Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மொழியில் "தூய்மையையும், ஒழுக்கத்தையும்" கோரும் சிந்தனைமுறை குறித்து!

மொழிக்கு வர்க்கம், சாதி, பால்.. கிடையாது. மொழி சமுதாய முரண்பாட்டுக்கு ஏற்ப, வர்க்கத் தன்மையைப் பெறுகின்றது. அதாவது ஒடுக்குபவனின் மொழியும் - ஒடுக்கப்படுபவனின் மொழியும், ஒரே உணர்வையும் உணர்ச்சியையும் கொண்டிருப்பதில்லை.     

தமிழனின் கலாச்சாரம், பண்பாடு என்று முன்வைக்கப்படும் எல்லா வகையான "ஒழுக்கம் மற்றும் தூய்மைக்" கோட்பாடுகளும், நிலப்பிரபுத்துவ வாழ்வியல் முறையையும், அதன் மொழியையும் முன்வைக்கின்றது. இது முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை நிராகரிக்கின்ற, ஜனநாயக விரோத அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கின்றது. இந்தப் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ வாழ்வியல் முறை சார்ந்த "ஒழுக்க மற்றம் தூய்மைக்" கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, மொழியியல் "ஒழுக்கத்தையும்", "தூய்மையையும்" கோருகின்றனர். ஒடுக்கும் தரப்பின் மொழிக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை ஒழுக்கமற்ற மொழியாகவும், இழிவு கொண்டதாகவும், பண்புகெட்டதாகவும், நாகரீகமற்றதாகவும், அருவருப்புக்குரியதாகவும் காட்ட முற்படுகின்றனர். அதாவது வெள்ளாளியச் சிந்தனையிலான நிலப்புரத்துவ "ஒழுக்க" மொழியை மீறுகின்ற போது, அதை தீட்டுக்குரிய சாதியக் கண்ணோட்டத்தில் முன்னிறுத்திக் காட்ட முற்படுகின்றனர். இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை விமர்சிப்பதன் நோக்கம், அந்த மொழி கொண்டு இருக்கும் ஒடுக்குவோருக்கு எதிரான அரசியல் உள்ளடக்கத்தை நிராகரிப்பதேயாகும்.

 

சிந்தனை முறையில் இருந்து தான் மொழி தோன்றுகின்றது

மனித வாழ்வியலே சிந்தனையைத் தோற்றுவிக்கின்றதே ஒழிய, சிந்தனை வாழ்வியலைத் தோற்றுவிப்பதில்லை. மொழி என்பது வாழ்வியலில் இருந்து வெளிவரும் சிந்தனைகளை,   வெளிப்படுத்தும் தொடர்பு வடிவமாகும்.

குரங்கில் இருந்து பரிணாமம் பெற்ற மனிதக் குரங்கும், இறுதியில் மனிதனாக மாறுகின்றதற்கு அடிப்படையாக இருந்தது உழைப்பாகும். சமூகமாகக் கூடி உருவான உழைப்பின் செயற்திறனை விரிவாக்கும் தொடர்புச் செயற்;பாடே, மொழியாகத் தோற்றம் பெற்றது. மாறி வந்த உழைப்பின் வடிவத்திற்கு ஏற்ப, மொழியும் வளர்ச்சி பெற்றது. மொழி வளர்ச்சி பெறுவதற்;க்கு ஏற்ப, உடல் கூறுகளும் வளர்ச்சி ஏற்பட்டது. இது மட்டும் மொழியில் நடக்கவில்லை.

மனித உழைப்புச் சுரண்டப்பட்ட போது, சமூகம் வர்க்க ரீதியாக பிளவுண்டது. வர்க்க ரீதியான  வாழ்க்கை முறைக்கு ஏற்ப, ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடையிலான மொழி வேறுபாடுகள் தோன்றியது. இதேபோன்று வர்க்க முரண்பாட்டை மூடிமறைக்க சமுதாய முரண்பாடுகள் முன்தள்ளப்பட்டது. இந்தச் சமுதாய முரண்பாட்டிலான வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஒரே மொழிக்குள் வேறுபாடுகள் ஏற்பட்டது. அதாவது ஒரே மொழி பேசும் ஒரே மக்கள் கூட்டத்திற்கு இடையிலான வர்க்க - சமூக முரண்பாட்டின் அடிப்படையிலான போராட்டங்கள்;, மொழி வடிவிலும் பிரதிபலித்தது. இதை மூடிமறைக்கவும் திசைதிருப்பவும் முனைந்த ஒடுக்கும் தரப்பு, மொழியின் "ஒழுக்கம்" குறித்தும் "தூய்மை" குறித்தும் அதை ஒரு விடையமாக்கி தங்கள் ஒடுக்குமுறையை திரித்து விடுகின்றனர். அதாவது உள்ளடக்கத்தை  மாற்றிவிடுகின்றனர்.

ஒடுக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை இழிவானதாகவும், பண்புகெட்டதாகவும், நாகரீகமற்றதாகவும், அருவருப்புக்குரியதாகவும் சித்தரிக்கின்ற அளவுக்கு, மொழி குறித்து ஒடுக்கும் தரப்பின் "ஒழுக்க மற்றும் தூய்மை" அடிப்படையில் விமர்சனங்கள் அமைகின்றது. தனது ஒடுக்குமுறையை மூடிமறைக்க, ஒடுக்கப்பட்டவனின் மொழியை பண்புகெட்டதாக காட்டுகின்றனர். நிலப்பிரபுரத்துவ சாதிய "தமிழ்" அடையாள அரசியலில், இதைக் காணமுடிகின்றது. "இழி" மொழி குறித்து பேசுகின்றவர்கள், பண்பட்ட "ஒழுக்க" மொழியை முன்வைக்கின்றனர். அதாவது இது ஒடுக்கும் தமிழ் வெள்ளாளிய சிந்தனைமுறையிலான, ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான மொழிரீதியான விமர்சன முறையுமாகும்.

உதாரணமாக இதன் உள்ளடக்கமானது, சமூக ஆதிக்கம் பெற்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் பொது மொழியில் இருந்து, ஒடுக்கப்பட்ட பெண்ணின் மொழி வேறுபடுகின்றது என்ற உண்மையை மறுக்கின்றது. சாதி ஆதிக்கம் பெற்ற மொழியில் இருந்து, ஒடுக்கப்பட்ட சாதிய மொழி வேறுபடுவதை மறுக்கின்றது. நிலவுவது ஆதிக்கம் பெற்ற ஒடுக்கும் சமூக அமைப்பிலான மொழி என்பதுடன், அது ஒடுக்கப்பட்டவர்களின் மொழிக்கு நேர் எதிரானது என்பதே உண்மையாகும்.

வாழ்வியலுக்கு வெளியிலான கருத்தாக்கமல்ல சாதியம். யாழ் சமூக அமைப்பில் சாதியமானது, மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் கூறு போட்டு வைத்திருக்கின்றது. சாதிய சிந்தனைக்;கு வெளியில் யாரும் வாழ்வதில்லை. சாதிய ஒடுக்குமுறையிலான சமூகத்தில் எல்லா தளத்திலும் விதிவிலக்கின்றி இயங்குவதன் மூலம், முரணுள்ளதாகின்றது. சாதி, பால்… ரீதியான சமூகப் பிளவு என்பது, கலாச்சாரம் மொழி வரை நீண்டு கிடக்கின்றது.

வாழ்வியலுக்கான மனிதப் போராட்டமென்பது, கலாச்சாரத்தையும், மொழியையும்;.. கடந்து அணுகமுடியாது. அப்படி அணுகக் கோருவது வெள்ளாளிய கலாச்சார வாழ்வியலை ஏற்றுக் கொள்ளக் கோருவதாகும். வெள்ளாளிய சிந்தனையிலான மொழியை அங்கீகரிக்கக் கோருவதேயாகும்.

தமிழ்த் தேசியம் தொடங்கி தமிழ் சிந்தனை முறையிலான போலி இடதுசாரியம் வரையான அனைத்தும், இந்த வேறுபாட்டை மறுத்து, வெள்ளாளிய சிந்தனையிலான ஒற்றைத் தன்மை கொண்டு அணுகுகின்றது. "தேசியம், தமிழ்" என்று அடையாளங்களை முன்வைக்கின்றவர்கள், தமிழ் கலாச்சாரம் குறித்து பேசுகின்றவர்களாகவும் இருக்கின்றனர். இந்த தமிழ் கலாச்சாரம் என்பது பெண்ணை அடக்கவொடுக்கமாக வாழக் கோரும் ஆணாதிக்கமாகவும், சாதிய சமூக விழுமியத்தை பேணக் கோருவதாகவும் இருக்கின்றது.

இந்த வகையில் மொழியியலையும் அணுகுகின்றனர். யாழ் மையவாத தமிழ் மொழி என்பது வெள்ளாளிய சமூக வாழ்வியலுக்கு வெளியில் தோன்றியதில்லை. மொழி "ஒழுக்கம் - தூய்மை" மொழிப் "பண்பாடு".. என அனைத்தும் சாதிய தூய்மையிலான வெள்ளாளிய சிந்தனை வகையிலானது. இங்கு மொழி பற்றிய பொது அளவுகோல் என்பது, வெள்ளாளியப் பண்பாட்டு மொழியைக் கோருகின்றனவாக இருக்கின்றது. எது "இழிவானது", எது "தூய்மையானது" என்று வெள்ளாளிய வாழ்வியல் முறை கருதுகின்றதோ, அதனைக் கடந்த அனைத்தையும் "தூய்மையற்ற, இழிவான" மொழியாகவே வருணிக்கின்றது. 

வெள்ளாளியச் சிந்தனை முறை ஏற்றுக்கொண்ட மொழிக்கு, முரணான மொழியை, அதாவது இழிவான, பண்புகெட்ட, நாகரீகமற்ற, அருவருப்புக்குரிய மொழி… தங்கள் "புரட்சிகர" குணாம்சத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், மக்களை அணிதிரட்டத் தடையாக இருப்பதாகவும், தேசியவாதிகள் முதல் போலி இடதுசாரிகள் வரை புலம்புகின்றனர். இதன் மூலம் தங்கள் வெள்ளாளிய மொழியை வர்க்கம், சாதியம், பால்.. கடந்த மொழியாக காட்டவும், கட்டமைக்கவும் முற்படுகின்றனர். ஆறுமுகநாவலரின் வெள்ளாளிய சிந்தனையிலான "பண்பட்ட" வெள்ளாளிய மொழியை சமூக அளவுகோலாக கொள்வதுடன், அதை பொது அளவுகோலாக நிறுவவும், மாற்றவும் முனைகின்றனர்.

வெள்ளாளிய மொழி என்பது, வெள்ளாளச் சாதியின் மொழியைக் குறிப்பதல்ல

வெள்ளாளிய சிந்தனை முறையிலான மொழி என்பது, வெள்ளாளச் சாதியின் மொழியைக் குறிப்பதில்லை. மாறாக சாதிய சமூக அமைப்பை ஏற்று வாழ்கின்ற சமூக அமைப்பின் சிந்தனை முறையையும், அதில் இருந்து வெளிப்படும் மொழியையும் குறிக்கின்றது.

வெள்ளாளியச் சிந்தனை முறையை வெள்ளாளச் சாதிக்குள் குறுக்கிப் பார்ப்பது என்பது, சாதியச் சிந்தனை முறையாகும். இதை ஒடுக்குகின்ற சாதிகள் பார்த்தாலும், ஒடுக்கப்பட்ட சாதிகள் பார்த்தாலும் ஒன்று தான். வெள்ளாளியச் சாதிய சிந்தனை முறை என்பது, ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட எந்தத் தரப்பாக இருந்தாலும் பொதுவானதே. அதாவது வெள்ளாளியச் சாதிய சமூக பொருளாதார வாழ்வை ஏற்று வாழ்கின்ற அனைவருக்கும் பொருந்தும்.

இந்திய சமூக அமைப்பில் பார்ப்பனியச் சிந்தனை குறித்து பேசுகின்ற போது, அதை ஏற்றுக் கொள்கின்ற தமிழர்களின் சிந்தனை முறையானது, இலங்கையில் தமிழர்கள் மத்தியில் இதையொத்த வெள்ளாளியச் சிந்தனை முறை குறித்துப் பேசுகின்ற போது ஆட்சேபனை செய்கின்றார்கள். வெள்ளாளியச் சிந்தனை முறையை வெள்ளாளச் சாதியினதாகக் காட்டி, வெள்ளாளர்களை தனிமைப்படுத்துவதாக கூறுகின்றனர். அதாவது சாதியம் என்பது ஒட்டுமொத்;த சாதிய வாழ்க்கையை ஒட்டிய சிந்தனை முறை என்பதை மறுதளிக்கின்றனர். இதன் மூலம் வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய வாழ்க்கை முறையைப் பாதுகாக்கின்றனர்.

சமூக பொருளாதார அரசியல் ரீதியாக ஆதிக்கம் பெற்ற வெள்ளாளச் சாதியின் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற, அதையே சாதிப் படிநிலையில் கையாளுகின்ற ஒட்டுமொத்த சாதிய சமூகத்தின் வாழ்க்கை முறையைக் குறிப்பது தான், வெள்ளாளியச் சிந்தனை முறையாகும். ஒடுக்கும் சாதிகள் கூட வெள்ளாளியச் சிந்தனையிலான சாதிய வாழ்க்கை முறையைக் கொண்டதாக இருப்பதன் மூலமே, சாதியச் சமூகமாக நீடிக்கின்றது.

வெள்ளாளிய சிந்தனை என்று கூறுவது என்பது, சமூகம் ஒன்றிணைவதைத் தடைசெய்வதாகக் கூறுகின்றனர். இப்படிக் கூறுவது தான், சாதியச் சிந்தனை முறையாகும். வெள்ளாளிய சாதிய வாழ்க்கை முறையானது, சமூகத்தை சாதி ரீதியாக பிளந்து ஒன்றிணைவதைத் தடைசெய்கின்றது. இதனை அம்பலப்படுத்தும் போதும், வெள்ளாளிய சிந்தனை கடந்த ஒன்றிணைவைக் கோரும் போதும், சமூகத்தை சாதி ரீதியாக பிளப்பதாகக் கூறுகின்றனர். அதாவது சாதி ரீதியாக பிரிந்து இருப்பதை பேசுவது தான், ஒற்றுமைக்குத் தடை என்கின்றனர். இதன் மூலம் சாதிய ரீதியாக மக்களை பிளக்கும் வெள்ளாளிய வாழ்க்கை முறைமையை, ஒற்றுமை கொண்டதாக காட்டுகின்றனர். அதாவது சாதிய ஒடுக்குமுறைக்கு இணங்கி வாழும் வெள்ளாளிய வாழ்க்கை முறைக்கும், அதன் கலாச்சாரத்துக்கும் கேடு என்கின்றனர். இது மக்களை சாதி ரீதியாக ஒடுக்குகின்ற, வெள்ளாளிய சாதிய வாழ்வியல் முறையைப் பாதுகாக்கின்ற சிந்தனைமுறையாக இருக்கின்றது.

இது சாதியப் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் செய்கின்றது. இதுவே யாழ் சமூகத்தின் வெள்ளாளிய வாழ்க்கை முறையாகவும், சிந்தனையாகவும் இருக்கின்றது. கோயில்கள், திருமணங்கள் முதல் மரணவீடு வரை, இந்த வெள்ளாளிய சாதிய வாழ்க்கை முறையைக் காணமுடியும்;. ஒடுக்கும் சாதிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதிகள் உருவாக்கும் கோயில்களில் கூட, சாதியப் பிறப்பு முறையிலான வெள்ளாளிய சாதிய வழிபாட்டு சடங்குமுறைகளே புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிகள் கட்டிய, புதிது புதிதாக கட்டுகின்ற கோயில்களில், தங்கள் சாதிய தீட்டுக்காக தங்களைத் தாங்களே கோயிலுக்கு வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்ற அளவுக்கு, வெள்ளாளிய சாதிய வாழ்க்கை முறையும், சிந்தனையும் சமூகத்தை கூறு போட்டு இருக்கின்றது.

இன்று என்றுமில்லாத அளவுக்கு இந்த வெள்ளாளிய சாதிய வாழ்க்கை அடிப்படையிலான சாதிச் சடங்குகள், இந்தியாவில் இருந்து புதிது புதிதாக சமூகத்தில் நுழைந்து வருகின்றது. ஒடுக்கப்பட்ட சாதிகள் மத்தியில் கூட, இந்த வெள்ளாளிய வாழ்க்கை வீச்சாக புகுந்து  வருகின்றது. இப்படி சாதியம் முதல் மொழி வரை, தூய்மை தீட்டு குறித்த பொது  கருத்துருவாக்கத்தைக் காண முடியும்;. துரோகி, தியாகம் என்ற தமிழ்தேசியம் கட்டமைத்த அதே கருதுகோள்களில், இன்று மொழித் தூய்மை குறித்து, தீட்டுக் குறித்தான தமிழ் கலாச்சார அளவுகோல்கள் கட்டமைக்கப்படுகின்றது. இடதுசாரிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரினது, மொழி குறித்த அளவுகோலாக இருப்பதும் இது தான்.

நிலப்பிரபுத்துவ வெள்ளாளியக் கலாச்சாரமானது, மொழியில் தூய்மையை முன்வைத்து இயங்குகின்றது. இதை மீறுவதை தீட்டுக்குரியதாக காட்டிவிடுகின்றது. இதன் மூலம்  ஒடுக்குபவனின் மொழிக் கொள்கை என்பது, ஒடுக்குபவனின் மொழியை கொண்டு அவனை ஒடுக்குவதேயாகும்.