Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

காற்றையும், போராளியையும் கட்டிப் போட முடியுமா?

முன்னிலை சோசலிசக் கட்சித் தோழர் குமார் குணரத்தினத்திற்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நீதிமன்றம் ஒரு வருடச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சோசலிசத்தை தனது பெயரில் வைத்திருக்கும் நாடு, சரி நிகர் சமானமாக இலங்கை மக்கள் வாழ வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கை முழுக்க போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு போராளிக்கு சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது. கொலைகாரர்களும், நாட்டைக்கொள்ளை அடிப்பவர்களும், இனவெறி பேசி இரத்தம் சிந்த வைப்பவர்களும் இலங்கைத் திருநாட்டில் சுதந்திரமாக திரிய முடியும். ஆனால் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என்று எட்டு முழத்திற்கு பெயர் வைத்திருக்கும் நாட்டில் சோசலிச சமுதாயம் அமைக்க குரல் கொடுப்போர் சிறை செல்ல வேண்டும்.

தோழர் குமார் குணரத்தினம் விசா முடிந்து தலைமறைவாகியதால் இலங்கையின் காவல்துறை அவரைக் கைது செய்தது என்றும், குடிவரவுச் சட்டத்தை மீறியதற்காக அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை. குமார் குணரத்தினத்தின் கைதும், இப்போது வழங்கப்பட்டிருக்கின்ற தண்டனையும் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல. நீதிமன்ற தீர்ப்புக்கும் இலங்கை அரசிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. "நாங்கள் நீதித்துறையில் தலையிடாத உத்தம புத்திரர்களாக்கும்" என்று இந்த மைத்திரி-ரணில் அரசு மண்டையை மாத்திக் கொண்டு வருகிறது.

ஆனால் குமார் குணரத்தினம் ஒரு கம்யுனிஸ்ட். அவரும் அவரது கட்சியாகிய முன்னிலை சோசலிசக் கட்சியும் இலங்கை மக்களின் விடிவிற்காக இலங்கையின் உழைக்கும் ஏழை மக்களுடன் இணைந்து அயராது தொடர்ந்து போராடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். "நொறுக்கித் தரை மட்டமாக்கப்பட்டதான, எரித்து நீறாக்கப்பட்டதான அழித்தொழிப்பின் பின், இடதுசாரிய அரசியல் மேல் ஊக்கம் சரிந்து கொண்டிருந்த காலப்பகுதியில் மீண்டும் சிவப்பு கொடியை இந்த நாட்டில் உயர வைக்க வேண்டும் என்ற நோக்கோடு நானும் வேறு சிலரும் இடதுசாரி அரசியல் இயக்கத்தினை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானத்தை எடுத்துக் கொண்டோம்" என்ற அவர்களின் இலட்சியம், மக்கள் விரோத இலங்கை அரசை என்றோ ஒரு நாள் மக்கள் முன் மண்டியிட வைக்கும் என்ற அச்சத்தினாலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

குமார் குடிவரவுச் சட்டத்தை மீறியது தான் காரணம் என்றால் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எப்படி கைது செய்யப்படாமல் சுதந்திரமாக இலங்கையில் இருக்க முடிகிறது? குமரன் பத்மநாதன் சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போலினாலும், இலங்கை அரசுகளாலும் ஆயுதக் கடத்தல்களிற்காக தேடப்பட்டவர். ராஜீவ் காந்தி கொலைக்காக இந்திய அரசால் தேடப்படுபவர். 2009 மே பதினெட்டாம் திகதிக்குப் பின்பு புலிகள் அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டு சர்வதேச ஊடகங்களில் செவ்விகள் வழங்கியவர். இவரை ஏன் குடிவரவுச்சட்டத்தை மீறியதற்காக கைது செய்யவில்லை? தமிழ்மொழி பேசுபவர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக, எந்த விதக் குற்றங்களும் செய்யாத எத்தனையோ பரிதாபத்துக்குரிய மனிதர்கள் ஆண்டுக்கணக்காக சிறைகளில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டில், இவர்களால் தேடப்பட்ட ஒருவர், புலிகளின் தலைவர்களில் ஒருவர் எப்படி சுதந்திரமாக திரிய முடிகிறது?

அமெரிக்காவில் 7/11 (Seven to Eleven) என்ற சிறிய அளவிலான கடை ஒன்றில் முகாமையாளராக வேலை பார்த்த கோத்தபாய ராஜபக்ச 2005 இல் மகிந்த ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு நாடு திரும்பினார். பத்து வருடங்களிற்குள் பல கோடிகளிற்கு அதிபதியாக இருக்கிறார். இத்தனை பில்லியன்கள் பணமும் எப்படி வந்தது என்று நல்லாட்சி விசாரிக்கவில்லை. இருபது கொள்கலன்களில் மூவாயிரத்திற்கும் அதிகமான ஆயுதங்கள் இவர் பிரதான பங்காளராக இருக்கும் அவான்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டது. மைத்திரி அரசின் சுகாதார அமைச்சர் ராஜித செனிவிரத்தின, தனிப்பட்ட இராணுவம் ஒன்றை கோத்தபாய ராஜபக்ச வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார். வழக்கம் போல் வழக்கு எதுவும் இல்லை.

மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச என்ற இந்த கொலைகார நாய்களின் தமிழ்மக்களின் மீதான இனப்படுகொலைகளை இந்த அரசு மட்டுமல்ல எந்த ஒரு இலங்கை அரசும் விசாரிக்கப் போவதில்லை. ஆனால் ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட கடத்திக் காணாமல் போனது தொடக்கம் எண்ணற்ற கடத்தல்களிற்கு, கொலைகளிற்கு மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச என்ற இரு கொலைகாரர்களின் மீதும் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் அன்புக்குரியவர்கள் தம் உடலும், உயிரும் தேய தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஊழலில் கொழுத்த ராஜபக்ச குடும்ப கொலைகாரர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இது ஏன் இலங்கை அரசிற்கோ, அதன் கடமை தவறாத காவல் துறைக்கோ, கண்ணியம் மிக்க நீதித்துறைக்கோ கண்ணில் படவில்லை?

ஒரு சிறிய தொலைத்தொடர்பு கடை வைத்திருந்த விமல் வீரவன்ச 2010 இல் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சராகிய ஐந்து வருடங்களில் இரண்டு வீடுகள், பதின்மூன்று ஏக்கர் நிலத்தில் 21 படுக்கையறைகள் கொண்ட விடுதி, களுத்துறையில் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலை என்று பரந்த சொத்துக்களை வாங்கியது எப்படி என்று எவரும் கேட்கவில்லை. வீரவன்சவின் மனைவி சிறிசா உதயந்தி நாலைந்து பெயரில் கடவுச்சீட்டுக்களை வைத்திருந்ததிற்காக வழக்குப் போடப்பட்டது. ஆனால் நாலைந்து கடவுச்சீட்டுக்களை வைத்திருந்ததற்காக அவரோ, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அக்கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொடுத்த விமல் வீரவன்சவோ கைது செய்யப்படவில்லை. ஒருவர் நாலைந்து பெயரில் பாஸ்போர்ட் வைத்திருப்பது இலங்கை குடியரசின் குடிவரவுச் சட்டத்தின் படி குற்றமில்லை போலிருக்கிறது.

"தொலைக்காட்சி வரலாற்றில்" முதல் முறையாக என்று வீணாய்ப் போன தமிழ்ப்படங்களிற்கு விளம்பரம் கொடுத்து தமிழ்த் தொலைக்காட்சிகளில் போடுவது போல, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு கட்சிகளும் இணைந்து மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கூட்டமைத்தார்கள். மகிந்த ராஜபக்ச அரசு ஊழலும், சர்வாதிகாரமும், குடும்ப அரசியல் ஆதிக்கமும் அடி முதல் நுனி வரை பரவிக் கிடக்கிற அரசு என்று உலகம் முழுக்க சொன்ன போதும் கடைசி வரை மகிந்த ராஜபக்ச அரசில் கட்டித் தழுவிக் கிடந்த மைத்திரி சிறிசேனாவும், மற்றும் சில மங்குனி அமைச்சர்களும் திடீரென விழித்து எழுந்தார்கள்.

"இலங்கை, இந்தியா, மலேசியா எங்கும் புகழ் பெற்றது" என்று கோபால் பற்பொடி விளம்பரம் சொல்லி விற்பது போல "அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா, அரபு நாடுகள் எங்கும் கூவிக் கூவி இலங்கையையும், மக்களின் உழைப்பையும் மலிவு விலைக்கு விற்ற ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து நாட்டை முதலாளித்துவ சுரண்டலில் வைத்திருந்து மக்களை மாறாத வறுமையில் வாழ வைத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இவர்களுடன் கூட்டுச் சேர்ந்தது. "எங்கெங்கு காணிலும் ஊழலடா" என்று மைத்திரியும், ரணிலும் சேர்ந்து கண்டு பிடித்து மகிந்த ராஜபக்சவின் ஊழலிற்கு எதிராக போர் தொடுத்தார்கள். "நல்லாட்சி அமைப்போம்" என்று வாக்கு கேட்டார்கள்.

இன்று இவர்கள் வென்று வந்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. கெட்ட ஆட்சியான மகிந்த ஆட்சியின் ஊழல்களிற்கு எதிராக எந்த ஒரு வழக்கும் நல்லாட்சியில் போடப்படவில்லை. எவரும் கைது செய்யப்படவில்லை. மகிந்த ராஜபக்சாவும், அவனது குடும்பமும், அவனது அடியாட்கள் கூட்டமும் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இரண்டு எதிர், எதிரான கட்சிகள் கூட்டுச் சேர்ந்து எதிர்த்த அயோக்கியர்களை விட, அவர்களின் ஊழல்களை விட குமார் குணரத்தினம் என்ற இலங்கைக் குடிமகன் இலங்கையிலே தங்கியிருப்பது ஒரு வருட தண்டனைக்குரிய குற்றமாக இருக்கிறது.

இந்த வாரத்தில் தன்னைப் பிரிந்திருக்கும் தனது முன்னாள் மனைவியின் கவனத்தை கவர்வதற்காக எகிப்திய விமானம் ஒன்றைக் கடத்திய முஸ்தபா என்ற "போலித் தீவிரவாதியின்" கடத்தல் நாடகத்தின் போது முஸ்தபாவிற்கு பக்கத்தில் பென் இன்ஸ் என்ற பிரித்தானியர் சிரித்தபடி நின்று புகைப்படம் எடுத்தார். அது போல தோழர் குமார் குணரத்தினம் கைது குறித்து நச்சுத்தனமாக செய்தி வெளியிட்டிருக்கும் போலி ஊடகங்களையும், முகநூல் புரட்சியாளர்களையும் பார்த்து நாம் சிரிக்க வேண்டியிருக்கிறது. "இடுக்கண் வருங்கால் நகுக" என்று அய்யன் வள்ளுவன் துன்பம் வரும் வேளையில் கூட சிரிக்கச் சொல்லியிருக்கும் போது இந்த வெருளிகளின் கோமாளித்தனங்களைப் பார்த்து நாம் சிரிக்காமல் என்ன செய்ய முடியும்.

குமார் குணரத்தினத்தின் சகோதரரான ரஞ்சிதன் குணரத்தினம் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவராக இருந்த வேளையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுவுடமைக் கொள்கைகளின் காரணமாக அவர்களுடன் இணைந்து கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக இருந்தார். கட்சியின் இரண்டாவது போராட்ட எழுச்சிக் காலமான எண்பதுகளின் கடைசியில் பிரேமதாசவின் கொலைகார்களால் கொல்லப்பட்டார். குமார் குணரத்தினமும் பேராதனை பொறியியல் பீட மாணவன். தனது தமையனைப் போலவே இடதுசாரிக் கொள்கைகளின் மீது பற்றுக் கொண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்தவர். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல், நடைமுறைத் தவறுகளை விமர்சித்து முன்னிலை சோசலிசக் கட்சியை தோழர்களுடன் சேர்ந்து உருவாக்கியவர்.

அவர் விரும்பியிருந்தால் அவுஸ்திரேலியாவிலேயே வாழ்ந்திருக்கலாம். ஆனால் "முப்பத்திநான்கு வருடங்களாக இடதுசாரிய அரசியலில் என்னுடைய வாழ்க்கையினை தொடர்ந்த நிலையில், நான் வலிமையுடனும் நம்பிக்கைப்பற்றுடனும் அதனையே தொடர்வேன். நான் இங்கு வலிமை எனக் குறிப்பிடுவது யாதெனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குரிய பிரச்சனைகள் எதனையும் இந்த அமைப்பினால் தீர்க்க முடியாது என்ற தத்துவத்தின் மற்றும் தர்க்கவியல் நிலையாகும். நான் நம்பிக்கைப்பற்று எனக் கூறும்போது, சோசலிசத்துக்கான போராட்டத்தில் தம்முயிரைத் தியாகம் செய்த தோழர்களோடு எனது மனச்சாட்சியை இணையாவதை குறிப்பிடுகிறேன்" என்று அவர் தனது நீதிமன்ற உரையில் குறிப்பிட்டது போல அவர் செயலிலும், நடைமுறையிலும் இருப்பதால் தான் இலங்கையின் மக்கள் விரோத அரசுகள் அவரைக் கடத்துகின்றன; சிறையில் அடைக்கின்றன. குள்ளநரிகள் ஊளையிடுகின்றன.

தன் தலைமகனை மரணத்தின் கரிய நிழலிற்கு காவு கொடுத்த வீரத்தாய் தன் இரண்டாவது மகனும் கொடுஞ்சிறைக்கு போவதை கலங்கிய கண்களுடன் பார்க்கிறார். கட்டியணைத்து முத்தமிட்ட தாயைக் கலங்காதே என்பது போல கை விலங்கிட்ட நிலையிலும் கண் மலர பார்த்து சிரித்து நம்பிக்கை அளிக்கிறார். ஆம்; காற்றையும், காலனைக் காலால் உதைக்கும் போராளியையும் கொடுஞ்சிறை என்ன செய்ய முடியும்!