Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் தேனும், பாலும் பாய்ந்து ஓடும்!!!

இனவாதத்தை தூண்டும் வெறிப்பேச்சுக்களின் வலதுசாரிய அரசியல் எம்மக்களைப் பலி கொண்டது. எம்மக்களின் வாழ்வை வறுமையில் தள்ளியது. ஆம் இனவாத அரசியல் முதலாளித்துவத்தின் கோரமுகம். சீமானினதும், அவரது நாம் தமிழர் இயக்கத்தினதும் அரசியல் அழிவு அரசியல். பாசிசத்தின் கூறுகளை, சர்வாதிகாரத்தின் கூறுகளை கொண்டிருக்கும் ஆபத்தான அரசியல். தமிழ்நாடு, ஈழம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் எதிரிகளுடன் கை கோர்த்துக் கொண்டிருக்கும் சீமான் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து, பின்பு ஈழம் அமைக்க அடுக்குப் பண்ண போகிறாராம். அவரின் அடித்தொண்டையில் இருந்து வரும் அலறல்களை அம்பலப்படுத்தி வெளிவந்த கட்டுரையை தமிழ்நாட்டு தேர்தலையொட்டி மறுபிரசுரம் செய்கிறோம்.

தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்று சாமுவேல் ஜோன்சன் ஆயிரத்து எழுநூறுகளில் சொன்னார். சீமான் போன்ற தேசவெறி, இனவெறி யோக்கியர்கள் அதை இன்று வரை நிரூபித்து காட்டுகிறார்கள்.

கிட்லர், முசோலினி, சேர்ச்சில், மார்க்கிரட் தட்ச்சர், ஜோர்ஜ் புஷ், ரொனி பிளேயர், மகிந்த ராஜபக்சா, நரேந்திர மோடி என்று அத்தனை உலகமகா அயோக்கியர்களும் தேசபக்தி வேசம் கட்டிய அயோக்கியர்கள் தான். தமது சொந்தநாட்டு மக்களையே கொல்வதற்கும், நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பதற்கும் கொஞ்சம் கூட தயங்காதவர்கள் இவர்கள். இந்த அயோக்கியர்கள் மற்ற நாடுகளின் ஆட்சியாளர்களுடனும், முதலாளிகளுடனும் கூடிக்குலாவுவார்கள். ஆனால் நாடு, இனம், மொழி, மதம், சாதி என்று வீரவசனம் பேசி ஏழைமக்களை பிரித்து ஒருவரோடு ஒருவரை மோத வைப்பார்கள்.

சீமான் போன்றவர்கள் பேசும் தமிழின வெறி அரசியல் எவ்வளவு பொய்யானது, ஆபத்தானது என்று எடுத்துக் காட்டுவதற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை. இலங்கைத் தமிழ்மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை வாழும் சாட்சியமாக இருக்கிறது. கரிய இரவுகள் நீண்டு கொண்டே போகின்றன. பாதி இரவில் எழுந்து மண்ணில் புதைந்து போன மனிதர்களை தேடுகிறார்கள். வானம் கிழிந்து பெய்த குண்டுமழையின் எதிரொலிகள் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சிறுபான்மை இனம் தன்னுடைய பலம் பொருந்திய எதிரிக்கு எதிராக போராடும் போது தன்னைப் போலவே ஒடுக்கப்படுகின்ற எல்லா மக்களையும் இணைத்து கொண்டு போராடாமல் விட்டால் தனிமைப்பட்டு தோல்வி அடைவார்கள் என்பதற்கு சாட்சியமாக இலங்கைத் தமிழ்மக்களின் கண்ணீரும், செந்நீரும் கரையாமல் இருக்கின்றன. நான் தமிழன், நீ சிங்களவன், முஸ்லீம் என்று பிரிந்தது சிங்கள பெருந்தேசியவாதிகளின் கொலைக்களங்களிற்கு தமிழ்மக்களை இழுத்துச் சென்று பலியிட வைத்தது என்பதற்கு வன்னி மண்ணில் மடிந்த மக்களின் புதைகுழிகள் சாட்சியமாக இருக்கின்றன.

வாழ்க!!, ஒழிக!! தமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் பாலும், தேனும் பாய்ந்து ஓடும் போன்ற வெற்றுவேட்டுக்கள் தான் இவர்களது மூலதனம். இதை வைத்துக் கொண்டு அப்பாவி இளைஞர்களினதும், மாணவர்களினதும் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். இவர்களது வெறிப்பேச்சால் தூண்டப்பட்டவர்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்த சிங்களக் குடும்பத்தினரை தாக்கினார்கள். தமிழக கோயில்களை பார்க்க வந்த புத்தபிக்குவை தாக்கினார்கள். தமிழ்நாட்டு கடல் தொழிலாளரை இலங்கை சிங்கள பெருந்தேசிய அரசின் கடற்படை தாக்குவது குறித்து அண்ணன் விட்ட அறிவுபூர்வமான அறிக்கை கூறுகிறது "இலங்கை கடல்படை தமிழக கடல்தொழிலாளர்களை தாக்கினால் நாங்கள் (நாம் தமிழர் கட்சி) தமிழ்நாட்டில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம்".

"ஆகா" என்ன ஒரு அறிவு, என்ன ஒரு வீரம். தனது குடிமக்களான தமிழ்நாட்டு கடல்தொழிலாளரை பாதுகாக்க தவறிய இந்திய அரசை அவர் தாக்க மாட்டார். "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று அவர் ஒரு பஞ்ச் டயலாக் ஊழல்நாயகி ஜெயலலிதாவை வைத்து எழுதியிருந்தார். அப்படி ஈழத்தையே மலர வைக்கக் கூடிய வல்லமை கொண்ட அம்மா தனது மாநிலத்து ஏழைத்தொழிலாளிகள் கொல்லப்படுவது குறித்து எதுவுமே செய்யாமல் இருக்கிறார் என்பதை எதிர்த்து செந்தமிழன் போராட மாட்டார். அம்மாவை எதிர்த்து போராடுவது என்ன ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார். ஆனால் படிக்க வந்த சிங்கள மாணவர்களை தாக்கி இலங்கை அரசை பயப்படுத்தி கடல்தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து விடுவார் "வீழ்ந்து விடாத வீரன்" சீமான்.

படிக்க வந்த சிங்கள மாணவர்கள் எதிரிகள். ஆனால் "புலிப்பார்வை" படம் எடுத்த பச்சைமுத்து பங்காளி. யார் இந்த பச்சைமுத்து?. பல லட்சம் கட்டணம் வசூலித்து கல்விக்கொள்ளை அடிக்கும் S.R.M பல்கலைக்கழக உரிமையாளர். "புதிய தலைமுறை" தொலைக்காட்சி உரிமையாளர். இந்திய ஜனநாயக கட்சி என்ற கட்சியின் தலைவர். இந்தக் கட்சி இந்துவெறி பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலே கல்விக்கொள்ளை அடிக்கும் இந்த S.R.M நிறுவனம், இப்போது இலங்கையில் S.R.M LANKA என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. S.R.M பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ இலங்கை சென்று மகிந்தாவின் மந்திரி ரிசான் பதியுதீன் தலைமையில் தங்களது கிளை நிறுவனத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

இலங்கையிலே இலவசக்கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை தனியார்மயமாக்கி கொள்ளையடிக்க இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா போடும் திட்டங்களின் பங்குதாரர் பச்சைமுத்துவுடன் சேர்ந்து ஒரேமேடையில் ஏற மண்டியிடாத மானக்காரன் சீமானிற்கு எப்படி மனச்சாட்சி இடம் கொடுத்தது?. பாலச்சந்திரனிற்கு இராணுவச்சீருடை அணிவித்து பரபரப்பூட்டி படம் எடுத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களிற்கு பரிந்து பேச எப்படி முடிகிறது?. மாணவர்களை "நாம்தமிழர்" அமைப்பினர் தாக்கவில்லை என்று அறிக்கை விடுகிறார்கள். அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். தமிழ்மக்களிற்காகவே அவதாரம் எடுத்தவர், தமிழ்மாணவர்கள் தன் கண்முன்னாலேயே பச்சைமுத்துவின் காடையர்களினால் தாக்கப்படும் போது கைகட்டி மெளனமாக இருந்தது ஏதற்காக?

பன்னிரண்டு வயது பச்சைக்குழந்தை பாலச்சந்திரனின் கொலையை சுப்பிரமணியசுவாமி என்னும் பார்ப்பனப்பன்றி தனது ஊத்தைவாயால், பார்ப்பனத்திமிரில் இந்திய மேலாதிக்க வெறியில், ஏகாதிபத்திய விசுவாசத்தில், சிங்கள பேரினவாத கொலைகாரர்களை காப்பாற்றுவதற்காக நியாயப்படுத்தியது. பாலச்சந்திரனை இந்த பார்ப்பன பரதேசி தீவிரவாதி என்றது. பக்கத்தில் மரணம் காத்திருக்க எந்த ஒரு குழந்தையையும் போல அந்த நேரத்திலும் கையில் இருந்த தின்பண்டத்தை வாயில் வைத்து மெல்லும் அந்த குழந்தையை, குண்டுவிழிகளால் மிரண்டு போய் விழிக்கும் சின்னவனை தீவிரவாதி என்று இந்த இரத்தம் குடிக்கும் காட்டேரி சொன்னது. சுப்பிரமணிய சுவாமிக்கும் பாலச்சந்திரனிற்கு இராணுவச்சீருடை அணிவித்து படம் எடுக்கும் பச்சைமுத்துவிற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு காரணத்தையாவது இவரால் சொல்ல முடியுமா?.

இனவாதிகள் என்றைக்கும் அதிகாரத்துடனும், முதலாளிகளுடனும் சேர்ந்தே நிற்பார்கள். ஜெயலலிதா, பச்சைமுத்து, அரசியல்மாமா நடராசன், கனிமக் கொள்ளையன் வைகுந்தராசன், லைக்கா, லிபரா போன்ற கொள்ளைத்தமிழர்கள் தான் இவர்களைப் போன்ற இனவாதிகளின் நண்பர்களாக இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் தமது இலாபத்திற்காக நரேந்திரமோடி, ராஜபக்சா என்று கூட்டுச் சேரும் போது இவர்களும் அதை ஆதரித்து தானே தீர வேண்டும்.

அதோ வருகுது தமிழீழம், அடுத்த பொங்கலிற்கு தமிழீழம் நாம் பெற்றுத் தருவோம் என்று மக்களை போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள். மக்களை நம்பாமல் ஆயுதத்தை நம்பினார்கள். வல்லரசுகள் உதவி செய்யும் என்று சொன்னார்கள். இடிபாடுகளிற்குள் முடங்கிப் போனது எம்வாழ்க்கை. இனவாதத்தால் தோல்வி கண்ட எமது போராட்டத்திலிருந்து எதுவித படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ளாமல் இவர் போன்றவர்கள் அடுத்த அத்தியாயத்தை தொடருகிறார்கள். அடுத்த தமிழ்நாட்டு சட்டசபைத்தேர்தலின் போது ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடுமாம். அந்த தமிழன் சீமான் தான் என்று தனியே எடுத்து சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்களால் தெருவிலேயே பிறந்து வாழும் தமிழர்களிற்கே எதுவிதமான தீர்வையும் கொடுக்க முடியாது என்பது தான் கண் முன்னே உள்ள உண்மை. இந்திய வல்லரசை எதிர்த்து போராட வேண்டுமாயின் ஏழை உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றினாலேயே அது சாத்தியப்படும். பச்சைமுத்துக்களின் பங்காளிகளால் அது ஒரு நாளும் முடியாது.