Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை

சபரிமலை ஐயப்பன் கோவிலிற்கு பெண்கள் போகக் கூடாது என்று பாரம்பரியம் இருக்கிறதாம். ஏனென்றால் ஐயப்பன் பிரமச்சாரியாம். அதனாலே அவனிற்கு பக்கத்திலே பெண்கள் போகக் கூடாதாம். இந்திய உச்சமன்றம் வரைக்கும் வழக்குப் போய் பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களும் ஐம்பது வயதிற்கும் மேற்பட்ட பெண்களும் போகலாம் என்று வழக்கம் போல் பெண்ணடிமைத்தனத்துடன் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் மேன்மை தங்கிய நீதிபதிகள். ஏண்டா, ஐயப்பன் என்ன பெண்களிற்கு ஆரம்ப பாடசாலையும், முதியோர் பாடசாலையுமா நடத்துகிறார்?.

பத்து வயதிற்கும், ஐம்பது வயதிற்கும் இடைப்பட்ட பெண்களிற்கு மாதவிடாய் வரும், அதனாலே அனுமதிக்கக் கூடாது என்பது தான் இந்த அசிங்கம் பிடித்த இந்துமத அடிப்படைவாதிகளின் விஞ்ஞான விளக்கம். இந்த மண்டை கழண்டவர்களின் உளறல்களை வழிமொழிந்திருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம். மாதவிடாய் என்ற உயிரின் சுழற்சியை ஒரு வியாதியாக, தீட்டாக உளறுகிறது இந்த மூடர்கூட்டம்.

ஐயப்பனின் பாரம்பரியம், வரலாறு என்ன? பத்மாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கித் தவமிருந்தான். "பக்தா உன் தவத்தை மெச்சினேன்" என்று சிவன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். "நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து போக வேண்டும்" என்று பத்மாசுரன் கேட்க சிவன் பத்மாசுரனின் கருணையுள்ளத்தை கண்டு கனிந்துருகி வரம் கொடுத்தான். பத்மாசுரன் யதார்த்தமான ஆள். மேலும் அவன் யாழ்ப்பாணத்துப் பெண்கள் பொருட்கள் வாங்கும் போது எதையும் பரிட்சித்து பார்த்து வாங்குவதையும் பார்த்திருப்பான் போலே. எனவே அவன் "யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து போக வேண்டும்" என்ற வரத்தை கொடுத்த சிவனின் தலையிலேயே கை வைத்து டெஸ்ட் பண்ணிப் பார்க்க வெளிக்கிட சிவன் ஓட்டம் எடுத்தான். (இந்த இடத்தில் உங்களிற்கு வடிவேலின் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை). சிவனைக் காப்பாற்ற திருமால் அழகிய பெண்வடிவ மோகினி உருவெடுத்தான். மோகினியைக் கண்டு ஆசைப்பட்ட பத்மாசுரனிடம் "நீ ஊத்தையாக இருக்கிறாய், குளித்து விட்டு வா" என்று மோகினி சொல்ல தண்ணீரை எடுத்து தன் தலையில் வைத்த பத்மாசுரன் வரத்தின் படி எரிந்து போகிறான். என்ன இருந்தாலும் சிவனின் பேச்சு பேச்சாகத் தான் இருந்திருக்கிறது.

பத்மாசுரன் எரிந்ததைச் சொல்லப் போன திருமால் என்கிற மோகினியைக் கண்டு சிவன் காதலாகி சைட் அடிக்க பின்னாலே துரத்தினான். இப்ப மோகினி என்ற திருமால் ஓடத் தொடங்கினாள்(ன்). (இந்தக் கதையிலே யாராவது ஒருவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்). துரத்திப் போன சிவன் மோகினியின் கையைப் பிடிக்க ஐயப்பன் பிறந்தானாம். இப்படி இரு ஆண்களிற்கு, கையைப் பிடிக்க குழந்தை பிறந்தது என்று உங்களது பாரம்பரியம் சொல்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் கதையை அப்படியே எடுக்கக் கூடாது, அது இரு சக்திகளில் இருந்து ஐயப்பன் என்ற சக்தி பிறந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோசையை திருப்பி போடுகிறார்கள். பெண்களை சபரிமலைக்கு உள்ளே விடக் கூடாது என்ற பாரம்பரியத்தை மட்டும் வரிக்கு வரி கடைப்பிடிக்க வேண்டுமாம், அவர்களின் புராணங்கள் சொல்லும் கதைகள் அவர்களே சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ரொம்பவும் சின்னப்பிள்ளைத்தனமாக இருப்பதால் அதற்கு தத்துவ விளக்கம் கொடுப்பார்களாம். நாங்களும் காதிலே பூ வைச்சுக் கொண்டு மண்டையை ஆட்ட வேண்டுமாம்.

இந்த விவாதம் நடந்த தொலைக்காட்சியில் இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றிய விவாதமும் நடைபெற்றது. இஸ்லாமிய மதம் பெண்களை ஒடுக்கவில்லை என்று பேசிய பெண் ஐயப்பன் கோவிலிற்குள் பெண்களை விடக்கூடாது என்று இந்து மதவெறியுடனும், பகுத்தறிவு என்பதே இல்லாமலும் பேசிய இந்து மதப் பெண்ணின் இஸ்லாமியப் பதிப்பாக ஆணாதிக்கத்தை ஆதரித்து பேசினார். சவுதி அரேபியாவின் மக்காவில் உள்ள காபத்துல்லா காபா என்ற இறைவன் உறையும் இடத்திற்கு ஆண்கள், பெண்கள் யாரும் போகலாம்; ஆனால் மாதவிலக்கான பெண்கள் மட்டும் போகக் கூடாது என்று அவரும் ஐயப்பனைப் போல் அல்லாவிற்கும் மாதவிலக்கான பெண்கள் ஆகாது என்று விஞ்ஞானவிளக்கம் கொடுத்தார்.

முஸ்லீம் ஆண்கள் முஸ்லீம் பெண்களை விவாகரத்து செய்யும் போது மதகுரு மூன்றுமுறை "தலாக்" என்று சொன்னால் போதும் அந்த ஆணிற்கு விவாகரத்து கிடைத்து விடும் என்கின்ற மிகக் கொடுமையான பெண்ணடிமைத்தனத்தை அந்தப் பெண் கொஞ்சமும் கூச்சமின்றி ஆதரித்து பேசினார். அது சிலவேளைகளில் பிழையாக கையாளப் படுகின்றதென்றாலும் அது முஸ்லீம் மதத்தினதோ, குரானினதோ குற்றமில்லை அந்த மதகுருவின் குற்றமே என்று அவரும் தோசையை திருப்பிப் போட்டார். சரியாக எதாவது நடந்தால் அது மதத்தினால் நடக்கிறது, பிழை என்றால் அது மனிதர்களின் பிழையே தவிர மதத்தின் பிழை அல்ல என்ற புளித்துப்போன வாதத்தை, மதம் என்ற மடமையைக் காப்பாற்றும் பச்சைப்பொய்யை அவரும் எடுத்து விட்டார்.

எல்லாம் வல்ல கடவுள்கள் ஏன் பெண்களை மாதவிடாயுடன் படைக்க வேண்டும்?. நாளைக்கு இப்படி கேள்வி வரும், வழக்கு போடுவார்கள் என்பதை முக்காலமும் உணர்ந்தவர்கள் யோசித்து உலகைப் படைத்து இருக்கக் கூடாதா? ஆணையும், பெண்ணையும் இலங்கை இந்தியாவில் சிவனும், சவுதியில் அல்லாவும் சமமாக படைத்தார்கள் என்கிறீர்களே சரிபாதியான பெண் ஏன் மதகுருவாக வரமுடியாது என்பதை தயவு செய்து சொல்லுங்கள். முஸ்லீம் சரியத் சட்டப்படி திருமணம் செய்து கொள்பவர்கள் அந்த சட்டப்படி தான் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும், அதில் தவறு வருவதற்கு சட்டம் காரணமில்லை மதகுருதான் காரணம் என்கிறீர்களே, ஏன் ஒரு பெண் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது? இது மனிதனின் தவறா, கடவுள் தந்த சட்டம் என்று சொல்லி பெண்களை அடிமையாக்கும் உங்கள் மதங்கள் என்னும் பொய்களின் மோசடி.