Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்

செக்கல் பொழுதின் மையிருட்டில் மனமெல்லாம் கிளுகிளுக்க தவநாதன், வனிதா வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார். வாசல்படலையில் பூவரசம் குழைகள் கட்டியிருந்தன. வனிதாவின் புருசன் ஜெயக்குமார் வீட்டில் இருக்கிறார் என்பதன் சிக்னல் அது. ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார். பிறகொரு நாளில் படலையில் கட்டியிருந்த பூவரசம் குழையை ஆடு ஒன்று கடித்து தின்று விட்டது. காய்ஞ்ச மாடு கம்பிலே விழுந்தது போல தவநாதன் வீட்டிற்குள்ளே பாய்ந்தார். இண்டைக்கு இவற்றை முறையில்லையே இவரேன் வாறார் எண்டு யோசித்த வனிதா நிலைமையை விளங்கிக் கொண்டு கள்ளன், கள்ளன் எண்டு கத்தினா. கிழுவையை கடிச்சு, பூவரசை கடிச்சு கடைசியில் என்னையே கடிச்சிட்டுதே இந்த நாசமாப் போன ஆடு என்றபடி கவடு கிழிய வேலி பாய்ந்தார் தவநாதன். அப்பாவி ஜெயக்குமார் வீட்டிற்குள்ளே கள்ளன் வந்திட்டான் என்று அயல்சனங்களிற்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அயல் வீட்டுக்காரர்களிற்கு வந்த கள்ளன் யாரென்று விளங்கி விட்டுது. அன்றையிலேயிருந்து பூவரசங்குழை தவநாதனோடு ஒட்டிக் கொண்டு பூவரசங்குழை தவநாதன் என்றாகியது.

சேர்ச்சிலே கலியாணம் முடிந்தவுடன் வெளியிலே மா, கொன்றை, வேம்பு, புளி என்று நிழல் தரும் தருக்களின் கீழே தேனீர் விருந்து நடக்கும். சேர்ச்சிலே வைத்து அறுத்தது போதாது என்று வெளியிலும் ஒரு பிரசங்கம் வைச்சு விட்டு தான் அன்னப்பா போதகர் சாப்பிட விடுவார். அதிலும் வழக்கம் போல பொருந்தாத உதாரணங்களை தான் படு பிழையாக சொல்லி அறுப்பார். அன்றைக்கு மணமக்கள் தங்கள் பெற்றோரை கவனிப்பது போல, அன்பு செலுத்துவது போல தாங்கள் துணையின் பெற்றோரின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதற்கு லூக்கா இருபதாம் அதிகாரத்தை, யூதகுருமார்கள் இயேசு ரோமசாம்ராச்சியத்திற்கு எதிராக பேசுகிறாரா என்று அறிவதற்காக அவரை கேள்வி கேட்டதை எடுத்து விட்டார்.

22. இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

23. அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?

24. ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்

25. அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

அது போல உங்கள் தாய், தகப்பனிற்குரியதை தாய் தகப்பனிற்கும், மாமன் மாமிக்குரியதை மாமன் மாமியிற்கும் கொடுங்கள் என்று சொல்லி விட்டு ஒரு பெரும் விளக்கம் ஒன்றை கொடுத்த சந்தோசத்துடன் வெற்றிப்புன்னகை ஒன்று பூத்தார். அப்ப யார் இதிலே கொடுமைப்படுத்தி வரி வாங்குகிற இராயர்கள், சீதனம் வாங்குகிற மாப்பிளையின்ரை தாய், தகப்பனோ என்று ஜெயரத்தினம் மாமா சொல்லிச் சிரிச்சார்.

முந்திரிகை வத்தல், பேரிச்சை, கஜூ, தோலகட்டி வைன் கலந்து ஊற வைத்த கறுப்பு நிறகேக் மெல்லிய வெள்ளை ரிஸ்யு தாளில் குஞ்சம் வைத்து கட்டி வரும். ஆசை, ஆசையாய் உரிக்கையில் ஏலக்காய் வாசம் மூச்சு முட்ட வீசும். வாயிலே போட நெய் உருகுவது போல உருகி மெதுவாக கரையும். வனிதா ஒரு வெள்ளித்தட்டிலே கேக்குகளை அடுக்கி கொடுத்துக் கொண்டு வந்தா. பூவரசம்குழை தவநாதனிற்கும், போதகருக்கும் கொடுக்க தட்டிலே இருந்த கேக்கு முடிந்து விட்டது. போதகருக்கு அடுத்ததாக இருந்த வனிதாவின் புருசன் ஜெயக்குமாரிற்கு கேக் இல்லாமல் போய் விட்டது. போதகரிற்குரியதை போதகரிற்கும், தவநாதன் மாமாவிற்குரியதை தவநாதன் மாமாவிற்கும் கொடுத்தீங்கள், ஆனா ஜெயக்குமார் மாமாவிற்குரியதை ஜெயக்குமார் மாமாவிற்கு கொடுக்கவில்லையே வனிதா மாமி என்று ஆனந்தன் கேட்டான். இவன் எதை சொல்லுறான் என்பதை விளங்கிக் கொண்ட போதகர் எது எதுக்கெல்லாம் பைபிளிலே இருந்து வசனம் சொல்லுறான் வீணாய்ப் போனவன். அதுவும் பூவரசம்குழை தவநாதனோடை என்னையும் ஏன் கோத்து விடுகிறான் என்று கதி கலங்கியபடியே கேக்கை விழுங்கினார். அவருக்கென்ன அவசரம், முதலிலே மற்றவையளை தானே கவனிக்க வேணும் என்று சேலையை இழுத்து போர்த்திக் கொண்டு வனிதா மாமி உள்ளே போனா.

பள்ளிக்கூடத்திற்கு போகும்போது கிருபா, ஆனந்தனிடம் "இண்டைக்கு ஒரு கூட்டம் இருக்கு, மற்றவங்களுக்கு சொல்லாதே நீ மட்டும் வா" என்றான். நல்ல அடர்த்தியான தாடி வைத்த ஒருவர் பேசினார். இனப்பிரச்சனைக்கு ஈழம் தீர்வாகலாம், ஆனால் அத்துடன் மக்களின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை, சமதர்ம சமுதாயமே நமது இறுதி இலட்சியம். சாதி ஒடுக்குமுறையை எல்லா தொழிலையும் சமமாக மதிக்கும் சமுதாயத்திலேயே இல்லாமல் செய்ய முடியும். மனிதர்கள் எல்லோரும் ஒன்று என்று மதிக்கும் சமுதாயத்திலே தான் பெண்கள் விடுதலை அடைய முடியும். இலங்கையில் வறுமையில் வாடும் மலையகத் தமிழரை விட்டு விட்டு ஈழம் அமைய முடியாது. வெளிச்சக்திகள் நமக்கு எதுவும் செய்யப்போவதில்லை. நமது பிரச்சனைகளிற்கு நாமே போராட வேண்டும். கருத்து மக்களை பற்றி கொண்டால் சக்தியாய் உருவெடுக்கும் என்று பேசினார். ஆனந்தனிற்கும், கிருபாற்விகும் தோழர் மணியையும், அவரது பேச்சையும் மிகவும் பிடித்துப் போனது. பள்ளிக்கூடம் முடிந்த நேரம் முழுக்க இயக்க வேலையாகவே திரிந்தார்கள். கூட்டங்கள் ஒழுங்கு படுத்துதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் என்று பரபரப்பாக திரிந்தார்கள். மற்ற இயக்கக்காரர்கள் இவர்களை பசைவாளிகள் என்று பட்டப்பெயர் வைத்து கூப்பிடும் அளவிற்கு எல்லா பிரச்சனைகளையும் சுவரொட்டிகளாக எழுதித் தள்ளினார்கள்.

இந்தியா பயிற்சி தரப் போகிறது. ஆட்களை சேருங்கோ என்றொரு தகவல் வந்தது. ஏகாதிபத்தியம், பிராந்திய வல்லரசு என்று கதைத்து விட்டு இப்பிடி மாறியிட்டிங்களே என்று மணியிடம் கேட்டார்கள். "நாங்கள் எங்கள் நிலையில் உறுதியாக இருக்கிறோம். இந்தியா தருகிற பயிற்சியை நாங்கள் பயன்படுத்துகிறோமே தவிர, இந்தியா எங்களை பயன்படுத்த முடியாது" என்றார். இவ்வளவு பெரிய வல்லரசை எங்களது சிறிய இயக்கத்தால் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி ஏககாலத்தில் இருவருக்கும் எழுந்தாலும் பேசாமல் இருந்தார்கள்.

மின்னல் மின்னுவது போல நிகழ்வுகள் விரைவாக நடந்தன. இயக்கத்தின் இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்தவர் மாற்றப்பட்டார். சிறையுடைப்பின் போது வெளி வந்தவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. வடக்கு - கிழக்கு மாகாணசபை இயக்கத்தால் நிர்வாகிக்கப்பட்டது. குண்டர்கள், சமுக விரோதிகள் பொறுப்பிற்கு வந்தார்கள். கொலை செய்வதற்கென்றே குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக கதைகள் வெளி வந்தன. எதிர்த்தவர்கள், கேள்வி கேட்டவர்கள் காணாமல் போனார்கள். கொலை செய்யப்பட்டார்கள். தமிழ் தேசிய இராணுவம் என்ற இந்திய அரசின் பொம்மை அமைப்பிற்கு இளைஞர்கள் பலவந்தமாக பிடிக்கப்பட்டார்கள்.

பொறுக்க முடியாமல் தலைவர்கள் தங்கியிருந்த அசோகா விடுதிக்கு போய் கேட்டுவிட்டு வருகிறேன் என்று போன கிருபா வீடு திரும்பவில்லை. "அவனை ஒரு முறையாவது கண்ணிலே காட்டச் சொல்லடா" என்று கதறிய கிருபாவின் அம்மாவின் கண்களிலே தளும்பிய கண்ணீர் நிற்கவேயில்லை. நம்பிக்கைகள், இலட்சியங்கள் எல்லாம் இழந்து புத்தி பேதலித்து போன ஆனந்தன் தமிழ் தேசிய இராணுவத்திற்கு பிடிபடும் வயதில் உள்ள பெடியங்களுக்கு கிட்டப் போய் "இராயர்களிற்கு உரியதை இராயர்களே எடுத்துக் கொள்கிறார்கள்" என்று பிதற்றிக் கொண்டு நின்றான்.