Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தோழர் கோவனை சிறையிலிட்ட சாராய வியாபாரி ஜெயாவை விரட்டுவோம்!!!

"மூடு, டாஸ்மார்க்கை மூடு" என்று பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோவனை கைது செய்திருக்கிறது பார்ப்பன சதிகாரி ஜெயலலிதாவின் அரசு. நம் சகோதரிகளின் தாலியறுக்கும் சாராயக்கடைகளை மூடு என்று பாடியதற்காக ஜெயலலிதாவின் அடிமைநாய்களான தமிழ்நாட்டு பொலிஸ் தோழரை கைது செய்திருக்கிறது. நம் தாய்மாரை மீளா வறுமையில் வாட்டும் மதுக்கடைகள் வேண்டாம் என்று சொன்னதற்காக அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

குடியுங்கள்; குடித்து நோயாளி ஆகுங்கள்; குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வாருங்கள் என்று தோழர் பாடியிருந்தால் அவருக்கு தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருது கொடுத்திருப்பார்கள். இன்னும், இன்னும் சாராயக்கடைகளை திறவுங்கள் என்று பாடியிருந்தால் தமிழ்நாட்டு அரசின் வருமானத்தை வாழ்த்திப் பாடியிருக்கிறார்; ஜெயலலலிதா, சசிகலா என்ற சாராயம் காய்ச்சும் இரு பெண்களின் தொழில் வளர்ச்சியை வாழ்த்திப் பாடியிருக்கிறார் என்று பாராட்டியிருப்பார்கள்.

பெண்களை ஆபாசமாக பேசும் பாடல்களை எழுதி கவியரசர்கள் ஆகலாம். தான் உயர்ந்த சாதி, மற்றவன் தாழ்ந்த சாதி என்று சாதிவெறியர்கள் சங்கம் வைத்து பேசலாம். மண்டை கழண்ட மதவெறியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசலாம் ஆனால் ஏழைகளை மிக மோசமாக பாதிக்கும் மதுக்கடைகளை மூடச் சொல்லி மூச்சு விடக்கூடாது. ஏனென்றால் சாராய முதலாளிகள் கோடி, கோடியாக ஜெயலலிதாவிற்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். பினாமிகள் பெயரில் ஜெயலலிதாவே சாராயம் காய்ச்சும் போது தோழர் கோவன் டாஸ்மார்க் கடையை மூடு என்று பாட்டுப் பாடி தேசத்துரோகம் செய்வதை எப்படி ஜெயலலிதாவாவினால் பொறுத்துக் கொள்ள முடியும்?

தமிழ் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் சாராயம் காய்ச்சுபவர்கள் அல்லது சாராயக் கடைகளை நடத்துபவர்கள். தமிழ் நாட்டுப் பொலிஸ்காரர்கள் சம்பளத்தை எதிபார்க்காமல் வேலை செய்யும் கடமை வீரர்கள் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அதிசயப் படுவீர்கள், ஆனால் அது உண்மை தான். அவர்களிற்கு சம்பளம் தேவை இல்லை. ஏனென்றால் அவர்கள் சாராய முதலாளிகளிடம் இருந்து வாங்கும் இலஞ்சம் அவர்களின் சம்பளத்தை விட பல மடங்கு இருக்கும். தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லி விட்டு பொலிஸ்கார தொழிலாளிகளின் வருமானத்தை கெடுக்கும் பாடலை பாடினால் அவர்களிற்கு கோபம் வரத்தானே செய்யும். அரசியல்வாதிகளையும், பொலிஸ்காரர்களையும் எதிர்ப்பதை தேசத்துரோகம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

தோழர் கோவனின் கைதைக் கண்டித்து தி.மு.க அறிக்கை விட்டிருக்கிறது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் சாராயக்கடைகளே இருக்கவில்லை, தண்ணீர்ப்பந்தல் திறந்து மோர் தான் ஊற்றினோம் என்றும் சொன்னாலும் சொல்வார்கள். மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பத்தையும் இதே பொலிஸ் நாய்கள் தாமிரபரணித் தண்ணீரில் வைத்து கொலை செய்த போது தமிழினத்தலைவரின் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. மன்மோகன்சிங் என்ற பொம்மையை வைத்துக் கொண்டு சோனியா காந்தியும் மகிந்த ராஜபக்சாவும் இலங்கைத் தமிழ்மக்களை கொலை செய்த போது அய்யா தான் ஆட்சியில் இருந்தார். மத்தியில்,டில்லியில் அவரது ஆட்களும் மந்திரிகளாக இருந்ததினால் அவருக்கு ஒரு இனப்படுகொலையே கண்ணில் படவில்லை. அவர்கள் இப்போது தோழர் கோவனின் கைதைப் பற்றி கதைக்கிறார்கள்.

ஜெயலலிதா என்ற கொள்ளைக்காரிக்கு சிறைத்தண்டனை கொடுத்த போது நாடு பாய்ந்த பிரதமர் உருத்திரகுமாரன் பதறிப் போய் கண்ணீர் வடித்தார். ஊத்திக் கொடுத்த ஊழல்காரியை சிறையில் போட்டதினால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேசியத் தலைவர் சிறிதரன் இந்த பாசிசப்பேயை இலங்கைத் தமிழ்மக்களின் காவல்தெய்வம் என்று கண்ணீர் மல்க கவிதை பாடினார். இப்போது இவர்களிடமிருந்து காத்துக் கூட வரவில்லை. இவர்கள் தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாம், இதை விட தமிழ்மக்களை யாரும் கேவலப்படுத்த முடியாது.

தமிழ் நாட்டில் வைகுண்டராசன் போன்ற இயற்கையை அழிக்கும் சமுகவிரோதிகள் தொழிலதிபர்கள் என்ற பெயரில் சுதந்திரமாக திரிய முடியும். நித்தியானந்தா மாதிரியான காமுகர்கள் சுதந்திரமாக பொறுக்கித் திரிய முடியும். கோடி, கோடியாக கொள்ளையடித்த ஜெயலலிதா நீதிபதிக்கு இலஞ்சம் கொடுத்து வெளியில் வந்து மறுபடியும் முதலமைச்சர் ஆகமுடியும். ஆனால் மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடாது. இது தான் தமிழ்மக்களின் தலைவிதியா? தமிழ்மக்களை மதுவின் போதையில் தள்ளி விட்டு தனது கொள்ளையை தொடரும் பார்ப்பனச் சதிகாரி ஜெயலலிதாவிற்கு முடிவு கட்டுவோம். தோழர் கோவனின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

*டாஸ்மார்க் - சாராயக்கடை