Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

நாங்களும் தான் மகிந்த ராஜபக்சவின் சட்டையைக் கழட்டினோம்

பிரான்சின் விமானத்துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தம்மை ஆள்குறைப்பு செய்ய திட்டம் போட்டிருக்கும் நிர்வாகிகளை ஓட, ஓட விரட்டி சட்டையைக் கிழித்தெறிந்தார்கள். தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (Confederation general du travail, C.G.T) போன்ற தொழிற்சங்களின் தீரம் மிக்க தொழிலாளர்கள் செங்கொடிகளுடன், கோசங்கள் எழுதப்பட்ட தட்டிகளுடன் நிர்வாகிகள் என்னும் கொழுப்புப் பூனைகளை பின்னங்கால்கள் பிடரியில் பட ஓட வைத்தார்கள். உலகத்தின் முதலாவது சமத்துவப் போரை, தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியை 1848 இல் பிரெஞ்சுப் புரட்சி என்று நிகழ்த்திக் காட்டிய தொழிலாள்ர்கள் தமது போர்க்குணத்தை, இடதுசாரியத்தை மறுபடியும் ஒருமுறை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

2008, மார்கழியில் ஈராக்கியப் பிரதம மந்திரியின் இல்லத்தில் வைத்து அல்- சைடி என்னும் ஊடகவியலாளன் ஜோர்ஜ் புஷ் என்னும் அமெரிக்க கொலைகாரனிற்கு செருப்புக்களை எறிந்து மரணித்த தன் ஈராக்கிய மக்களிற்கு மரியாதை செய்தான். "நாயே, இது உனக்கு ஈராக்கிய மக்களின் பிரியாவிடை முத்தம்" என்று அராபிய மொழியில் முழங்கி முதலாவது செருப்பை ஈராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்க பொய் சொல்லி போர் தொடுத்த கொள்ளையனின் முகத்திற்கு எறிந்தான். "இது, உன்னால் கணவரை இழந்தவர்கள், அனாதைகள் ஆக்கப்பட்ட நம் குழந்தைகள். ம்ரணித்த எமது எல்லா மக்களிற்காகவும்" என்று இரண்டாவது செருப்பு வீசி எறிந்தான்.

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த இராகுல் சிரித்த முகத்துடன், கை அசைத்து மேடையின் அருகில் வந்த போது தோழர்கள் நால்வரும் தங்கள் ஆடைக்குள் வைத்திருந்த கருப்புத் துணியை எடுத்து இராகுலின் முகத்திற்கு நேராக காண்பித்து, “ஈழத்தமிழ் மக்களை ஒடுக்கும் இராகுலே திரும்பிப் போ” என்று கோசம் போட்டார்கள்.

இராகுலின் முகம் சுருங்கி போய் விட்டது. இராகுலின் முகத்தை பார்த்த ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலுக்கும் முகம் சுருங்கி இருண்டது. உடனே காங்கிரஸ் கயவாளிகள் கட்டையை உருவி தோழர் ஆனந்தின் தலையில் அடித்தனர். மற்ற தோழர்களையும் கடுமையாக தாக்கினார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தோழர்கள் கோசமிட்டனர். சிறிது நேரம் கழித்து வந்த காக்கி துறை அங்கிருந்த தோழர்களை பிடித்துக் கொண்டு போய் போலீஸ் வண்டியில் போட்டு அடைத்தனர். ("ராகுல் காந்திக்கு கறுப்புக்கொடி காட்டியதை அழிக்க முடியுமா", வினவு கட்டுரை).

நம் வாழ்வு அழிந்து போனது; நம் மக்கள் மரணத்தில் வாழ்கின்றனர்; நமது மண் இராணுவத்தினரின் கால்களிற்குள் புதைந்து போய்க் கிடக்கிறது. ஆனால் நம் தலைவர்கள் கொன்றவர்களுடன் கொஞ்சிக் குலாவுகிறார்கள். தேர்தல்களில் கூட்டுக் கலவி செய்கிறார்கள். நம்மக்களைக் கொன்றவர்களிற்கு வாக்குப் போடச் சொல்லுகிறார்கள். பிரான்சில் தொழிலாளர்கள் தமது வர்க்க எதிரிகளின் சட்டையை கிழித்தார்கள் என்றால் நாங்கள் மகிந்தாவை நல்லூரில் வைத்து தமிழர்களின் சொந்தப் பெருமானாம் கந்தப் பெருமானின் கருணையினால் சட்டையைக் கழட்ட வைத்தோம். நல்லூர் கந்தசாமி கோவிலில் மகிந்த ராஜபக்சவிற்கு கையில் காளாஞ்சி கொடுத்து, தோளில் மாலை போடுகிறார்கள். எம்மக்களை துடிக்க துடிக்க கொன்ற கொலைகாரனை மரியாதை செய்ய எப்படி இவர்களிற்கு மனது வந்தது.

தமிழ் நாட்டில் தோழர்கள் ராகுல் காந்திக்கு கறுப்புக்கொடி காட்டி தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள்; ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவையை சேர்ந்த பிராணி ஒன்று சோனியா காந்தியை சந்தித்து விட்டு "இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசும் போது சோனியா காந்தியின் கண்களில் ஈரம் தெரிந்தது" என்று மகிந்தாவுடன் சேர்ந்து கொன்ற கொலைகாரியின் காலை நக்கியது. இராக்கிய ஊடகவியலாளன் அமெரிக்க கொலைகாரன் ஜோர்ஜ் புஷ்சை செருப்பால் அடித்தான்; ஆனால் ஈழமக்களின் இனப்படுகொலை குறித்து ஜெனீவாவில் ஊர்வலம் போன நமது அறிவாளிகள் உலகம் முழுக்க கொல்லும் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடியை தூக்கிப் பிடிக்கிறார்கள்.

"கடை உடைப்பு

தீ வைப்பு

பொலீசை எதிர்த்து மக்கள் போராட்டம்

கண்ணீர்ப்புகை

துப்பாக்கிச் சூடு

அந்தி தொடங்கி வைகறை வரையும்

ஊர் அடங்குச் சட்டம்

அதையும் உதறி

ஜம்பது பேர் மரணம்

அவர்கள் தொழிலாளர்கள்

அவர்கள் மாணவர்கள்

நூற்றுக் கணக்கிலே தலை உடைவு

கை முறிவு கால் நொடியல்

சதை கிழிந்து வழியும்

இரத்தச் சிவப்புகளில்

சிவந்த மலர் பூக்கும்

இத்தனையும் ஏன்?

இங்கு உள்ளது தான் அங்கும்

விலை உயர்வு

விலை உயர்வை எதிர்த்தெழுந்த

வெங்கனலின் அலை எறிகை

அது இங்கே

மெத்தச் சுருங்கி

கொட்டைப் பாக்கிலும் குறைவாய்

துவாரம் சூம்பி

ஈற்று மாறிய கிழடாய்

எல்லாச் சுமைகளையும்

முதுகிலே சுமந்த படி

சொல்வார் சொல்லிற்கு

தலை அசைத்து கரம் கூப்பி

கறுப்பை வெள்ளை என்றால் அதையும் நம்பி

வெள்ளையைக் கறுப்பு என்றால் அதையும் நம்பி

பிடாரனின் ஊதலிற்கு

தலை கெழித்து தலை கெழித்து

வளைந்து நெளிந்து அடங்கிச் சுருளும்

சவமாய் சவங்களாய்

எங்கள் ஆண் உடம்புகள் ஏன் எழுவதில்லை?

எங்கள் யோனிகள் ஏன் அரிப்புக் கொள்வதில்லை?”

இது தமிழ் மொழியின் மிக முக்கிய கவிஞரான சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் தொகுப்பிலிருக்கும் "எகிப்தின் தெருக்களிலே" என்ற 1977ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை. இன்றைக்கும் அவரது கவிதை அதே கேள்விகளை மீண்டும், மீண்டும் நம்மைப் பார்த்து கேட்கிறது.