Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

ஏன் பிரிந்தாய் சகோதரனே!!!

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி புகையிரதத்தில் தன் இன்னுயிரை இழந்திருக்கிறான் செந்தூரன். தன் சக மனிதர்கள் கொடுஞ்சிறையில் வாடுவது பொறுக்க முடியாமல் அவனது இளைய மனது, இளகிய மனது இந்த துயர முடிவை எடுத்திருக்கிறது. ஆனால் அவனது மரணம் அவனது அன்புப் பெற்றோருக்கும், ஆசைச் சகோதரங்களிற்கும் ஆறிட முடியா துயரினைக் கொடுத்ததே தவிர கடும் இருள் சூழ்ந்த கொடுஞ்சிறைகளில் வாடும் கதியற்றவர்களின் விடுதலைக்கு எந்த விதத்தில் உதவுகிறது என்பது கேள்விக்குறியாக எழுகிறது. தானும், தன் குடும்பமும் என்று அற்பவாழ்வு வாழும் மனிதர்களிடையே தன் சக மனிதர்களிற்காக தன் உயிர் துறந்தவன் வாழ்ந்து போராடி இருப்பானே என்றால் அது எவ்வளவு மாற்றங்களை தந்திருக்கும் என்பது ஏக்கமாக எழுகிறது.

சகோதரனே, உனது ஊரான கோப்பாயிற்கு பக்கத்தில் தான் உரும்பிராயில் நமது மூத்த சகோதரன் பொன்னுத்துரை சிவகுமாரன் தன் உயிரை இருபத்து நான்கு வயதில் நஞ்சருந்தி முடித்துக் கொண்டான். ஈழ மக்களின் விடுதலைக்காக எழுபத்திநான்காம் ஆண்டினிலேயே தன் உயிர் துறந்தான் அவன். ஆனால் தமிழ்மக்களின் மீது சிங்கள பேரினவாதிகளினால் தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறையை அந்த ஆரம்ப நாட்களிலேயே தீரத்துடன் எதிர் கொண்ட அவன் வாழ்ந்து போராடியிருந்தால் அது ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்திற்கு எவ்வளவு வலிமையைத் தந்திருக்கும் என்ற ஏக்கம் உனது மரணத்தின் போது மறுபடியும் எழுகிறது.

சாகித் பகத்சிங், சிவராம் ராஜ்குரு, சுகதேவ் தாப்பர் என்னும் மாவீரர்களிற்கு பிரித்தானியா என்னும் கொடிய எகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய மக்களின் விடுதலைக்காக போராடியதால் மரணதண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மரணக்கயிற்றை முத்தமிட்ட அந்தக் கடைசி நிமிடம் வரை அவர்கள் தம் வாழ்வை, போராட்டத்தை தீரத்துடன், உறுதியுடன் தொடர்ந்தார்கள். "நான் ஒரு பைத்தியக்காரன், சிறையில் இருக்கும் போது கூட விடுதலையானவன் போலத் தான் உணருகிறேன்" என்று பகத் சிங்கினால் சிரித்துக் கொள்ள முடிந்தது.

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் முன்னோடி அடோல்ப் கிட்லரின் நாசிப்படைகள் அந்நாளைய செக்கோசிலவாக்கியாவை ஆக்கிரமித்தபோது சிறைப்பிடிக்கப்பட்டான் ஜூலியஸ் பூசிக் (Julius Fucík). அவன் ஒரு பத்திரிகையாளன், உறுதியான கம்யுனிஸ்ட். நாசிகளின் கொடுங்கோன்மையை, கொலைகளை எதிர்த்துப் போரிட்டதால் சிறைப்பிடிக்கப்பட்டு ஜேர்மனியிற்கு கொண்டு செல்லப்பட்டு 08.11.1943 இல் பேர்லின் சிறையில் தூக்குமேடையில் தன் உயிர் துறந்தான். செக்கோசிலாவியாவின் பிராக் நகரச் சிறையில் இருக்கும் போது கிடைத்த துண்டுக்காகிதங்களை வைத்து ஜூலியஸ் பூசிக் எழுதியது தான் "தூக்கு மேடைக் குறிப்புகள்" (Notes from the Gallows).

எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று காலைச் சுற்றிய பாம்பாய் மரணம் காத்திருந்த அந்த வேளையிலும் தன் சிறை வாழ்வை, அங்கு நடந்த சித்திரவதைகளை, நாசிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவர் நம்பிய மனைவியின் மீதான காதலை, சமத்துவ சமதர்ம வாழ்வின் மீதான தம் லட்சியத்தை, மக்களின் போராட்டம் நாசிகளின் சர்வாதிகாரத்தை வீழ்த்தியே தீரும் என்ற நம்பிக்கையை அவர் தன் குறிப்புகளில் எழுதினார். அவர் மீது அன்பு கொண்ட இரண்டு சிறைக்காவலர்களால் துண்டுக்காகிதங்களில் எழுதப்பட்ட "தூக்கு மேடைக் குறிப்புகள்" கடத்திச் செல்லப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் பின்பு நாசிகளின் சிறையில் இருந்து உயிர் தப்பிய ஜூலியல் பூசிக்கின் மனைவி குஸ்தா பூசிக்கினால் அவை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ் உட்பட தொண்ணூறு மொழிகளில் "தூக்கு மேடைக் குறிப்புகள்" வெளியாகி சர்வாதிகாரத்தால் போராளிகளின் மன உறுதியை உடைக்க முடியாது என்பதை உலகெங்கும் எடுதுக் கூறியது.

மகிந்த ராஜபக்சவின் கொலைகாரர்கள் தமிழ்மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த போது தாங்க முடியாமல் தமிழ்நாட்டில் தன் உயிர் துறந்தான் முத்துக்குமாரன். அவனைத் தொடர்ந்து மேலும் பதினெட்டுப்பேர் தம் உயிர் துறந்தார்கள். "என் உடலை ஆயுதமாக ஏந்திப் போராடுங்கள்" என்று சொன்னான் முத்துக்குமாரன். ஆனால் தமிழினப்பிழைப்புவாதிகள் அவர்களினது மரணத்தினால் எழுந்த மக்களின் எழுச்சியையும், அனுதாபத்தையும் வைத்து சமுகவிரோதி ஜெயலலிதாவை தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள். மதவெறியர்கள், மக்கள் விரோதிகளான பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா தமிழ்மக்களிற்கு ஆதரவான நிலை எடுக்கும் என்று பச்சைப்பொய் சொன்னார்கள்.

செந்தூரனின் மரணத்திற்கு பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் "செந்தூரனின் தற்கொலை வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளார்கள் என்ற செய்தியை தெளிவாக உணர்த்துவதாக" திருவாய் மலர்ந்திருக்கிறார். தமிழ்மக்களைக் கொன்ற, சிறை வைத்த சரத் பொன்சேகாவை இந்த ஆசாமியும், அவர் தம் அடிப்பொடிகளும் ஆதரித்த போது அவருக்கு மக்களின் விரக்தி தெரியவில்லை. மகிந்த ராஜபக்சவின் கட்சியிலும், ஆட்சியிலும் அணிவகுத்து நின்ற மைத்திரி சிறிசேனாவை, எந்த விசாரணையும் இன்றி அப்பாவிகளை சிறை வைத்திருக்கும் மைத்திரி சிறிசேனாவை இந்த நிமிடம் வரை ஆதரித்துக் கொண்டு அய்யா சம்பந்தன் மக்கள் விரக்தியில் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்.

தமிழ்மக்களை உடலாலும், உள்ளத்தாலும் அரச பயங்கரவாதத்தினால் முடக்கி விட்டதாக இலங்கை அரசு கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் கழுத்தை இறுக்கும் ஒடுக்குமுறைகளிற்கு மத்தியிலும் தம் மெல்லிய குரல்களை மெதுவாக எழுப்புகிறார்கள். உனது மரணத்திற்கு அடுத்த நாளும் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதரர்கள், குழந்தைகள் தம் அன்புக்குரியவர்களைத் தேடி யாழ்நகரில் கொட்டும் மழையிலும் குரல் எழுப்பினார்கள். வாழ்விழந்து தவிக்கும் எம்மக்களிற்கு உன் போன்ற தன்னலம் மறந்த மனிதர்களின் அன்பும், ஆதரவும் ஆதாரமாக இருக்க வேண்டிய இந்த வேளையில் ஏன் பிரிந்து போனாய் எம் சகோதரனே!

"வெடிகுண்டுகளும் துப்பாக்கிகளும் புரட்சியை தீர்மானிப்பதில்லை. புரட்சி என்ற வாள் கருத்துக்களாலேயே கூர்மையாக்கப்படுகிறது; தீர்மானிக்கப்படுகிறது. புரட்சி வாழ்க" மரணத்தின் நிழல்களில் நின்ற கடைசி நிமிடங்களில் மாவீரன் பகத் சிங்.