Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தாவோ, மைத்திரியோ மக்களின் எதிரி இல்லை, முன்னிலை சோசலிசக் கட்சி தான் முதல் எதிரி!!!

ரஸ்சிய மொழியில் அலக்சாண்டர் குப்ரிக் எழுதிய கதை ஒன்றினை புதுமைப்பித்தன் பலிபீடம் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். பாலியல் தொழிலாளர்களின் விடுதியே பலிபீடம் என்று அதில் குறிப்பிடப்படுகின்றது.

அந்த விடுதியில் உள்ள பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் பெண் முதலாளியும் அவளிடம் லஞ்சம் வாங்க வரும் பொலிஸ்காரனும் "காலம் கெட்டுப் போச்சு, இந்த பெண்களுக்கு ஒழுக்கம், நேர்மை ஒன்றும் கிடையாது. நாங்களெல்லாம் எவ்வளவு கடவுள் பக்தியுடன் இருக்கிறோம். குடும்பப் பெருமையைக் காப்பாத்த எவ்வளவு கஸ்டப்படுகிறோம்" என்று பினாத்திக் கொள்வதை புதுமைப்பித்தன் அவருக்கே உரிய நக்கல், நளினத்துடன் மொழிபெயர்த்திருப்பார். முன்னிலை சோசலிசக் கட்சியைப் பற்றி நமது அரசியல் ஆய்வாளர்கள், தத்துவ மேதைகள், புரட்சிப் புயலுகள் புலம்புவதைப் பார்க்கும் போது அந்த மாமி வேலை பார்க்கும் பெண் முதலாளியும், பொலிஸ்காரனும் தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள்.

இவர்களிற்கு தமிழ்மக்களைக் கொன்று குவிக்கும், இலங்கை மக்களைக் கொள்ளை அடிக்கும் மகிந்தா பெரிய எதிரி இல்லை. இது நாள் வரை மகிந்தாவின் கொலைகளிலும், கொள்ளைகளிலும் பங்காளியாக இருந்த மைத்திரி ஒன்றும் பெரிய எதிரி இல்லை. தாங்கள் பதவியில் இருக்கும் போது நாட்டு மக்களை எவ்வளவிற்கு கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவிற்கு கொடுமைப்படுத்திய சந்திரிகாவோ, ரணில் விக்கிரமசிங்காவோ அவ்வளவு பெரிய எதிரிகள் கிடையாது. தமிழ்மக்களை குருதி சிந்த வைத்த சிங்களப் பெருந்தேசிய இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், முள்ளிவாய்க்காலில் இரத்த வெள்ளம் ஓடிய நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரி சிறிசேனாவை இந்த தேர்தலிலும் ஆதரிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு தமிழ்மக்களின் பிணங்களை மிதித்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் எதிரிகள் இல்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இன்றை வரைக்கும் முகங்கள் தான் மாறினவே தவிர மக்களின் வாழ்க்கை என்றைக்கும் பசியும், பட்டினியுமாகத்தான் இருக்கின்றது. மக்கள் தலைமையேற்கும் ஒரு சமத்துவ அரசினாலேயே இந்த அவலநிலையை மாற்ற முடியும் என்று சொல்லும் முன்னிலை சோசலிசக் கட்சி தான் முதல் எதிரியாக இருக்கிறது. மகிந்தாவின் குடும்ப ஆட்சியை, நாட்டை இராணுவமயமாக்கும் காட்டாட்சியை, இலங்கையை முதலாளிகளிற்கு விற்கும் கைக்கூலியை விரட்ட வேண்டும் என்பதில் மறுபேச்சுக் கிடையாது. ஆனால் அதற்கு பதிலாக மகிந்தாவின் மறுபதிப்பான மைத்திரியை ஆதரிக்கக் கூடாது என்பதற்காக இடதுசாரி கட்சிகளின் முன்னணி ஒன்றை கட்டி மக்களிடம் இருவரையும் அம்பலப்படுத்துவோம் என்ற இடதுசாரிய நிலைப்பாடு அந்த ரஸ்சிய மாமியைப் போல் இந்த அரசியல் ஆய்வு மாமாக்களை பினாத்த வைத்திருக்கிறது.

மகிந்தாவும் வேண்டாம், மைத்திரியும் வேண்டாம் என்று இடதுசாரிய முன்னணி சொன்னால் மகிந்தாவை வெல்ல வைக்கத் தான் மைத்திரியை வேண்டாம் என்று சொல்கிறார்கள். இரண்டு வாழைப்பழம் கிடையாது. அது தான் இது என்று காமடி மாமாக்கள் கதை கட்டுகிறார்கள். குமார் குணரட்னம் இலங்கை போனதும் இதுகளின் கொசுத்தொல்லை தாங்க முடியாத அளவிற்கு போய் விட்டது. இலக்கிய மேதை ஒருவர் "அ.மார்க்ஸ், சண்முகதாசன் நினைவுக் கூட்டத்தில் உரையாற்றுவது தடுக்கப்பட்டதும், கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதும் நாம் அறிந்ததே. எத்தனையோ அரசியல் குத்துக்கரணங்களையும், துரோகங்களையும் சந்தித்த நமக்கு குமாரின் இலங்கைப் பயணம் ஆச்சரிய மூட்டக்கூடியதல்ல. எனினும் முன்னிலை சோசலிசக் கட்சியையும் அதன் வாலான சமவுரிமை இயக்கத்தையும் மாற்றுச் சக்திகளாக - புரட்சிகர சக்திகளாக அடையாளம் காண கஸ்டப்பட்டு முயற்சிப்பவர்கள் இனியாவது விழித்துக்கொள்ளட்டும்" என்று காண்டாமணி ஒன்றை அடித்து எச்சரிக்கை செய்கிறார். அப்படி என்றால் இதே இலக்கிய மேதையும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய இலக்கியச் சந்திப்பு மகிந்தாவின் ஆசியுடன் தான் நடந்ததா, அதை எப்படி நடத்த விட்டார்கள். அண்ணே உங்களிற்கு வந்தால் இரத்தம், எங்களிற்கு வந்தால் தக்காளி சட்னியா?.

இரண்டு புத்தகத்தை வாசித்து விட்டு அதிலே இருப்பதை கொப்பி பண்ணி கட்டுரைகளை எழுதினால் தாங்கள் தத்துவமேதைகள், புரட்சி புயலுகள் என்று தங்களைத் தாங்களே கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். ஒரு சொறிநாய் கூட இவர்களிற்கு பின்னாலே போகாது. ஆனால் தமிழ்மக்களை, இலங்கை மக்களை ஏன் உலகமக்களைக் கூட ஒன்று சேர்த்து போராட்டம் நடத்துவோம் என்று ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார்கள். தமிழ்க் கூட்டமைப்பு இனப்படுகொலையாளிகளில் ஒருவரான மைத்திரியை ஆதரிக்கும் போது யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் எல்லாம்

•சர்வாதிகாரி மஹிந்தவை தோற்கடிப்போம் - இன்னொரு சர்வாதிகாரிக்கு இடமளியோம்!

•பொய்யான அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம்! மக்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையைக் கூட்டு

• நவதாராளமய முதலாளித்துவத்தை தோற்கடிப்போம்!

• தேசிய ஒடுக்குமுறைக்கும் இனவாதங்களுக்கும் எதிராக போராடுவோம்!

என்ற கோசங்களுடன் தமிழ் மக்களை சந்தித்த முன்னிலை சோசலிசக் கட்சியைப் பார்த்து இதுகள் நடைமுறை வேலையைப் பற்றியும், சோசலிசப் போராட்டம் பற்றியும் புரட்சிப் பாடம் நடத்துகிறார்கள்.

ஒரு படத்தில் துபாயில் இருந்து ஊருக்கு திரும்பி வந்த வடிவேலு மச்சான்காரன் ஒருவரை பிடித்து வைத்து "துபாயில் ரோட்டிலேயே சாப்பாடு போட்டு சாப்பிடலாம், இதெல்லாம் ஒரு ஊராடா இப்பிடிக் காஞ்சு போயிருக்கு, மனிசன் இங்கே வாழ்வானா என்று சலம்புவார். மச்சான்காரன் "அப்ப என்ன மசிருக்கு இங்கே வந்தீர், துபாயிலே இருந்திருக்கலாமே என்று கோபப்படுவான். அதே மாதிரி "என்ன மசிருக்கு எங்களை போராட்டம் நடத்த சொல்லுறியள், நீங்களே நடத்திக் காட்டுங்கோவன்" என்று அசிங்கமாக நாங்கள் கேட்கப் போவதில்லை. அண்ணன் ஆரியகுளம் பொன்ராசா "முழுக்க உங்களிற்கு தான் அப்பிடியே எடுங்க" என்று சொன்னது போல, நாங்களும் "புரட்சி முழுக்க உங்களிற்கு தான் அப்பிடியே எடுங்க என்று சொல்கிறோம். ஆனால் நடைமுறை என்றதும் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள். உங்களிற்கும் எங்களிற்கும் சந்திர மண்டலத்து தேசிய இனப்பிரச்சனையில் வேறுபாடு இருப்பதால் என்று சேரமுடியாது என்று விஞ்ஞான விளக்கம் சொல்கிறார்கள்.

திண்ணைப்பேச்சு வீரர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். இலங்கை மக்களின் அவலங்களிற்கு காரணமான இனவாத, மதவாத கொள்ளையர்களை விரட்டி அடிக்க சமத்துவ அரசை கட்டி எழுப்ப அனைவரும் எழுந்து வருக!!. நசுக்கப்பட்டவர்கள் சேர்ந்து நாளை என்னும் நம்பிக்கையை கட்டி எழுப்புவோம் எழுந்து வருக!!.