Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இனமுரண்பாட்டால் பலியானவர்களும்! - அவர்களின் நோக்கமும்!!

தனிப்பட்ட சுயநல நோக்கங்களின்றி, தம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர்களை, அரசியல்ரீதியாக நாம் இன்று இனங்காண வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே, தங்கள் வாழ்க்கையையும் - உயிர்களையும் அர்ப்பணித்தவர்களே அஞ்சலிக்குரிய தியாகிகள். அவர்கள் ஒரு நாளும் தமிழன், தமிழனை அடக்கி ஆள்வதற்காக தம்மைத் தாம் அர்ப்பணிக்களில்லை. இதைத் தான் உண்மை. இதுதான் இன்று மறுதளிக்கப்படுகின்றது.

மக்களை ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிக்க போராடியவர்களைத் தலைமை தாங்கியவர்கள் மக்களை ஒடுக்குவோராக மாறியதே வரலாறு. மக்களுக்;காக மரணித்தவர்களின் முதுகில் குத்தியதும், குத்துவதுமே தொடருகின்றது. மக்களை ஒடுக்கும் தங்கள் தலைமை அதிகாரத்துக்காகவே நிலைநாட்டவே அவர்கள் போராடியதாகவும் - தியாகம் செய்ததாகவும் காட்டிக் கொண்டு, தொடர்ந்து ஓடுக்கும் அரசியலை முன்வைக்கின்றனர்.

போராடி இன்று உயிருடன் இருப்பவனோ, தானும் - தன் சமூகமும் எந்த ஓடுக்குமுறையிலும் இருந்து விடுபடாத அவலத்தையும் - தனக்கு தலைமை தாங்கி நிற்பவன் தன்னை சமூக ரீதியாக – பொருளாதார ரீதியாக ஓடுக்குவதைவும் காண்கின்றான். இது தான் போராடியவன் முன்னுள்ள எதார்த்தம்.

தமிழ் தேர்தல் அரசியல் முதல் இயக்க அஞ்சலிகள் வரை இதைத் தாண்டி, ஓடுக்கப்பட்ட மக்களை இட்டு கடுகளவும் கூட அக்கறைப்படுவதில்லை. இதனால் தான் இன முரண்பாட்டால் கொல்லப்பட்ட மக்களையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் இட்டு அக்கறைப்படுவதில்லை.

 ஒடுக்குமுறைக்குள் தொடர்ந்து வாழ்கின்ற உயிருள்ள மனிதர்களை இட்டு அக்கறைப்படாத தங்கள் சுயரூபத்தை மறைக்கவே, இயக்க அஞ்சலிகளை நடத்துகின்றனர். மக்களுக்காக இறந்தவர்களை, தங்களுக்காகவும் - தங்களின் அரசியலுக்காகவுமே மரணித்ததாக இட்டுக் கட்டுகின்றனர்.

இந்த வகையில் மக்களுக்காக மரணித்த ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை, ஓடுக்குகின்றவர்கள் ஓருநாளும் அங்கீகரிப்பதுமில்லை. அவர்களுக்கான அஞ்சலியைச் செலுத்துவதுமில்லை. மாறாக ஓடுக்குகின்றவர்கள் ஓடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை, தங்கள் ஓடுக்கும் அரசியலுக்கு மரணித்ததாகவே காட்டி தொடர்ந்து பிழைக்க முற்படுகின்றனர்.

வரலாற்ற ரீதியாக பார்த்தால் இனவொடுக்குமுறைக்கு உள்ளான தமிழ் மொழி பேசும் மக்களின் போராட்டமானது, ஓடுக்கும் தமிழ் தலைமையினால் காயடிக்கப்பட்டதே நடந்தேறியது. ஓடுக்கப்பட்டவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள்.. எதுவும் ஓடுக்கும் தமிழ் தரப்பால், அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது கிடையாது.

போராடியவர்கள் எந்தவிதமான சுயநல நோக்கமும் இன்றி, தம் வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள். இதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை, எதிர்காலக் கனவாக கண்டவர்கள். தன் மக்களை அடக்கி ஆள்வதற்;கான, தமிழனின் அதிகாரமாக கனவிலும் கூட காணவில்லை. அன்று போராட்டத்தை நடத்திய எல்லா இயக்கத்திலும் இணைந்து போராடியவர்கள் அனைவரதும் விருப்பமும் - தேர்வும் இது தான். இந்த விருப்பமும், தேர்வும் ஓடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓலித்ததுடன், அதுவே இன்று வரையான மக்களின் கனவுகளும் கூட.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் மகிழ்ச்சிக்கான அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் வழிநடத்தியவர்கள், மக்களை ஓடுக்கும் தங்கள் அதிகாரத்துக்காக அதை மாற்றிக் கொண்டனர். இப்படி உருவான இயக்கத் தலைவர்கள், அதன் வழிவந்தவர்கள், இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் தியாகத்தையும், உயிருடன் உள்ள ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் மறுத்து வருகின்றனர்.

மக்களை ஓடுக்கும் அரசியல் மூலம் தலைவர்களானவர்களும், அவர்களை அண்டிப் பிழைத்தவர்களும் போராட்டத்தை வியாபாரமாக்கிக் கொண்டனர். போராட்டத்தையும், தியாகத்தையும் இந்தியா முதல் அமெரிக்கா வரை விற்றுப் பிழைத்தனர், பிழைக்கின்றனர்.   போராட்ட நிதியாதாரங்களை தங்கள் தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டனர். இவர்களே இன்று தமிழ்மக்களின் அரசியல் தலைமையாகவும், மக்களை ஓடுக்கும் தலைமையாகவும் தொடருகின்றனர்.

அதேநேரம் போராட்டத்தில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள், வறுமையிலும் எந்தப் போக்கிடமுமின்றி அனாதையாக்கப்பட்டு இருக்கின்றனர். தம் உறவுகளை தியாகம் செய்துவிட்டு குடும்பங்கள், வாழ வழியற்றுக் கிடக்கின்றனர். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வீதிவீதியாக அலைகின்றனர். யுத்தம் பலியெடுக்க - பலிகொடுக்கப்பட்ட சமூகம், தன்னைத்தான் இழந்து நிற்கின்றது. அங்கவீனமானவர்களின் வாழ்வியல் சொல்லிமாளாது. தாய் தந்தையை இழந்த குழந்தைகள், மனிதத் தன்மையற்ற அனாதை விடுதிகளின் துன்பங்கள் - துயரங்களுடன் பரிதாபிக்கின்றனர். தங்கள் வாழ்க்கைத்துணையை இழந்த பெண்கள், பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கையேந்துவதை படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் நடைப்பிணமாகின்றவர்களின் துயரம் சொல்லிமாளாது. அவலங்கள், துயரங்கள் பலருக்கு பணம் சம்பாதிக்கவும், ஏமாற்றிப் பிழைக்கவும், தேர்தல் அரசியல் செய்யவும், பணம் திரட்டிப் பிழைக்கவும், சமூகம் மீது அதிகாரம் செய்யவும், மதம் மாற்றவும், மக்களை மதமயமாக்கவும், பாலியல்ரீதியாக வன்முறைக்குள்ளாக்கவும், உழைப்பைச் சுரண்டவும், தங்களை மனிதாபிமானியாகப் பிரபலப்படுத்திக் காட்டிக்கொள்ளவுமே.. உதவுகின்றது. இதுதான் யுத்தத்தின் பின்னான அரசியலாக, மனிதாபிமானமாக - சமூகத்தின் குறுக்கு நெடுக்கான வெட்டுமுகமாக இருக்கின்றது.

இன முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் - அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டவராக மக்களை அணிதிரட்டவும் மறுத்து, அவர்களை ஒடுக்கும் அரசியல் மூலம்  எப்படி ஓடுக்க முனைகின்றனரோ, அதேபோல் கொல்லப்பட்ட மக்களின் தியாகங்களை அங்கீகரிக்க மறுக்கின்றனர். மக்களை ஓடுக்கும் தங்கள் இருப்புக்கு ஏற்ப அஞ்சலிகளை அங்கீகரிக்கும் இயக்க அரசிலுக்கு அப்பால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொது அஞ்சலிகளை மறுக்கின்றனர்.

மக்களை ஓடுக்கும் அரசியலைக் கொண்ட தரப்பிடம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அஞ்சலியைக் கோருவது என்பது எம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதே. இதைத் தாண்டி ஓடுக்கப்பட்ட மக்களுக்கான அஞ்சலியை முன்னெடுத்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட அரசியல் மூலம் தான், ஓடுக்கப்பட்ட மக்களுக்கும் - போராளிகளுக்கும் அஞ்சலியைச் செலுத்த முடியும்.

மக்கள் தங்கள் மீதான ஓடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்தவர்களின் உணர்வுகளை, எமதாக்கிக் கொண்டு வாழ்வதும் - போராடுவதுமே உண்மையான அஞ்சலிகள இருக்க முடியும்.

அஞ்சலிகளென்பது

1.ஓடுக்கப்பட்ட மக்களையும் - மக்கள் தம் மீதான ஓடுக்குமுறையில் இருந்துவிடுபட தங்களை அர்ப்பணித்தவர்களின் உணர்வுகளையும் முன்னிறுத்துவதை அஞ்சலிகளாக்க வேண்;டும்.  ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலாக அணிதிரட்டிக் கொள்ளவேண்டும்.

2.இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய அமைப்புகள் மக்கள் மேல் கையாண்ட ஓடுக்குமுறைகளுக்கான பொறுப்பை, அந்தந்த அமைப்புகளை அரசியல் ரீதியாக வழிநடத்திய தலைமைகளையே பொறுப்பாக்க வேண்டும். மக்கள் மேலான ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபடும் கனவுடன்  போராடிவர்களை, பொறுப்பாக்கக் கூடாது. தங்கள் அதிகாரங்கள் மூலம் மக்களை ஒடுக்கிய தலைவர்கள் முதல் கோட்பாட்டுவாதிகளுகான அஞ்சலிகளை மறுதளிக்க வேண்டும். தலைமை என்பது கூட்டுப் பொறுப்புக் கொண்டது என்ற அடிப்படையில், தலைமையில் உள்ள தனிநபரை குற்றவாளியாக்கி தப்பிக்க முனையும், அரசியலை பித்தலாட்டங்களையும் மறுதளிக்க வேண்டும்.

3.மக்களை ஓடுக்கியதற்கு எதிரான விமர்சனமானது, ஓடுக்குமுறைக்கு எதிராக போராடிய வடிவம் மீதானதாக (உதாரணம் தேசியம் மீது அல்ல) அமையக் கூடாது. அது கொண்டிருந்த அரசியல் மீதானாக அமைய வேண்டும். இதேபோல் நபர்கள் மீதானதாகவும் இருக்கக் கூடாது, மாறாக தனிநபர் கொண்டிருந்த அரசியல் மீதானதாக அமைய வேண்டும். ஓடுக்குமுறைக்கு எதிராக போராடியதை, குற்றமாகவோ – விமர்சனமாகவோ மாற்றிய  அஞ்சலி போலியானது. தனிப்பட்ட காழ்ப்பாகவும் - ஓடுக்கும் அரசியலாகவுமே அமையும்;.