Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

உங்கள் பதவி ஆசைகளிற்கு மக்களை பலியிடாதீர்கள், தமிழ்த்தலைமைகளே!!!

அன்று நட்சத்திரங்களும் கூட வேறு மாதிரியே இருந்தன என்று மறைந்த பாடகன் டேவிட் போவி பாடினான். எம் தமிழ்மக்களைப் பொறுத்தவரை ஒரு நாள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளுமே வேதனை தருவதாக, காணாமல் போன தம் உயிரின் உயிர்களை நினைத்து உள்ளம் சிதைய உருகும் நாட்களாகவே இருக்கின்றன. இரவுகளில் கேட்கும் சிறு சத்தங்கள் தம் மக்களின் காலடிச் சுவடுகளோ என்னும் நினைப்பில் அழுத களைத்த விழிகள் மூடினாலும் மனதுகள் விழித்திருக்க நித்திரையின்றி கழிகின்றன இராத்திரிகள்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ

விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்

என்று தன்னை சிறகிலிட்டு காப்பாற்றிய தாயை நினைத்து கண்ணீர் சிந்தி தீ இட்டான் பட்டினத்தான். ஆனால் நமது தாய்மார்கள் முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள் சுமந்து பெற்ற குழந்தைகளை கடத்தி காணாமல் போகச் செய்து அவர்களின் தாய்மாரை உயிருடன் தீ மூட்டுகிறது இலங்கை அரசு.

ஆனால் தமிழ்மக்களின் வாழ்வை காட்டிக் கொடுத்து தாம் பதவி பெறுவதையே தம் வரலாறாக வைத்திருக்கும் வலதுசாரி தமிழ் அரசியல்வாதிகளிற்கு மக்களின் துயரம் ஒரு பொருட்டாகவே என்றைக்கும் இருந்ததில்லை. மக்களின் துயரத்தில் தாம் குளிர் காய்கிறார்கள் இந்தப் பிழைப்புவாதிகள். பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடுந்தாக்குதலிற்கும் அஞ்சாது இந்திய தேசியக் கொடியை மண்ணில் விழ விடாது தூக்கிப் பிடித்து தன் உயிர் துறந்தான் தியாகி கொடி காத்த குமரன். சிங்களப் பேரினவாதத்தின் சிங்கக் கொடியை தள்ளாத வயதிலும் தாங்கிப் பிடித்தார் அய்யா சம்பந்தன். இப்படி சிங்கக்கொடி காத்த தியாகி சம்பந்தனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; பொன்னம்பலம் குடும்பத்து தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி; பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு தமிழ் மக்கள் நிலை கண்டு துடித்து முதலமைச்சரான அய்யா விக்கினேஸ்வரன், ஆயிரக்கணக்கான எம்மக்களைக் கொன்று அமைதியை நிலைநாட்டிய இந்திய அமைதிப்படையுடன் தோளோடு தோள் நின்று தமிழ்மக்களிற்கு சேவை செய்த சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களின் தமிழ் மக்கள் பேரவை போன்ற தமிழ் அரசியல் அமைப்புக்கள் தமிழ் மக்களை பலி கொடுக்கும் தம் அரசியலை எந்த விதத் தயக்கமுமின்றி தொடருகின்றன.

தம் குழந்தைகளை ஒரு முறையேனும் தாம் காண உதவி செய்யுங்கள் என்று நம் மக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நவநீதம் பிள்ளையின் காலில் விழுந்தார்கள். யாழ்ப்பாணத்திற்கு வந்த டேவிட் கமரோனிடம் கதறி அழுதார்கள். மகிந்த ராஜபக்ச, மைத்திரி சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்கா என்று இத்துயரங்களிற்கு எல்லாம் காரணமானவர்களிடம் கூட கெஞ்சிக் கேட்டார்கள். தம் உயிரின் உயிர்களை ஒரு முறை மறுபடியும் காண எவர் பின்னாலும் ஓடிச் செல்லும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்களை தமது பதவிப் போட்டிகளிற்காக, அரசியல் பிழைப்பிற்காக பகடைக் காய்களாக பாவிக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.

அண்மையில் கிளிநொச்சியில் காணாமல் போனவர்களிற்காக ஒரு பிரிவு தமிழ் அரசியல்வாதிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட மக்களிடம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கொடுத்த பதாகைகளில் இந்த கொடுமைகளிற்கு காரணமான இலங்கை அரசிடம் நியாயம் கேட்கப்படவில்லை. தமது போட்டியாளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்த பதாகைகளை அந்த மக்களிடம் கொடுத்திருந்தார்கள். இலங்கை மக்களின் எதிரியான ஒடுக்கும் இலங்கை அரசிடம் நியாயம் கேட்கும் கோசங்களை எழுப்பாமல் தமது பதவிச் சண்டைகளிற்காக தம்மைப் போலவே தமிழ் மக்களின் துயரத்தில் குளிர் காயும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நியாயம் கேட்கச் சொல்லி கோசம் போட வைத்திருந்தார்கள்.

தமிழ் மக்களை கொலை செய்த பேரினவாத கட்சிகளுடன் கூட்டுக்கலவி செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்னும் துரோகிகள், அரசியல் பிழைப்புவாதிகள் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள்; தமிழ் மக்களின் வாழ்விலிருந்து துரத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் கேள்விக்கே இடமில்லை. ஆனால் தமது பதவிச் சண்டைகளை நடத்துவதற்காக இலங்கை அரசை விட்டுவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் இவர்களின் அரசியலும் அதே அளவு துரோகத்தனமானது தான்; இவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் போலவே பிழைப்புவாதிகள் தான்.

சமவுரிமை இயக்கத்தினரால் காணாமல் போனவர்களிற்கு நீதி வழங்கு!; அரசியல் கைதிகளை விடுதலை செய்! என்று இலங்கை அரசை எதிர்த்து போராட்டங்கள் யாழ்ப்பாணம் உட்பட இலங்கை முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. பிரகித் எக்னலிகொட போன்ற சிங்களமொழி பேசுபவர்களும் இலங்கை அரசினால் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்த மக்கள் விரோத அரசை எதிர்த்து இலங்கையின் எல்லா ஒடுக்கப்படும் மக்களையும் இணைத்து சமவுரிமை இயக்கம் போராடுகிறது. யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தின் போது அனுராதபுரத்தில் இருந்து பெளத்தபிக்குகள் கலந்து கொண்டு தமிழ்மக்களிற்கு நீதி வழங்கு! என்று முழக்கமிட்டார்கள்.

இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக போராடுவது தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தமிழ்மக்களின் எதிரிகளான பேரினவாதக் கட்சிகளுடன் கட்டித் தழுவும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு பிரச்சனையாக இருக்கிறது. "சமவுரிமை இயக்கம் இலங்கை அரசை எதிர்த்து போராடுகிறது. இப்போராட்டங்கள் இலங்கை அரசை கோபப்படுத்தி விடும். எனவே சமவுரிமை இயக்கத்தின் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம்" என்று பதவிகளிற்காக நாய்ச்சண்டை போடும் இரு தரப்பு தமிழ் அரசியல்வாதிகளும் மக்களை மிரட்டுகிறார்கள். ஆம், இலங்கை அரசை எதிர்ப்பது இரண்டு தரப்பிற்குமே வேண்டாத விடயமாக இருக்கிறது. தங்களிற்குள் சண்டை போட்டாலும் இலங்கை அரசை காப்பாற்றுவதில் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

தாங்கள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுவோம், எனவே சமவுரிமை இயக்கத்தினரின் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இவர்கள் தமது வழக்கமான பொய்களை சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் இலங்கை அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் வைத்து காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருடன் இல்லை என்று தெரிவித்திருக்கிறார். சுவிற்சலாந்தில் நடக்கும் உலக பொருளாதார மன்றத்தில் ரணில் பேசுகையில் "இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைகளில் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளை மக்கள் விரோத இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம் என்று பொன்னம்பலம் ராமநாதன் தொடக்கம் சிங்கக் கொடி காத்த தியாகி சம்பந்தன் வரை பொய் சொல்கிறார்கள். அது போலவே இலங்கையில் தமிழ் மக்களிற்கு மட்டுமல்ல எவருக்குமே பிரச்சனைகள் கிடையாது என்று டி.எஸ் சேனநாயக்கா முதல் ரணில் விக்கிரமசிங்கா வரையான இலங்கை மக்களின் எதிரிகள் பொய் சொல்கிறார்கள். ஆனால் இலங்கையின் மக்களோ மாறாத வறுமையிலும் ஒடுக்குமுறைகளின் மத்தியிலுமே தம் வாழ்வை வாழ்கிறார்கள். தமிழ் மக்களிற்கும் தீர்வுகள் என்றைக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைத்ததில்லை. இந்த இருதரப்பு பொய்யர்களையும் இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் இணைந்து துரத்தும் நாளே வறுமையை துரத்தும் நாள். இவர்களைத் துரத்தும் நாளே இனஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் நாள்.