Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நூல்நிலையத்தை எரித்ததை ஒத்துக் கொள்ளாதவர்கள், இனப்படுகொலைக்கு நீதி வழங்குவார்களாம்!!

புத்தரின் படுகொலை!

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது.

 

இரவில் இருளில்

அமைச்சர்கள் வந்தனர்.

'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

பின் ஏன் கொன்றீர்?'

என்று சினந்தனர்.

 

'இல்லை ஐயா,

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை

இவரைச் சுடாமல்

ஓர் ஈயினைக் கூடச்

சுடமுடியாது போயிற்று எம்மால்

ஆகையினால்......

என்றனர் அவர்கள்.

 

'சரி சரி

உடனே மறையுங்கள் பிணத்தை'

என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

 

சிவில் உடையாளர்

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்

சிகாலோவாத சூத்திரத்தினைக்

கொழுத்தி எரித்தனர்.

புத்தரின் சடலம் அஸ்தியானது

தம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.

பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் கவிதை இது. காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இரு மந்திரிகளின் தலைமையில் பொலிஸ்காரர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்களும் சேர்ந்து நூல்நிலையத்தையும், ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையும் 1981 ஆனி, முதலாம் திகதி எரித்தனர். அந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கல்லும், சுண்ணாம்பும் கலந்த சுவர்கள் அயோக்கியர்கள் மூட்டிய தீயிலே கரைந்து போயின. தமிழ்மொழியின் அறிவுப்பெட்டகங்களில் ஒன்று கரிந்து சாம்பலானது.

இன்றை வரைக்கும் இந்த அநியாயம் குறித்து ஒரு விதமான விசாரணைகளும் நடைபெறவில்லை; எவரும் மன்னிப்பு கோரவில்லை. இத்தனைக்கும் இலங்கையின் இரண்டு ஜனாதிபதிகள் நூலகத்தை எரித்த பொறுக்கிகளின் மீது நேரடியாக குற்றம் சாட்டியிருந்தனர். என்னது! இலங்கை ஜனாதிபதிகளில் இப்படி இரண்டு நல்லவங்களா என்று ஆச்சரியப்படாதீர்கள். எரிந்த போது எதுவும் சொல்லாதவர்கள் எரித்தவர்கள் தமக்கு எதிராளிகளாக வந்த போதே திடிரென்று நூலக எரிப்பு குறித்து உருகி அழுதார்கள்.

1991 இல் காமினி திசநாயக்காவும், லலித் அத்துலத் முதலியும் அன்றைய ஜனாதிபதியான பிரேமதாசாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அதனால் வெகுண்டெழுந்த பிரேமதாசா "எங்களது கட்சி உறுப்பினர்கள் சிலர் தான் யாழ்ப்பாண நூல் நிலையத்தை எரித்தார்கள்; அவர்கள் யாரென்றால் இன்று எனக்கு எதிராக சதி செய்பவர்கள் தான்" என்று பொதுமேடையில் பேசினார்.

அடுத்து நூலக எரிப்பு குறித்து உருகிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்" யாரென்றால் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரன் மகிந்த ராஜபக்சா. மயக்கம் போட்டு மண்டையைப் போட்டு விடாதீர்கள். அதிசயம், ஆனால் உண்மை. சுதந்திரக் கட்சிக்காரனான மகிந்து தனது எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை தாக்குவதற்காக "1983 இல் நடந்த தமிழ் மக்களின் மீதான இனக்கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பவற்றிற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே காரணமாக இருந்தனர். "தமிழ் மக்கள் போற்றும் நூலகத்தை எரித்தது, புத்தரை சுட்டுக் கொன்றதற்கு ஒப்பானது" என்று கவிஞர் நுஃமானின் வரிகளை வேறு மகிந்து மேற்கோள் காட்டியது. (விபரங்களிற்கு நன்றி, விக்கிபீடியா).

இப்படி இலங்கையின் ஜனாதிபதிகளாக இருந்த இருவரே நூல்நிலையத்தை எரித்தவர்கள் மீது குற்றம் சாட்டி பேசினாலும் அவர்கள் கூட தங்களது சுயநலத்திற்காக கூட எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மக்கள் விரோதத்திலும், இனவாதத்திலும் மூழ்கிப் போயிருக்கும் இலங்கையின் அதிகாரவர்க்கம் தமது சக கூட்டாளிகளிற்கு எதிராக சில வாண வேடிக்கைகள் காட்டுமே தவிர எதிர்த்து எதுவும் செய்யாது. இனவாதம் பேசி சிங்கள மக்களை ஏமாற்றும் இலங்கையின் அதிகார வர்க்கம் தமிழ்மக்களிற்கு நடந்த அநியாயத்திற்கு விசாரணை நடத்தி தன் தலையில் தானே மண்ணள்ளிப் போடாது.

கிரோசிமா, நாசகாகியில் அணுகுண்டு வீசி லட்சக்கணக்கான ஜப்பானிய பொதுமக்களை அமெரிக்கா கொன்றது. இன்றைக்கு எழுபது வருடங்களைக் கடந்த பிறகும் கூட ஒபாமா அங்கு எட்டிப் பார்க்கத் தான் போனாராம். மன்னிப்புக் கேட்க மாட்டாராம். 1919 இல் பிரித்தானிய காலனித்துவ அரசின் கொலைகாரன் டையர், பஞ்சாப்பின் ஜாலியன் வாலபாக்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான அகிம்சை போராட்டக்காரர்களையும், வைசாக யாத்திரிகர்களையும் சுட்டுக் கொன்றான். பிரித்தானிய அரசு என்றைக்குமே மன்னிப்பு கேட்க போவதில்லை என்று இறுமாப்புடன் சொல்கிறது. அமெரிக்கா, பிரித்தானியாவிற்கு எதிரான நாடுகளில் எதாவது நடந்தால் மனித உரிமை மீறல், கொலைகார சர்வாதிகார நாடுகள் என்று குற்றம் சாட்டும் ஐக்கிய நாடுகள் சபை இவர்கள் செய்த, செய்யும் கொலைகள் பற்றி வாயே திறக்காது.

எம் மக்களின் மரணங்களிற்கு சர்வதேச கொலைகாரர்களான வெளிநாடுகள் நீதி பெற்றுத் தரும் என்பது வடிகட்டின பொய், மேற்கு நாடுகளின் ஏஜெண்டுகள் வயிற்றுப்பாட்டிற்காக பாடும் பஜனை. இலங்கை அரசு என்னும் உள்நாட்டுக் கொலைகாரர்கள், நூல் நிலையத்தை எரித்ததற்கு மன்னிப்பு கேட்காதவர்கள், எம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததையா ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்? எம் மக்களின் மரணங்களிற்கு மன்னிப்பு கேட்கப் போகிறார்கள்? வாழ்விழந்த எம் மக்களிற்கு நீதி வழங்கப் போகிறார்கள்? தாய், தந்தையரை இழந்து தவிக்கும் எம் மழலையருக்கு மறுவாழ்வு தரப்போகிறார்கள்?

அட்டைகள் இரத்ததானம் செய்யா. இனவாதிகள் தீர்வு தரப்போவதில்லை. இலங்கை மக்களை பிரித்திருக்கும் இனவாதத்தை உடைத்து உழைக்கும் மக்கள் கரங்களை பிணைத்து கொள்வோம். அன்று வன்னியின் காடுகளிலும், கழனியின் கரைகளிலும் மரணித்த மக்களிற்கு செவ்வணக்கம் செய்வோம்.