Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

சரியான பாதை சமத்துவ பாதை தான் எம்மக்களே!!!

நாற்பத்தெட்டாம் ஆண்டு வெள்ளையர்களின் காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தது. உள்ளூர் கொள்ளையர்கள் அரங்கிற்கு வந்தனர். ஒவ்வொரு ஐந்து வருடமும் அவர்கள் மாறி மாறி ஆட்சி செய்வார்கள். வறுமையை ஒழிப்போம்; நாட்டை முன்னேற்றுவோம்; நாம் எல்லோரும் இலங்கை மக்கள், எல்லோரையும் சமமாக நடத்துவோம் என்பார்கள். அவர்கள் சொன்ன சொல் மாறாதவர்கள். வறுமையை ஒழித்தார்கள்; முன்னேற்றினார்கள்; சமமாக நடத்தினார்கள். ஆம் அவர்களின் குடும்பங்களின் வறுமையை ஏழு தலைமுறைக்கும் சேர்த்து ஒழித்தார்கள். தங்களின் தறுதலைப் பிள்ளைகளிற்கு பதவிகள் கொடுத்து முன்னேற்றினார்கள். இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை சமமாக கொள்ளையடித்தார்கள், கொலை செய்தார்கள். இந்த வையத்தில் நாமுள்ள மட்டிலும் வேற்று நினைவின்றி ஊழல் செய்வோம் என்று நாட்டை, மக்களை சுரண்டுகிறார்கள்.

எம்மக்களே, ஏறக்குறைய எழுபது வருடங்கள் ஆகின்றன. இன்னும் இந்த நிலை தொடர வேண்டுமா? ஐக்கிய தேசியக்கட்சி சேனநாயக்காவின் முதலாவது ஆட்சிக்கும், சுதந்திரக்கட்சி மைத்திரிபால சிரிசேனாவின் இன்றைய ஆட்சிக்கும் இடையில் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கின்றனவா?. ஆட்சியாளர்களின் முகங்கள் தாம் மாறினவே தவிர முதுகு ஒடிய உழைப்பவரின் முகங்களில் வறுமை வரைந்த கவலைக் கோடுகள் மாறவில்லை. அவர் முகத்தில் மலர்ச்சி என்பது அவர்களின் ஊதியம் போல கண் மூடித் திறக்கும் முன்னே காணாமல் போவதாகவே என்றைக்கும் இருக்கிறது.

முழு இலங்கைக்கும் மாறாத வறுமையையும், அடக்குமுறையையும் கொடுத்தவர்கள் தமிழ் மக்களின் வாழ்வை இனவாதம் என்னும் கொடுவாளால் வெட்டிச் சாய்க்கிறார்கள். முதலாளித்துவச் சுரண்டல்களையும், தமது ஊழல்களையும் சிங்கள மக்களிடமிருந்து மறைப்பதற்கு, திசை திருப்புவதற்கு இனவாதச் சேற்றிற்குள் தமிழ் மக்களை, முஸ்லீம் மக்களை மூச்சடங்க வைக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் அபிவிருத்தி, முன்னேற்றம் என்று முகமூடி போட்டுக் கொண்டு நாட்டை ஏமாற்றுவது போல தமிழ், முஸ்லீம் மக்களை ஏமாற்ற சில எடுபிடிகளை முன்னுக்கு கொண்டு வருவார்கள். தேயிலைச் செடியின் அடியின் கீழ் தம் தேகம் வருத்தி உழைத்த மலையக மக்களை ஒரே நாளில் நாடற்றவர்களாக்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதற்கு கொஞ்சமும் குறையாத சுதந்திரக் கட்சிக்கும் வாக்களிக்கச் சொல்லி அன்றைய தொண்டமானில் இருந்து இன்றைய மனோ கணேசன் வரை கொஞ்சமும் கூச்சமும், வெட்கமும் இன்றி வாக்குப்பிச்சை கேட்கிறார்கள்.

இனக்கலவரங்களில் எம்மக்களைக் கொன்றார்கள். நம் மக்களின் கதறல்கள் கத்தும் கடலின் இரைச்சல்களை மீறி எழுகின்றன. காற்றில் நம் குழந்தைகளின் வாழ்வு, வாழத் தொடங்க முதலே வாடிய நம் பிஞ்சுகளின் அவல மரணங்கள் பதிந்து போயிருக்கின்றன. வன்னிக் காடுகளில் வன்முறை செய்யப்பட்ட எம் பெண்களின் உடல்கள் புதைந்து போயிருக்கின்றன. இவ்வளவு கொடுமைகளிற்கும் காரணமானவர்களிற்கு வாக்குப் போடச் சொல்லி எலும்புத் துண்டுகளிற்கு வாலாட்டும் சில நாய்கள் ஊளை இடுகின்றன. சிவகுமாரனில் இருந்து இசைப்பிரியா வரையான எமது போராளிகளின் கொலைகளிற்கு காரணமான கொலையாளிகளிற்கு வாக்குப் போடச் சொல்லி இந்த ஈனப்பிறவிகள் ஊளையிடுகின்றன.

ஜீ.ஜீ பொன்னம்பலம், செல்வநாயகம் எங்களிற்கு வாக்கு போடுங்கள், தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்போம் என்று முழங்கி பல பத்தாண்டுகள் கடந்து விட்டன. அவர்களின் வாரிசு அய்யா சம்பந்தர் சொல்கிறார் "எமது சந்ததியினரின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தல் இது, எமக்கு வாக்களியுங்கள்". எத்தனை சந்ததிகள் சிங்கள இனவாதத்தினாலும், முதலாளித்துவச் சுரண்டலினாலும் மரணமே வாழ்வு என்று வாழ்வைத் தொலைத்து விட்டார்கள். ஆனால் பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், சம்பந்தர் என்று அவர்கள் சந்ததி, சந்ததியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு காண தம்மை பாராளுமன்றத்திற்கு அனுப்பச் சொல்கிறார்கள். தமிழீழமே முடிந்த முடிபு என்று சொல்லி வீரவசனம் பேசி எழுபத்தேழில் வாக்கு கேட்டதை எவ்வளவு எளிதாக கடந்து செல்லப் பார்க்கிறார்கள்.

முதலாளித்துவக் கொள்ளையர்கள், அவர்களின் ஏவல்நாய்களான ஆட்சியாளர்கள், அவர்களின் கூட்டாளிகள், எடுபிடிகள் என்றைக்கும் மக்களை வாழ விடப்போவதில்லை. ஏழை மக்களை ஏமாற்றுவது என்பதே அவர்களின் ஒரே கொள்கை. தமது இலாபவெறிக்காக எவரையும் பலியிட அவர்கள் தயங்குவதில்லை. நாடு, இனம், மதம், மொழி என்பன மக்களை பிரிக்க அவர்கள் வைத்திருக்கும் கருவிகள்.

இடதுசாரி அரசியல் என்பது சமத்துவ சமுதாயம் என்னும் உன்னத இலட்சியத்திற்கான அரசியல். இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இருக்கும் உற்பத்திகளுக்குப் பதிலாக சமூக தேவைப்பாடுகளை முன் நிறுத்தும் உற்பத்திகளை தோற்றுவித்தல், உழைக்கும் மக்களுக்கு அதன் பயனைப் பெற்றுக்கொடுத்தல் என்பது அதனது பொருளாதாரக் கோட்பாடு. அரச அதிகாரம் தனிநபருக்கு அல்லது ஒரு தனிப்பட்ட கூட்டத்தினருக்கு அல்லாது பொது மக்களின் கைகளுக்கு கொண்டு செல்வது மற்றும் தங்களின் வாழ்க்கை சம்பந்தமான முடிவுகள் தங்களாலேயே தீர்மானிக்கப்படக்கூடிய சமூகத்தை உருவாக்குவது என்பது அதனது அரசியல் கோட்பாடு.

இந்த உயரிய கோட்பாடுகளை முன் வைத்து முன்னிலை சோசலிசக்கட்சி போராடுகிறது. இடதுசாரியத்தை சாத்தியமான எல்லா வழிகளிலும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக கட்சி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. உழைக்கும், பாதிக்கப்பட்டுள்ள, உரிமைகள் பறிக்கப்பட்ட பொருளாதாரத்திலும் அரசியலிலும் இருந்து விரட்டப்பட்ட பாதிக்கப்பட்ட வர்க்கத்தின் சக்தியை வளர்த்தெடுப்பது; தேசிய பிரச்சனைகளில் இனம், சாதி, சமய வேறுபாடுகள் அற்ற சகலரதும் சமமான உரிமைகளை ஏற்றுக்கொள்வது; வெளிநாட்டுக்கொள்கைகள் சம்பந்தமாக அமெரிக்கா அல்லது சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாது ஏகாதிபத்தியத்தியங்களிற்கு எதிரான கொள்கைகளை அமைப்பது போன்ற இலக்குகளை கட்சி மக்கள் முன் வைக்கிறது.

சரியான வழி தெரியும் போது

எமது பார்வை நன்கு

தெரியும் போது நாம்

ஏன் பிழையான வழிகளை

தெரிவு செய்ய வேண்டும்?

சமத்துவ சமுதாயம் என்னும் உன்னத இலட்சியத்தை அடைய ஒன்றிணைவோம். சரியான பாதை சமத்துவ பாதை தான் எம்மக்களே!!