Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சம்பந்தன் அய்யா; நீங்கள் கெட்டவரா, ரொம்ப கெட்டவரா!!

விடிவு என்பது இல்லாத இருள் வெளிகளில் தமது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் கையறுநிலை பற்றி சிறையில் இருந்து வெளிவந்த இளைஞர் ஒருவர் அய்யா சம்பந்தனிடம் முறையிட்டு அவர்களின் விடிவிற்கு எதாவது செய்யுங்கள் என்று இறைஞ்சுகிறர். சிறையில் தமது வாழ்வைத் தொலைத்த எம்மக்களின் துயர வாழ்வை, தாங்க முடியா வேதனைகளை தவிப்புடன் அவர் சொல்ல அய்யாவோ பத்திரிகை படித்த படி பாராமுகம் காட்டி "ஏதுக்கு என்னிடம் வந்தாய்" என்பது போல் எதோ சொல்கிறார்.

இந்தக் காணொளி வெளி வந்ததும் பலரும் சம்பந்தன் அய்யாவை திட்டுகிறார்கள். ஆனால் அய்யாவோ, அவர் தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இன்றைக்குத் தானா இப்படி பயங்கரமாக இருக்கிறார்கள்? தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவையும் அவற்றின் தொடர்ச்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் என்றைக்கு மக்களின் பக்கம் நின்றார்கள்? என்றைக்கு மக்களின் பிரச்சனைகளிற்காக மனப்பூர்வமாக போராடினார்கள்? "எவ்வளவு ஏமாத்தினாலும் தாங்குறாங்களே, இவங்க ரொம்ப இளிச்சவாயன்களடா" என்று அவர்கள் எம்மை ஏமாற்றிக் கொண்டு இருப்பதை ஏற்றுக் கொண்டு இருப்பது நமது தவறில்லையா?

புழுதிப் படுக்கையில் புதைந்த மலையக மக்கள், ஆழப் புதைந்த தேயிலைச் செடியின் அடியில் புதைந்த மக்கள் என்று மலையகத் தமிழ்மக்களின் துயர வாழ்வை பேராசிரியர் நித்தியானந்தன் பதிவு செய்கிறார். பசியிலும், பட்டியினிலும், குளிரிலும் மலைக்காடுகளில் தம் வாழ்வைத் தொலைத்த அம்மக்களின் குருதி தான் தான் நாம் குடிக்கும் தேனீரின் சிவப்பு நிறம். இலங்கை சுதந்திரம் அடைந்த பின் நடந்த முதலாவது தேர்தலில் மலையக மக்கள் தொண்டைமானின் தலைமையில் இருந்த இலங்கை இந்திய காங்கிரஸின் எட்டு வேட்பாளர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்தனர். இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாசக் கட்சியின் பன்னிரண்டு பிரதிநிதிகள் வெற்றி பெறுவதற்கு மலையக மக்களின் வாக்குகள் காரணமாக இருந்தது. (Plantation Tamils - The oppressed People of Sri Lanka, S. Makenthiran) அக்காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் இருந்த நூற்றியொரு தொகுதிகளில் இருபது தொகுதிகளை மலையக மக்களின் வாக்குகள் தீர்மானித்ததும் அவர்கள் தமது தொழிலாளர் வர்க்க குணாம்சத்தினால் இடதுசாரிகளிற்கு வாக்களித்ததும் இனவாதிகளும், முதலாளித்துவக் கொள்ளையர்களுமான ஐக்கிய தேசியக் கட்சியை அதிர வைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான டி.எஸ். சேனநாயக்கா என்ற சிங்கள இனவாதத்தின் பிதாமகன் "இலங்கை குடியுரிமைச் சட்டம்" என்னும் கொடுங்கோன்மைச் சட்டத்தைக் கொண்டு வந்து ஒரு கோடி இந்திய வம்சாவளி தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தார். சிங்கள இனவாதம் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்த போது தமிழ்க் காங்கிரஸ் கட்சி இனவாதிகளுடன் சேர்ந்து "இலங்கை குடியுரிமைச் சட்டத்திற்கு" ஆதரவாக வாக்களித்தது. அக்காலகட்டத்தில் இலங்கையின் மக்கள் தொகை எட்டுக் கோடியாக இருந்ததது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்மக்களின் தொகை ஒரு கோடியாகவும், மலையகத்தின் இந்திய வம்சாவளி தமிழர்களின் தொகை ஒரு கோடியாகவும் இருந்தது. மலையகத் தமிழ்மக்களை நாடற்றவர்களாக்கியதன் மூலம் தமிழ் மக்களின் எண்ணிக்கையை சரி பாதியாக குறைத்த இந்தச் சட்டத்தை எதிர்க்காமல் அதரவு அளிக்கும் அளவிற்கு தமிழ்க் காங்கிரஸ் கட்சி பிழைப்புவாதச் சேற்றில் மூழ்கிப் போயிருந்தது.

மலையகத் தமிழ் மக்களிற்கு துரோகம் செய்து தமிழ் மக்களின் பலத்தை பாதியாக குறைத்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ பொன்னம்பலம் "எங்கள் பலம் பொன்னம்பலம்" என்று போற்றப்பட்டதை என்னவென்று சொல்ல. மலையகத் தமிழ் மக்களை ஒடுக்கிய சிங்கள இனவாதம் அடுத்ததாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மேல் தன் கோரப்பற்களை பதிக்கும் என்பதை தெரியாத அளவிற்கு தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைமைகள் சின்னப் பிள்ளைகளா? இல்லை. "உங்களிற்கு வந்தால் தக்காளிச்சாறு, எங்களிற்கு வந்தால் தான் இரத்தம்" என்று இலங்கைத் தமிழ் மக்களிற்கு பிரச்சனை வந்தால் தான் பொங்கி எழுவோம் என்று இருந்தார்களா? இல்லை. அவர்களின் வலதுசாரி, பிழைப்பு அரசியலிற்காக அவர்கள் யாருடனும் சேர்வார்கள், யாரையும் காட்டிக் கொடுப்பார்கள்.

தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் அரசுக் கட்சியை தொடங்கியவர்களிற்கு பெயரில் தான் வித்தியாசம் இருந்தது. பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் என்று சிங்கள இனவாதிகளுடன் ஒரே நாளில் கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்களை தீர்வுகளாகக் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றும் வலதுசாரி அரசியல் தொடர்ந்தது.

சிங்கள இனவாதம் தமிழ் மக்களை ஒடுக்கியதென்றால் தமிழர்கள் தம் சக தமிழரை சாதிக்கொடுமையால் ஒடுக்கினர். வடபகுதியில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களிற்கு கோயில்களிற்கு சென்று வழிபட தடை, தேனீர்கடைகளில் அனுமதி இல்லை என்ற அநியாயங்களை எதிர்த்து கம்யுனிஸ்ட்டுக் கட்சியும், சிறுபான்மை தமிழர் மகாசபையும் போராடினார்கள். தமிழர்களின் கட்சி என்று சொல்லிக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியும், தமிழ் அரசுக் கட்சியும் வெள்ளாள சாதிவெறியர்களின் பக்கம் தமது இயல்பான வலதுசாரி, மேற்குடி கோரமுகத்தை காட்டினார்கள். தமிழர்களின் தந்தை என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் தாழ்த்தப்பட்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு எதிராக வாயே திறக்கவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழர்களை மைந்தர்களாக மட்டுமல்ல மனிதர்களாகக் கூட வெள்ளாள தந்தை செல்வா மதிக்கவில்லை.

தமிழ் மக்களிற்கு என்று இலங்கையில் சமஸ்டி எனப்படும் ஒரு தனியான அதிகார அலகு வேண்டும் என்று கூறி வாக்கு கேட்டு பாராளுமன்றத்திற்கு சென்ற தமிழ் தலைமைகள் அங்கு இனவாதக்கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டு பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று மக்களை நீண்ட காலமாக ஏமாற்றி வந்ததனால் ஏற்பட்ட அதிருப்தியையும், இளம் தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு தனிநாடு ஒன்றே தீர்வு என்ற முழக்கத்தினயும் சமாளிப்பதற்காக எழுபத்தேழில் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினர்.

தமிழ் அரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற மூன்று கட்சிகளும் சேர்ந்து வட்டுக்கோட்டையில் தீர்மானம் போட்டு எழுபத்தேழாம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை "தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்பு" என்று ஆணையிட்டு வாக்கு கேட்டனர். தமிழ் மக்களின் பேராதரவுடன் பதினெட்டு தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசு அமைத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி எட்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதனால் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழ்க்கட்சி பிரதான எதிர்க்கட்சியானது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

வாழ்நாள் இனவெறியனும், ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியுமான ஜே.ஆர் ஜெயவர்த்தனா என்ற கொலைகாரன் பிரதமராக பதவியேற்ற ஒரு மாதத்தில் எழுபத்தேழு ஆவணியில் தமிழ் மக்களின் மீது திட்டமிட்ட இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விட்டான். எம்மக்கள் இனவெறியர்களால் கொலை செய்யப்பட்டனர். அரச பயங்கரவாதிகள் மூட்டிய இனவாத தீயில் எம்மக்களின் வாழ்வு எரிந்து சாம்பலானது. கிட்லரின் நாசிகள் ஜேர்மனிய பாராளுமன்றத்தை எரித்து விட்டு பொதுவுடமைவாதிகளின் மீது பழி சுமத்தியது போல ஜெயவர்த்தனா என்ற கொலைகாரன் தமிழ்மக்களின் மீது இனக்கலவரத்தை அரசபடைகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்களைக் கொண்டு கட்டவிழ்த்து விட்டு இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளின் மீது பழி சுமத்தினான்.

தமிழ் ஈழத்திற்கான வாக்கெடுப்பு என்று சொல்லி பாராளுமன்றம் போனவர்கள் எழுபத்தேழு இனக்கலவரத்தை முன்னின்று நடத்தியவனும், அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழ் இளைஞர்களைக் கொன்றவனுமாகிய ஜெயவர்த்தனாவுடன் கை கோர்த்துக் கொண்டு மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் எலும்புத்துண்டை தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கான தீர்வு என்று கொண்டு வந்து தமிழ் மக்களின் முன் வைத்தனர். தமிழ் ஈழம், மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் பொய்யாகிப் போனது குறித்தோ; இனவெறிப் பிற்போக்காளர்களின் தலைவனான ஜெயவர்த்தனாவுடன் கூடிக் குலாவுவதைப் பற்றியோ எள்ளளவும் அவர்கள் வெட்கப்படவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர் மாற்றம் பெற்றது. அண்ணன் அமிர்தலிங்கத்தின் இடத்தில் அய்யா சம்பந்தன் கட்சியின் தலைவராக, இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். கட்சியின் பெயர் மாற்றம் பெற்றதே தவிர வலதுசாரி, பிழைப்புவாத, சுயநல அரசியல் அப்படியே தொடர்கிறது. 2009 மே மாதம் தமிழ் மக்களைக் கொன்ற இலங்கை இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை அடுத்த ஆறு மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தார்கள். இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியிலும், கட்சியிலும் பங்காளியாக இருந்த மைத்திரியை ஆதரித்தார்கள். ஆட்சி மாறினால் எல்லாம் மாறும் என்ற பொய்யை நம்பச் சொல்கிறார்கள். அடுத்த தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் எஜமானர்களான இந்தியா மற்றும் மேற்கு உலக நாடுகளின் ஆதரவோடு இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா மைத்திரிக்கு எதிராக தேர்தலில் நின்றால் "நல்ல காலம் வரப்போகுது" என்று அருள்வாக்கு சொல்லிக் கொண்டு இவர்கள் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவை ஆதரிப்பார்கள்.

சிறையில் வாடும் நம் மக்களை இலங்கை அரசுகள் விடுவிக்க மறுக்கின்றன இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். ஆனால் சிறையில் இருந்து வெளிவந்தவர்களிற்கோ, புனர்வாழ்வு நிலையங்கள் என்று இலங்கை அரசு சொல்லிக் கொள்ளும் முகாம்களில் இருந்து வெளிவந்த எமது போராளிகளிற்கோ எதிர்கால வாழ்விற்கு என்று எதாவது திட்டங்களை இவர்கள் வைத்திருக்கிறார்களா? வட மாகாண சபைக்கு என்று ஒதுக்கப்படும் பணம் உரிய காலத்தில் உபயோகிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது. அதை சிறை மீண்டவர்களின் அன்றாட வாழ்விற்கு, எதிர்காலத்திற்கு வழி செய்ய உங்களால் ஏன் முடியவில்லை? பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு ஒதுக்கப்படும் நிதியில் பாழும் சிறையில் தம் வாழ்வைத் தொலைத்த அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்களின் பசி தீர்க்க உம் மனம் ஏன் எண்ணவில்லை?

தமது தனிப்பட்ட வாழ்வை உதறித் தள்ளி விட்டு மக்களிற்காக போராடியவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். இராணுவத்திற்கு அஞ்சாது போரிட்ட போராளிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்கிறார்கள். போரில் அங்கங்களை இழந்து அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய அவலத்தில் நமது போராளிகள் வாழும் போது ஒரு துளி இரத்தம், ஒரு துளி வியர்வை சிந்தாத கறுப்புக் கோட்டு கனவான்கள் தாமே தமிழர்களின் தலைவர்கள் என்கிறார்கள். அய்யா சம்பந்தன் சாய்மனைக்கதிரையில் சாய்ந்திருந்து பத்திரிகை படித்தபடி சிறைப்பட்ட மனிதர்களின் உயிர்வலியை இகழ்ச்சி செய்கிறார். தமிழ் மக்களே என்றைக்கு விழித்தெழப் போகிறீர்கள்?