Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

கியூப படைவீரர்களைக் கொண்டு சே குவாராவைக் கொலை செய்த தமிழ் தேசிய வியாபாரிகள்

சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு [லங்காசிறீ , ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 08:34.26 ஆM GMT ]

உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொலிவியாவில் அமெரிக்க உளவுத்துறை கொலைகாரர்களாலும், பொலிவிய இராணுவத்தினராலும் கொல்லப்பட்ட தோழன் சே குவாரா கியூப இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டாராம். தமிழ் தேசிய வியாபார இணையத்தளம் லங்காசிறீ செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த தமிழ் தேசிய வியாபார இணையங்கள், பத்திரிகைகள் போட்டோ கொப்பி இயந்திரம் இல்லாவிட்டால் இயங்க முடியாதவை. எங்காவது வரும் செய்திகளையும், கட்டுரைகளையும் கொப்பி பண்ணி போடுவது தான் இவர்களது ஊடகத்துறை அனுபவம்.

தமிழ் மக்களினது போராட்டங்களையும், இழப்புகளையும் வைத்து பணம் சேர்த்தார்கள். அய்யரும் ஆட்டுவதற்கு ஒரு மணியும் இருந்தால் போதும், கோயிலை தொடங்கி மக்களின் மூடநம்பிக்கையை வைத்து பணம் சேர்ப்பார்கள். இவர்கள் ஊடகத்துறையை வைத்து பணமும், பிரச்சாரமும் பண்ணலாம் என்று வெளிக்கிட்ட போது தான் ஒரு பிரச்சனை வந்தது. "காதலிக்க நேரமில்லை" படத்தில் நாகேஸ் படமெடுக்க வெளிக்கிட்டு மற்ற எல்லாத்தையும் நானே சமாளிச்சு விடுவேன், ஆனா இந்தக் கதை தான் கிடைக்கவில்லை என்று புலம்பியது போல இவர்களும் தேசிய விடுதலை வியாபாரம், கோயில் வியாபாரம் எல்லாத்தையும் சமாளிச்சாலும் கதை, கட்டுரை, செய்தி எழுத ஆளில்லாமல் போட்டோக்கொப்பி இயந்திரத்தை சரணடைந்தார்கள்.

மகிந்த ராஜபக்ச பற்றிய செய்திகளின் போது இலங்கை ஊடகங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்று போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் நமது போட்டோ கொப்பி ஊடகங்களிற்கு அப்படி ஒரு கட்டாயமும் இல்லாவிட்டாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்றே போடுவார்கள். ஏனென்றால் கொப்பி பண்ணி செய்தியை போட்டு விட்டால் சரி, கருத்தைப் பற்றி என்ன கவலை. தமிழ்த்தேசிய போராளிகள் என்று பீற்றிக் கொண்டு தமிழ் மக்களின் இரத்தம் குடிப்பவனை ஜனாதிபதி என்று கூப்பிடும் ஒரே போராளிகள் உலகத்தில் இவர்களாகத் தான் இருக்கும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகிறோம் என்பவர்களின் ஊடகங்கள் குமுதம், ஆனந்த விகடனை விடக் கேவலமான கருத்துக்களுடன் விளம்பரங்களுடன் வெளிவருகின்றன. தமிழ் மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைத்திருக்கும் கோயில்களிற்கான விளம்பரங்கள், சமுதாயத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட வேண்டிய சாமியார்களதும், சாத்திரக்காரர்களினதும் விபரங்கள்m நடிக, நடிகையரின் தளங்கள் என்று ஒரு மோசமான வியாபார பத்திரிகைகளில் இருக்கும் அத்தனை குப்பைகளையும் வைத்துக் கொண்டு இவர்கள் தேசபக்தி வியாபாரம் செய்கிறார்கள்.

பிரித்தானிய வல்லரசின் ஊது குழலான B.B.C செய்திச்சேவையின் இணையத்தில் 08.10.2014 வெளியான செய்தி சே குவராவின் இறுதி நேரங்களை பற்றிச் சொல்கிறது. கியூபாவில் பிறந்து கியூபப்புரட்சிக்குப் பின்பு அமெரிக்காவின் மயாமிக்கு தப்பியோடி அமெரிக்க உளவுத்துறையுடன் சேர்ந்து கம்யுனிஸ்ட்டுக்களிற்கு எதிராக சதிகள் செய்த பீலிக்ஸ் ரொட்ரிகஸ் என்பவனது நேர்காணலை அதில் பிரசுரித்துள்ளார்கள். நிக்கராகுவாவின் சந்தினிஸ்டா தேசிய விடுதலை முன்ணணியின் (F.S.L.N) பொதுவுடமை அரசை விழுத்துவதற்காக கொந்த்ராஸ் (Contras) வலதுசாரி கொள்ளையருக்கு பயிற்சி அளித்தது, ஆர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கியது என்று தென்அமெரிக்கா முழுவதும் பொதுவுடமை புரட்சியாளர்களிற்கு எதிராக இவன் சதிகள் செய்து வந்தான்.

பொலிவிய இராணுவமும், அமெரிக்க உளவுத்துறையும் சேர்ந்து அந்த மகத்தான போராளியைக் கொன்றார்கள். தனது ஆணையின்படி பொலிவிய இராணுவத்தை சேர்ந்த ஒருவனால் சே கொல்லப்பட்டதாக பீலிக்ஸ் ரொட்ரிகஸ் கூறுகிறான். பிடல் காஸ்ரோ, கியுப மக்களின் தோழன் சே குவாரா கொல்லப்பட்டதை மறுக்கலாம் என்று நினைத்து கை அடையாளத்தை வைத்து உறுதிப்படுத்துவதற்காக அந்த போராளியின் கையை வெட்டி பதப்படுத்தினார்கள் அந்தக் கொலைகாரர்கள்.

உண்மை இப்படி இருக்க போட்டோக்கொப்பி இணையம் கியூப வீரர்கள் சே குவராவைக் கொன்றதாக ஏன் செய்தி போட்டது. கியூபாவும், பொலிவியாவும் இரண்டு வேறுவேறான நாடுகள் என்று தெரியாமல் இருந்திருக்குமோ?. பீலிக்ஸ் ரொட்ரிகஸ் கியூபாவில் பிறந்தவன் என்பதால் அவன் கியூப வீரன் என்று நினைத்திருக்கலாம். உலக மகா கொலைகாரர்களான அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தமிழ் மக்களிற்கு தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று போராட்ட அமைப்பின் ஊடகம் ஒன்று சொல்லுகிறதென்றால் அது உலக வரலாற்றிலேயே இந்த தேசிய வியாபாரிகளாகத் தான் இருக்க முடியும். ஆகவே தங்களது அமெரிக்க விசுவாசத்தைக் காட்ட C.I.A கொல்லவில்லை கியூபா தான் கொன்றது என்று சொல்லியிருக்கலாம்.

அல்லது ஈழவிடுதலை வேண்டி போராட வந்தவர்களை தமிழ் இயக்கங்கள் கொன்று குவித்தது போல கியுப விடுதலைக்காக போராடிய சே குவாராவை கியூப இராணுவம் தான் கொன்றிருக்கும் என்று தங்களினுடைய தமிழீழ விடுதலை அனுபவஞானத்தை வைத்து எழுதியிருக்கலாம். ஏனேனில் மரணித்தவர்களை மிதித்துக் கொண்டு வெளிநாடு போவது பிரச்சனையில்லை. வெளிநாடு போன பின்பு திடீரென்று ஞானோதயம் வந்து தேசபக்தர் ஆகலாம். ஆனால் இயக்கங்களில் இருந்தவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக விலகினால் மரண தண்டனை. ஈழவிடுதலையை மொத்த குத்தகை எடுத்தவர்களது இயக்கத்தில் சேர்ந்து மட்டுமே தமிழீழம் பற்றிக் கதைக்க முடியும், குத்தகைகாரர்களோடு சேராமல் ஈழவிடுதலைக்கு வாழ்வை அர்ப்பணித்தவர்களிற்கும் மரண தண்டனை என்று கொலைவெறி பிடித்து அலைந்தவர்களை நியாயப்படுத்துபவர்கள் இப்படித் தான் எழுதுவார்கள்.