Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

தம்மை எதற்கும் இழக்காத போராளிகள்

தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண வாக்களியுங்கள் என்று வாக்குப்பிச்சை கேட்டு பாராளுமன்றம் சென்று அங்கு இனவெறி அரசுடன் கூடிக் குலாவி தமிழ் மக்களிற்கு துரோகம் செய்தவர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்தை கிண்டலடித்து சாதிவெறி பேசியவர்கள்; இன்றைய சம்பந்தனின் அன்றைய அவதாரங்களிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அவர் ஒரு நல்லவர், வல்லவர் என்று அறிக்கைகள் வருகின்றன.

தமிழ்மக்களிற்கு துரோகம் செய்தவர்களும், சாதிவெறியர்களும், கொலைகாரர்களும் மரணமடைந்த போது மக்கள் தலைவர்கள் என்று தூக்கிப் பிடித்தவர்கள் இன்று மெளனமாக இருப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று மக்களிற்காக தாம் மரணிக்கும் வரை உழைத்த மகத்தான சில போராளிகளின் மறைவின் போது எழுதப்பட்ட கட்டுரையின் மறுபிரசுரம்.

இழப்புகள் மிகுந்த வாழ்வு எனிலும், இழந்தவற்றை மீழப் பெறுகின்ற போரில் தம்மை எதற்கும் இழக்காத போராளிகள் சிலர் அண்மையில் மரணமடைந்தார்கள். தோழர் தவராசா, தோழர் குலரத்தினம், தோழர் தங்கவடிவேல் என்று வாழ்க்கையே போராட்டமாக, போரட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் மரணமடைந்தார்கள். அவர்கள் மக்களிற்காக போராடினார்கள். சமுதாயத்தில் நிலவும் அநீதிகளிற்கு எதிராக போராடினார்கள். சமுதாயத்தை விட்டு விலகி தனித்து நின்று தாமொரு குழுவாய் போனவர்கள் போலில்லாமல் காட்டை விட்டு பறக்காத பறவையைப் போல் தம்மண்ணில் கால் பதித்து நின்று போராடினார்கள்.

இவர்கள் சாதி கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள். வாழ்நாள் முழுவதும் கரைய மறுத்த வறுமையை சுமந்த குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். கல்வியை தெய்வம் என்றும்,கல்லூரியை ஆலயமென்றும் புளுகிப் பொய் சொல்லும் தமிழ்ச்சமுதாயத்தில் கோயில் உயர்சாதியினருக்கு மட்டுமே கதவை திறந்தது போல் பள்ளிகள், கல்லூரிகளும் தாழ்த்தப்பட்ட மக்களிற்கு கதவை திறக்காத கோட்டைகளாக இருந்தன. எடுத்த வெண்கட்டியால் எழுத முடியாது அவர்களை சாதியும், பணமும் தடுத்தன. எமக்கு வேறுவழி இல்லை என்று அவர்கள் அயர்ந்து போய்விடவில்லை. அஞ்சாது போரிட்டார்கள். தமக்கு மட்டுமின்றி தம் போன்ற மற்றவர்களிற்காகவும் போரிட்டார்கள்.

வல்வெட்டித்துறை ஊரிக்காடு சிதம்பரா கல்லூரிக்கு முன் வீட்டிலே தங்கவடிவேல் மாஸ்ரர் வசித்த போதும் அவரை அங்கே படிக்க சாதிவெறியர்கள் விடவில்லை. வல்வெட்டித்துறையிலிருந்து தொண்டைமானாறுக்கு ஒவ்வொரு நாளும் நடந்து போய் தொண்டைமானாறு பள்ளிக்கூடத்திலே படித்தார். சாதிவெறி பிடித்த ஆசிரியர்களின் கேலிகளும், ஆணவப்பேச்சுகளும் அவரை அங்கேயும் படிக்க விடவில்லை. அச்சுவேலியில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாறிச் சென்றார். சாதிவெறியர்களினால் அவரது படிப்பு அடிக்கடி தடைப்பட்டதால் அவருக்கு பதினைந்து வயதாக இருக்கும் போது அவர் பத்து வயது சிறுவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

தாம் உயர்ந்த சாதியினர் என்றும், மேலான தமிழர் என்றும் சாதிவெறி பிடித்து அலைந்தவர்கள் தானும்,தனது பெண்டாட்டியுமாக தன்னல வாழ்க்கை வாழ்ந்த போது இவர்கள் தமிழ் மக்களிற்காக, இலங்கை மக்களிற்காக சமத்துவத்தை சர்வதேசியத்தை ஏற்றுக் கொண்டு போராடினார்கள். கடல் அழுது வீழும் கரையில், தூரச் சிறைப்பட்ட காற்றில், நெடுந்தூரம் நீளும் இரவில் தோழர் தவராசா கடற்தொழில் செய்து விட்டு பகலில் கம்யுனிஸ்ட்டு கட்சிக்காக களப்பணி செய்தார். நெஞ்சக் கூட்டின் உயிர்த்துடிப்பில் நெருடும் முள்ளைப் போல் வறுமை குத்தித் துளைத்த வாழ்விலும் வளையாது நிமிர்ந்து நின்றார். முதுமை கலந்து மூச்சு வெளிப்படும் கடைசி நாட்களிலும் "போராட்டம்" பத்திரிகைகையை மக்களிடையை கொண்டு சென்றார்.

இலங்கைத் தமிழ்மக்கள் மேல் தொடர்ச்சியாக சிங்களப்பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி எதிர்த்து போராடி வந்தது. இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை மாநாட்டில் இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கூட்டத்தை ஒழுங்கு செய்ததில் குலரத்தினம் பெரும்பங்கு வகித்தார். கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு துரும்பு தான் அத்தீர்மானம் எனினும் அப்பிரகடனம் விளக்குகள் அணைந்த வீட்டினுள் மினுங்கிய மின்மினி போல் ஒளிர்ந்தது . தமிழ்மக்களின் கட்சிகள் என்று சொல்லப்பட்டவைகள் சிங்களப்பேரினவாதக்கட்சிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு இருந்த போது போர்க்குரலாக எழுந்தது பொதுவுடமைத் தோழர்களின் சுயநிர்ணய உரிமைத் தீர்மானம்.

ஆலயங்களில், உணவு விடுதிகளில் அனுமதி இல்லை போன்ற அநியாயங்களிற்கு எதிராக அறுபதுகளில் தீண்டாமைக்கு எதிரான வெகுஜன முன்னணியும் கம்யுனிஸ்ட்டு கட்சியும் இணைந்து போராடின. ஆண்களும், பெண்களும் சேர்ந்து போராடினார்கள். உயர்சாதிகளில் இருந்த முற்போக்காளரை, நட்புசக்திகளை இணைத்துக் கொண்டு போராடினார்கள். குமுறி எழுந்த அந்த சூறாவளியில் ஆலயங்களின் தடைகள் தகர்ந்து போயின. இல்லாத மனிதர்கள் இணைந்தால் புதியகாலை புலரும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்தார்கள் அவர்கள். அந்த போராளிகளில் ஒருவர் தோழர் தங்கவடிவேல்.

இவர்கள் இன்று மறைந்து விட்டார்கள் ஆனால் தமிழ்ப்பொது வெளியில் அவர்களிற்கு எந்த விதமான அஞ்சலிகளும் இல்லை. மறைந்த தோழர்கள் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக போராடவில்லை. ஆனால் தமிழ்மக்களிற்கு துரோகம் செய்தவர்களும், சாதிவெறியர்களும், கொலைகாரர்களும் மரணமடைந்த போது மக்கள் தலைவர்கள் என்று தூக்கிப்பிடித்தவர்கள் இன்று மெளனமாக இருப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?. பெரும்பாலான உழைக்கும் தமிழ்மக்களை சூத்திரர் என்று இந்துமதம் பழிக்கும் போது தமிழும், தமிழரும் தழைக்க வந்தவர் என்று போற்றப்படும் ஆறுமுகநாவலர் பதறிப் போனார். தமிழரைப் பழித்ததற்காக பதறவில்லை. மற்றச்சாதியோடு வெள்ளாளரையும் ஒன்றாகச் சேர்ப்பதா என்று என்று தான் பதறிப் போனார். வெள்ளாளரை சற்சூத்திரர் என்று ஒரு புதிய பிரிவிற்குள் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆறுமுகம் போன்ற சாதிவெறியர்கள் தமிழரின் தலைகள் என்று போற்றப்படுவதில் உள்ள சதி என்ன?

பொன்னம்பலம் ராமநாதன், ஜீ.ஜீ பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் என்று தமிழ்மக்களை, தமிழ்மக்களின் போராட்டங்களை காட்டிக் கொடுத்தவர்களை தமிழர் தலைவர்கள் என்று தூக்கிப்பிடிக்கும் அரசியலின் பின்னுள்ள மர்மங்கள் என்ன. இவர்கள் இருமரபும் துய்ய வந்த உயர்வர்க்கத்தினர் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஒளிவட்டம் வீசும் தலைவர்களைக் காட்டி மீட்பர்கள் எல்லாவற்றையும் பெற்றுத் தருவார்கள் என்று சொல்லும் மக்கள்விரோத அரசியல் அது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் ஆழியின் அடியிலிருந்து வெளுப்பினூடு படரும் செவ்வரிகள் வானம் எங்கும் வளரத்தான் போகின்றன. அன்று மயில்தோகை நிலத்தை வாருதல் போல மக்கள் மனதை தோழர்களின் நினைவுகள் வருடிச் செல்லும்.