Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ?

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 31.01.2010

எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள் மகிந்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள். என தேர்தல் முடிவுகள் வந்தபொழுது பலரை எண்ணவைத்தது.

மகிந்த ராஜபக்ச “யதார்த்தவாதி சிந்தனையாளன்”.  தன் கடந்தகால அரச சாதனைகளை மக்கள் முன் வைத்து, தன் பதவிக்காலம் முடிவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தேர்தலை நடாத்தி, தன் குறித்த இலக்கை அடைந்துள்ளார் எனவும், ஜனாதிபதி முதன்மை வேட்பாளர்கள் இருவரும் சமநிலையில் வருவார்கள் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தான் யாராவது ஒருவரை வெல்லவைக்கும் என்ற வியூகமும் நடைமுறைச் சாத்தியமற்றதாக்கி விட்டது. இப்படித்தான் இன்னொரு சாராரும் கணித்தார்கள்.

சில “புலன்பெயர் அறிவுஜீவிகள்” மகிந்தப் பக்தர்கள் சிலர், தமிழ்-முஸ்லீம் மக்கள் மகிந்தாவிற்கு வாக்களிக்காததால் அவர்களை மாங்காய் மடையர்கள் என்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்களின் மகிந்த மதிப்பீடு சரியானது என்கின்றார்கள். இப்படி இன்னும் பல ஆய்வுகள். ஆனால் இத்தேர்தலின் உண்மை நிலைதான் என்ன?

மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிடைய புலிகளைத் தோற்கடித்த “போர் வெ(ற்)றியையே”  ஆயுதமாக்கினார். கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்ததை, பொன்சேகா-சம்பந்தன்  இரகசிய ஒப்பந்தமாக்கி, நாங்கள் பிரித்துவைத்த வடகிழக்கை இவர்கள் இருவரும் இணைந்(த்)து, தமிழீழம் ஆக்குவார்கள். நாங்கள் அழித்த புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கின்றார்கள். நாங்கள் 30,000ற்கு மேற்பட்டவர்களை இழந்து, தாய்நாட்டை காப்பாற்றி பெற்ற வெற்றியை, பொன்சேகா அமெரிக்க மேற்குலகத்திற்கு தாரைவார்க்கப் போகின்றார். இவர் வந்தால் இலங்கையில் இராணுவ ஆட்சியே வரும் என தென்னிலங்கை தேர்தல் கூட்டங்களில் பேசி இனவெறி உசுப்பேத்தினார். சிங்கள மக்களின் வாக்குகளை வாக்குவங்கியாக்க முயன்றார்.

ஆனால் இம்மாதம் 26-ல் நடைபெற்ற தேர்தல், ஓர் இயல்பான தேர்தலும் அல்ல, சிங்கள் மக்கள் மகிந்தாவின் இனவெறி உசுப்பல் பிரச்சாரத்திற்கு பெருமளவில் எடுபடவும் இல்லை. இதை தற்போது வரும் செய்திகள் உறுதி செய்கின்றன.

தான் 14-இலட்சம் வாக்குகள் முன்னிலையில் நிற்கும்போது, தனது வாக்குகள் மகிந்தாவிற்கு மாற்றப்பட்டன என்கின்றார்  பொன்சேகா. இதற்கு தேர்தல் ஆணையாளரே சாட்சியமாகின்றார்.

மக்கள் வாக்களித்த வாக்குப்பெட்டிகளை என்னாலும், என் சக ஊழியர்களாலும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மக்கள் வாக்களிக்காத வாக்குப் பெட்டிகளையே காப்பாற்றினோம், எண்ணினோம், வெற்றியாக்கினோம். எனது மனச்சாட்சிக்கு இடம் கொடுக்காத விதத்திலேயே, நான் தேர்தல் முடிவை அறிவித்தேன்.

மக்கள் வாக்களிக்காத – மகிந்த சிந்தனையால் உருவாக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளின் வாக்குகளே, 61-இலட்சத்திற்கு மேலாகி, 19-இலட்சத்திற்கும் மேல் வெற்றியுமாக்கியது. இந்த இலட்சோப இலட்சம் வாக்குகள் எல்லாம் தேர்தல் ஆணையாளரின் கையொப்பம் இடாத அறிவித்தல்கள்களாக, கணணி குறளி வித்தைகளாக, இன்னும் இன்னோரன்ன கைங்கரியங்களுக்கு ஊடாகவே அரங்கேறியுள்ளது.

“யதார்த்தவாதி” மகிந்தா, இத்தேர்தலின் ஊடாக தானும் இன்னொரு புலியே, “தம்பி பிரபாவின் அசல் அண்ணன் நானே” என்று சொல்லாமல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் இதை கிட்லர் பாணியென்கின்றனர். அவர் இன்றிருந்தால் மெய் சிலிர்த்திருப்பார். பலவிடயங்களை மகிந்தாவிடமே கொப்பியடித்திருப்பார்.

நடந்து முடிந்தது ஜனாதிபதித்தேர்தல் அல்ல! மகிந்த குடுமபத்திற்கான மாயாhஜாலத் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி சர்வதேச சமுகத்திற்கு கிடைத்த பெரியஅடி  –கருணா அம்மான்

அம்மானே! தமிழ்மக்கள் தங்களுக்கு தந்த அடியை என்னவென்பது?

தமிழ் முஸ்லீம் மக்கள் முட்டாள்களாம்.

“புலன்பெயர்ந்த சில அறிவாளர்கள்” மகிந்தாவிற்கு வாக்களிக்காத தமிழ்-முஸ்லீம் மக்களை முட்டாள்களாம். இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்கின்றார்கள். மகிந்தாவிடம் கூலி வாங்கி எழுதும் சில தேனீ இணையதள எழுத்தாளர்களை விடுவோம். அவர்கள் கூலிக்கு மாரடிக்கின்றார்கள் என்றால், மற்றைய சில சிற்சிலதுகளும் “பண்ணாடை அரசியல் ஆய்வு” செய்யுதுகள்.

தமிழ் முஸ்லீம் மக்கள் இத்தேர்தலில் என்னதான் முட்டாள்தனமாக நடந்துள்ளார்கள். இன-அடக்கு முறையையும், மனிதப்படுகொலைகளையும் செய்த, மகிந்தப் பேரினவாதத்தையும், அதன் கூட்டாளிகளையும் நிராகரித்தது முட்டாள்தனமோ?

இத்தேர்தல் தமிழ்-முஸ்லீம் மக்களை ஓர்நிலை நோக்கி கொண்டுவந்துள்ளது. இது எதிர்காலத்தில் சந்தர்ப்பவாத தேர்தல் நோக்கிலில்லாது, இரு மக்களுக்கும் இடையில் சுயநிர்ணய அடிப்படையிலான – புரிதலை, அரசியலை ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும். இதை வடக்கின் வசந்தமோ-கிழக்கின் விடிவெள்ளியோ செய்யாது.

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்-முஸ்லீம் மக்களின் முடிவு, கடந்தகால புலி-மகிந்தப்பேரினவாத அரசின் அடக்குமுறை-புறக்கணிப்பு-பாசிச நடவடிக்கை ஏனைய பலவற்றின் பட்டறிவின் செயற்பாடே!  மகிந்தாவிற்கு எதிரான வாக்களிப்பிற்கான முடிவை, கூட்டமைப்பு முடிவு செய்யமுன்பே தமிழ்மக்கள் முடிவு செய்துள்ளனர். அவர்கள் அபிலாசையையே கூட்டமைப்பு தன் முடிவாக்கியது! இதைத்தான் சர்வதேசத்திற்கும் சொன்னது. சொல்கின்றது.

இதை தமிழ் மக்கள் முட்டாள்கள். திருந்தவே மாட்டார்கள் என்பது அரசியல் ஆய்வின் பன்னாடைத்தனமே. மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள் அவர்களைத் திருத்த இவர்கள் யார்?

வடக்கின் மக்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில், ஜனநாயகம் மீளக் கிடைக்கப்பெற்றமை தொடர்பில் மகிழ்ச்சி அடைகின்றேன். –ஜனாதிபதி

சாத்தான் வேதம் ஓதுகின்றது! வாக்களிக்காமல் குண்டெறிய வைத்தவரும் இவரே!  ஜனநாயக ரீங்காரம் செய்பவரும் இவரே!

டக்கிளஸின் சினிமா!

தமிழ்-முஸ்லீம் மக்கள் ஜனவரி 26-ல் டக்கிளசு-கருணா-பிள்ளையான் போன்ற “மகிந்த மன்றாட்டக்காரர்களுக்கு தங்கள் தகுந்த முடிவை சொல்லியுள்ளார்கள்.

இதனால் தடம்புரண்டுள்ள டக்கிளஸ், தன் அரசபதவிகளை துறக்க முன்வந்தாராம். வேண்டாம் என்று அவரின் “தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்கள்”  யாழில் கடையடைப்பு செய்ய முன்வந்தார்களாம். இதையறிந்த டக்கிளசு பதறிப்போனாராம். யாழ்மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படப்போவதை கண்ணுற்றாராம். உடனே யாழ்நகர் சென்று கடைகளை திறக்கச் செய்தாராம்.

உடனே இது மகிந்த மன்னனின் காதுகளுக்கும் எட்ட அவரும் துடித்துப்போனாராம். உடனே மன்னன் அவசரப்படாதீர்கள் மந்திரியாரே, எதற்கும் நான் இருக்கின்றேன் அல்லவா! உங்கள் “மகிந்த- பக்தியை” நானறிவேன் அல்லவா என்றாராம். உடனே டக்கிளசும் டக்கென்று மனம் மாறி தன் இயல்பு வாழ்விற்கு திரும்பி விட்டாராம்.

கலைஞரின் நடிப்பு அரசியலை டக்கிளசும் திறம்படக் கற்றுக்கொண்டுள்ளார். சென்ற ஆண்டு கலைஞர் போர்நிறுத்தம் கோரி மாபெரும் உண்ணாவிரதப்போரில்  (2-மணி நேரம்) எப்படிப் போராடினாரோ  அதையே டக்கிளசும் கொப்பியடித்துள்ளார்.

அதுசரி தேர்தலின்போது நான் கேட்டதெல்லாவற்றிற்கும் மகிந்தா ஆம் என்று விட்டார். கொடுக்காவிட்டால் அதற்கு நானே பொறுப்பென்று தமிழ்மக்கள் அரசியலை குத்தகை எடுத்துவிட்டு  இப்போ ராஜினாமா என்றால்,  இதை எம்மால் நம்ம முடியவில்லையே! வடக்கின் வசந்தமே!

உலகில் “மக்களின் அரசியல் பிரச்சினையை குத்தகை எடுத்த முதல் தலைவன் நீங்கள் என்ற சிறப்பும் உங்களுக்கு உண்டு. இதை உங்களின் உயிரினும் மேலான உறவொன்று அண்மையில்  உரிமை கோரிற்று. இப்போ இந்த இரத்தத்தின் இரத்தங்களையும் அல்லவா கலங்க வைக்கப் போகினறீர்கள்! தலைவரே! வேண்டாம் விபரீத நடிப்பு அரசியல். இதை மகிந்த மன்னன் நிஜமாக்கியே விடுவார்.

தனக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரைப் பணயம் வைத்தாவது அரச இரகசியங்களை வெளியிடுவேன்.                 –பொன்சேகா

தேர்தல் ஆணையாளரே உங்களுக்ககாக உயிரைப் பணயம் வைத்து பல விடயங்களைச் சொல்லியுள்ளாரே. அவருக்கு வந்த தைரியம் தங்களுக்க இன்னமும் வரவில்லையே?

என்னால் வாக்குப்பெட்டிகளைக் கூட பாதுகாக்க முடியவில்லை!     –தேர்தல் ஆணையாளர் சாட்சியம்!…..

அரசியல் சாசனத்தின் 17-வது திருத்தப் பிரகாரம் தந்த அதிகாரங்களின்படி, நான் சில வரையறைகளை அரச ஊடகங்களுக்கு ஏற்படுத்தியிருந்தேன். அவையெல்லாம் உதாசீனப்படுத்தப்பட்டன. அரச ஊடகங்களை வழிநடாத்துவதற்கென்று, ஓர் பொறுப்பதிகாரியை நியமித்தேன். அவர் பூரணமாக உதாசீனப்படுத்தப்பட்டார்.  அரச ஊடகங்களின் தலைவர்களோடு கலந்துரையாடிப் பார்த்தேன் அதிலும் பயனில்லை. பல அரச ஸ்தாபனங்கள் – அரச ஸ்தாபனங்கள் போல் தேர்தல் காலத்தில் நடக்கவில்லை. எனது வேலை வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பதும், தேர்தல் வாக்குச்சீட்டுக்களை சரியாக எண்ணுவதேயொழிய, வேறுவிடயங்களில் தலையிடக்கூடாது என எனக்கு உயர்மட்டங்களில் பலர் பயமுறுத்தல் எச்சரிக்கையில் சொன்னார்கள். என்னால் வாக்குப் பெட்டிகளைக்கூட பாதுகாக்க முடியவில்லை. என் வேலையை பெரிய நிர்ப்பந்தத்தின் மத்தியிலும், மன அழுத்தத்தின் மத்தியிலுமே செய்தேன். சூழலும் ஆபத்தும் என் சக்திக்கு அப்பாலேயே சென்றிருந்தது.

நான் தொடர்ந்து அழுத்தப்பட்டேன். நான் நோய்வாய்படுபவன் போல் உணர்ந்தேன். பிரதேசத் தலைவர்கள் எனது பணியாளர்களை ஒடுக்கினார்கள். புத்தளம், அனுராதபுரம், மாத்தளை மாவட்டங்களில் வாக்கு எண்ணும் இடங்களைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. என்னுடைய கடமைகளை செய்யும்போது ஒரு கட்சியினருக்கு ஓரவஞ்சகமாக நான் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டேன். இப்படியான மரியாதைக்கேட்டையும், வேதனையையும் என்னால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாது. என் உடல் வலிமையும், உள வலிமையும் அதற்கு இடம்தர மறுக்கின்றது.

எனது மனச்சாட்சிக்கு ஏற்காத விதத்திலேயே, மிகுந்த நிர்ப்பந்தத்தின்  மத்தியிலேயே நான் தேர்தல் முடிவை அறிவித்தேன். சூழலும் ஆபத்தும் எனது சக்திக்கு அப்பாலேயே சென்றிருந்தது. நான் என் வயதான காலத்திலும் 8 வருடங்கள் சேவையாற்றிவிட்டேன். ஆனால் நன்றி கிடைக்காத இந்த வேலையில் இருந்து என்னை விடுவிக்கும்படி கேட்கின்றேன்.

உங்கள் தலை நோக்கி  துப்பாக்கி வந்த நிலையிலும், உங்கள் உயிரை துச்சமென மதித்து, இவ்வளவையும்  நாட்டிற்கும் மக்களுக்கும் துணிந்து சொல்லியுள்ளீர்கள். உங்கள் சாட்சியம் மக்களுக்கு பல கதைகளைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. இது மகிந்தாவிற்கு எதிரான புரட்சிகர –வெகுஜன சுவாலையாக மாறும்.

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயல்களிளால் தான் வடகிழக்கில் ஆளும்கட்சி தோல்வி அடைந்தது!      –கருணா அம்மான்

அம்மான் சொல்லும் பிரதான எதிரியான அவரென்ன,– நீங்கள் செய்தவைகளும் தான் தோல்விக்கு காரணம்.