Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியமும்--தமிழ்த் தேசியமும்….பகுதி—7

சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உதயம்!

 

ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலில், சாதியத்திற்கு எதிரான நிகழ்வுகளில் வாலிபர் காங்கிரஸின் போராட்டங்கள், அம்மக்களை விழிப்புற வைத்தது. இவ்விழிப்புணர்வானது, அம்மக்கள் மத்தியில் தன்னியல்பான பல ஸ்தாபன அமைப்புக்களை உருவாக வழி வகுத்தது. இவை வடபகுதி எங்கும் தொழிலாளர் சங்கங்கள், முதல் மக்கள் நலவுரிமைச் சங்கம், சமூக ஒற்றுமைக்கான அமைப்பு, அரிசனர் வாலிபர் அமைப்பு, போன்றவைகளுடன் சனசமூக நிலையங்கள், சமூக முன்னேற்றச் சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன.

1934-ல் நன்னெறி போதிக்கும் சங்கம் ஒன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் பலாலி வீதியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பு 1941-ல் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் என புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

1942-ஓக்டோர் 31-ந்திகதி இச்சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் வடபகுதியில் உள்ள சகல ஓடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி ஓர் அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என ஓர் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. இத்தீர்மானத்தின் அடிப்படையில் எஸ். ஆர். ஜேக்கப் காந்தி, எம். சி. சுப்பிரமணியம், ஆ. ம. செல்லத்துரை வ. அரியகுட்டி, எம். ஏ. பென்சமின் போன்றவர்களுடன், இன்னும் ஐந்துபேர்களின் கையொப்பத்துடன், மகாசபை அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்ட அழைப்பிதழ் வெளிவந்தது.

1942- நவம்பர் 21-ல்; எஸ். ஆர். ஜேக்கப், ஆ.ம. செல்லத்துரை, வி.ஜே. அரியகுட்டி, ஆகிய மூவரின் கையொப்பத்துடன் "நல்மனம் உள்ளவர்களுக்கு ஓர் வார்த்தை" எனும் தலைப்பில், மகாசபையின் அமைப்பின் நோக்கம் பற்றிய ஓர் துண்டுப் பிரசுரம் வெளியடப்பட்டது.

1943-ஏப்ரல் 24-ல் யாழப்பாணம் சென்ஸ் சார்ல்ஸ் மண்டபத்தில் மகாசபையின் முதலாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிலேயே வட இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்ற பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மகாசபையின் முதலாவது தலைவராக யோவல் போல் தெரிவு செய்யப்பட்டார். இம்மாநாட்டில் சகல ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் நோக்கத்தையும், அம்மக்களின் விமோசனத்திற்காக உழைக்கும் உறுதியையும் எடுத்துக்கொண்டது.

இதையடுத்து இவ்வமைப்பை விரிவுபடுத்தும் நோக்கிலான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக எஸ். ஆர். ஜேக்கப் தலைமையிலான குழுவொன்று கிழக்கு மாகாணத்திற்கும் சென்று, அங்கும் உறுப்பினர்களை உருவாக்கியது.

இவ் உள்வாங்கல்களுடன், 24-9-1944-ல் அதன் 2-வது மாநாடு யாழ்-நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை எனும் பெயர்மாற்றத்தையும் பெற்றது. இதற்கு ஏ.பி. ராஜேந்திரா அவர்கள் தலைமை தாங்கினார்.

இம்மாநாட்டில் ஓடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நிலை, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கான தெரிவுகள், உத்தியோக வாய்ப்புக்கள் போன்றவைகள் முதன்மைப்படுத்தப்பட்டன. அத்தோடு சீவல் தொழிலாளர்களின் நலன்கள் முன்னேற்றப்படவும், பாதுகாக்கப்படவும், பனைவளம் குடிசைக் கைத்தொழில் போன்றவற்றிற்காக ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்படுவதற்கான அவசியத்தையும் மாநாடு வலியுறுத்தியது.

தவிர, தமிழ் மக்கள் எண்ணிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகும். இவ் எண்ணிக்கை கொண்டு இம்மக்களின் பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கான பிரதிநிதித்துவம் கோரியும் குரல் கொடுக்கப்பட்டது. இதை தனித்தொகுதி ஒதுக்கியோ, அன்றி நியமனத்தின் மூலமோ அமைய வேண்டுமெனவும், வலியுறுத்தியது.

இரண்டாவது மாநாட்டுத் தீர்மானங்களை முன்னெடுத்து வேலைகளை விஸ்தரித்துச் செல்லும்போது, மகாசபைக்கும், ஒடுக்கப்பட்ட மக்ளுக்கும் இடதுசாரிக் கட்சிகளின் வடபகுதியை நோக்கிய வரவும் பெருந்துணையாயிற்று.

ஆரம்பத்தில் லங்கா சமசமாஜக் கட்சியின் வடபிரதேசத் தலைவர்களான சி.தர்மகுலசிங்கம், வி.சிற்றமபலம் போன்றவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு பெருந்துணையாக இருந்தனர்.

இதையடுத்து 1945-ல் கம்யூனிஸ்ட் கட்சி தன் வடபகுதி வேலையை மு.கார்த்திகேசன் அவர்களுக்கு ஊடாக முன்னெடுத்தது. அதில் மகாசபையின் அங்கத்தவர்களும் இணைந்திருந்தனர். அவர்கள் எம்.சி.சுப்பிரமணியம், கே.டானியல், டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன், மு. முத்தையா, க. இராசையா போன்றவர்கள் ஆவர்.

இவ்வாறாக 1940-ம் ஆண்டுகளின் பின்னான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் நகர்வு இடதுசாரிக் கட்சிகளுக்கூடாக பரிமாணம் பெறத் தொடங்கிற்று. இக்கால கட்டங்களில் இம் மக்களின் ஆதரவோடு இடதுசாரிக் கட்சிகளின் சார்பாக பலர், வடபகுதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டனர். அபேட்சகர்களாக மு.கார்த்திகேசன், டாக்டர் சு.வே.சீனிவாசகம், எஸ்.ஜெயசிங்கம், சி.தர்மகுலசிங்கம், பொ.நாகலிங்கம், அ.விசுவநாதன், ஆ.துரைராசசிங்கம் போன்றவர்கள் தேர்தல்களில் நின்றனர்

வடபகுதியில் இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சியும், அதன் அரவணைப்போடும் இருந்து சாதியத்திற்கெதிராக செயற்படும் ஓடுக்கப்படட் மக்களின் நடவடிக்கைகள், உயர் இந்து வேளாள ஆதிக்கவாதிகளை ஆத்திரமடையச் செய்தன. அதில் சாதிவெறி கொண்டு பலவற்றை செய்தனர். அதில் ஒன்றே முதலி சின்னத்தம்பியின் வில்லூன்றி மயானப் படுகொலை.

வில்லூன்றி மயானப் படுகொலை!!

மகாசபையின் இரண்டாவது மாநாடு முடிந்திருந்த வேளையில், யாழ் ஆரியர்குளம் பலாலி வீதியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட வயோதிபத் தாய் காலமானபோது, அவரின் இறுதிக் கிரிகைகளை வில்லூன்றி மயானத்தில், நடப்பில் உள்ள நடைமுறையை மீறிச் செய்யப்படட்து. நடப்பின் நடைமுறை (கிரிகைகள் செய்வதற்கு) உயர் சமூகத்திற்கு ஓர் இடம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு இன்னோர் ஒதுக்கிடம். வழமைக்கு மாறாக நடைமுறை விதியை மீறி இத்தாயாரின் கிரிகைகளை உயர்சாதியினர் உபயோகிக்கும் இடத்திலேயே வைத்துச் செய்தனர்.

இச்சம்பவம் உயர் சாதி ஆதிக்கவாதிகளை ஆத்திரமடையச் செய்ததில், வெறி கொண்ட சாதித்திமிரர்கள், கிரிகைகளை செய்து கொண்டிருந்த சிலர்மீது மறைந்திருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் முதலி சின்னத்தம்பி எனும் நபர் அவ்விடத்திலேயே மரணமானார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இச்சம்பவமானது வடபுலத்தின் ஓடுக்கப்பட்ட மக்களின மத்தியில் கடும் எதிர்ப்பலையை உருவாக்கிற்று. மறுபுறத்தில் சாதி அகம்பாவமும் தலைவிரித்தாடிற்று. முதலி சின்னத்தம்பியின் கொலை வழக்கில் எந்த வழக்கறிஞர்களும், இறந்தவருக்கு சார்பாக வாதிடக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் உயர் சமூக வழக்கறிஞர்கள் யாரும் வாதிட முன்வரவில்லை. இருந்தும் இவ் அகம்பாவ வெறியை உடைத்தெறியும் வகையில், லங்கா சமசமாஜக் கட்சியின வடபிரதேசத் தலைவர்களான, சி.தர்மகுலசிங்கம், வி.சிற்றம்பலம் ஆகியோர் முதலி சின்னத்தம்பி சார்பாக வாதிட்டனர்.

அன்றைய அந்த உயர்சாதிய அகம்பாவப்போக்கின் சிந்தனா முறையை, அதன் தொழிற்பாட்டை இன்றும் தமிழ்த் தேசியர்கள் மத்தியிலும் காண முடிகின்றது. அதன் பரிணாணமே இன்றைய சிவாஜிலிங்கத்தின் ராஜதுரைக்கெதிரான சாதிய வசைபாடல்! இதில் ஒரு முரண் நகை., தமிழர் சமுதாயத்தில், சமுதாயப் பகையுடனான பிளவு கொண்ட சாதியத்தையும் - தமிழ்த் தேசியத்தையும் இராசதுரை கொண்டு முத்தமிட வைக்க முயல்கின்றார், தலித் போராளியெனும் ஸ்டாலின்!

தலித் மேம்பாட்டு முன்னணி கூட்டமைப்பின் கூட்டுக் கம்பனியா?

ஞானம் என்கின்ற ஸ்டாலினின் ராஜதுரைப் பிரதேசப் பாமாலை!

தமிழசுக் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ராசதுரையை சிவாலிங்கம் சாதிவெறி கொண்டு தாக்க, அதை தான் ஓர் தலித் அரசியலாளன் என்ற தளத்திற்குள் நின்று கண்டிக்காமல், அது கொண்டு தன் எதிர்ப்புக் குரலைத் தெரிவிக்காமல், ஏதோ தமிழரசுக்கட்சி - தமிழ்த்தேசியம் வேறு, ராஜதுரை வேறு என்ற "தத்துவக் கோட்பாட்டில்" ராஜதுரைப் பாசம் கொண்டு, மட்டக்களப்புப் பாமாலை பாடுகின்றார் இந்த ஸ்டாலின்.

அண்மையில் யாழில் நடைபெற்ற செல்வநாயகம் நினைவு தினக் கூட்டத்தில் இராசதுரையை சிவாஜிலிங்கம் "சக்கிலியன்" எனப் பேசியது. திமிர் கொண்ட சாதி வெறியின் குணப்பாடும், குறுகிய இனவெறி கொண்ட பிரதேச வாதத்தின் தொழிற்பாடுமேயாகும். நாகரீக அரசியலின் தரம் தெரிந்தவர்கள் சிவாஜிலிங்கத்தை காறித் துப்புகின்றார்கள். கூட்டமைபின் கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களே சிவாஜிலிங்கம் தான் "தரம் தாழந்த துரோகி" என்கின்றார்கள்

"இராஜதுரையை யாழ்ப்பாணத்தில் வைத்து சிவாஜிலிங்கம் துரோகி, சக்கிலியன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். சிவாஜிலிங்கத்திற்கு இராஜதுரையை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. சிவாஜிலிங்கம் சுத்தமானவரா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் எல்லோரும் சுத்தமானவர்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எத்தனை பேர் துரோகிகள் என்பது எங்களுக்கு தெரியும், தேவை என்றால் நாங்கள் அந்த பட்டியலை வெளியிடுவோம்" என கிழக்கின் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கடும் தொனியில் பேசியுள்ளளார்.அதுவும் மட்டக்களப்பில் நடைபெற்ற செல்நாயகம் நினைவுதினக் கூட்டத்தில் ரர்சதுரையும் வீற்றிருக்கும் வேளையில்..

கூட்டமைப்பிற்குள் ராசதுரை-சிவாஜிலிங்க- விவகாரம் இந்த றேஞ்சில் உள்ளது. இது கொண்ட பெரும் கடி-பிடியே நடக்கின்றது. இவர்களை விட இந்த ஸ்டாலினுக்கு சிவாஜிலிங்க எதிர்பிற் கூடாக "ராசதுரை-தந்தை செல்வா" பாசம் பொங்கி வழிகின்றது.

மட்டக்களப்பில் இளமைக்கால ராஜதுரையின் நவடிக்கைகள், சிற்சில சம்பவங்களை வைத்துக்கொண்டு, பிரதேசவாதப் பிரவாகம் கொண்டவாக்கில் ராசதுரையை தந்தை பெரியாராக்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக்கி, நீட்டி-முடக்குகின்றார் ஸ்டாலின். மட்டக்களப்புத் தொகுதியை செல்வநாயகம் தான் இரட்டை அஙகத்தவர் தொகுதியாக்கியவர் என ராசதுரையே செல்வநாயகம் நினைவு தினக்கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியுள்ளார். இல்லை ராசதுரைதான் என் வக்காலத்து வாங்குகின்றார் இந்த மதி உரைஞர்.

செல்வநாயகத்தை பாசம் பொங்கும் நேரங்களில் தந்தை செல்வா என்கின்றார், கோபத்தில் (வெறும்) செல்வநாயகம் ஆக்குகின்றார். யார் இந்த "தந்தை" செல்வநாயகம்?

1969-ல் செல்வநாயகத்தின் தொகுதி காங்கேசன்துறை, இத்தொகுதியில் அமைந்தது தான் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில். இதே ஆண்டில் இக் கோவிலுக்குளான ஆலயப் பிரவேசப் போராட்டம் நடைபெற்ற பொழுது, அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் எனும் சாதிவெறியரின் தலைமயில், சாதி வெறியர்கள், போராடிய ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எத்தனை இம்சைகளை, கொடுமைகளைச் செய்தார்கள். ஆனால் இக்கொடுமைகள் எல்லாம் அன்றைய ஊடகங்களில் பெரும் செய்திகளாக வந்தன. "தந்தை"யின் காதுகளுக்கும் எட்ட வைக்கப்பட்டது. ஆனால் அவர் இவ் அடக்கு முறையை, அதற்கெதிரான மக்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாதவராகவே இருந்தார்.

இப்பேர்ப்பட்டதோர் தமிழ்த் தேசியத் தலைவர் -அவரின் அரசியல் கட்சி, அக்கட்சியின் சகபாடிகள் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதான எதிரிகள். சாதிவெறி கொண்ட இவர்களின் கடந்தகால வரலாற்றின் கறைபடிந்த அரசியல் அத்தியாயத்தின் நடவடிக்கைகள் பற்றி, ஓடுக்கப்பட்ட மக்களுக்கு பட்டறிவின் பாற்பட்ட அனர்த்தன அனுபவங்கள் தலைமுறை தலைமுறையாக ஏராளம் உண்டு.

இப்பிரதான எதிரிகளின் பாசறைக்குள் நடைபெறும் சாதிவெறிச் சணடைக்குள், உள்ள சாதிவெறிப் பிரவாகத்தை கண்டிப்பதுடன் நிற்காமல், பிரதேசவாதப் பிரவாகம் கொண்டு, "ராசதுரைத் தலித் தத்துவ ஞானம்" ஓதுகின்றார் தலித் மேம்பாட்டு முன்னணியின் தந்தையான ஸ்டாலின்.

தமிழர் சமுதாயத்தில், சமுதாயப் பகையுடனான பிளவு கொண்ட சாதியத்தையும்-தமிழ்த் தேசியத்தையும் இராசதுரை கொண்டு முத்தமிட வைக்க முயல்கின்றார்! பெரியாரின் "தலித் மைந்தன்"!

-தொடரும்

28/05/2012

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-1)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-2)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-3)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-4)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-5)

சாதியமும் தமிழ்த் தேசியமும் (பகுதி-6)