Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

கடல் சூழ் கீரிமலை சிவனிற்கு கருவாட்டு மணம் பிடிக்காதாம், என்ன ஒரு சாதிவெறி!!

எமது மக்களின் நிலம் இலங்கை அரசினால் களவாடப்பட்டிருக்கிறது. எமது மக்களிடம் களவாடிய மண்ணில் இலங்கை அரசின் கொலைகார இராணுவம் முகாம்களை அமைத்திருக்கிறது. பக்த கோடிகளின் பாசையில் சொன்னால் தமிழ் மக்களின் புனித நிலத்தில் இராணுவ முகாம்கள் இருக்கின்றன. மீனை வெட்டினால் கீரிமலை சிவனின் புனிதம் கெட்டு விடுமாம். கீரிமலைச் சிவனிற்கு பக்கத்தில் மீன்பிடித் துறைமுகம் வரக் கூடாது என்கிறார்கள். ஆனால் எமது மக்களை துடிக்க துடிக்க கொன்ற இலங்கை அரசின் இராணுவத்தினரின் கொலைமுகாம்கள் எமது மண் எங்கும் இருப்பது இந்த பக்தகோடிகளிற்கு பிரச்சனை இல்லை.

சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழ்மக்களின் மீதான ஒடுக்குமுறைகளிற்கு எதிராக மக்கள், முற்போக்குசக்திகள், இடதுசாரி அமைப்புக்கள் போராடுகிறார்கள். அப்போராட்டங்களில் எல்லாம் இந்த சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்றைக்குமே கலந்து கொள்வதில்லை. இந்த வாரம் (09..08.2016) கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் "அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்று இலங்கை அரசை எதிர்த்து "அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு" போராட்டங்களை முன்னெடுத்த போது அய்யர்கள் எவரும் அங்கில்லை. சைவசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எவரும் அங்கில்லை.

ஒடுக்கப்படும், துன்பப்படும் மக்களிற்காக என்றைக்கும் குரல் கொடுக்காத இந்தக் கூட்டம் உலகத்தை படைத்து, காத்து, அழித்து அருள் செய்யும் எல்லாம் வல்ல கடவுள் என்று அவர்கள் சொல்லும் சிவனிற்காக கச்சை கட்டிக் கொண்டு வெளிக்கிடுகிறது. கீரிமலையில் மீன்பிடித் துறைமுகம் அமைத்தால் மீன் மணம் வரும், கோயிலின் புனிதம் கெடும் என்பது கடைந்தெடுத்த சாதிவெறி. இதே கீரிமலையில் ஒரு மரக்கறிச் சந்தை அமைத்தால் இவர்கள் எதிர்க்கப் போவதில்லை. மீன் மட்டுமா மணக்கும்? கத்தரிக்காயும், வெங்காயமும் அழுகும் போது சந்தணமும், சவ்வாதும் சேர்ந்து மணம் கமழ்வது போல வாசம் வீசுமா? எல்லாக் கோயில்களைச் சுற்றியும் பலவிதமான கடைகள் இருக்கின்றன. முட்டையை மூலப்பொருளாகக் கொண்ட ஐஸ்கிறீம் கடைகள் இருக்கின்றன. மீனால் புனிதம் கெடுமென்றால் முட்டையால் புனிதம் கெடாதா? முட்டையை புனித லிஸ்ட்டிலே சேர்த்ததை சைவசமய பெருமான்கள் சொல்லவே இல்லை.

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசாமி கோயிலிற்கு வந்த போது அய்யரும், கோயில் அதிகாரக் கூட்டமும் மகிந்தவிற்கு தோளிலே மாலை போட்டு, கையிலே காளாஞ்சி கொடுத்து வரவேற்றார்கள். கொலைகாரனை கோயிலிற்கு விட்டது மட்டுமில்லாமல் மாலை, மரியாதை செய்த போது கோயிலின் புனிதம் எங்கே போனது? கடற்தொழிலாளர்கள் தம்பாட்டிற்கு கடலில் தொழில் செய்து கரையில் இருக்கும் துறைமுகத்திற்கு மீனைக் கொண்டு வந்தால் புனிதம் கெட்டு விடும் என்று ஊளையிடும் இவர்கள் கொலைகாரனை மூலஸ்தானத்திற்கு முன்னாலே விட்ட போது எங்கே போயிருந்தார்கள்?

வற்றாப்பளை அம்மன் கோவிலிலும், நல்லூர் கந்தசாமி கோவிலிலும் தேர்த்திருவிழாக்களின் போது இலங்கை இராணுவத்தின் விமானங்கள் வானில் இருந்து பூக்களை வீசின. பச்சிளம் குழந்தைகளைக் கூட குண்டுகள் போட்டு கொன்ற இந்த விமானங்களைக் கொண்டு இந்தக் கோவில்கள் பூத் தூவிய போது புனிதம் கெடவில்லை. "புண்ணிய பூமியில் படகுத் துறையா" என்று இவர்கள் கீரிமலையில் கோசம் போட்டார்கள். ஆனால் எமது குழந்தைகளைக் கொன்ற குருதி படிந்த விமானங்கள் கோவில்களை வலம் வந்த போது "புண்ணிய பூமியில் கொலைகார விமானங்களா" என்று இந்த சைவப் போராளிகள் மெலிதாக முனகக் கூட இல்லை. தொண்டையில் இருந்து காத்துக் கூட வரவில்லை.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது என்ற திட்டத்தின் கீழ் பலாலி, மயிலிட்டி பிரதேசங்களை இலங்கை அரசு, இந்தியாவிற்கு தாரை வார்க்க இருக்கிறது. இத்திட்டத்திற்காகத் தான் இலங்கையின் மக்கள் விரோத அரசு இப்பகுதி மக்களிடம் களவெடுத்த நிலத்தை திருப்பிக் கொடுக்காமல் அநியாயம் செய்கிறது. மயிலிட்டி துறைமுகப் பகுதியை கடற்தொழிலாளர்கள் உபயோகிக்க முடியாமல் தடை செய்து விட்டு கீரிமலையில் துறைமுகம் கட்டுவது இந்திய, இலங்கை அரசின் கூட்டுக் கொள்ளைக்காகத் தான்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கூட்டுக் கொளைகள் பற்றி என்றுமே பேசுவதில்லை. இலங்கை அரசின் கூட்டாளிகளும், இந்திய அரசின் தலையாட்டிப் பொம்மைகளுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எப்படி இந்தக் கொள்ளைகளிற்கு எதிராகப் பேசுவார்கள்?

மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பது குறித்து எதுவும் பேசாதவர்களான, எந்த விதமான போராட்டங்களையும் முன்னெடுக்காதவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கீரிமலையில் அமையவிருக்கும் துறைமுகத்தையும் புனிதம், மண்ணங்கட்டி என்ற பெயரில் எதிர்த்து கடல் தொழிலாளர்களின் வாழ்வில் மண்ணள்ளிப் போடுகிறார்கள். "இத்தலத்தையும் இதனை சூழவுள்ள பகுதிகளையும் நாம் போற்றிப் பாதுகாப்பதற்கும் அதன் புனிதத்தை பேணுவதற்குந் தவறிய காரணத்தினாலேயே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இப்பகுதிக்கு பொது மக்கள் ஒருவரும் வரமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது", அய்யா விக்கினேஸ்வரனின் அரும்பெரும் கண்டுபிடிப்பு இது. கீரிமலை மக்கள் இருபது வருடங்களாக இடம் பெயர்ந்ததற்கு காரணம் இலங்கை அரசின் தமிழ்மக்களின் மீதான கொடிய யுத்தம் அல்ல, இன ஒடுக்குமுறை அல்ல. தமிழ்மக்கள் புனிதத்தை பேணுவதற்கு தவறியது தான் இத்தனை துயரங்களிற்கும் காரணம் என்கிறார் அய்யா விக்கினேஸ்வரன். "இங்கிவரை முதலமைச்சராக யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்". பாலியல் வன்முறை செய்து இரட்டை மரண தண்டனை பெற்ற காமுகன் பிரேமானந்தாவின் பரம பக்தனாக இருந்து அய்யா விக்கினேஸ்வரன் புனிதத்தை பேணுவது போல தமிழ் மக்களும் இருக்க வேண்டும் என்பதைத் தான் அய்யா சொல்லாமல் சொல்கிறார்.

மேற்கு நாடுகளில் பொதுமக்களிடம் பகுத்தறிவு வளர்வதால் கிறிஸ்தவ ஆலயங்களிற்கு செல்வபவர்களின் தொகை குறைந்து கொண்டே வருகிறது. அதனால் கிறிஸ்தவ ஆலயங்களை விற்பனை செய்கிறார்கள். குடியேற்றவாசிகளான இந்துக்கள், இஸ்லாமியர்கள் இந்த கிறிஸ்தவ ஆலயங்களை வாங்கி கோவில்களாகவும், பள்ளிவாசல்களாகவும் உபயோகிக்கிறார்கள். இந்த கிறிஸ்தவ ஆலய வளாகங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைத்திருக்கிறார்கள். இந்து சமயத்தவர்களைப் பொறுத்தவரை இறந்தவர்களை கோயிலிற்கு அருகில் கூட கொண்டு வருவதில்லை. ஆனால் இறந்தவர்களின் உடல்களை புதைத்த இடத்தில் கோவில்களை வைத்திருக்கிறார்களே, அப்ப புனிதபூமி ஐடியா வெளிநாட்டு கோயில்களிற்கு இல்லையா?. இந்த கோயில்களிற்கு பக்கத்திலே இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் இருக்கின்றன. இங்கே மீன் மணம் , இறைச்சி மணம் வருவது "புனித மண விதிகளிற்குள்ளே" அடங்குகிறதா? இடத்திற்கேற்ற மாதிரி "புனிதத்தின்" வரைவிலக்கணமும் இவர்களிற்கு மாறுகிறது. என்ன செய்வது, சமயத்தில் இதெல்லாம் சகஜமப்பா!

இந்த புனித மயிருக்கு பின்னே இருப்பது அப்பட்டமான சாதிவெறி. சாதிப் படிமுறையில் மேலே பிராமணரும் அவர்களிற்குப் பிறகு வெள்ளாளரும் என்ற யாழ்சைவ வெள்ளாளவெறி, மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லை என்ற யாழ்சைவ வெள்ளாளவெறி . உழவுத் தொழில் செய்வது உயர்ந்த சாதி. மற்றத் தொழில்கள் செய்பவர்கள் எல்லாம் குறைந்த சாதிகள் என்ற மண்டை கழண்ட மடையர்களின் பைத்தியக்காரத்தனம். ஒவ்வொரு நாளும் கடல் உணவுகளை உண்டாலும், யாழ்ப்பாணத்தில் இருந்து பிற பிரதேசங்களிற்கோ, பிற நாடுகளிற்கோ போகும் போது கட்டாயமாக கொண்டு போகும் பொருளாக கருவாடு இருந்தாலும் மீன் புனிதமற்றது, அதைப் பிடிக்கும் கடற்தொழிலாளி வெள்ளாளருக்கு சமமான மனிதன் இல்லை என்ற வேதாளங்களின் வெங்காயத் தத்துவம் இது. மனிதர்களை பிறப்பை வைத்து, தொழிலை வைத்து பிரித்துப் பார்க்கும் இந்தக் கூட்டத்தை சமுதாயத்தில் இருந்து துரத்துவோம்.