Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை

ஈழமாணவர் பொதுமன்றம் டேவிட்சனை பொலிஸ்காரங்கள் பிடிச்சுக் கொண்டு போய் விட்டாங்களாம் என்று வாகை மரத்தடியில் நின்று கொண்டு இருக்கும் போது சந்திரன் ஓடி வந்து சொன்னான். அன்றிரவு ஊர் மதில் எல்லாம் "டேவிட்சனை விடுதலை செய்" என்று எழுதினார்கள். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடம் போவதற்கு பஸ்சிற்கு காத்திருக்கையில் ஆறுமுகம் மாஸ்டர் வந்தார். "தம்பிமாரே டேவிட்சனை விடுதலை செய் எண்டு என்ரை மதிலிலே எழுதியிருக்கு. ஏன் நானோ அவரை பிடிச்சு வைச்சிருக்கிறேன், விடுதலை செய்யிறதுக்கு" என்று கேட்டார். நாங்கள் தான் எழுதியிருப்போம் எண்டு தனக்கு தெரியுமென்று சொல்லாமல் சொல்லுறார், வயது போனாலும் இவங்களின்ரை நக்கல் போகாது என்றான் தயா.

இளைஞர் மன்றத்தால் காரைநகர் சவுக்கு மரக்கடற்கரையில் நடக்கும் மூன்று நாள் முகாமிற்கு போனார்கள். இளம் பெண்களும், ஆண்களும், முகாமை நடத்துவதற்கு ஊர் பெரிசுகளும் என்று பாதி ஊரே அங்கே போய் கடற்கரைக்கு பக்கத்திலே உள்ள மண்டபத்தில் தங்கியிருக்கும். ஒரு ஆண்டு முழுவதும் காத்திருந்து வரும் அந்த மூன்று நாட்களிலும் ஒரு கனவுலகில் வாழ்வது போன்று, காற்றில் மிதப்பது போன்று களித்திருப்பார்கள். விளையாட்டு, கடற்கரையில் மணிக்கணக்கில் குளிப்பு, இரவு நேரத்தில் ஆட்டம், பாட்டு, நாடகம் என்று மூன்று நாளும் கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து போகும்.

இரவு நேரத்தில் சரிந்து போய்க்கிடக்கும் கரிய பனை மரங்களை இழுத்து வந்து கடற்கரை மணலில் எரிய விட்டு பாசறைத்தீ வளர்த்து கும்பலாக சுற்றியிருந்து பாடுவார்கள். சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே சந்தோசம் என்னில் பொங்குதே அல்லது சின்னத்தம்பி சின்னத்தம்பி நித்திரையோ என்று தமிழில் தொடங்கி புஞ்சி பண்டா, புஞ்சி பண்டா என்று தெரியாத சிங்களத்தில் எதோ பாடி, Are you sleeping, Are you sleeping brother John என்று இங்கிலீஷ் வரை பாடல்களை வழக்கமாக பாடுவார்கள். அந்தமுறை கொழும்பிலிருந்து ரவி ஒரு வயலினோடு வந்திருந்தான். அவன் குமாரிற்கு சொன்னான். நானும், நீயும் சேர்ந்து "எனக்கொரு காதலி இருக்கிறாள்" பாட்டை இரவு பாடுவோம், நான் வயலின் வாசிக்கிறேன். ரவியும், குமாரும் பாடினார்கள். "பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும் பஞ்சணை போடும் எனக்காக, "தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக" என்று குமார் பாடும் போது திலகா அவனைப் பார்த்து சிரிப்பது செந்நிறமாய் பிரகாசித்த பாசறைத்தீயிலே தனியாக தெரிந்தது. முழுநிலவு பொங்கி வழிந்தது. கத்தி வரும் கடல் அலைகள் சவுக்கு மரத்தின் மெல்லிய இலைகளை மெதுவாக அசைத்து வாரி வாரி அணைத்தன. ஒற்றை வயலினின் ஓசை காற்று வாகனம் ஏறி ககனப்பெருவெளி எங்கும் கானம் இசைத்தது.

கடற்கரையில் குளிக்கும் போது கைகளால் தண்ணியை அடித்து விளையாடுவார்கள். இவனுகள் விசிறி அடிக்கும் உப்புத்தண்ணீர் பெட்டைகளின் முகத்தில் பட்டால் உலகமே அழிந்தது போல சத்தம் போடுவாளுகள். அன்றைக்கு குமார் விசிறியடித்த கடல்நீர் திலகாவின் கண்களில் பட்டபோது கோபம் வரவில்லை. தாமரை மலர்ந்தது போல முகம் மலர்ந்தது. முகில் மறைத்த முழுநிலவு மெதுவாக எட்டிப் பார்ப்பது போல புன்சிரிப்பு இதழில் விரிந்தது. பச்சை இலைகளும், சிவப்பு பூக்களும் போட்ட சட்டை காற்றிற்கு படபடக்க அவள் சினேகிதிகளோடை மெதுமெதுவாக காலடி எடுத்து கரைக்கு போனாள். தண்ணீர் நனைத்த தலைமுடியை ஒதுக்கி திரும்பி கடலை பார்த்தாள். பாசறைத்தீயிலே சுடர் விட்டு எரிந்த அந்த சிரிப்பு மறுபடியும் மலர்ந்திருந்தது.

ஈழமாணவர் பொதுமன்றத்தில் இருந்து இராணுவப்பயிற்சிக்காக இந்தியா போக வேண்டும் என்று சொல்லப்பட்டது. இருட்டு கசிய தொடங்கின ஒரு மழைக்கால பின்நேரத்தில் "போய் வருகிறேன்" என்றபோது கையைப்பிடித்தபடி அழுத திலகாவின் கண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. கிழுவை மரத்தில் இருந்து மழைத்துளி சொட்டுச்சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கும் வரை அப்படியே நின்று கொண்டிருந்தார்கள்.

திரும்பி வந்தபோது ஊரிலே பாதிப்பேர் வெளிநாடு போய்விட்டார்கள். திலகாவின் குடும்பமும் போய் விட்டது. விடுதலை முன்னணி கொஞ்சம் கொஞ்சமாக வில்லன்களின் முன்னணியாக மாறியது. இந்திய ராணுவத்துடன் சேர்ந்து பிள்ளை பிடிக்க தொடங்கிய போது பொறுக்க முடியாமல் விலகி விட்டான். எல்லா இயக்கங்களின் அராஜகப்போக்குகளையும் எதிர்த்து விலகியவர்கள் சேர்ந்து வேலை செய்ய முயற்சி செய்தார்கள். விடுதலையின் மொத்த குத்தகையும் தமக்குதாம் மற்ற ஒருவரும் ஆணியே புடுங்க கூடாது என்று மேதகுவின் உத்தரவு வந்தது. கம்பங்களிலே சரிந்தனர் சிலர், கழுத்திலே ரயர் போட்டு எரிந்தனர் சிலர், கடலிலே மூழ்கினர் சிலர், மண் மூடி புதைந்தனர் சிலர், காடுகளின் இருட்டிலே காணாமல் போயினர் சிலர். காரணம் ஒன்றே ஒன்று தான் விடுதலையை, மக்களை, மண்ணை அவர்கள் நேசித்தார்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்றது மதம். விடுதலையை நேசித்தால் கொலை என்றது இயக்கம்.

குமார் ஒடுங்கிப் போனான். யாழ்ப்பாணத்து கடைகளிற்கு வேலைக்கு போனான். வேலை செய்தால் காணாது முதலாளியின் காலையும் கழுவ வேண்டும் என்றார்கள். எங்கேயும் தொடர முடியவில்லை. கணேசு மாமா சொன்னார் "கோயிலிற்கு பண்டாரம் இல்லை. நீ அந்த வேலையை செய். எங்கடை ஊர், எங்கடை கோயில். ஒருத்தரும் ஒண்டும் சொல்ல மாட்டினம். உனக்கு இந்த வேலைதான் சரி". "நானா கோயிலிலேயா" என்று தயங்கினான். "உன்னை கோயிலிலே கும்பிடச் சொல்லவில்லை. மாலை கட்டிறது, மடைப்பள்ளியிலே உதவி செய்யிறது எண்டு பண்டாரத்தின்ரை வேலையை செய்ய சொல்லுறேன். இதுக்கு முதல் கூட்டுறவு பண்ணையிலேயோ வேலை செய்தனி, தனிப்பட்ட முதலாளியிட்டை தானே வேலை செய்தாய்." என்றார் கணேசு மாமா. அவனுடைய வயதுக்காரர்கள் எல்லாரும் கலியாணம் கட்டினார்கள். திலகாவிற்கும் கலியாணம் முடிந்து விட்டது என்று சொன்னார்கள். அவனிற்கு கலியாண நினைப்பே வரவில்லை. தாய் கேட்கும் போது திலகாவின் நினைப்பும், இறந்து போன தோழர்களின் நினைப்பும் வர "ஒருமண்ணும் வேண்டாம்" என்று கத்துவான். மாலை கட்டியபடி, மடைப்பள்ளியில் சமையலிற்கு உதவி செய்தபடி, கோயில் தோட்டத்தில் மண்ணை கிளறியபடி காலங்கள் கடந்தன. வெளிநாடுகள் போனவர்கள் விடுமுறைகளிற்கு ஊரிற்கு வந்தார்கள். அமைப்பிலே இருந்த ராகுலன் இவனை பார்க்க வந்து விட்டு "கோயிலை இடிக்க வேணும் எண்டு பிரச்சாரம் செய்தோம், நீ கோயிலிலே வேலை செய்யிறாய்" என்று கேட்டான். பண்டத்தரிப்பிலே நடந்த கூட்டமொன்றில் "எல்லோரும் வெளிநாடு போனால் மக்கள் போராட்டத்தை யார் முன்னெடுப்பது" என்று ராகுலன் பேசியது நினைவிற்கு வர ஒன்றும் பேசாமல் சிரித்தான்.

வாசிகசாலையில் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த போது ராசன் வந்து காதிலே கிசுகிசுத்தான் "உன்ரை ஆள் திலகா வரப் போறாவாம்". சோளகக்காற்றின் வெப்பத்திலும் உடலெங்கும் குளிர்ந்தது. மானம்பூ திருவிழாவிற்காக குதிரை வாகனத்தை நாலுபேர் சேர்ந்து வாகனசாலையில் இருந்து தூக்கிக்கொண்டு வந்த போது திலகா, புருசனோடை கோயிலுக்குள்ளே வந்தாள். குதிரையோடு சேர்ந்து மனமும் ஆடியது. எதிரே வந்த போது என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் மெதுவாக சிரித்தான். அகலவிழி விரிந்தது தெரிந்தது. ஒரு கணம் தான் கடந்து போய் விட்டாள். ஒன்றுமே சொல்லாமல், தெரியாதவனை கடந்து செல்வது போல அவள் கடந்து சென்ற போது உயிர்மூச்சு நின்று விட்டது போலிருந்தது. அத்தனை வருடகாலமாக மனதில் பதிந்து போயிருந்த அந்த புன்னகை திடீரென்று வெளிறிப்போனது.

பொறுமையாக ஒவ்வொரு பூவாக எடுத்து மாலை கட்டும் போது மனம் அதிலே ஒன்றிப்போய் விடும் என்பதனால் மாலை கட்ட தொடங்கினான். திலகாவின் புருசன் மறுபடி கோயிலிற்குள்ளே வந்தார். எதையோ தேடினார். "அண்ணன், என்ன தேடுறீங்கள்" என்று மணி கேட்டான். "திலகா போனை விட்டு விட்டு வந்திட்டா" என்றபடி தனது தொலைபேசியால் அழைப்பு விடுத்தார். வசந்த மண்டபத்தடியில் இருந்து தொலைபேசி ஒன்று உயிர் பெற்று "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" என்று பாடியது.

வெளியே மழை சுழன்று பெய்தது. கோயில் வாசல் மகிழமரத்தில் இருந்து மகிழம்பூக்களை காற்று உள்ளே வீசியடித்தது. "நவராத்திரி கும்பச்சரிவோடை சோளகக்காத்து மாறி வாடைக்காத்து வரும், மழை பெய்யும் எண்டு சொன்னேன். என்ன மாதிரி மழை பெய்யுது பாத்தியா!. சில விசயங்கள் எப்பவுமே மாறாது"  என்றார் கணேசு மாமா. "நவராத்திரி கும்பச்சரிவுக்காக இல்லை, அய்ப்பசிமாசம் வாடைக்காத்துக்காக மழை பெய்யுது" என்று சொல்ல நினைத்தவன், வழக்கம் போல் எதுவும் பேசாமல் மழையை பார்த்துக் கொண்டு நின்றான்.