Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

எம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள்

மூசிப்பனி பெய்த காலையில் செம்மண்ணில் ஆழப் புதைந்த புகையிலைக் கன்றுகளை காற்று அசைத்துச் செல்லும். தூரத்தே பனைமரத்தில் இருந்து பச்சைக்கிளிகள் சிவத்துப் பழுத்த மிளகாய்களை கொத்திச் செல்ல தருணம் பார்க்கும். பெருவரம்பை தொட்டு நிற்கும் வெள்ளத்தை மேவித் தலை தூக்கி நெல்லுக் கதிர்கள் காற்றில் ஆடும். தம் உயிரையே உழைப்பாக கொடுத்த ஆண்களும், பெண்களும் அறுவடை செய்யும் நாள் விரைந்து வர ஆவலோடு பார்த்திருப்பர். இது தான் இலங்கையின் சாதாரண மனிதர்களின் சரித்திரமாக இருந்தது. அரிசி புடைக்கும் போது கொத்த வந்த கோழிகளை காதுத்தோட்டை கழற்றி எறிந்து பெண்கள் கலைத்தார்கள் என்று பழந்தமிழ் பாடல் ஒன்று புளுகுவது போல அவர்களது வாழ்க்கை இருக்கவில்லை. ஆனால் அவர்களால் மூன்றுநேரம் உண்ண முடிந்தது. பனையேறும் தொழிலாளி முதல் பானை வனையும் தொழிலாளி வரை எளிய மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.

ஆனால் அதிகாரத்துவம், முதலாளித்துவம் மனிதர்களை தம் போக்கில் வாழ விடுவதில்லை. முதலாளித்துவதற்கு ஏழை மனிதர்கள் என்பவர்கள் மலிவான உழைப்புக்கூலிகள். அவர்களது இராணுவத்தின் முன்னரங்குகளில் நின்று உயிரை விடுவதற்காக வளர்க்கப்படும் பலிக்கடாக்கள். இயற்கை என்பது ஏழைமனிதனின் வாழ்வு ஆதாரமாக, வசிப்பிடமாக இருக்கும் போது; முதலாளிகளிற்கு இயற்கை என்பது பணம் கொட்டும் கனிமச் சுரங்கமாக, உல்லாசவிடுதி கட்டும் இடமாக இருக்கிறது.

பிரித்தானிய காலனித்துவம் மலையகத்தின் மழை தரும் காடுகளை அழித்து பணப்பயிர்களான கோப்பி, தேயிலை, இறப்பர் போன்றவற்றை பயிரிட்டது. அந்த தோட்டங்களில் மலிவான கூலிகளாக வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் ஏழைமக்களை பொய் சொல்லி ஆசைவார்த்தை காட்டி அழைத்து வந்தது. இலங்கையின் இயற்கைச் சமநிலையை அடியோடு குலைப்பது பற்றியோ, நினைத்த நேரத்தில் திரும்பி வந்து விடலாம் என்று பொய் சொல்லி ஏழைமனிதர்களை அவர்களின் ஊர்களில் இருந்து அடுத்த நாட்டிற்கு கடத்தி வந்ததைப் பற்றியே பிரித்தானிய முதலாளித்துவம் எள்ளளவிற்கும் கவலைப்படவில்லை. அவர்களது ஒரே நோக்கமாக எவ்வளவிற்கு இயற்கையைச் சுரண்டி, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளைலாபம் பார்க்கலாம் என்பது மட்டுமாகவே இருந்தது.

இன்று ஒட்ட உறிஞ்சுவதால் மண்வளம் குறைந்து விட்டது, இலாபம் குறைந்து விட்டது. எனவே "தேயிலை, றப்பர் போன்ற விவசாயத்துறைகள் முன்னரைப்போன்று அதிக அந்நிய வருவாயை ஈட்டித்தரும் துறையாக இன்று காணப்படவில்லை. இத்துறையில் அதிக அளவிளான மனித உழைப்பு சக்தி வீணடித்து கிடக்கின்றது. மனித உழைப்பு சக்தியை வேறு துறைக்கு பயன்படுத்து குறித்து செயற்திட்டங்களை மேற்கொள்வதுடன், இந்த விவசாயத்துறையில் ஒரு நிர்வாக கட்டுமான மற்றும் அமைப்பு மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும" என்று காலனித்துவவாதிகளின் வாரிசுகளான நவகாலனித்துவக் கொள்ளையர்களும், அவர்களின் முகவர்களான இலங்கையின் ஆட்சியாளர்களும் “இலங்கை பொருளாதார மன்றம் 2016” என்னும் பெயரில் அடுத்த கொள்ளைக்காக திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்த வருடத்திற்கான இலங்கை அரசின் வரவு செலவுத்திட்ட அறிக்கையில் விவசாயத்தைப் பற்றி நிதியமைச்சர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கௌரவ சபாநாயகர் அவர்களே, ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் விவசாய சமூகத்தின் நன்மை கருதி பல்வேறு நன்மைகளை வழங்கியுள்ளன. இப்பாராளுமன்றத்தினால் உரமானியம், காணி, தொழில் நுட்ப உதவிகள், விதைகள் மற்றும் பல்வேறு நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், இன்று எம்மிடம் என்ன உள்ளது? விவசாயத் துறையிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கிடைத்த பங்களிப்பு படிப்படியாகக் குறைந்து வந்துள்ளது. ஒரு ஹெக்டேயருக்கு கிடைக்கப் பெற்ற விளைச்சல் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டதனால், எமக்கு சர்வதேச ரீதியாக போட்டி போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது".

"நெல் விவசாயிகளுக்கு எந்த அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும் கூட, அவர்கள் எமது நாட்டில் இன்னும் உதவிகளில் தங்கி வாழும் ஒரு பிரிவினராகவே உள்ளனர். அதே போல, நுகர்வோருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் கிடைக்கப்பெறவில்லை. விவசாயகளுக்கோ அல்லது நுகர்வோருக்கோ எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் கிடைக்காவிட்டால், விவசாயி மற்றும் நுகர்வோன் எனும் இரு தரப்பினரும் அதிக அளவில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் எமது விவசாய உபாயங்கள் தொடர்பாக மீண்டும் சிந்திப்பதற்கு உங்களை நான் வலுப்படுத்துகின்றேன்.

தற்போது வழங்கப்படும் உரமானியத்தினை சிறிய அளவிலான நெற்செய்கைப் பண்ணும் விவசாயிகளுக்கு மாத்திரம் வழங்குமாறு முன்மொழிகின்றேன். அதன் பிரகாரம், நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயர் வரை சிறு போகம் மற்றும் பெரும் போகம் ஆகிய இரண்டு போகங்களும் உள்ளடங்கக் கூடிய வகையில் வருடாந்தம் கூடியது 25,000 ரூபாவிற்கு உட்பட்டு காசு நன்கொடை ஒன்று வழங்கப்படும்".

இலங்கையில் இது வரை உரம் மானிய விலையில் விற்கப்பட்டது. இனி அதை இல்லாமல் செய்து வருடத்திற்கு இருபத்தைந்தாயிரம் மட்டும் கொடுக்கப் போகிறார்கள். இலங்கையின் இன்றைய விலைவாசியில் இருபத்தைந்தாயிரம் என்பதற்கு என்ன மதிப்பு இருக்கிறது. இலங்கை நிதி அமைச்சு 50 கிலோ கிராம் கொண்ட ஒரு யூரியா உரப்பையை நெல் விவசாயிகளிற்கு 350 ரூபாவிற்கும், மற்றைய பயிர்கள் செய்பவர்களிற்கு 1250 ரூபாவிற்கும் விற்பதற்கும் தீர்மானித்திருக்கிறது. வெங்காயம் விளைவிக்கும் ஒரு தோட்டக்காரர் சராசரியாக 400 கிலோகிராம் யூரியாவை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்துகிறார். இலங்கை அரசு கொடுக்கும் 25000 ஆயிரத்தில் 10000 ரூபா ஒரு ஏக்கருக்கே போய்விடும். எனவே செலவுகளை சமாளிக்க முடியாமல் அவர் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். வேறு வாழ்வாதாரம் இல்லாமையால் விவசாயிகள் நிலத்தை விற்பார்கள். நகரங்களிற்கு இடம் பெயர்வார்கள். பெருநிறுவனங்களில், தொழிற்சாலைகளில் மலிவான கூலிக்கு தமது உழைப்பை விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதைத் தான் முதலாளித்துவம் எதிர்பார்க்கிறது. மக்கள் கிராமங்களில் இருந்து தம் சுய தொழில்களை செய்து வாழ்க்கை நடத்துவதனால் அரசிற்கு வரிகளினால் பெருமளவிலான வருமானம் கிடைப்பதில்லை. விவசாயிகள் விவசாயச்செலவுகளை சமாளிக்க முடியாமல், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்த முடியாமல் நிலங்களை விற்கும் போது அவர்களின் நிலங்கள் பெரும் பண்ணை முதலாளிகளிற்கு விற்கப்படும். அவர்களில் ஒருபகுதியினர் அந்த பண்ணைகளில் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள். ஒரு பகுதியினர் நகரத்திற்கு குடிபெயர்ந்து தொழிற்சாலைகளில், சேவைத்துறைகளில் வேலை செய்வார்கள். முதலாளித்துவத்தின் இறுக்கமான பிடிகளிற்குள் அவர்கள் வரும் போது அவர்களின் உழைப்பு மலிவுவிலையில் உறிஞ்சப்படும். அவர்கள் அரசிற்கு வரிகட்டும் பொறிமுறைக்குள் வந்து விடுவார்கள்.

ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவத்தை அழித்துக் கொண்டு முதலாளித்துவம் மேல் எழுந்த காலகட்டங்களில் ஐரோப்பிய சிறுவிவசாயிகளிற்கும், கைவினைஞர்களிற்கும் இது தான் நடந்தது. ஐரோப்பாவின் கிராமங்களை அழித்துக் கொண்டு தான் பெருநகரங்கள் எழுந்தன. சமுகத்தின் பெரும்பிரிவினரான உழைக்கும் மக்களை சுரண்டி சிறுபிரிவினரான முதலாளிகள் செல்வத்தை குவித்தார்கள். இதைத் தான் "புதிய சமுக வளர்ச்சி என்பது, கடந்த 2500 வருடங்களில், பெரும்பான்மையின் அழிவில் சிறுபான்மையின் வளர்ச்சியாகவே இருந்துள்ளது. இன்று இந்த அழிவு முன் எப்போதையும் விட பெரிய அளவில் உள்ளது" என்று ஆசான் ஏங்கெல்ஸ் பதிவு செய்கிறார்.

“இலங்கை பொருளாதார மன்றம் 2016” என்னும் பெயரில் இலங்கை அரசும், புதிய உலக ஒழுங்கமைப்பு என்னும் தீவட்டி கொள்ளைக்காரர்களும் சேர்ந்து இலங்கை மக்களை சுரண்ட வைத்திருக்கும் திட்டங்களை கீழே காணலாம்.

1. இலங்கையில் வருமானத்திற்கு ஏற்றவகையில் நகரமயமாக்கல் நடக்காத சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கிராமங்களை நகரமயமாக்கல் குறித்து உடனடியாக வேலைத்திட்டத்தை உருவாக்கல்

2. சுற்றுலா, கணணி அறிவு, புதிய தயாரிப்பு தொழில்நுட்பம் ஆகியவை வளர்த்தெடுக்கப்பட்டு சகல பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கும் இன வேறுபாடுகளை கடந்து வேலைகள் வழங்கும் பொறிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.

3. கொழும்பை அண்டியுள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளை, நிறுவனங்களை நாடு முழுவதும் பரவல் படுத்தும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டங்களை வகுத்து செயற்லாற்றுதல்.

4. மேலும் இத்திட்டங்களை அமூல்படுத்த நாட்டில் அறவிடப்படும் வரி வீதத்தை கூட்ட வேண்டும்

இவர்கள் சொல்வது போல் சிறுவிவசாயம், சிறுகைத்தொழில்கள் என்பன நட்டம் தரும் தொழில்களாகவா இருக்கின்றன? இவர்களின் பெருமுதலாளிகளிற்கு சார்பான கட்டற்ற இறக்குமதிக் கொள்கைகளும், மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடிக்கும் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளுமே நாடு வறுமையில் மூழ்குவதற்கு காரணமாக இருக்கின்றன. கடல் சூழ் இலங்கை கரைக்கு பதப்படுத்தப்பட்ட தகரங்களில் அடைக்கப்பட்ட மீன் உணவுகளை இறக்குமதி செய்கிறார்கள். ஆழ்கடலில் சீன, இந்திய பெரும் கப்பல்கள் ஒரு சிறு மீன் குஞ்சைக் கூட விடாமல் வாரி எடுக்கிறார்கள். தென்னந்தோட்டங்கள் நீக்கமற நிறைந்து வளம் கொழிக்கும் நாட்டிற்கு இந்தியாவின் கேரளாவில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்கிறார்கள்.

அதிகார வர்க்கம் தான் கொள்ளையடிப்பது போதாது என்று தமது சம்பளங்களை ஒவ்வொரு வருடமும் கூட்டிக் கொண்டே செல்லும் நாட்டில், பணவீக்கம் அதிகரித்து விலைவாசிகளை உயர்த்தி வைத்திருக்கும் நாட்டில் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் விலை மட்டும் குறைத்து மக்களிற்கு சேவை செய்கிறார்களாம். "கௌரவ சபாநாயகர் அவர்களே, விவசாயிகளின் உற்பத்திச் செலவினையும், நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தினையும் கருத்திற் கொண்டு, கீரி சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 50 இற்கும், சம்பா அரிசி ரூபா 41 இற்கும், நாட்டு அரிசியினையும் (குத்தரிசி), ஏனய வகை அரிசியினையும் ஒரு கிலோ ரூபா 38 எனும் அடிப்படையில் நெல்லிற்கு உத்தரவாத விலையொன்றினை வழங்குவதற்கு முன் மொழிகின்றேன். இதன் பயனாக நுகர்வோர் ஒரு கிலோ அரிசியினை சராசரியாக 65 ரூபாவிற்கு விற்கு பெற்றுக்கொள்ள முடியும்". அதாவது கடந்த வருடத்தை விட விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து மக்களிற்கு சேவை செய்யப் போகிறார்களாம் இந்த கொள்ளையர்கள்.

இந்த கொள்ளைக்கூட்டத்தினால் தான் விவசாயமும், தொழில்களும் அழிகின்றன. 1970 களில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக்கட்சிகளும் அமைத்த கூட்டரசாங்கத்தில் தேசிய முதலாளித்துவம் பொருளாதாரக் கொள்கையாக இருந்தது. அதாவது பன்னாட்டு நிறுவனங்களிற்கு அனுமதி இல்லை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி இல்லை என்பது பொருளாதாரக் கொள்கையாக இருந்தது. எவ்வளவோ குறைபாடுகள், சுதந்திரக் கட்சியின் வழக்கமான அரசியல்வாதிகளின் கொள்ளைகள் என்பன இருந்த போதும் தேசிய முதலாளித்துவக் கொள்கை பல வெற்றிகளைக் கண்டது.

கிடைத்த ஒரு சிறு துண்டு நிலத்தில் கூட பயிரிட்டார்கள். கூட்டுறவுச் சங்கங்கள் சிறு கைத்தொழிற்சாலைகளில் புதுப்புது தொழில்முயற்சிகளை ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டு வணிக இதழ்களை தடை செய்தனால் வீரகேசரி போன்ற நிறுவனங்கள் இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்களை நூல்களை வெளியிட்டார்கள். இவ்வாறான முன்னுதாரணம் நமது நாட்டிலேயே இருக்கும் போது இவர்கள் உலகம் முழுக்க மக்களை கொள்ளை அடித்து, கொலை செய்யும் நவதாராளவாத அயோக்கியர்களிற்காக இலங்கை மக்களின் உழைப்பையும், உரிமைகளையும்,நாட்டையும் விற்கப் போகிறார்கள்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசை திரிந்து தெற்கு ஏகினும்

தற்பாடிய தளி உணவின்

புள் தேம்பப் புயல் மாறி

வான் பொய்யினும் தான் பொய்யா

மலைத் தலைய கடல் காவிரி

புனல் பரந்து பொன் கொழிக்கும்

என்று பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார், என்றும் பொய்யாக் காவிரியை பாடுகிறார். இன்று இந்தியாவில் இதே நவதாராளவாத கொள்ளையர்களால் வான் பொய்யினும் தான் காவிரிக் கரையின் விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு நகரங்களில் கூலிவேலை செய்து நடைபாதையில் வாழ்கிறார்கள். பசியில் எலிக்கறி உண்கிறார்கள். கடன் சுமை தாங்காமல், வாழ்விற்கு வழி இல்லாமல் தற்கொலை செய்கிறார்கள். இப்படி மக்களை வதைக்கும் இந்த அயோக்கியர்களின் திட்டங்களைத் தான் அபிவிருத்தி என்று பொய் சொல்லி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்போகிறார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சி என்ற இரு எதிரிக்கட்சிகள் இன்று கூட்டுச் சேர்ந்து அரசு அமைத்திருப்பது இந்த சர்வதேசக் கொள்ளையர்கள் இலங்கையை தடையின்றி சுரண்டவதற்காகவே. தமிழ் மக்களின் நிலங்கள் ஏற்கனவே இராணுவத்திற்கு என்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு பகுதி நிலங்கள் சர்வதேச நிறுவனங்களிற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த திட்டங்கள் மிச்சமிருக்கும் நிலங்களையும் பறிக்கப் போகின்றன. தமிழ்மக்களின் எதிரிகளான இனவாதக் கட்சிகளின் மைத்திரியையும், ரணிலையையும் ஆதரித்துக் கொண்டு தமிழ்த் தேசியமும் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இத்திட்டங்களைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. மேற்குநாடுகளும், இந்தியாவும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் எஜமானர்கள் என்பதால் அவர்கள் இந்த திட்டங்களை எதிர்த்து ஒரு பெருமூச்சு கூட விட மாட்டார்கள்.

இலங்கையின் ஏழை மக்கள், உழைக்கும் மக்களால் மட்டுமே இந்தக் கொள்ளையர்களையும் அவர் தம் அடிவருடிகளையும் அடித்துத் துரத்த முடியும். அன்று ஒரு தேசிய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையினாலேயே குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது என்றால் உழைக்கும் மக்கள் அமைக்கும் ஒரு சமத்துவ அரசு ஏற்படுத்தும் மாற்றங்கள் மலையை விடப் பெரிதாக எழுந்து நிற்கும். இழப்பதற்கு எதுவும் இல்லாத எம்மக்களே பெறுவதற்கு இந்த உலகமே இருக்கிறது என்று சொன்ன எம் ஆசான்களில் வழியில் போராடி வெல்வோம்.

தொடர்புடைய ஆக்கங்கள்

1.  கூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்