Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

கிளிநொச்சியில் மறுபடியும் ஒரு அநியாயம்

இலங்கையின் கொடிய இனவெறி அரசுகளின் எம்மக்களின் மீதான கொடும்போரினால் கண் இழந்து, கேட்கும் புலன் இழந்து, பாய்ந்து துள்ளும் வயதில் பாதம் இழந்து, படிக்கும் வயதில் எடுத்து எழுத கை இழந்து, ஏங்கி ஏங்கி மனநிலை இழந்து என்று தம் எதிர்காலம் தெரியா குழந்தைகள் வன்னியில் உள்ள காப்பகம் ஒன்றில் சில நல்ல மனிதர்களின் உதவியுடன் வாழ்கிறார்கள். நாளைய நாட்கள் என்னாவாயிருக்கும் என்று அந்தக் குழந்தைகளிற்கு தெரியாமல் இருப்பது போலவே அந்த இல்லத்தை நடத்தும் அந்த நல்ல மனிதர்களிற்கும் தெரியவில்லை. மக்களிடம் இருந்தும், சில நிறுவனங்களிடம் இருந்தும் உதவிகள் பெற்று அந்த இல்லத்தை அவர்கள் நடத்துகிறார்கள். ஆனால் அந்த உதவிகள் அற்ற குளத்து அறுநீர் பறவைகளைப் போல் அருகி வருகின்றன.

இப்படி எம்மக்களின் வாழ்வு அழிந்து போயிருக்கையில், எம் குழந்தைகளின் அடுத்த நாள் என்னவாயிருக்கும் என்று ஏங்கிருக்கையில் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோயிலிற்கு ஆறு கோடி ரூபாய்கள் செலவளித்து கோபுரம் கட்டப் போகிறார்கள்களாம். இந்த மண்ணில் தான் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எம் தமிழ்மக்களை இலங்கை அரசுகளின் கொலைவெறிக்கரங்கள் கொலை செய்தன. எம் தந்தையரும், தாய்மாரும் மகிழ்ந்து குலாவிய மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டோம். எரிக்கும் வெய்யிலிலும் எதிர்த்து நிற்கும் பனைமரங்கள் போல கொதிக்கும் வறுமையிலும் கையேந்தாமல் வாழ்ந்த எம்மக்கள் அகதிகளாக அலைகிறார்கள். மரணத்திற்கு அஞ்சாது போரிட்ட எம் போராளிகள் பசிக்கு அஞ்சி தற்கொலை செய்கிறார்கள். தாய் எங்கே, தன் தந்தை எங்கே என்று தெரியாமல் நம் குழந்தைகள் தவித்திருக்கின்றனர்.

எம் மக்கள் இந்த மண்ணில் மடிந்த போது எந்த ஒரு கடவுளும் கண் திறந்து பார்க்கவில்லை. "பாலுக்கு பாலகன் அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் கள்" நம் பாலகர்களின் தவித்த வாய்க்கு ஒரு துளி தண்ணீர் தரவில்லை. மார்க்கண்டேயனைக் காப்பாற்ற காலனைக் காலால் உதைத்த கருணக்கடல்கள் எம்மக்கள் கதறி அழுத போது வந்து எவனையும் உதைக்கவில்லை. தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் நரசிம்மம்கள் நம் மக்கள் துவண்டு விழுகையில் எந்தத் தூணையும் உடைத்து வரவில்லை.

"கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும்" என்று சொன்னவர்கள் எமது மக்கள் தஞ்சம் கேட்டு தவித்த போது எந்த பாதுகாப்பையும் தரவில்லை. "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்", "பர மண்டலத்தில் இருக்கும் பிதாவே" என்று எம்மக்கள் கதறி அழுதபோது எந்தப் பிதாவும் வந்து இரட்சிக்கவில்லை. "இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்" என்று எம்மக்கள் மன்றாடியபோது எந்தத் தாயும் தன் திருக்கண்களை எம்மக்களின் மேல் திருப்பவில்லை.

ஆனாலும் அளவில்லாப் பணம் செலவழித்து கோவில்களைக் கட்டுகிறார்கள். கோபுரங்களை எழுப்புகிறார்கள். "நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க மந்திரம்" சொல்லும் முட்டாள்தனத்தை மண்ணில் புதைந்து போன எம்மக்களின் மேல் ஏறி மிதித்து பெரும் பணம் செலவழித்து செய்கிறார்கள். மக்கள் மரணச் சிலுவைகளில் அறையப்படுகையில் புதிது, புதிதாய் தேவாலயங்கள் முளைக்கின்றன. பாலஸ்தீனத்தில் அகதி முகாம்களில் பிறந்து, அகதி முகாம்களில் இறந்து போவோரை கண்ணெடுத்தும் பாராமல் பளிங்கு கற்களில் பள்ளிவாசல்கள் கட்டுகிறார்கள்.

இந்த மண்டை கழண்டவர்களின் மதி கெட்டதனத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்ணன் சிறிதரனும்; தற்போது மனம் திருந்திய மைந்தனுமாகிய சந்திரகுமாரும் சேர்ந்து அத்திவாரம் போடுகிறார்கள். தமிழ்த் தேசியத்தின் தனிப்பெரும் தலைவனும், எம்மக்களைக் கொன்ற மகிந்தவின் கூட்டாளியும் ஒன்றுபடும் புள்ளி எது? மக்களை ஏமாற்ற, மயக்கத்தில் வைத்திருக்க வலதுசாரியம் வைத்திருக்கும் அபின் தான் மதம்.

அந்த மயக்கத்தில் தான் தான் எம்மக்கள் அவலத்தில் வாழும் போது இவ்வளவு பணத்திற்கு கோயில் கட்டுகிறீர்களே என்று கேட்ட போது "நாங்கள் கோயில் தான் கட்டுவோம், நீங்கள் தேவையென்றால் மக்களிற்கு செய்யுங்கள்" என்று சில சீர்கெழு அறிவுப்பெருந்தொகைகள் அலம்புகிறார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் பசியோடு இருக்கையில் பட்டு வேட்டியும், பதக்கங்களும் அணிந்து கொண்டு சிறு பிள்ளைகள் குரும்பையில் தேர் செய்து விளையாடுவது போல பணத்தை பாழாக்கி தேர் செய்து தெருப்புழுதியில் உருள்கிறார்கள்.

எந்த சமயமும் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு தந்ததில்லை. இனி ஒரு போதும் தரப்போவதில்லை. நிழல் கீழே விழா கோபுரம் கொண்ட கோயில் என்னும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டிக் கொடுத்ததினால் சிவன் மகிழ்ந்து போய் தமிழ்நாட்டை பசி இல்லா நடாக்கவில்லை. ஏழைகள் எலிக்கறி உண்பதும், விவசாயிகள் கடன் தாங்க முடியாமல் தற்கொலை செய்வதுமாக தவிக்கிறார்கள். சிவன் எதுவும் செய்யாமல் சிவனே என்று தான் இருக்கிறான்.

"எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்; உயிரற்ற உடல் - விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள்" என்றான் ராமசாமி. ஒன்றுமே இல்லாத மதத்தை விட்டு உடன் வாழும் மனிதர்களில் அன்பு கொள்வோம்.