Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

இந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா?

தமிழ்ச்சினிமா கழிசடைகள் காலங்காலமாக தமிழனின் மானத்தை விற்று வருகிறார்கள். தமிழ்ப் பெண்களை ஆணாதிக்க சொல்லாடல்களாலும், காட்சிப் படிமங்களாலும் பாலியல் வல்லுறவு செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டு காவாலிகளும் தங்களது மன விகாரங்களை, வக்கிரங்களை, அழுக்குகளை கொட்டி பெண்களை கேவலப்படுத்துகிறார்கள். மனிதர்கள் என்று சொல்லவே கூசும் இப்படிப்பட்ட பிறவிகள் தான் தமிழருக்கு கலைஞர்கள் என்னும் போது தமிழ்ச்சினிமா என்றைக்குமே சேறு நிறைந்த சாக்கடையாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை.

"சாரயத்தை விற்காதே" என்று ஏழைமக்கள் குடிக்கு அடிமையாவதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடியதற்காக அவரை தமிழ்நாட்டின் பேயரசு கைது செய்தது. ஆனால் இந்த இரண்டு காவாலிகளையும் தமிழக அரசு தொடவில்லை. தமிழ்நாட்டு அரசின் தேசிய வியாபாரம் சாராயம் காய்ச்சி விற்பது என்னும் போது "சாராயத்தை விற்காதே" என்பது தேசத்துரோகம் தானே. இப்படிப்பட்ட அரசிற்கு பெண்ணின் உடல் உறுப்பை பாலியல் வசைச்சொல்லாக வைத்து பெண்களை கேவலப்படுத்தும் பாடல் தேசியகீதமாகத் தான் இருக்கும்.

வெளிநாடுகளில் தமிழர்களுடன் பழகும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இந்த தமிழ் வசைச்சொல்லை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மற்ற நாட்டவர்கள் தமது வசைச் சொல்களை இந்த அளவு வெளியில் சொல்வதில்லை. கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே தோன்றி விட்டோம் என்று புளுகித் திரியும் இந்த பண்பாடு இல்லாத, பகுத்தறிவு அற்ற மடையர் கூட்டம் தமது தாய்மாரை, மனைவிமாரை, மகள்மாரை, சகோதரிகளை பாலியல் நிந்தனை செய்ய வெளிநாட்டவருக்கு சொல்லிக் கொடுக்கிறோம் என்று மண்டையில் மயிரளவு கூட அறிவு இல்லாத ஆணாதிக்க கூட்டமாகத் தான் இருந்து வருகிறது.

இந்தக் பொறுக்கிகளின் பாடலைக் கேட்டு விட்டு தமிழ்ப்பெண்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொதுவெளியில் எதிர்ப்பு எழுகிறது. நல்லது, ஆனால் எம்பெண்களின் வாழ்வை இந்தப்பாட்டு மட்டுமா சீரழிக்கிறது?; அவமானப்படுத்துகிறது?. பாலியல் தொழிலாளிகளை, அந்த பரிதாபத்திற்குரிய பெண்களை வேசை என்று இந்த மூடர்கூட்டம் ஏளனம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா? இந்தப் பன்றிகளின் கருத்துப்படியே பாலியல் தொழில் தவறு என்றே வைத்துக் கொள்வோம். அந்த ஏழைப்பெண் குற்றவாளி என்றால் அந்த குற்றத்தை சேர்ந்து செய்த ஆண் குற்றவாளி இல்லையா? அந்த அபலைப்பெண்ணை வேசை என்று சொல்லுபவர்களின் மொழியில் ஆணைச் சொல்ல சொல் எதுவும் இல்லை என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட ஆணும், பெண்ணும் அன்புடன் கூடி குலாவி மகிழ வேண்டிய திருமண வாழ்க்கைக்கு முதலாவது விதியாக தமிழ்ச்சமுதாயத்தில் சீதனம் என்னும் பெருங்கொடுமை இருக்கிறது. குறுந்தொகையின் பாடல் சொல்லும் "செம்மண்ணில் மழை நீர் கலந்தது போல அன்புடை நெஞ்சங்கள் தாம் கலந்தனவே" என்று ஆனால் இன்று வீடும், நகையும், இலட்சக்கணக்கில் பணமும் கலந்தால் தான் அண்ணல் அவளை நோக்குவான். சீதனப்பணம் இல்லாமையால் இல்வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் எத்தனை பெண்களை கொடுமைப்படுத்துகிறது எம் தமிழ்ச்சமுதாயம்.

இலங்கைத் தமிழ்மக்களின் போராட்ட நெருப்பில் தம் வாழ்வை எரித்த எமது பெண் போராளிகள் இன்று வறுமை சூழ்ந்த தனிமை வாழ்வு வாழ்கிறார்கள். எந்தச் சமுதாயத்திற்காக போராடப் போனார்களோ அந்த தமிழ்ச்சமுதாயமே கேலியும், கிண்டலும் செய்து ஒதுக்குகிறதே! பொது வாழ்க்கைக்கு சென்றதையே ஒரு குறையாக, அவர்களின் மேல் விழுந்த கறையாக இந்த ஆணாதிக்க சமுதாயம் சொல்கிறதே!. இந்த முட்டாள்தனம், பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க வெறியின் உச்சம் இல்லையா?

வன்னியில் பற்றைக்காடுகளை எரித்துக் சென்ற போர் மரணத்தையும், வறுமையையும் வழியெங்கும் வீசி எறிந்து சென்றது. வாழ்வு தந்த வயல் எங்கும் இராணுவத்தின் முள்வேலிகள். இலங்கை அரசு தமிழ்மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இராணுவத்திற்கு ஆள் சேர்த்தது. ஆண்களும், பெண்களும் வயிற்றுப்பசி தீர்க்க வேறு வழியின்றி தம் சக மனிதைரைக் கொன்ற இலங்கை இராணுவத்தில், தம்மைக் கொல்ல முனைந்த இலங்கை இராணுவத்தில் சேர்ந்தனர். ஆண்கள் சேர்ந்ததைப் பற்றி எதுவும் சொல்லாத இந்த கேடுகெட்ட சமுதாயம் இராணுவத்தில் சேர்ந்த பெண்களைப் பற்றி கதைகள் கட்டியது. இராணுவத்தால் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள் என்று பொதுவெளியில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் முற்போக்கு மயிர் புடுங்குகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும் சேர்ந்து அந்த ஏழைப்பெண்களை அவமதித்தார்கள்.

இன்றைக்கு இந்தப் பொறுக்கிகளின் பாட்டு வந்தவுடன் கல்லைத் தூக்கிக் கொண்டு வருபவர்களே; சீதனம் கேட்பவர்களின் மீதும் இந்தக் கற்களை எறியுங்கள். வறுமையில் வாழும் பெண்களை கேவலப்படுத்துபவர்களின் மீதும் இந்தக் கற்களை எறியுங்கள். எமது பெண்போராளிகளை சமுதாயத்தில் இருந்து ஒதுக்குபவர்களின் மீதும் கற்களை எறியுங்கள். "பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்" என்று பெண்களை அவமானப்படுத்தும் மதவாதிகளின் மீது கற்களை எறியுங்கள்.