Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

செந்தமிழில் பெண்களைத் திட்டும் பைந்தமிழ் மறவர்கள்

ஊரிலே வசைச்சொற்களை பேசுகிறவர்களை செந்தமிழில் பேசுகிறான் என்பார்கள். பெரும்பாலும் குடிகாரர்கள் தான் சுயநினைவு இல்லாமல் வசைச் சொற்களைப் பேசுவார்கள். குடித்திருப்பவன் மப்பிலே அப்படித் தான் பேசுவான் என்று ஊர்ச்சனமும் அதைப் பெரிதாக எடுக்காது. ஆனால் இன்றைக்கு அண்ணன் சீமான் தொடக்கம் முகப்புத்தக மத வெறியர்கள், சாதிவெறி பிடித்த மண்டை கழண்ட மடையர்கள், ஆணாதிக்கப் பன்றிகள் வரை சர்வ சாதாரணமாக பாலியல் வசைச்சொற்களை பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். அதிலும் பெண்கள் ஒரு கருத்து சொன்னால் இந்த மறவர்களிற்கு வீரம் பொங்கி வழிந்து தூசணத்தில் மறுமொழி சொல்கிறார்கள்.

மதவெறியர்கள், மொழிவெறியர்கள், சாதி வெறியர்களின் அறிவு இவ்வளவு தான்; துணிவு இவ்வளவு தான். முகப்புத்தகத்தில் பெண்கள் மதங்களின் முட்டாள்தனங்களை, சாதிவெறியர்களின் மடமைகளை, ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுதினால் உடனே மீசை துடிக்க பாலியல் வசைச் சொற்களை எழுதி அப்பெண்களை இழிவு செய்கிறார்கள். ஒரு கருத்தை விவாதிக்கும் அறிவு, பண்பாடு இவர்களிற்கு ஏன் என்றைக்கும் இருப்பதில்லை. "அன்பே சிவம்"; "ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு"; "இஸ்லாம் அமைதி மதம்" என்று வீடுகளில் கண்ட இடத்தில் எல்லாம் ஒட்டி வைத்திருக்கும் இவர்கள் மதங்களைப் பற்றி ஒரு விமர்சனத்தை வைத்தவுடன் மதங்களின் உண்மை முகமான அழிவு முகத்தை காட்டுகிறார்கள்.

உலகு எங்கும் ஆதிச் சமுதாயங்களில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தார்கள். அங்கு அன்பு இருந்தது. அங்கு எல்லாம் பொதுவில் இருந்தது. தாய்த் தெய்வங்களை முதன்மையாகக் கொண்ட வழிபாட்டு முறைகள் இருந்தன. இன்றைக்கும் அமேசன் காடுகளில் சேர்ந்து வேட்டையாடி அந்த விலங்கை கூட்டாக உண்ணும் சமுதாயங்கள் தாய்வழி சமுதாயங்களின் தொடர்ச்சியாக இருக்கின்றன. தனிச்சொத்துடமை வந்தவுடன் சொத்தைக் காப்பாற்ற தந்தை வழிச் சமுதாயங்கள் உருவாகின. தாய்த்தெய்வங்களின் இடத்தில் ஆண் தெய்வங்கள் வந்து சேர்ந்தன.

அதனால் தான் பெண் தெய்வங்களை அழித்துக் கொண்டு வந்த இன்றைய ஆணாதிக்க சமயங்கள் எல்லாம் பெண்களை அடிமைகளக நடத்துகின்றன. தாய்த்தெய்வங்களையும், வழிபாடுகளையும் நடத்தி வந்த பெண்களை குருமாராக வர முடியாது, ஆணுக்கு சமமற்றவர்கள், மாதவிலக்கு வருவதால் அசுத்தமானவர்கள் என்ற கதைகளைக் கட்டி தமது பொய்களை புனித நூல்கள் என்னும் புழுகுமூட்டைகளை எழுதினார்கள். சமுதாய வரலாறு, மானிடவியல் பற்றிய எந்தவிதமான அறிவும் அற்ற மதவெறி முட்டாள்கள் இந்த பொய்களைப் பற்றி கேள்வி எழுப்பினால் மறுமொழி சொல்லத் தெரியாமல் தூசணத்தில் எழுதி தமது அறிவுவளர்ச்சியை காட்டுகிறார்கள்.

"கன்னிமரியாயே வாழ்க" என்று செபம் சொல்கிறீகளே, இயேசு என்ற குழந்தையை பெற்றெடுத்தவர் எப்படி கன்னி மரியாவாக முடியும் என்று கேள்வி கேட்டால் மறுமொழி சொல்லத் தெரியாமல் மறுமொழி தூசணமாக வருகிறது. முஸ்லீம் பெண்கள் முகம் மூடி உடை உடுக்க வேண்டும் என்று முகமது நபி சொன்னாரா இல்லையா என்று மாபெரும் விவாதம் ஒன்று நடக்கிறது. முஸ்லீம் ஆண்களிற்கு ஏன் அப்படி ஒரு யூனிபோர்மை போடச் சொல்லி முகமது நபி சொல்லவில்லை. முஸ்லீம் ஆண்கள் மட்டும் மேற்கத்தைய முறைப்படி ஆடை அணியலாம்; பெண்களிற்கு மட்டும் ஏன் உடைக்கட்டுப்பாடு என்றால் என்றைக்குமே மறுமொழி வராது. மாதவிலக்கு வந்தால் பெண்கள் கோயிலிற்குள் போகக்கூடாது என்று மிக வக்கிரமாக தனது பெண்ணடிமைத்தனத்தை காட்டுகிறது இந்து மதம். உயிர்நிலையின் சுழற்சியை அசுத்தமாக சொல்கிறீர்களே என்று கேட்டால் சிதம்பர ரகசியம், சிதம்பர ரகசியம் என்று சொல்கிறீர்களே அது என்ன என்று கேட்டால் திரு, திருவென்று முழிப்பது போல இதற்கும் மறுமொழி சொல்லாமல் முழிக்கிறார்கள்.

முத்துராமலிங்கத் தேவரின் சாதிவெறியை எழுதும் ஒரு பெண்ணின் முகப்புத்தகத்தில் தேவர் சாதிச் சிங்கங்கள் எல்லாம் தூசணத்தில் தேவர் பெருமை பேசுகின்றன. சாதி என்ற ஒன்று உண்டா?; அதற்கென்றோர் பெருமை உண்டா? என்றைக்குமே இல்லை. ஆங்கிலேயரின் கால்களைக் கழுவி சேவகம் செய்தான் அடிமை புதுக்கோட்டை தொண்டைமான். ஆங்கிலேயரின் கால்களை கழுபுவர்கள் என் அடிமயிருக்குச் சமம் என்றார் மருது பாண்டியர். இந்த தேவர்சாதி வெறியர்கள் தாங்கள் வீரப்பரம்பரை என்று ஊளையிடுகிறார்கள். அப்படி என்றால் மருது பாண்டியரின் அடிமயிருக்கு சமமான புதுக்கோட்டை தொண்டமான்கள் என்ற கோழைகள் எந்தப் பரம்பரை?. ஆனால் எந்த விதமான அறிவும், வரலாறும் தெரியாத இந்த சாதிவெறியர்கள் இந்திய மக்களை ஆங்கிலேயரிற்கு காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை தொண்டைமான்களையும் இவங்க நம்ம ஆளுங்க என்று கொண்டாடுகிறார்கள்.

டார்வின் இன்றைக்கு இருந்தால் அ.தி.மு.க அடிமைகள் குனிந்து கும்பிடு போடுவதை பார்த்து தன்னுடைய பரிணாமக் கோட்பாட்டையே மறுபரிசீலனை செய்திருப்பார். குரங்கு நிலையில் இருந்து மனிதனாக மாறிய விலங்கு தமிழ்நாட்டில் எப்படி மறுபடியும் முதுகெலும்பு இல்லாமல் குனிந்து கும்பிடு போடுகிறது என்பதைப் பார்த்து மண்டையைப் பிய்ச்சிருப்பார். ஜெயலலிதாவிற்கு வாய்த்த அடிமைகளிலேயே அதிகவும் குனியக் கூடிய அடிமையான பன்னீர்செல்வம் என்ற தேவர் குலக்கொழுந்து முதுகெலும்பு என்ற ஒன்றே இல்லாமல் ஜெயலலிதாவின் காலடியில் விழும்போது எல்லாவற்றையும் பொத்திக் கொண்டிருக்கும் இந்த அடிமயிர்க்காரரின் அபிமானிகள் ஒரு பெண் சாதிவெறியைப் பற்றி எழுதியவுடன் வாலை உயர்த்தி குரைக்கிறார்கள்.

இலங்கையில் இருக்கும் முற்போக்கு, பெண்ணுரிமை கருத்துக்களை எழுதும் ஒரு பெண்ணிற்கும் இவ்வாறு வசைச்சொற்களை எழுதி தமது வீரத்தை காட்டுகிறது ஒரு முட்டாள் கூட்டம். அவர் எழுதும் ஒரு வரியைக் கூட விளங்கிக் கொல்ள முடியாத இந்த புத்திசிகாமணிகள் தமது ஆணாதிக்கப் பன்றித்தனத்தை வசைகளாக எழுதி தமது முட்டாள்தனங்களை வெளிப்படுத்துகிறார்கள். இலங்கையில் மக்கள் கொல்லப்படுகிறார்கள்; ஒடுக்கப்படுகிறார்கள். தமது குடியிருப்பிற்கு பக்கத்தில் குப்பைகளைக் கொட்டி சூழலை நாசப்படுத்தும் இலங்கை அரசிற்கு எதிராக போராடிய மீதொட்டமுல்ல பகுதி பொதுமக்களை வன்முறை கொண்டு தாக்குகிறது இலங்கை அரசு.

சின்னக் குழந்தைகள்; தளர்ந்து போன உடலுடனும், சிதைந்து போன உள்ளத்துடனும் தாய்மார்கள்; தந்தைமார்கள் என்று காணாமல் போன தம் உறவுகளை தேடி நாடு எங்கிலும் மக்கள் கண்னீர் வழிந்த கன்னங்களுடன் போராடுகிறார்கள். இவை எதிலும் இந்த வீராதிவீரர்கள் கலந்து கொள்வது கிடையாது. அது மட்டுமில்லாமல் அவை பற்றிய செய்திகளைக் கூட தமது முகப்புத்தகத்தில் போடும் தைரியம் இல்லாத இந்தக் கோழைகள்; இவை எதற்கும் எதிராக ஒரு சின்னக் குரல் கொடுக்கக் கூட துணிவில்லாத இந்தக் கோழைகள் பெண்களிற்கு எதிராக ஒளித்திருந்து ஊளையிடுகிறார்கள்.

மதம், மொழி, இனம், சாதி பேசும் கூட்டம் இப்படித் தான் இருக்கும். ஏனென்றால் இவை எதற்கும் அடிப்படை, ஆதாரம் என்பவை என்றைக்குமே கிடையாது. முற்போக்காளர்கள் இந்த முட்டாள்தனங்களை மக்கள் முன் அம்பலப்படுத்தும் போது இந்த வெறியர்கள் பதறிப் போகிறார்கள். அறிவு கருத்து, உண்மை என்பவை இருந்தால் தானே அவர்களால் விவாதிக்க முடியும். மீசை இருக்கிறவன் வைச்சிக்கிறான்; இல்லாதவன் கரியால் வரையத்தானே வேண்டும். பாவம், அவங்கள் என்ன வைச்சுக் கொண்டா வஞ்சகம் பண்ணுகிறார்கள்