Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

ஐரோப்பாவில் இனவாதம், அது கிடக்கட்டும் நாங்கள் தேர் இழுப்போம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு பெரும்பான்மையினர் வாக்களித்ததின் பின்னர் இங்கிலாந்தில் வாழும் ஆங்கிலேயர் அல்லாத மக்களின் மேலான இன, நிறவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் என்பது பெருநிறுவன முதலாளிகள தடங்கலின்றி கொள்ளையடிப்பதற்கான திறந்து விடப்பட்ட, கட்டுகளற்ற ஒரு சந்தை. ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் ஐரோப்பாவிற்குள் எல்லைகள் அற்று சுதந்திரமாக எங்கும் குடியேறலாம் என்பது ஏழைத் தொழிலாளிகளை மலிவான ஊதியத்திற்கு வேலை வாங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது.

மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், தமது கொள்ளை லாபத்திற்காக போலந்து, ருமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்களை கட்டுமானம், விவசாயம் போன்ற உடல் உழைப்பு சார்ந்த தொழிற்துறைகளில் குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கினார்கள். தொழிலாளர்களை அடிப்படை உரிமைகள் எதுவுமற்ற Zero Hour Contract ஒப்பந்தங்களில் வேலை செய்ய வைத்தார்கள். இந்த ஒப்பந்தங்களில் வேலை செய்பவர்களை நிறுவனங்கள் நினைத்த நேரத்தில் வேலையிலிருந்து நீக்க முடியும் போன்ற கொடுமையான நிலைகளில் தான் இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் அந்த ஏழைத்தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.

குறைந்த ஊதியத்திற்கும், தொழிலாளர் விரோத சட்டங்களின் கீழும் வேலை செய்வதை எதிர்த்த பிரித்தானிய தொழிலாள வர்க்கத்திற்கு வேலைவாய்ப்பு குறைந்து போனது. அதனால் தான் பிரித்தானிய தொழில் கட்சியின் (Labour Party) கோட்டைகள் என்று சொல்லப்படும் வடக்கு இங்கிலாந்தில் தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். மக்கள் தமது வாழ்வாதாரங்களிற்காக போராடுவதை வைத்தும் ஏற்கனவே இங்கு இருக்கும் இன, நிறவெறி கும்பல்களை வைத்தும் பிரித்தானிய சுதந்திரக் கட்சி (United Kingdom Freedom party), பிரித்தானிய தேசிய கட்சி (British National party) போன்ற தீவிர வலதுசாரி பாசிச கட்சிகள் இன, நிறவெறி பிரச்சனை தூண்டி விட முயலுகின்றன.

வல்லரசுகள் எப்போதும் தொழிலாளர்களை பிரித்தாளுவதற்காக தேசம், இனம், மதம், மொழி என்பவற்றை உபயோகிக்கும். இலங்கையில் கோப்பி, தேயிலைத் தோட்டங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்வதற்கு இலங்கையின் தமிழ், சிங்கள தொழிலாளர்கள் முன்வராமையினால் தமிழகத்தின் ஏழை மக்களை கூட்டிக் கொண்டு வந்து குறைந்த ஊதியத்திற்கு கொத்தடிமைச் சட்டங்களின் கீழ் வேலை செய்ய வைத்தார்கள். இலங்கையின் சுதந்திரத்தின் பின்பு இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது ஊழல்களினாலும், சுரண்டல்களினாலும் வஞ்சிக்கப்பட்ட சிங்கள மக்களின் கோபத்தை திசை திருப்ப ஏழை மலையகத் தமிழ்மக்களை பிரச்சனைகளிற்கு காரணமாக கைகாட்டினர். அதே கேடுகெட்ட நயவஞ்சகம் தான் பிரித்தானியாவில் இன்றைக்கு தொடர்கிறது.

இந்த இன, நிறவெறி பாசிச கும்பல்களை இடதுசாரி, முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் இணைந்து எதிர்க்க வேண்டிய தேவையும், கடமையும் உள்ள வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களும், சிறுபான்மையின மக்களும் தமக்குள் தனித் தனித்தீவுகளாக வாழ்கின்றனர். பிற்போக்கான அரசியலை பின் தொடர்வதன் மூலமும், பின் தங்கிய நிலப்பிரபுத்துவ பண்பாடுகளை தமது பண்பாடுகளாக தாம் வாழும் நாடுகளில் காட்டிக் கொள்வதன் மூலமும் இனவாதிகளின் பிரச்சாரங்களிற்கு இரை போடுகின்றனர்.

இஸ்லாமிய அரசு, அல் கைதா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளிற்கு மேற்கு நாடுகளில் வாழும் முஸ்லீம்களில் சிலர் ஆதரவு அளிப்பதை சுட்டிக் காட்டி முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள் தான் என்று இந்த இனவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். முஸ்லீம் பெண்கள் வேறு மதத்தினரை காதலித்தால், திருமணம் செய்தால் அப்பெண்களின் குடும்பத்தினரே அப்பெண்களை கொலை செய்வது; முஸ்லீம் ஆண்கள் மேற்கு நாட்டவர் போல் உடை அணிந்து கொண்டு பெண்களை கண்கள் மட்டும் தெரிய கூடியவாறு ஆடை அணிய வைத்தல் போன்ற பிற்போக்குத்தனங்கள், முஸ்லீம்கள் என்றாலே பெண்ணடிமைத்தனம் என்று இனவாதிகள் பரப்புரை செய்வதற்கே உதவுகின்றன.

தாம் பிறந்து வளர்ந்த முஸ்லீம் மதச்சட்டங்கள் உள்ள நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களினால் வெளியேறி மேற்கு நாடுகளில் குடியேறியவர்கள், மதச்சட்டங்களினால் மக்களை வாழ வைக்க முடியாமல் போனதை உணராமல் தாம் வாழும் நாடுகளில் ஷாரியா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பேசுவதன் மூலம் இனவாதிகள் மூட்டும் இனவெறி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுகின்றனர்.

புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் அமைப்புக்கள் எந்த விதமான அரசியல் அறிவும் அற்றவர்கள். ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாக செயல்படுபவர்கள். கொன்சர்வேட்டிவ் கட்சி போன்ற முதலாளித்துவக் கொள்ளையர்களின் கட்சி, இனவாதிகளின் கட்சிக்கும் சங்கம் அமைத்து தமிழரை வளர்ப்போம் என்று பொய் உரைப்பவர்கள். இவர்கள் இப்படி என்றால் தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் நாலு பேர் கூடினால் கோயில் கட்டி தேர் இழுக்கிறார்கள். எம்மக்களை இலங்கை அரசுகள் துடிக்க துடிக்க கொன்ற போது வராத கற்களை தேரில் ஏற்றி லண்டனிலும், ரொரண்டோவிலும் இழுக்கிறார்கள்.

அர்த்தமற்ற விழாக்களிற்கு பணத்தையும், காலத்தையும் விரயமாக்குபவர்கள் சூழ்ந்து வரும் ஆபத்தை உணர்ந்து முற்போக்கு சக்திகளுடன் அணி சேர்வதில்லை. தொழிலாளர்களின் தினமான மே முதலாம் நாளன்று பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரம் தொழிலாளர்களும், போராட்ட அமைப்புக்களும் ஊர்வலங்கள் போகும் போது தமிழ் மக்கள் நாலைந்து பேரே மேற்குநாடுகளில் கலந்து கொள்கிறார்கள். சிறுதணல் மூண்டு பெருவனம் எரிவது போலத் தான் யேர்மனியில் இருந்த கொஞ்ச நாசிகள் தொடங்கி வைத்த இனவெறி இரண்டாம் உலக யுத்தமாக மாறி இலட்சக்கணக்கான மக்களை கொன்றது. வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வோம்.

முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்.

நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்

நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.

பின்னர் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.

நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.

பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.

அப்போது எனக்காக பேச யாருமே இல்லை

Martin Niemöller (1892–1984), யேர்மனி