Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எகிப்தின் தெருக்களிலே

ஒரு கவிதை

 

தமிழ் மொழியின் மிக முக்கிய கவிஞரான சண்முகம் சிவலிங்கத்தின் நீள்வளையங்கள் தொகுப்பிலிருந்து எகிப்தின் தெருக்களிலே என்ற 1977ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை இன்று துனிசியாவிலும் மீண்டும் எகிப்திலும் நடக்கும் போராட்டங்களை பார்க்கும் போது ஞாபகம் வந்தது.  அக் கவிதையில் இருந்து சில பகுதிகள்.

 

“கடை உடைப்பு
தீ வைப்பு
பொலீசை எதிர்த்து மக்கள் போராட்டம்
கண்ணீர்ப்புகை
துப்பாக்கிச் சூடு
அந்தி தொடங்கி வைகறை வரையும்
ஊர் அடங்குச் சட்டம்
அதையும் உதறி
ஜம்பது பேர் மரணம்
அவர்கள் தொழிலாளர்கள்
அவர்கள் மாணவர்கள்
நூற்றுக் கணக்கிலே தலை உடைவு
கை முறிவு கால் நொடியல்
சதை கிழிந்து வழியும்
இரத்தச் சிவப்புகளில்
சிவந்த மலர் பூக்கும்

இத்தனையும் ஏன்?
இங்கு உள்ளது தான் அங்கும்
விலை உயர்வு

விலை உயர்வை எதிர்த்தெழுந்த

வெங்கனலின் அலை எறிகை
அது இங்கே
மெத்தச் சுருங்கி
கொட்டைப் பாக்கிலும் குறைவாய்
துவாரம் சூம்பி
ஈற்று மாறிய கிழடாய்
எல்லாச் சுமைகளையும்

முதுகிலே சுமந்த படி
சொல்வார் சொல்லிற்கு
தலை அசைத்து கரம் கூப்பி
கறுப்பை வெள்ளை என்றால் அதையும் நம்பி
வெள்ளையைக் கறுப்பு என்றால் அதையும் நம்பி
பிடாரனின் ஊதலிற்கு
தலை கெழித்து தலை கெழித்து
வளைந்து நெளிந்து அடங்கிச் சுருளும்
சவமாய் சவங்களாய்
எங்கள் ஆண் உடம்புகள் ஏன் எழுவதில்லை?
எங்கள் யோனிகள் ஏன் அரிப்புக் கொள்வதில்லை?”

பெரும் படைகளோ, தளபதிகளோ போராட்டத்தின் முதன்மை சக்திகள் கிடையாது. அரசியல் மயப்பட்ட மக்கள் எழுச்சியே அதிகாரத்தை வீழ்த்தும் என்ற அரசியல் விஞ்ஞானத்தின் பாலபாடத்தை துனிசியா மற்றும் எகிப்து மீண்டும் ஒரு முறை நிருபித்து காட்டியிருக்கின்றது. எகிப்தின் தெருக்களுடன் எமது தெருக்களை ஒப்பிட்டு சண்முகம் சிவலிங்கன் எழுப்பிய கேள்விகள் 2011 இலும் மறு மொழியில்லாத கேள்விகளாகவே இருக்கின்றன. இதை நாம் உணராத வரையிலும் மீண்டும், மீண்டும் முள்ளிவாய்க்கால்களில் தான் ழூச்சடங்கப் போகிறோம். இலங்கைத் தீவின் ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே,  ஒடுக்குகின்ற கொலைகார கும்பல்களை துரத்தியடிக்க முடியும்.

ஒரு கதை

நாஞ்சில் நாடானின் கதையொன்று வரட்சியால் பாளம், பாளமாய் வெடித்துப் போன மராத்திய மண்ணில், பஞ்சத்தால் வாழவழியின்றி தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தில் மிஞ்சியிருக்கும் ஒரு ஒட்டி உலர்ந்து போன கிழவரைப் பற்றி சொல்கிறது. அவர் உயிர்ழூச்சு விட ஒரு வாய் உணவு தேடி, ஊர் ஊராக திரிகிறார். புகைவண்டியில் ஒரு விற்பனை பிரதிநிதி சப்பாத்திகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றான். கடைசிச் சப்பாத்தியை எடுக்கும் போது ஒரு கை தடுக்கின்றது. வாழ் நாள் முழுவதும் உழைத்து உண்ட கிழவரின் கை. பல நாள் உணவு காணாத தொண்டைக்குள் சப்பாத்தியை திணித்த படி,  கண்கள் கசிய நடுங்கும் குரலில் கிழவர் சொல்கிறார் “யாம் உண்போம்”. நான் உண்பேன் என்று சொல்லவில்லை.யாம் உண்போம் என்கிறார். பல்லுயிரும் பகிர்ந்துண்டு வாழ்ந்த ஆதி மனிதனின் குரல். யாதும் ஊரே! யாவரும் கேளீர்!! என்ற கணியன் பூங்குன்றனாரின் குரல்.

வாசிக்கும் போது மனதைப் பிடித்து உலுப்புகிறது கிழவரின் குரல். ஒரு வேளை உணவு இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் விவசாயி மாதிரி நடிக்கும் சினிமா கோமாளிகள், கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். பசியிலும், பட்டினியிலும் எமது மக்கள் நாளாந்தம் மடியும் போது ஆடம்பரமான விழாக்களில் கொழுப்பு பிடித்தவர்களால் உணவுகள் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுகின்றன. மேற்கு நாடுகளில் இருக்கும் சைவக் கோயில்கள் ழூன்று நேரமும் ழூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு வருபவர்களிற்கு அன்னதானம் செய்கின்றன.

ஒரு சாமியார்.

அண்மையில் இலங்கையில் ஆசிரியராக இருந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சிறு வயதிலே படிக்க மாட்டாராம். வகுப்பிலே கடைசியாகத் தான் வருவாராம். அவரது பெற்றோருடன் ஒரு முறை புட்டபர்த்திக்கு சாயிபாபாவை பார்க்கப் போயிருந்தாராம். சாயிபாபா இவரைக் கண்டதும், இவரது தலையை தடவி விட்டாராம். அதிலிருந்து இவரிற்கு ஞானம் பிறந்து ஒவ்வொரு பரீட்சையிலும் முதலாவதாக வந்தாராம்.
நான் கூறினேன், சாயிபாபா வழக்கமாக பெடியன்களிற்கு வேறே எங்கையோ தான் தடவுவதாக கேள்விப்பட்டேன். அது இருக்கட்டும், சாயிபாபா உமக்கு தடவியது போல் எல்லோருக்கும் தடவினால் எல்லோரும் கெட்டிக்காரர் ஆகிவிடலாமே. ஏன் அதனைச் செய்யவில்லை. லிங்கம் எடுக்கிற (வாயிற்குள்ளால்) விளையாட்டை விட்டு விட்டு,  எல்லோருக்கும் தடவினால் இலங்கை,  இந்தியா எல்லாம் கல்வியிலே எங்கேயோ போயிருக்குமே என்றேன். என்னை எரிப்பது போலே பார்த்தார்.

மக்களின் அறியாமைகளையும், ழூட நம்பிக்கைகளையும் தகர்ப்பதற்கு பதிலாக இயக்கம் கோயில் கட்டி  பிழைப்பு நடத்தும் போது,  அதன் ஆதரவாளர்கள்   இப்படி குரோட்டன் தலையனை நம்பும் அறிவிலிகளாகத் தான் இருக்க முடியும்.

-விஜயகுமாரன்-

29/01/2011