Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

நல்லூர் கந்தசாமி கோவில் தண்ணீர் பந்தல் - உபயம் இந்திய தூதரகம்

வல்லரசுகள், பெரு நிறுவனங்கள் மக்களைச் சுரண்டுப் போது மக்கள் தமது கொள்ளைகளிற்கு எதிராக கிளர்ந்து போராடாமல் இருப்பதற்காக சமுகசேவை செய்வதாக காட்டிக் கொள்ளுவார்கள். அறிவாளிகள், கலைஞர்கள், விளையாட்டு துறையினர் என்று பலரை தமது தூதுவர்களாக அனுப்பி மக்களிற்கு மூளைச்சலவை செய்ய முயற்சி செய்வார்கள். தாம் கொள்ளையடிக்கும் நாடுகளில் இருக்கும் தமது கைக்கூலிகளான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களை தமது நாடுகளிற்கு கூப்பிட்டு தமது நாடுகள் பூலோக சொர்க்கம் என்று எழுதச் சொல்வார்கள். ஆய்வு மையங்கள், சிந்தனையாளர்கள் மன்றங்கள் என்ற பெயர்களில் முதலாளித்துவக் கொள்ளைகளை நியாயப்படுத்தும் கொள்கைகளை ஜனநாயகம் என்று வெளிவிடுவார்கள்.

ஸ்ரான்டட் ஒயில் (Standard Oil) தொடங்கி பல்வேறு தொழில்களின் அதிபர்களான அமெரிக்காவின் ரொக்பெல்லர் குடும்பம் உலகின் மிகப்பெரும் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறார்கள்.. இவர்கள் ரொக்பெல்லர் பவுண்டேசன் (Rockefeller Foundation) என்ற சேவை அமைப்பொன்றை நடத்துகிறார்கள். முத்தரப்பு நிறுவனம் (Trilateral) என்ற சிந்தனை மையத்தையும் நடத்துகிறார்கள். இடதுசாரிச் சிந்தனையாளரான நோம் சோம்ஸ்கி அந்த மையத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். "இந்த மையம் இன்னும் மிதமான ஜனநாயகம் நிலவ வேண்டும் என்று கவனம் கொள்கிறது. மக்கள் கீழ்ப்படிவு உள்ளவர்களாகவும், எதிர்ப்பு காட்டாதவர்களாகவும் இருந்தால் தான் அரச அதிகாரத்திற்கு அவர்கள் தடை போட மாட்டார்கள் என கருதுகிறது. கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள் என்பன இளைய தலைமுறையினரை அரசிற்கு அடங்கி நடக்கும்படி போதிப்பதில்லை என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள். இளைய தலைமுறையினர்கள் தங்களினுடைய சொந்த முடிவுகளின் பின் போகாமல் இருக்ககூடிய வகையில் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் இந்த மையத்தின் அடிப்படை நோக்கம்". ஆம், மக்கள் செயலற்றவர்களாக, எதிர்ப்புக் காட்டாதவர்களாக, முதலாளித்துவக் கொள்ளையரின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த தொண்டு நிறுவனங்கள், மையங்கள் என்பன முதலாளிகளினால், முதலாளிகளிற்கு, கைக்கூலிகளினால் நடத்தப்படுகின்றன.

கலாச்சார பரிவர்த்தனை, பத்திரிகையாளர்களை அழைத்தல் என்ற பெயரில் தன் கைக்கூலிகளை அழைக்கும் அமெரிக்கத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கு சென்று வந்தவர்களான "இதயம் பேசுகிறது" என்று பயணக்கட்டுரைகள் எழுதிய மணியன், பிராமண வெறியன் "துக்ளக்" சோ, மாலன் போன்ற கைக்கூலிகள் அமெரிக்காவையும் , அதன் தலைவர்களையும் "அண்ணன் ரொம்ப நல்லவர், வல்லவர்" என்று அமெரிக்கர்கள் போட்டுக் கொடுத்த ரூம்களில் படுத்திருந்து கொண்டு யோசிக்காமலே பொய் எழுதினார்கள். இந்தியாவை வல்லரசுகளின் வேட்டைநிலமாக்குவதையே தன் தாரக மந்திரமாகக் கொண்ட "இந்தியா ருடே" சஞ்சிகைகையில் மாலன் தனது அமெரிக்க அடிமைத்தனத்தையும், கம்யுனிச எதிர்ப்பையும் தொடர்ந்து எழுதி வந்தார். சாவி எழுதிய "வாசிங்டனில் திருமணம்" என்ற கதையிலே தமிழ்நாட்டு பிராமணர்களின் திருமணத்தை அமெரிக்காவிலே மேலே சொன்ன ரொக்பெல்லர் குடும்பம் நடத்தி வைப்பதாக எழுதி அக மகிழ்ந்தார்.

இதைத் தான் இன்று இந்தியா இலங்கையில் குறிப்பாக தமிழ்ப்பகுதிகளில் செய்கிறது. "பசுமைப் புரட்சி" என்னும் பெயரில் விளைநிலங்களை இரசாயன உரங்களினால் பாழாக்கிய சுவாமிநாதன் தமிழ் மக்கள் இனப்படுகொலை முடிந்த சில நாட்களிலேயே வன்னிக்கு வந்து போனார். அப்துல் கலாம் வந்து போனார். தமிழ்ச்சினிமாக்காரர்கள் வந்து போனார்கள். "எப்ப கூப்பிட்டாலும் வாறாரே, இவர் ரொம்ப நல்லவரடா" என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நெகிழ்ந்து போகும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிற்கு துணைத்தூதுவர் போய் வருகிறார். பல நிகழ்ச்சிகள் இந்திய தூதரகத்தின் அனுசரணையுடன், ஆதரவுடன் நடத்தப்படுகின்றன. கொஞ்ச நாள் போனால் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவின் போது இந்திய தூதரகம் தண்ணீர் பந்தல் போட்டு தூதுவரைக் கொண்டு மோர் ஊற்றினாலும் ஊற்றுவார்கள்.

ரொக்பெல்லரின் இளைய தலைமுறையினரிற்கு போதித்து கட்டுப்படுத்தும் முத்தரப்பு சிந்தனையின் வடிவம் தான் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை இந்திய தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக் கொண்டு வந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் பேச வைத்ததன் பின்னால் இருக்கும் அயோக்கியத்தனம். யாழ்ப்பாண பொதுசன நூலகத்தில் ஒரு "இந்திய மூலை" (India Corner) இருக்கிறதாம் (Deccan Chronicle, 25.06.2016). அந்த மூலையில் இப்போது அப்துல் கலாமின் உருவச்சிலையை இந்திய தூதரகம் அமைத்துக் கொடுக்க இந்திய தூதுவர் சின்காவும், அவரின் இணைபிரியா தோழன் அய்யா விக்கினேஸ்வரனும் திறந்து வைத்தார்கள். எமது மக்கள் மரணித்த போது இலங்கை அரசையோ, இந்திய அரசையோ ஒரு வார்த்தை பேசாத அப்துல் கலாமிற்கு யாழ்ப்பாணத்தில் சிலை வைக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.

யாழ்ப்பாணத்தில் விளையாட்டு அரங்கை புதுப்பித்து கட்டித் தந்து தமிழ்மக்களின் மேல் கருணை மழை பொழிகிறது இந்திய அரசு. "ஓடி விளையாடுங்கள் தமிழ்மக்களே, நீங்கள் ஓய்ந்திருக்கலாகாது தமிழ்மக்களே" என்று மக்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்டு நரேந்திரமோடி டெல்லியில் இருந்து கொண்டு விளையாட்டு அரங்கை திறந்து வைத்திருக்கிறார். "யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வெறும் செங்கல் மற்றும் கலவையால் மட்டும் கட்டப்பட்டதல்ல. இது இரு நாடுகளின் நம்பிக்கை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சின்னமாக விளங்குகிறது. வடக்கு மாகாண இளைஞர்களின் வளமான சுகாதாரமான எதிர்காலத்துக்கு இந்த அரங்கம் உதவியாக இருக்கும்" என்று திறந்து வைக்கும் போது மோடி பேசினாராம்.

இதே துரையப்பா விளையாட்டு அரங்கில் தான் 1999 சித்திரை மாதம் நான்காம் திகதிக்கும் பத்தாம் திகதிக்கும் இடையில் திருத்த வேலைகளிற்காக நிலத்தை அகழ்ந்த போது இருபத்தைந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. மனித உரிமைகளிற்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (UTHR) அறிக்கையின்படி அக்கொலைகள் 1987 ஆம் ஆண்டின் பின்பே நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இக்கால கட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமே இப்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அவர்கள் தமிழ்ப்பிரதேசங்கள் முழுக்க நடத்திய கொலை வெறியாட்டங்களில் உயிரிழந்த எம்மக்களின் உடல்கள் இவ்வாறு பல இடங்களில் புதைகுழிகளில் மறைக்கப்பட்டன. இந்த உடல்களும் இந்திய கொலை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மனிதர்களின் உடல்களாகவே இருக்கக் கூடும்.

இந்திய இராணுவம் எம்மக்களைக் கொன்று குவித்தது குறித்து இன்று வரைக்கும் கவலையோ, மன்னிப்போ தெரிவிக்கவில்லை. கொலையாளிகள் இரக்கமற்றவர்களாகத்தான் என்றைக்கும் இருப்பார்கள். ஆனால் கொல்லப்பட்ட எம்மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி வாக்குப் பொறுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எம்மக்களின் கொலைகள் குறித்து என்றைக்கும் இந்திய அரசிடம் நியாயம் கேட்டதில்லை. மாறாக எம்மக்களின் புதைகுழிகளை ஏறி மிதித்துக் கொண்டு கொலைகாரர்களை கட்டித் தழுவுகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் வாழ்க்கையையே இலங்கை அரசு மண்ணிற்குள் புதைத்த போது சேர்ந்து நின்று கொன்றவர்கள் இன்று எமது இளைஞர்களின் வளமான சுகாதாரமான எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். கொஞ்சுமொழி பேசிய குழந்தைகளைக் கூட கொத்தணிக் குண்டுகள் போட்டு கொன்ற கொலைகாரர்களின் கூட்டாளிகள் எம்மக்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். நினைவு என்பதே இல்லாமல் போன எம்மாணவர்களை, இளைஞர்களை அப்துல் கலாம் வருங்காலம் பற்றிக் கனவு காண சொல்கிறார்.

பஜாஜ், டாட்டா, மகீந்திரா என்று இலங்கைக்கு வந்து குவியும் இந்திய பெருமுதலாளிகளின் கொள்ளைக்கு ஒரு குறையும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு மொள்ளமாரித்தனமும் செய்கிறார்கள். கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை மாவட்டத்து சம்பூரில் மக்களின் நிலங்களை களவெடுத்து இந்தியாவின் தேசிய நிலக்கரி மின் உற்பத்திக் கூட்டுத்தாபனமும், இலங்கை மின்சார சபையும் அனல் மின்சார நிலையத்தை அமைக்கப் போகின்றன. எமது நிலங்களை திருப்பித் தா என்றும், அனல் மின்சார நிலையத்தை கட்டி எங்களது சூழலை நஞ்சாக்காதே, காற்றுவெளியில் கரியமில வாயுவை கலந்து எங்களது குழந்தைகளைக் கொல்லாதே என்றும் மக்கள் போராடுகிறார்கள். ஆனால் இலங்கை மக்களிற்கு "நல்லாட்சி" தருகிறோம் என்பவர்களிற்கு இலங்கை மக்களின் குரல்கள் காதில் விழவில்லை. வழக்கம் போல் மக்களின் வாழ்வை அழிக்கும் தம் கொள்கையை தொடருகிறார்கள். இலங்கை அரசும், இந்திய அரசும் தமிழ் மக்களை சேர்ந்து கொன்றார்கள். இன்று சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.