர்கள்… மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். … மருத்துவ தேவை உடையவர்களை உதாசீனம் செய்வது குற்றச்செயல் என்றும் … இவை சுயநல நோக்கின் அடிப்படையில் … செயற்படுவதாகவும் …  நாட்டு மக்களை பணயமாக வைத்து தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக" கூறுகின்றார்.

இதன் மூலம் தமது, தங்களது தனியார்மய நவதாராளவாத மனிதவிரோத வக்கிரத்துக்கு வக்காளத்து வாங்கி, போராடுகின்றவர்களை குற்றவாளியாக காட்டுகின்றார்.

2.சம்மந்தன் தன் எதிர்க்கட்சி தலைவருக்குரிய தகுதியைக் கொண்டு, பாராளுமன்றத்தில் நவதாராளமயத்தை ஆதரிக்கும் விசயத்தை மக்கள் மேல் கக்கியுள்ளார்.

"போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்க முடியாது.. அரசாங்கம் துணிந்து முடிவுகளை எடுத்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டுமெனவும்… ஜனநாயகத்திற்கு விரோதமான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கத்தினை கவிழ்க்க முடியாது என்று கூறியதுடன்..  ஜனநாயக ரீதியாக இல்லாத விடயங்களை வைத்து உரிமைகள் வேண்டுமென போராட முடியாது… பல்வேறு முட்டுக்கட்டைகள் அரசாங்கத்திற்கு போடவேண்டும் என்றே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை என்று கூறி.. அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற… வினைத்திறனுடன் இருக்க வேண்டுமாக விருந்தால் துணிந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.  அந்தத் தீர்மானங்களை தைரியமாக நடைமுறைப்படுத்த வேண்டும்"

என்றார். 

அதாவது அரசு துணிவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அரச பயங்கரவாதத்தை கையாள வேண்டும் என்கின்றார். அதேநேரம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் முதுகில் குத்தும் வண்ணம் 

"நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்”

என்று கூறியவர்

.. இனவாதத்தினை ஊக்குவித்து மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியாது. நல்லிணக்கத்தின் மூலமாக..

"மக்களை ஒடுக்குமாறு”

அறை கூவலை விடுத்தார்.

 

நவதாராளவாத பொருளாதாரத்தை தங்கள் அரசியல் கொள்கையாகக் கொண்ட கூட்டமைப்பு, அதற்கு பாதகம் ஏற்படுவதை அனுமதிப்பதில்லை. நவதாராளவாதத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களால் அரசாங்கள் பலவீனமடைகின்ற போது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின்  உரிமைகளை பெறும் யுத்ததந்திரத்தை கூட்டமைப்பு எதிர்க்கின்றது. இதன் மூலம், உண்மையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றது. அதேவேளை பலவீனமாகும் அரசைப் பலப்படுத்த, தன் கையைக் கொடுக்கின்றது. அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறி, செயற்படுகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, ஒடுக்கும் தமிழ் தேசிய இனவாதிகளே தாங்கள் என்பதை,  நடைமுறைகள் மூலம் ஜயம் திரிபட வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிற்போக்கான தமிழ் தேசியமானது, ஒடுக்கப்பட்ட (அனைத்து) மக்களினது எந்த வகையான போராட்டத்தையும் அங்கீகரிப்பதுமில்லை, அனுமதிப்பதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை தனது விடுதலைக்கான முன்நிபந்தைனையாகக் கொண்ட தேசியமே, வரலாற்றில்  முற்போக்கான சமூகப் பாத்திரத்தை முன்னெடுக்க முடியும். இந்த முரண்பட்ட சமூகப் பின்னணியிலேயே, கூட்டமைப்பின் பிற்போக்கான பாத்திரத்தை ஆராய முடியும்.

சுமந்திரன் மருத்துவர்கள் "பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில்" ஈடுபடுவதாக கூறுகின்ற பின்னணியில், இவர்களின் கடந்தகால பொது அரசியலுக்கே இக் கூற்றைப் பொருத்திப் பாருங்கள். 1948 முதல் தமிழ்மக்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளும், அதை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து வந்த கூட்டமைப்பின் வரலாறு போன்றதல்ல, மருத்துவர்கள் போராட்டம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தையே தொடர்ந்து அரசியலாக செய்து வந்தவர்களே கூட்டமைப்பு. அதை மூடிமறைக்க இனவாத சிந்தனையைச் சமூகத்தில் புகுத்தியவர்கள். இதன் மூலம் நவதாராளவாதத்தின் தொங்குதசைகளாக செயற்படுகின்றதையே விசுவாசமாக செய்து வருபவர்கள். அதாவது மக்களுக்கு எதிரான நவதாராளமய முன்னெடுப்புக்கு துரோகம் செய்வதில்லை. தங்கள் வர்க்கக் கூட்டாளிகளுடன் கூடிக்கொண்டு, மக்களின் கழுத்தை அறுப்பதையே அரசியலாகக் கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க மருத்துவ சங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுவது, அவர்கள் தங்கள் "சுயநல நோக்கில்" என்று கூறுகின்ற அளவுக்கு, கிரிமினல் மயமான வழக்குரைஞர் தொழில் வழிகாட்டுகின்றது.

தனியார்மயத்துக்கு எதிரான மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளையும், இலவசக் கல்வியைக் கோரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளையும் ஆதரித்தே, மருத்துவச் சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டமானது நடக்கின்றது. இதைத்தான் சுமந்திரன் சுயநலமானது என்கின்றார்.

மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்விமுறையை எதிர்த்தும், அரசு பல்கலைக்கழக மருத்துவ கல்வியைக் கோரியும், அனைவருக்குமான இலவசக் கல்வி மற்றும் மருத்துவத்தை உறுதி செய்யக் கோரியுமே, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நடக்கின்றது.

இது சுமந்திரனுக்கு சுயநலமாம். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட தனியுடமைக் கொள்கையிலான நவதாராளவாதத்தை ஆதரித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற தங்கள் அரசியலை, பொதுநலன் சார்ந்ததாக கூறுகின்ற அளவுக்கு கூட்டமைப்பின் அரசியல் கிரிமினல்மயமானதாக இருக்கின்றது.

சம்மந்தன் இதே தாளத்தையே "ஆட்சிக் கவிழ்ப்பு - இனவாதம் - ஜனநாயக விரோதம்" என்று திரித்துப் புரட்டி முன்வைக்கின்றார். தாங்களே இனவாதிகளாகவும், சொந்தக் கட்சி ஜனநாயகத்தை மறுத்துக் கொண்டும், இலங்கை மக்களின் தேசிய சொத்துக்களை தனியாருக்கும் - அன்னியருக்கும் விற்பதற்கு எதிரான போராட்டங்களை, ஜனநாயக விரோதமானதாக காட்டி, அதை ஒடுக்குமாறு அரசிடம் கோருகின்றார். போராட்டங்களை ஆட்சிக்கவிழ்ப்பாகவும், மகிந்த தரப்பின் சதியாகவும் திரித்துக் காட்டுகின்றனர். நீதிமன்றங்களில் குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற தங்கள் தொழில் "தர்மங்களின்" அடிப்படையில், தாங்கள் முன்னெடுக்கும் நவதாராளவாதத்தை ஆதரித்து, நவதாராளவாதத்துக்கு எதிரானவற்றை "துணிகரமான தீர்மானங்கள்" மூலம் ஒடுக்குமாறு கோருகின்றனர். 

நாட்டின் பொதுச் சொத்துகளை தனியார்மயமாக்கவும், அதை அன்னியனுக்கு விற்பதைப் பற்றி கூட்டமைப்பின் கருத்து என்பது, அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானதல்ல. தமிழ் பகுதிகளிலுள்ள உழைக்கும் மக்களின் சொத்துக்களையும், உழைப்புகளையும் நவதாராளமயம் மூலம் கொள்கையிடுவதை ஆதரிக்கின்ற எடுபிடிக் கட்சியே கூட்டமைப்பு. அரசாங்கம் நவதாராளமயத்தை  முன்னெடுப்பதற்காக ஈவிரக்கம் காட்டாது, ஒடுக்குவதன் மூலம் நவதாராளவாத பொருளாதாரத்தை ஸ்திரமடைய வைக்க முடியும் என்கின்றார். நவதாராளவாதத்துக் எதிரான ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்காமையாலேயே, "நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை" என்று கூறி, ஒடுக்குதலை தீவிரமாக்க கோருகின்றனர்.

“எதையும் பார்த்துக் கொண்டு இருக்காமல்.." அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற" வேண்டும் என்றும் கூறி, அண்மையில் பெற்றோலியத்துறை  ஊழியருக்கு எதிரான வன்முறையை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக புகழ்கின்றனர். 

அதே உரையில் ஒடுக்குவதற்காக இறக்கிய இராணுவத்தைப் பாதுகாக்கும் வண்ணம், இந்த இராணுவம் தமிழ்மக்களை ஒடுக்கியதைப் பற்றி தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லை என்கின்றார். அவர் அதை மிக நாசுக்காகவே "நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்" என்று மொட்டைத் தலைக்கு முக்காடு போடுகின்றார். தமிழ் மக்களை ஒடுக்கியதில் சில தவறுகள் நடந்துள்;ளது அவ்வளவுதான். மற்றும்படி போராட்டம் ஒடுக்கப்பட வேண்டியதே என்கின்றார். இது போன்று நவதாராளவாதத்தை எதிர்க்கும் சக்திகளை ஒடுக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் நின்று அறைகூவல் விடுத்துள்ளார். 

இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலே, கூட்டமைப்பின் அரசியல் என்பதை, வெளிப்படையாக அம்பலப்படுத்தி காட்டியிருக்கின்றனர். நவதாராளவாதத்தை முன்னெடுக்கும் அரசுடன் கூடி கும்மியடிக்கும் வர்க்கப் பொறுக்கிகளே, தங்களது உண்iமான சுய அடையாளம் என்பதை ஐயம் திரிபட வெளிப்படுத்தி இருக்கின்றனர். தமிழினத்தின் பெயரில் இயங்கும் இந்த பிற்போக்குவாத சக்திகளை இனம் கண்டு கொள்வதும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களே, மனித விடுதலைக்கான முன்நிபந்தைனையாக இருப்பதை காண முடியும். இன்று தேவை "மாற்றுத் தலைமையல்ல", ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த போராட்டமே.