Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

பேராசிரியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் - யாழ் பல்கலைக்கழகம்

தமிழ்ப்பண்பாட்டில் தனித்துவமான ஆராய்ச்சிகள் செய்து வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இனி மேல் பேராசிரியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்று அறிவித்திருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் தன் தலையாய பணியை கருத்தில் கொண்டு பேராசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையான கோவணத்தை மட்டுமே கட்டிக் கொண்டு வெள்ளிக்கிழமைகளில் வர வேண்டும் என்றும் வரும் காலங்களில் மற்ற நாட்களிலும் கோவணத்தை மட்டுமே கட்டிக் கொண்டு வர திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கூச்ச சுபாவம் உள்ள பேராசிரியர்கள் தமிழ்நாட்டில் வேட்டி, சாரம் என்பவற்றிற்கு அணியும் கோவணத்தை விட கொஞ்சம் நீளம் கூடிய லங்கோட்டை அணிந்து கொண்டு கவுண்டமணி படங்களில் வருவது மாதிரி பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சிறிது காலத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோவணமோ, லங்கோடோ டெனிம் துணியில் தைக்கக் கூடாது என்றும் முன்பு கூட்டுறவுச் சங்கக் கடைகளிற்கு வந்த பூக்கள் அச்சிடப்பட்ட சீத்தை துணிகளிலேயே பூப்போட்ட கோவணங்கள் தைக்க வேண்டும் என்று விதி இலக்கம் ஐந்து தெரிவிக்கிறது. ஏனென்றால் பேராசிரியர்கள் காதிலே பூ வைக்க மறந்தாலும் அந்த இடத்திலே பூ இருப்பதன் மூலம் அக்குறை தீர்க்கப்படும் என்றும் அவ்விதி கூறுகிறது.

எங்கு மயிர் வளர்க்கலாம், எங்கு மயிர் வழிக்கலாம் என்று யாழ் பல்கலைக்கழக மயிரியல் துறை ஆராய்ந்து வருவதாகவும் அந்த ஆராய்ச்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மயிரியல் துறைத்தலைவர் தெரிவித்தார். மயிர் ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை பேராசிரியர்கள் அசல் ஆனைக்கோட்டை நல்லெண்ணையை தில்லையம்பலம் கந்தையா கடையில் வாங்கி உடல் முழுக்க பூசிக் கொண்டு பளபளத்த படி வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (இவை நமது கற்பனை, ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இவை உண்மையாவதற்கு தமிழ் கூறு நல்லுலகில் சாத்தியம் இல்லை என்று கூறி விட முடியாது.)

பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சேலை கட்ட வேண்டும் என்ற ஒரு வரியில் எத்தனை பிற்போக்குத்தனங்கள் அடங்கியிருக்கின்றன. வெள்ளிக்கிழமை புனிதநாள் என்னும் இந்துத்துவம், சேலை கட்ட வேண்டும் என்னும் பெண்ணடிமைத்தனம் என்று ஒரு வரியில் ஒரு கூடை குப்பையை வாரிக் கொட்டியிருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் வேட்டி கட்ட வேண்டும் என்று இந்த பண்பாட்டுக்காவலர்கள் அறிக்கை விடவில்லை. ஆண்களை வெள்ளிக்கிழமை என்னும் இந்துமதப் புனிதத்தில் இருந்தும், பண்பாட்டு உடையான வேட்டியில் இருந்தும் விலக்கியது குறித்து வடிவேலோடும், வண்ணப்பொட்டுடனும் காட்சி தந்த அய்யா விக்கினேஸ்வரன், ஆறு திருமுருகன் போன்ற பக்த கோடிகள் பதறப் போகிறார்கள்.

ஏற்கனவே பழமைவாதப் பிற்போக்குத்தனங்களில் மூழ்கியிருக்கும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களை இன்னும் பின்னுக்கு தள்ளும் தந்திர அரசியலே இந்த பண்பாட்டுக் காவலர்களின் உண்மையான நிகழ்ச்சி நிரல். மக்கள் விரோத இலங்கை அரசின் கல்வியை தனியாருக்கு விற்கும் கள்ளத்தனத்தை எதிர்த்து இலங்கை எங்கும் மாணவர்கள் போராடுகிறார்கள். அந்த முற்போக்குப் போராட்டங்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து விடக்கூடாது என்பதற்காக இந்துமதப்புனிதம், தமிழ்ப்பண்பாட்டு உடை என்ற சகதிகளிற்குள் மாணவர்களை தள்ளி விடப்பார்க்கிறார்கள்.

இந்தியாவில் மோடியின் கேடிகளான இந்துமத வெறியர்கள் இந்துமதம், பாரதப்பண்பாடு என்று சொல்லிக் கொண்டு பல்கலைக்கழகங்களில் ஆடும் வெறியாட்டத்தின் பயங்கரவாத அரசியலால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிறுபான்மை இனங்களை, மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். முற்பொக்கு அரசியல், மாணவர்களின் உரிமை, மக்களின் பிரச்சனைகளிற்க்காக போரடும் மாணவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். உலகம் முழுக்க மதம், பண்பாடு என்று சொல்லிக் கொள்ளும் பிற்போக்குவாதிகளின் முகமூடிகளிற்கு பின் மக்கள்விரோதம் என்னும் பயங்கரவாதமே ஒழிந்திருக்கிறது.

தெலுங்கு தேச கலப்பு சோழர்களின் காலத்திலேயே தமிழ்ப்பெண்களின் உடையாக சேலை அணியும் வழக்கு ஏற்பட்டிருக்கிறது. மத்திய கால சோழர்களின் காலத்திற்கு முற்பட்ட சிற்பங்களில் மார்புக்கச்சையும் இடுப்பிலே ஒரு பாவாடையுமே காணப்படுகிறது. இது சிற்பிகளின் கற்பனையல்ல. இன்றும் பழந்தமிழ் சொற்களையும், பண்பாடுகளையும் வைத்திருக்கும் மலையாள தேசத்தில் இதை ஒத்த உடைகளை பெண்கள் அணிவதை இன்றும் காணலாம். இரவிக்கை என்று இன்று அழைக்கப்படுவதை குப்பாயம் என்ற பழந்தமிழ் சொல்லின் மூலம் இன்றும் அவர்கள் அழைப்பதன் மூலம் தமிழரின் உடைகள் குறித்த வரலாற்றை அறிந்து கொள்ளமுடியும்.

இன்றைக்கு பெண்கள் சேலை கட்ட வேண்டும் என்று சொல்லும் பண்பாட்டுவெறியர்களின் முன் தோன்றிய மூத்த குடிகளான சாதிவெறியர்கள் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் சேலை கட்டுவதையோ, இரவிக்கை போடுவதையோ அனுமதிக்கவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பெண்கள் மார்பை மூட சாதிவெறி அனுமதிக்கவில்லை. பெண்கள் தமது மார்பகங்களை மூடுவதற்காக தோள்சீலைக் கலகம் என்னும் போராட்டத்தை பல ஆண்டுகளாக இந்து சாதிவெறியர்களிற்கு எதிராக நடத்த வேண்டி இருந்தது. இந்துமதப்புனிதம் என்னும் கேவலம் பெண்களை எப்படி நடத்தியது என்பதன் அவல வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயப்பெண்கள் சேலையை மார்பு வரை கட்டினார்கள். அதைக் குறுக்குக்கட்டு என்று அழைப்பார்கள். ஆனால் சாதிவெறியர்களிற்கு அதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆடு, மாடுகளிற்கு உயர்ந்த மரங்களில் குழை, தழைகளை ஒடிப்பதற்காக வைத்திருக்கும் கொக்குத்தடியால் (கொக்குப் போல உயரமான தடி, முனையில் இரும்பாலான கத்தி போன்ற சத்தகம் இருக்கும்.) வீடுகளில் ஒழித்து நின்று கொண்டு தெருக்களால் போகும் பெண்களின் குறுக்குக்கட்டுகளை அறுத்து எறிவார்கள்.

நமது ஆச்சிகள் குறுக்குக்கட்டுடன் புல்லுப் புடுங்கினார்கள்; அரிசி புடைத்தார்கள். நமது பாட்டன்கள், பூட்டன்கள் வயலில் மண்வெட்டி பிடிக்கும் போது கோவணம் கட்டிக் கொண்டே மண்ணைக் கொத்தினார்கள். வள்ளத்தில் ஆறு முழத்து மரக்கலால் தாங்கும் போது கோவணமே கட்டியிருந்தார்கள். ஏறுபட்டி, தழைநாருடன் பனையிலும், தென்னையிலும் ஏறும் போது இடுப்பில் சிறு துண்டு தவிர வேறொன்றும் இருக்கவில்லை.

ஆதி மனிதர்கள் விலங்குகளின் தோல்களை அணிந்து கொண்டார்கள். அதிலிருந்து உடை என்பது காலநிலைக்கும், தொழில்களிற்கும் ஏற்ப வரலாறு முழுக்க மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஒருவரது உடை என்பது அவரது சுதந்திரம், அதில் எவரும் தலையிட முடியாது.. மதவெறியர்களும், மண்டை கழண்ட பிற்போக்குவாதிகளுமே மற்றவர்களின் சுதந்திரங்களில் தலையிடுவார்கள். தலிபான்கள் தாடி வளர்க்காதவர்களை கொலை செய்தார்கள். தமிழ்த் தலிபான்கள் தாடி வழிக்கச் சொல்கிறார்கள். இவர்களிற்காகத் தான் இரண்டாயிரம் வருடங்களிற்கு முதல் அய்யன் வள்ளுவன் "ஆணியே புடுங்க வேணாம்" என்பது போல ஒரு குறளை சொல்லிப் போயிருக்கிறான்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின் - அய்யன் வள்ளுவன் -