Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்

2009 மே மாதத்தில் அரசாங்க ஆயுதப் படைகளினால் எல்.டீ.டீ.ஈ.யின் தலைமை, அதன் உறுப்பினர்கள் உட்பட பெருவாரியான சாதாரண தமிழ் மக்களின் மரண ஓலத்தோடும், படுகொலையோடும் பல தசாப்தங்களாக நீடித்த  வந்த யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்தகால கட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தையும் ஒவ்வொரு இன மக்கள் மத்தியிலும் போர்க்குணத்தையும் புகுத்தி அதன் தீவிர யுத்தச் செயற்பாட்டின் மூலம் இந்த வெற்றி வெளியிடப்பட்டது. யுத்தத்தின் முடிவு வீரதீரமிக்க சிங்கள இனவாதத்தின் வெற்றியாக சிங்கள இனவாதிகளால் கொண்டாடப்பட்டது.   ராஜபக்ஷ அரசாங்கம் அந்த யுத்த வெற்றிக்கான உரிமையை தன் கையில் எடுத்து அதனை தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு போஷனை செய்து, தனது இருப்பிற்கான முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த யுத்த வெற்றி என்பது நவ தாராளமய முதலாளித்துவத்தினதும், வல்லாதிக்க நாடுகளினதும், இந்தியா- சீனா போன்ற பிராந்திய அரசியல் பலவான்களினதும் மற்றும் இனவாத அரசியலினதும் நப்பாசைகளைத் தொடர்ந்தும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்ததேயன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தோல்வியைத் தவிர உண்மையான வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. இலங்கையின் தேசியப் பிரச்சினையின் மூலம் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் புறநிலைக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தலைதூக்கிய முப்பது வருடகாலம் நீடித்த யுத்தத்தையும், யுத்தத்திற்கு பின்னரான வளர்ச்சிக்கு ஏற்பவும் பார்க்கும்போது, அது, முழு சமூகத்திற்கும் தோல்வியை பெற்றுத் தந்த மனிதக் கொடுமையாகவே இருக்கிறது.


யுத்தம் முடிந்து வருடங்கள் கடந்து விட்டன. ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ரீதியிலான ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. நவ தாராளமய முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் கலாச்சாரத் தேவைகளுக்காகவும், தமது அதிகார அரசியல் தேவைகளுக்காகவும் அவ்வாறான இராணுவ மாதிரியான ஆட்சியை தொடர்வது தற்போதைய முதலாளித்துவ ஆட்சியின் கட்டாய நிபந்தனையாக இருக்கிறது. யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீள்வதற்குப் பதிலாக முழு நாடும் இராணுவயமாக்கப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கில் செயற்பட்டு வரும் இராணுவ மாதிரியான ஆட்சி மக்களின் பாதுகாப்புக்காகவே என எவ்வளவுதான் நியாயப்படுத்தப் போலியாக முயற்சி செய்தாலும், முழு நாட்டுக்கும் அதன் நிர்வாணம் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோபூர்வமற்ற ஆயுதக்குழுக்களின் ஊடாக நாடு பூராவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் காணாமலாக்குதல் மற்றும் கடத்தல் கலாச்சாரத்தையும் மிஞ்சக்கூடிய வகையிலான நிலைமையொன்று வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நிலவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது 'யுத்த வெற்றிகளை" தொடர்ந்தும் பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தினாலேயே இப்பிரதேசத்தில் மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகள் மிக பயங்கரமாக இருக்கின்றன.

எல்.டீ.டீ.ஈ.யின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வியென குறிப்பிடும்படியாக செயல்படுவதன் மூலம் தமது வர்க்க மற்றும் அரசியல் நோக்கங்களை இப்பிரதேசங்களில் செயல்படுத்தி வருதை அறிந்து கொள்ள முடிகிறது. நீதிமன்ற உத்தரவுகளைக் கூட மதிக்காது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் குடும்பப் புகைப்படத்தை சுவரில் தொங்கவிடுமாறு வற்புறுத்தப்படுகிறது. நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சிவில் நடவடிக்கைகளை ராணுவமே மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்தினதும் அரச அங்கீகாரம் பெற்ற அரசியல் குழுக்களினதும் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் உரிமை ராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் எந்த ஒரு சமயத்திலும் கைது செய்வதற்கு, தடுத்து வைப்பதற்கு, துன்புறுத்துவதற்கு தேவையான சட்ட திட்டங்கள், விதிமுறைகள் எதுவுமே தேவைப்படுவதிலலை. முழு அதிகாரமும் ராணுவத்தின் கையில் இருக்கிறது. தமிழ் மக்களை சட்டத்துக்குப் புறம்பாக கடத்திச் செல்லல், காணாமலாக்கல், படுகொலை செய்தல் போன்றவற்றை சர்வசாதாரணமாக பொறுத்துக் கொள்ளும் மனோநிலை அங்கு உருவாகியிருப்பதோடு, யுத்த வெற்றியின் ஆதிக்க மனோநிலையை போஷித்து தெற்கின் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை அதற்குள் மூழ்கடித்து சிறையில் அடைபட்டுக் கிடக்கும் தமிழ் இளைஞர்களை சிறைக் கூண்டுக்குள்ளேயே படுகொலை செய்யும் நிலை வரை அவர்களது உள்ளக்கிடக்கை  வளர்ந்திருப்பதை சரியாக அறிந்து கொள்ள முடியம்.


யுத்தம் காரணமாக இடம்பெயர் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வக்கில்லாத அரசாங்கம், மீள்குடியேற்றும் நடவடிக்கை "மீண்டும் அகதிகளாக்கும் நடவடிக்கை"  என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்துக்குத் தேவையான வீடு, தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்காமல் மக்கள், யுத்தத்தின் சிதைவுகளுக்குள் கைவிடப்பட்டிருந்ததை கடந்தகாலங்களில் காணக் கூடியதாக இருந்தது. பெரும்பாலும் இந்த மக்களின் பூர்வீக கிராமங்கள் அத்துமீறி அழிக்கப்பட்டிருப்பதோடு, சிலவேளை, தமது இராணுவ தந்திரோபாயத்திற்கு ஏற்ப, புதிய இராணுவ முகாம்களை அமைக்கும் திட்டத்திற்கு அல்லது ராஜபக்ஷ அரசாங்கத்தினது நவ தாராளமய பொருளாதாரத்தின் பல்வேறு திட்டங்களுக்காக அந்தக் காணிகள் பறிக்கப்பட்டிருக்கவும் கூடும். கிழக்கு மாகாண கடற்கரை பிரதேசத்தில், உல்லாசப் பயண தொழிற்துறைக்காக ஹோட்டல் கட்டுமானங்கள் போன்ற பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்காக பெருமளவு காணிகள் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு, 675 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிலம் சிறப்புப் பொருளாதார வலயமாக பெயரிடப்பட்டு இந்திய கம்பனிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் விவசாய நிலங்கள் மற்றும் வேறு தனியார் வீடுகள் உள்ளிட்ட பெருமளவு சொத்துக்களை இராணுவம் பலவந்தாக கைப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்வாறான செயல்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.


வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தமது வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். விவசாயத்துக்குத் தேவையான நிலம், தண்ணீர், உரம், விதைகள் போன்ற வசதிகள் போதுமான அளவில் கிடைப்பதில்லை. அதற்கான விஷேட வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. கடற்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்புப் படையினரின் இடையூறின்றி தமது மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் இல்லை. தவிரவும், அவற்றுக்குத் தேவையான ஏனைய வசதிகள் கூட வழங்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதோடு, வேலையற்ற பட்டடதாரிகளுக்கான தீர்வு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. யுத்தத்தினால் கணவரை இழந்த விதவைப் பெண்களின் பிரச்சினை பாரதூரமான சமூகக் கொடுமையாக இருப்பதோடு, வாழ்வதற்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை வடக்கில் வேகமாக அதிகரித்து வருகிறது. வாழ்வதற்காக தொழில் செய்யும் உரிமை இல்லாமல் வெளிநாட்டுத் தொழிலை எதிர்ப்பார்த்து குடிபெயர்வோரில். பெரும்பாலானோர் வடக்கு- கிழக்கைச் சேர்ந்த இளைஞர்களாயிருப்பது இந்த நெருக்கடியின் ஆழத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது.


தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கலாச்சார தனித்துவ அடையாளங்கள். மூடிமறைக்கப்பட்டு அரச அனுசரணையோடு ஆதிக்கவாத கலாச்சார ஆக்கிரமிப்பு அரங்கேறி வருகிறது. பௌத்தர்கள் குடியிருக்காத வடபுலத்தின் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் ஆயுதப் படையினரின் தலையீட்டோடு புத்தர் சிலைகள் மற்றும் பன்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தம்புல்ல, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம் மக்களது மதவழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டன. கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான தாக்குதல்களைக் கவனித்துப் பார்க்கும்போது இது நன்றாகவே தெரிகிறது. விஷேடமாக வடக்கின் பல்வேறு இடங்களில் தமிழ் பெயர்களைக் கொண்ட கிராமங்களின் பெயர்களை மாற்றி சிங்களப் பெயர்களை பதிப்பதையும் காணமுடியும். வெசாக், பொசன் விழாக்களுக்காக தோரணங்கள் அமைத்து அன்னதான நிகழ்ச்சிளை ஏற்பாடு செய்து வடக்கு- கிழக்கு பூராவும் இராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் களியாட்டங்களை அவர்கள் ஆதிக்கவாத தலையீடாகக் கருதுவதை எப்படித் தடுக்க முடியும்?

இப்படியான நடவடிக்கைகள் தேசியப் பிரஜைகள் மத்தியில் பகைமையை உண்டாக்குவதற்கு காரணமாக இருக்கப் போவதை புத்திஜீவிகளான இலங்கை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தினதும் முதலாளித்துவத்தினதும் நோக்கங்களை சுமந்து கொண்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் சிங்களம் அல்லாத இனங்கள் மத்தியில் சிங்கள சமூகத்தின் மீது பொதுவான குரோத மனப்பான்மை உருவாகக் கூடும் என்பதையும், இதன் மூலம் பல்வேறு இனக் குழுமங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சக்திகள் ஒன்றிணையக் கூடிய தவிர்க்க முடியாத அழுத்தமும், பொதுவாக அனைத்து இனவாதங்களிதும் வளர்ச்சிக்கான நிலைமையும் இதன் மூலம் உருவாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் திட்டமிட்ட இந்தச் செயல்கள் சிங்கள சமூகத்தின் ஆதிக்கத் தலையீடாக ஏனைய இனக் குழுமங்களால் கருதக்கூடிய குழப்ப நிலையை, அனைத்து இன மக்களையும் ஒன்று சேர்த்த போராட்டத்திற்காக தோன்றி நிற்கும் இயக்கத்தின் முன்னுள்ள பாராதூரமான சவாலை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.   


கடந்த மூன்று தசாப்தத்துக்கும் மேலாக நீட்சிபெற்ற இனவாத யுத்தத்தின் விளைவாக வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அவர்களது கிராமங்களிலிருந்து விரட்டியடித்து இன அழிப்பில் எல்.டீ.டீ.ஈ. ஈடுபட்டதோடு, ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இன அழிப்புக்குப் பலியாகினர். ஒருவேளை அன்றைய முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தேவையின் நிமித்தமாகவே அந்த மக்கள் வடக்கு- கிழக்கில குடியேற்றப்பட்டிருக்கலாம்.  ஒருவேளை, பல்வேறு மக்கள் பிரிவுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் குடியேற்றப்பட்டமை, ஆட்சிபீடமேறிய பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களின் பல்வேறு அரசியல் தேவைகளின் நிமித்தம் கட்டங்கட்டமாக நடந்ததாகவும் இருக்கலாம். தமது அரசியல் ஒழுங்கிற்கும் மேலாக முதலாளித்துவத்தின் நெருக்கடியியினாலேயே உருவான பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குப் பலியாகி சிறைப்படுத்தப்பட்ட பல்வேறு சமூகப் பிரிவுகள் விடுதலை பெற்ற பின்னர் அரசாங்க தலையீட்டின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவர்களது விருப்பத்தைக்கூட கேட்காமல் குடியேற்றப்பட்ட சந்தர்ப்பங்களை வரலாற்றில் காண முடிகிறது. இன்றும் கூட தமது வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். குடியேற்றம் என்ற போர்வையில் நடைபெறும் இந்தச் செயலுக்கு வாழ வழி தெரியாது நிர்க்கதியாகியிருக்கும் ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் பலியாகிறார்கள். அவர்களது நோக்கம் மீன்பிடித் தொழிலுக்கு வசதிகளைப் பெற்றுக் கொள்வது, விவசாயத்துக்கத் தேவையான காணிகளைப் பெற்றுக் கொள்வது வசிப்பதற்கு வீடொன்றைப் பெற்றுக் கொள்வதுதான். முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக முன்னைய முதலாளித்துவ அரசாங்கங்களைப் போன்று ராஜபக்ஸ அரசாங்கமும் அப்படியான வசதிகளைப் பெறாத மக்களைப் பயன்படுத்தி தனது அரசியல் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நாட்டில் வாழும் எந்தவொரு பிரஜையும்  இன ரீதியாகவோ அல்லது எந்தவொரு கட்டுப்பாடோ இல்லாமல் நாட்டின் எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கான உரிமை இருந்த போதிலும், இன உணர்வுகளைத் தூண்டும் அழுத்தமான நடவடிக்கைகளின் நோக்கம் முற்றிலும் இதற்கு மாறுபட்ட அரசியலை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆகவே குடியேற்றம் என்ற பெயரில் பலியாக்கப்படும் மக்களது அபிலாஷைகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் அபிலாஷைகளுக்குமிடையில் வித்தியாசமிருக்கிறது. தமது உரிமைகளை பெற்றுக் கொள்ளும் போராட்டத்தோடு இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களைத் தடுத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருவரையொருவர் பிரித்து வைக்கும் முதலாளிய வர்க்கத்தின் நோக்கம் இதனூடாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.


வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் அறுதிப் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் தமது காணிகள், வேலைவாய்ப்புக்கள், வீடுகள் மட்டுமல்ல, பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர் நண்பர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்களையும் இறுதியாக தமது மானம் மரியாதையையும் பறிகொடுத்துள்ளனர். இன்றைய தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குள் புதிய முறையிலான இனவாத உணர்வுகளைத் தூண்டக்கூடிய சமிக்ஞைகள் தென்படுகின்றன. யுத்தத்தை முடித்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டதாக ஓலமிடும் ராஜபக்ஷ அரசாங்கம் உள்ளிட்ட சிங்கள இனவாத சக்திகள் தமிழ் மக்களின் தன்மானத்தை பறித்துக் கொண்டுள்ளன. யுத்தம் முடிந்து 3 வருடங்கள் கடந்த நிலையிலும் தேசியப் பிரச்சினை உருவாவதற்குக் காரணமான சமூக- பொருளாதா அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளுக்கு இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தினால் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அந்த பிற்போக்குத்தனத்தோடு இணைந்த முன்னைய செயல்களை தூண்டிவிடும் நவ தாராளமய முதலாளித்துவத்திடம் அதற்கான தீர்வும் கிடையாது. அதற்குப் பதிலாக தமது வர்க்கத் தேவைகளின் நிமித்தம் அந்தப் பிரச்சினை மேலும் விரிவாக்கப்பட்டு எல்லாவிதமான இனவாதங்களும் போஷிக்கப்பட்டு வருகின்றன.


பிரச்சினைகளின் ஆரம்பமும் வெளிப்பாடும்


இலங்கையிலிருந்த ஆசிய உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகள் முதலாளித்துவ முறையை நிர்மாணிக்குமளவுக்கு முதிர்ச்சியடைந்திருக்காத நிலையில் பிரித்தானிய காலனித்துவவாதிகளினால் புகுத்தப்பட்ட இலங்கை முதலாளித்துவம் தன்னால் பூர்த்தி செய்யப்பட  வேண்டிய மேலும் விடயங்களை பூர்த்தி செய்ய முடியாமற் போனதைப் போன்றே, சமூகவிஞ்ஞான ரீதியில் இலங்கையர் இனத்தை நிர்மாணிக்கவும் முடியவில்லை. பிறப்பிலேயே பின்தங்கிய அடையாளத்தைக் கொண்டிருந்த, வளர்ச்சியில் பலவீன அடையாளங்களைக் கொண்டிருந்த இலங்கை முதலாளித்துவம் ஆசிய உற்பத்தி முறையின் எச்சங்களை முற்றாக துடைத்தெறிந்ததோடு, தமது அரசியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்குப் போதுமான அளவுக்கு மாத்திரம் முதலாளித்துவ சீர்த்திருத்தங்களைச் செய்தது.

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனித்துவ ராஜ்ஜியங்களில் தொடர்ந்து ஆட்சி செய்வதற்காக பயன்படுத்திய ஆயுதம் இந்த பிரித்தாளும் தந்திரம்தான். இந்த உபாயத்தின் கீழ் இன அடையாளம், பேசும் மொழி, மத அடையாளம் அல்லது ஏதோவொரு குறுகிய பிரதேசவாத அடிப்படையில் மக்களை பிரித்து, அவர்கள் மத்தியில் குரோத மனப்பான்மையை வளர்த்து ஒன்றிணைந்த போராட்டத்துக்கான இடைவெளியை மூடுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். தமது ஆளுகைக்கு உட்பட்ட காலனித்துவ நாடுகளில் பிரித்தானியர்கள் இந்த தந்திரத்தையே கையாண்டனர். இந்தியாவில் பரவலாக வாழ்ந்த மக்களை மற்றும் அவர்களது தனித்துவத்தை ஏகாதிபத்தியவாதிகள் தந்திரமாகப் பயன்படுத்தி இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் குரோத மனப்பான்மையை வளர்த்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரித்தமையையும், பின்னர் மீண்டும் பாகிஸ்தான், பங்களா தேசம் என இரு நாடுகள் நிர்மாணிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. போல்கன் பிராந்தியம், லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்தியகிழக்கு பிராந்தியத்துக்குள் தலையீடு செய்து, இன, மத தனித்துவங்களைப் பயன்படுத்தி அந்த மக்கள் மத்தியில் பிரிவினையையும் சந்தேகத்தையும் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்களை ஆராயும் போது, பிரித்தாளும் தந்திரத்தை ஏகாதிபத்தியவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை தமது அரசியல் நோக்கத்திற்காக புதிய முறையிலும் பல்வேறு கோஷங்;களின் ஊடாகவும் பயன்படுத்தி வருவது தெரிகிறது.


1833ல் சட்டவாக்கச் சபைக்கு பிரதிநிதிகளை இன அடிப்படையில் தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்த பிரித்தானியர், 1889 மற்றும் 1924 அரசியலமைப்பின் ஊடாக இந்தக் கொள்கைiளை முன்னெடுத்துச் செல்வதற்கும் நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு பிரித்தானியரால் இலகுவாக ஆட்சி செய்வதற்காக, பிரித்தாளும் தந்திரத்தை தொடர்ந்தும் கையாள்வதற்கு நடவடிக்கை எடுத்த. பின்னர் ஏகாதிபத்தியவாதிகளின் கைத்தொழில்களுக்காக சேவைகள் வழங்குவதன் மூலம் முன்னேறிய இலங்கையின் ஆதிக்க முதலாளித்துவ வர்க்கத்துக்கும், தேசிய சமூகங்களுக்குமிடையிலும், நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் அவர்கள் தோல்வி கண்டனர். பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் பணக்காரத் தலைவர்களை ஒருங்கிணைத்து பலமான தேசிய இயக்கமொன்றை அமைப்பதற்குக் கூட முதலாளித்துவ வர்க்கம் தவறிவிட்டது.

அநகாரிக தர்மபால போன்றவர்களின் தலைமையில் முன்னேறி வந்த தேசிய இயக்கம், மாட்டிறைச்சியை பகிஷ்கரிக்கும் அமைப்பு மற்றும் போதைவஸ்துக்களுக்கு எதிரான இயக்கம் ஆகியன மதரீதியான தோற்றத்தைக் கொண்டதாகவே இருந்தன. 1915ல் ஏற்பட்ட சிங்கள- முஸ்லிம் இனவாத மோதலின்போது ஒட்டுமொத்த இனமும் முஸலிம்களுக்கு எதிராக எழுந்து நிற்க வேண்டுமென்று அநகாரிக தர்மபால கூறினார். அவர்களது போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்றாக அல்லாமல் தமிழர்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் எதிரான இனனவாத வடிவத்தை எடுத்தது.


1919 டிசம்பர் 11ம் திகதி முதலாளித்துவ வர்க்கம் இனபேதமின்றி ஒரே அமைப்பாக ஒன்று சேர்ந்து இலங்கை தேசிய சங்கத்தை அமைத்துக் கொண்டது. ஆனாலும், அவர்களுக்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான திட்டம் இருக்கவில்லை. இலங்கை முதலாளித்துவ வர்க்கம் தனது சுயவளர்ச்சியின் மூலமாக பெற்றுக் கொண்டுள்ள எல்லைகள் குறிப்பிடப்பட்டிருப்தோடு, அதன் விளைவாக 1921ல் தமிழ் செல்வந்த தலைவர்கள் அதிலிருந்து விலகி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை அமைத்துக் கொண்டார்கள். 1935ல் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக சிங்கள மகாசபையை அமைத்துக்கொண்டு அதிலிருந்து விலகிச் சென்றார். அதிலிருந்து 1939ல் விலகி தோட்டத் தொழிலாளர்களை பிரிதிநிதித்துவப்படுத்திய பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த தமிழ் தலைவர்கள் இலங்கை இந்தியர் சங்கத்தை அமைத்துக் கொண்டனர். ஆகக்குறைந்தது, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக பலமான தேசிய இயக்கத்துக்குள் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றிணைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் முதலாளித்துவ தலைவர்களுக்கு இருக்கவில்லை. 1948ல் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு, இலங்கை நவ காலனித்துவ தந்திரோபாயத்துக்கு மாறியதோடு இன்றுவரை கடந்த வரலாறு பூராவும் முதலாளித்துவ தலைவர்கள் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காகவும், நடத்திச் செல்வதற்காகவும் இனவாதத்தை போஷித்த வரலாறுதான் இருக்கிறது.


அதன் நீட்சியாக போலிச் சுதந்திரத்தின் பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பிரிந்து வேறாகி தேசிய இன அடையாளத்தோடு; செயல்படத் தொடங்கியதோடு, அதனை மீண்டும் சரிசெய்ய முடியாதளவுக்கு இலங்கை சமூகம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. 1948ல் சிங்கள முதலாளித்துவ தலைவர்களின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கப்பட்டதோடு, ஜீ.ஜீ. பொன்னம்பலம் போன்ற தமிழ் பிரபுக்களின் தலைமையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. தமது அதிகார அரசியல் தேவைகளுக்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதத்தையும் தமிழ் இனவாதத்தையும் போஷித்தார்கள். தோட்டப் பகுதிகளில் பலமான அடித்ததளத்தைக் கொண்டிருந்த இடதுசாரி இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்காக 1949 இல. 18. பிரஜைகள் சட்டமூலத்தின் ஊடாக அந்த தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ பெயரளவிலான எதிர்ப்பைக் காட்டி குறுக்கு வழியில் சட்டமூலத்துக்கு ஆதரவளித்தது.1951ல் எஸ்.டபுள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை அமைத்துக்கொண்டார்.

1956ல் அதிகாரத்துக்கு வந்த பண்டாரநாயக்க தலைமையிலான முதலாளித்துவ ஆட்சி தேசியப் பிரச்சினைக்கு புதிய முலாம் பூசி அதனை வளர்ச்சியடைய வழிசமைத்தது. பண்டாரநாயக்காவின் தலைமையில் உருவாகிய முதலாளித்துவ ஆட்சி தனது அதிகாரத்திற்காகப் பயன்படுத்திய முக்கிய ஆயுதம் சிங்கள இனவாதமாகும். பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் அரச நிர்வாகத்திற்காகப் பயன்படுத்திய ஆங்கிலமொழிக்குப் பதிலாக "சுயபாஷைக்கான உரிமை' என்ற சாதாரண கோஷத்தை பயன்படுத்தி பண்டாரநாயக்க ஆட்சி 'சிங்களம் மட்டுமே" என்ற இனவாத கோஷத்தை முன்வைத்தது. தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்துக்கு இதனால் பாரிய அடி விழுந்தது. இதன் காரணமாக தமிழ் சமூகத்திற்குள் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர்ச்சியடைந்தது.

1958ல் வாகனங்களிலிருந்த ஆங்கில எழுத்துகளுக்குப் பதிலாக சிங்கள 'ஸ்ரீ" எழுத்தை பயன்படுத்த அரசாங்கம் எடுத்த முடிவினால் தமிழ் சமூகத்துக்குள் கொந்தளிப்பு உருவாகியது. இதற்கிடையில் வடக்குக்குச் சென்ற வாகனங்களில் ஸ்ரீ எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டன. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் விஷேட அந்தஸ்து வழங்கப்பட்டு கொண்டுவரப்பட்ட சட்டமூலம், 1972 குடியரசு சாஸனத்தின்  மூலம் உறுதி செய்யப்பட்டமையால் நிலைமை மேலும் பரவலாகியதோடு முதலாளித்துவ அரசு சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகத்தினது அரசு என்ற கருத்திலிருந்து படிப்படியாக விலகிக் கொண்டிருந்தது. கல்வித்துறையில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கில் யாழ்ப்பாண மாவட்டம் போன்ற பிரதேசத்தின் பிள்ளைகள் பல்கலைக்கழக கல்வி ஊடாக முன்னேறி வந்ததோடு, தமிழ் சமூகத்தின் மத்தியில் கல்வியில் விஷேட வளர்ச்சியொன்றும் காணப்பட்டடது. கல்வித் துறையில் சிங்கள மொழிக்கு விஷேட அந்தஸ்தைக் கொடுத்து, 1972ல் கொண்டுவரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் சட்டமூலத்தினால் தமிழ் மக்களது பிள்ளைகளின் கல்வியில் பாரிய அடி விழுந்தது. இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் சமூகத்திற்குள் தோன்றிய நியாயமான சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை பயன்படுத்தி தமிழ் இனவாத முதலாளித்துவ தலைவர்கள் தமது அதிகார நோக்கத்திற்காக இனவாதத்தை போஷித்து அதனை பயன்படுத்தினார்களேயன்றி தமிழ் மக்களின் சம உரிமை மற்றும் நியாயமான உரிமைகளுக்காகப் போராடவில்லை.


இவ்வாறு தமிழ் இனவாதமும், சிங்கள இனவாதமும் ஒன்றையொன்று மீள்போஷனை செய்து கொண்டு, வளர்ச்சியடைந்ததன் விளைவாக சந்தேகமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டு தனி ஆட்சி கோரும் திசையை நோக்கி தமிழ் இனவாத முதலாளித்துவ தலைவர்கள் தமிழ் சமூகத்தை இட்டுச் சென்றனர். பிரிந்திருந்த அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து 1972 மே 14ம் திகதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை அமைத்தன. 1976 மே 16ம் திகதி வட்டுக்கோட்டை மாநாட்டை நடத்தி இலங்கையிலிருந்து பிரிந்து தனி நாடொன்றை அமைத்துக் கொள்ளும் பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டது. அத்தோடு, தனி இராச்சியமொன்றுக்கான திருப்புமுனையொன்றும் பொறிக்கப்பட்டது. பின்னர் 1981 இல் அபிவிருத்திச் சபை தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் யாழ்ப்பாண மக்களின் வாக்குரிமையைப் பறித்து பாரிய வாக்குக்கொள்ளையில் ஈடுபட்டதோடு. தமிழ் மக்களின் மதிப்பு வாய்ந்த பொக்கிஷமான யாழ்ப்பாண பொதுநூலகத்தை தீயிட்டுக் கொழுத்தியது.

வடக்கில் ஆயுதக் குழுக்களினால் (புலிகளினால்) வைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடி வெடித்ததில் 13 படைவீரர்கள் கொல்லப்பட்டமை பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது இச்சம்பவம் 1983 கறுப்பு ஜுலையை உருவாக்கி தமிழ் மக்களுக்கு எதிராக படுபயங்கரமான வன்முறை ஐ.தே.க. வினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. பூரண அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் அரங்கேறிய வெறியாட்டம் காரணமாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் குடியிருந்த பெரும்பாலான தமிழ் குடிமக்கள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் வரலாற்றுத் தவறுகளை திருத்திக் கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது. இவ்வாறாக முதலாளித்துவ அரசாங்கங்கள் செய்த பெரிய காரியம் என்னவென்றால், மக்களை ஒற்றுமையாக்குவதற்குப் பதிலாக சந்தேகத்தையும்; அவநம்பிக்கையையும் வளர்த்து, இனவாதத்தை போஷித்து பிரிவினையின் பக்கம் அந்த மக்களை தள்ளியது தான். தமிழ் சமூகத்தின் மத்தியில் வளர்ந்து வந்த இனவாத அரசியல் போக்கு ஆயுதப் போராட்டம் வரை முன்னேறியதோடு, அந்த ஆயுதப் போராட்டத்தின் பிரதான படையணியான எல்.டீ.டீ.ஈ.யினால் சிங்கள, முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது கருத்துக்கு எதிராக நின்ற, சமூகப் பிரஜைகள் மீது கொடூரமான வன்முறைகள் தொடுக்கப்பட்டன. அவ்வாறு வளர்ச்சியடைந்த தமிழ் இனவாத ஆயுத முன்னணிக்கு எதிராக, சிங்கள இனவாதத்தைப் போஷித்து அந்த மண்ணில் முதலாளித்துவ அரசை பலப்படுத்துவதற்கு ஆளும் வர்க்கம் நடவடிக்கை எடுத்தது.


படிப்பறிவின்மையாலும் வறுமையினாலும் அவதிப்படும் மலையக மற்றும் கீழ்நாட்டு தேயிலை- இறப்பர் தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர் மக்களின் உண்மையான பிரச்சினைகள் ஒன்றுக்குமே முதலாளித்துவ ஆட்சியாளர்களினால் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. வர்க்க அழுத்தத்தினாலும், இன அழுத்தத்தினாலும் அவதிப்படும் அந்த மக்களின் பிரதிநிதிகளாக வலம்வரும் தோட்டப் பகுதியைச் சார்ந்த முதலாளித்துவ தலைவர்கள் அந்த மக்களது அறியாமை, வறுமை, மற்றும் பிற்போக்குத்தனத்தைப் பயன்படுத்தி கொடூரமான அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது அதிகார நப்பாசையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, ஆட்சிக்கு வரும் பல்வேறு அரசுகளோடு தமது தனிப்பட்ட குறுகிய அரசியல் அபிலாஷைகளுக்காகவும், இந்த மக்களின் உரிமைகளைப் பேரம் பேசுவதில் வெட்கமின்றி ஈடுபட்டிருப்பது குறித்து ஒடுக்கப்பட்ட தேசியப் பிரஜைகள் தொடர்பில் போலியாக குரல் எழுப்பும் தேசிய மற்றும் சர்வதேச பலவான்களுக்கு வரலாறு மறந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

வாழ்வதற்கு தகுதியான வீடு, கலாச்சார வாழ்க்கை மற்றும் சரியான சம்பளம் மாத்திரமல்ல, வாழ்க்கையையும் தொலைத்துவிட்டிருக்கும் தமிழ் மக்களை இவ்வாறு அடிமை அரசியலுக்கு பயன்படுத்துவது கொடுமையாகும். ஆகவே, தமது உண்மையான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் அவர்களை ஒன்றிணைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். இலங்கையின் பின்தங்கிய முதலாளித்துவத்தின் தேசிய அழுத்தத்தோடு, முதலாளித்துவ முஸ்லிம் பிரபுத்துவ அரசியலுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் உண்மையான நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலும், ஏனைய பிரதேசங்களில் பரவலாகவும் வாழும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களது வாழ்வாதாரத்துக்குத் தேவையான அடிப்படை உரிமைகள் கூட இல்லாமலாக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் பிரபுத்துவ அரசியல் கட்சி, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களது பிரச்சினைகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தோடு பேரம் பேசும் பிரபுத்துவ அரசியலினதும், வர்த்தக வர்க்கத்தினதும் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களை ஏலத்தில் விட்டு முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளெனக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வரலாறு பூராவும் அவ்வாறே தமது வர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வருகிறது. ஆகவே ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அனைத்தையும் பெற வேண்டியிருக்கிறது. அதற்காக, இனவாத வலைக்குள் சிக்காமல் சிங்கள, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய  போராட்டமொன்று அவர்களுக்காக காத்திருக்கிறது.


ஆளும் அதிகார வர்க்கம் சிலவேளைகளில் சிங்கள இனவாதத்தையும் சில வேளைகளில்  தமிழ் இனவாதத்தையும் சில வேலைகளில் முஸ்லிம் இனவாதத்தையும் தமது அதிகாரத் தேவைக்காகப் பயன்படுத்தி நடத்திய அரசியல் சூதாட்டத்தின் காரணமாக கடந்தகாலங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களது உயிர்கள் பறிக்கப்பட்டன. வரலாற்றில் செய்த தவறு மீண்டும் நடக்காதவாறு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது கஷ்டமான காரியமாக இருக்கிறது. யுத்தத்தின் பின்னர் கடந்தகாலங்களில் முதலாளித்துவ அரசாங்கம் கையாண்ட சில அடாவடித்தனங்களால் சந்தேகமும் அவநம்பிக்கையும் மீண்டும் வளர்ந்துள்ளது. தமிழ் மக்களின் 'உரிமைகள்" 'ஜனநாயகம்" மற்றும் 'மனித உரிமைகளு" க்காக போலிக் கருத்தாடல்கள் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு குரலெழுப்பும் ஏகாதிபத்திய நாடுகளைப் போன்றே இந்தியாவும் தனது அரசியல் நோக்கத்திற்காக தமிழ் மக்களின் பிரச்சினையை ஏலம் போடும் கைங்கரியத்தில் இறங்கியிருக்கிறது. தமிழ் மக்களின் மனித உரிமைகள், மீள்குடியேற்றம் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கும் இந்தியா, தமிழ் மக்களது காணி பூமிகளை தமது பொருளாதார திட்டங்களுக்காக விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் சாம்பூர் சிறப்புப் பொருளாதார வலயம். அதேபோன்று இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையை தமது அரசியல் நோக்கத்திற்காக முகாமைத்துவம் செய்வதற்கு வற்புறுத்தக்கூடிய ஆயுதமாக தமிழ் மக்களின் கண்ணீரைப் பயன்படுத்துகின்றனவேயன்றி, அவர்களது பிரச்சினைகளுக்கு உண்மையிலேயே தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கம் அவற்றுக்குக் கிடையாது.

அவர்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் பிரச்சினை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். அந்தப் பிரச்சினைகளை அப்படியே நிலைத்திருக்கச் செய்து தமது, அரசியல், பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் தேவை ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருக்கிறது. இலங்கையின் தேசியப் பிரச்சினையை தமது பிராந்திய அதிகார அரசியல் நோக்கத்திற்காக முகாமைத்துவம் செய்யும் தந்திரோபாய திட்டத்தின்படியே வரலாறு பூராவும் செயல்பட்டு வந்ததை தனியாகக் கூற வேண்டியதில்லை. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டைக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் இன்று பயணிப்பது தெரிகிறது. அது ஒருநாளும் நிறைவேறாத கனவாகத்தான் இருக்கும். தமிழ் பிரபுக்கள் வர்க்கத்தின் அரசியல் இருப்பு பாதுகாக்கப்படுவதோடு ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. ஆகவே இந்தியாவையோ வேறு எந்த ஏகாதிபத்திய சக்தியையோ நம்புவதால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கப் போவதில்லை.

காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்கள் பற்றிய ஒரு தகவல் கூட கிடைக்காமல் இருக்கும் நிலையில், கைது செய்யப்பட்டு எவ்வித வழக்கு விசாரணைகளும் இல்லாது மேலும் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில். இடம்பெயர் முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமது அதிகார அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி தக்கவைத்துக்  கொள்வதற்காக எவருடைய முதுகிலாவது சவாரி செய்ய தயாராக இருக்கும் அரசியல் ஆதிக்க வெறியர்கள், தமது வர்க்கத்தின் அதிகார அரசியல் நோக்கத்திற்காக யுத்த அழிவுகளுக்குக் காரணமான முக்கிய பிரதிவாதியான முன்னாள் இராணுவத் தளபதியை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து, அதற்காக தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்த முதலாளித்துவ பிரபுக்கள் வர்க்க தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவதால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இனவாத யுத்தத்திற்காக வரிச்சுமைகளை தாங்கிய, பால் பக்கற்றை, ஒருவேளைச் சோற்றை தியாகம் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வித்தியாசமின்றி, இன்று அரசாங்கம் கூறுவதைப் போன்று 'வெற்றியை" ப் பாதுகாப்பதற்காக வரிச்சுமையை தாங்கவும், அனைத்தையும் தியாகம் செய்யவும் நேரிட்டிருக்கின்றது. அன்று யுத்தத்திற்காக என்று கூறிக் கொண்டு, மனித உரிமைகளை மீறியபோது மௌனமாக இருந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இன்று மனித உரிமைகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்த வெற்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரித்தானதல்ல, முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு மட்டுமே உரித்தானதாகும்.

இனவாத அழிவு யுத்த 'வெற்றிகள்" எப்போதுமே முதலாளித்துவத்திற்கும் அதன் ஆளும் வர்க்கத்திற்கும் மாத்திரம் சொந்தமாவதை புதிதாக விளக்கத் தேவையில்லை. பல தசாப்தங்களாக வளர்ச்சி பெற்றுள்ள இனவாத மனோநிலையிலிருந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை மீட்டெடுத்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பி ஒருவரையொருவர் மதிக்கும் நிலையை உருவாக்குவதற்காக தலையீடு செய்ய வேண்டியுள்ளது. ஆதிக்க கருத்தியலுக்குள் தமிழ் இனவாதத்தைத் தோற்கடிப்பது குறித்து சொல்லிக் கொண்டிருந்தாலும் தெற்கின் சிங்கள சமூத்திற்குள் சிங்கள இனவாதத்தைத் தோற்கடிப்பது குறித்து போதுமான கருத்தாடல்கள் கிடையாது. ஆகவே, தெற்கின் சமூகத்திற்கும் விஷேட தலையீடொன்றைச் செய்வது இன்றைய நிலையில் இன்றியமையாததாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்கள் தற்போதைய சமூகப் பொருளாதாரமுறைக்கு எதிராக கூட்டுப் போராட்டத்திற்குள் ஒன்றிணையாமல் எந்தவொரு ஒடுக்கப்பட்டவருக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. சுய விருப்பத்தோடு அனைத்து தேசியக் பிரஜைகளையும் ஒன்று சேர்க்காமல் பலவந்தமாக அடிமையாக்குவதனாலோ அல்லது விஷேட வரப்பிரசாதங்களை தேசிய இனமொன்றுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலமோ நிரந்தர சமாதானம் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறான எந்தவொரு தீர்வின் மூலமாகவும் வேறு வழியில் இனவாதம் போஷிக்கப்பட்டு வரலாற்றில் நடந்ததைப் போன்று இலங்கை சமூகம் கொடூர மனித அழிவுக்குள் இட்டுச்செல்லப்படுவதை தடுக்க முடியாது. 

எனவே, சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் சுய ஒன்றிணைவைத் தவிர வேறு எவ்விதத்திலும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வைத் தேட முடியாது. பிரச்சினைக்கான பொறுப்பை பிரபாகரன் மீதோ அல்லது அவ்வாறான இனவாதத் தலைவர்களின் மீதோ சுமத்திவிட்டு இன்றைய இருப்பை உறுதியாக்க முயற்சி செய்யும் தற்போதைய ராஜபக்ஸ ஆட்சியின் இனவாத அரசியல் நோக்கத்தைப் போன்றே அதற்கு எதிர்வினையான இனவாதத்தை விதைத்து தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் தமிழ் இனவாத பிரபுத்துவ நோக்கத்தையும் அவ்வாறான ஒன்றிணைவின் முலமே தோற்கடிக்க முடியம்.


தற்போதைய சூழ்நிலையில் இன அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒருவரையொருவர் சந்தேகிக்கும் அரசியல் காரணமாக உண்மையான வர்க்கப் பிரச்சினை மறைக்கப்பட்டு, இன மற்றும் மத அடையாளங்களே பிரச்சினையாக்கப்பட்டு அவற்றை வென்று கொள்ளும் போராட்டத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போதைய சமூக பிற்போக்குத்தனத்தின் காரணமாக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்கள் தனித்துவ அடையாளங்களே தமது உரிமைகளென அறிந்திருக்கிறார்களே தவிர, முதலாளித்துவத்தால் பறிக்கப்பட்டிருக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் உரிமைகளைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களில்லை. இவ்வாறாக உண்மையான வர்க்கப் பிரச்சினையை மூடிமறைத்து சிங்களவனுக்கெதிரான தமிழன், தமிழனுக்கெதிரான சிங்களவன் என மக்கள் பிரிக்கப்பட்டு உணமையான வர்க்க முரண்பாடு வேறுபக்கம் திருப்பப்பட்டுள்ளது.  அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் தமது வர்க்க உரிமைகளை வென்றுகொள்வதற்காக உண்மையாகவே ஒன்றிணைய வேண்டுமாயிருந்தால், அதன் இன்றியமையாத பகுதியாக முதலில் முதலாளித்துவ அரசாங்கத்தினால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு சம உரிமைகளைப் பெற்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அந்தப் போராட்டம் தற்போதைய முதலாளித்துவ சமூக பொருளாதார முறையின் மூலம் மறுசீரமைப்பை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் வரையறுக்கப்படாத, மனித சமூகத்துக்குள் சமத்துவமின்மையை நிர்மாணித்ததும், மனிதனால் மனிதன் சுரண்டப்படுவதை அடிப்படையாகக் கொண்டதும், தனியார் சொத்துடைமையைக் கொண்டதுமான சமூகமுறையை ஒழித்துக்கட்டும் வரை நீடிக்கும் விரிவான போராட்டமாக இருக்க வேண்டும். சமத்துவமின்மையை நிர்மாணித்த மூலகாரணிகளை தகர்த்தெறியக் கூடிய புதிய சமூக முறையொன்றின் மூலம் மாத்திரமே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களால் தமது உரிமைகளை உண்மையாகவே பெற்றுக்கொள்ள முடியும். அப்படியான பரந்த போராட்டத்துக்குள் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு கட்டி எழுப்பப்படும் சம உரிமை இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருப்பது, சிங்கள, தமிழ், முஸ்லிம் இனக் குழுமங்களை ஒன்றிணைத்து மக்கள் தொகையில் குறைந்த விகிதாசாரத்தைக் கொண்ட ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய பிரஜைகளுக்குமான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை ஆரம்பிப்பது தான். அதனை வெறுமனே வார்த்தைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், இனவாதத்தைத் தோற்கடிப்பதையும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு சம உரிமைகளைப் பெற்றுக் கொள்வதையும் நோக்காகக் கொண்டு உண்மையாகவே போராடும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களது, புத்திஜீவிகளது, மனிதநேயர்களது மத்திய நிலையமாக அதனைக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறான பரந்த நோக்கத்துக்காக ஒன்றுசேரும் அனைவரும் தமக்குள் இருக்கும் குறுகிய தனித்துவவாத பிற்போக்குத்தனத்தையும், இனவாத மனோநிலையையும் தோற்கடிக்க வேண்டும். இனவாதத்தைத் தோற்கடித்து ஒவ்வொருவருக்கிடையிலும் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக சமூகத்தின் மத்தியிலும் தனக்குள்ளும் இருக்கும் அவ்வாறான மனோபாவத்தையும் தோற்கடிக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். அதற்கேற்ப சம உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான பலஅடிப்படைகளை சம உரிமை இயக்கம் அடையாளம் கண்டுள்ளது.


சம உரிமை இயக்கத்தின் அடிப்படைகள்   


01.     பொருளாதார வாழ்க்கையில் இனபேதமில்லாது சம வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அனைத்து தேசியப் பிரஜைகளுக்கும் உள்ள உரிமை.


அரச அல்லது தனியார் துறையில் தொழில் ஒன்றைப் பெறும்போது, விவசாயத்தில் ஈடுபடும்போது, அவற்றுக்கான காணி, நீர் உள்ளிட்ட ஏனைய வசதிகள் கிடைக்கும்போது, அல்லது வேறு ஏதாவது பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்கும்போது தமது இன அடையாளம் அதற்கு தடையாக இருக்கக் கூடாது. அப்படியான நிலை உருவாகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிராகப் போராடுவதற்கு இயக்கம் தலையீடு செய்யும்.


02.     மொழிக்கு சம வாய்ப்பு கிடைப்பதற்கான உரிமை


தமிழ் மொழி பேசும் மக்கள் சுதந்திரமாக தமது வாழ்க்கையை நடத்திச் செல்வதற்குத் தேவையான சுற்றாடலை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது. அதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். விஷேடமாக அரச நிறுவனங்களில் தமது வேலைகளை செய்து கொள்வதற்காக தமிழ் பேசும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டும். அதேபோன்று, தமிழ் மொழியைத் திரிபுபடுத்துவதற்கு எதிராக செயல்படுவதோடு, அதன் சுய வளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை உருவாக்க வேண்டும். மொழி விடயத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படும் எந்தச் mசமயத்திலும் அதற்கு எதிராக செயற்பட இயக்கம் நடவடிக்கை எடுக்கும்.


3. கலாச்சார வாழ்க்கையில் இருக்கும் சம உரிமை


தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது மத மற்றும் கலாச்சார தனித்துவங்களை ஏற்றுக் கொள்ளும், அவற்றை மதிக்கும் நிலைமையை உருவாக்க வேண்டியதோடு அந்தக் கலாச்சார தனித்துவங்களின் மீதான ஆதிக்கத் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும். அதே போன்று குறுகிய தனித்துவவாத படுகுழிக்குள் வீழ்வதற்கு எதிராகவும் போராடவேண்டும்.  அதே போன்று கலாச்சார தனித்துவங்களின் சுய வளர்ச்சிக்காக அனைத்து தேசியப் பிரஜைகளுக்கும் உள்ள உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். கலாச்சார வாழ்க்கையில் உள்ள இந்த உரிமை மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த மக்களோடு சேர்ந்து அதற்காக போராட இயக்கம் நடவடிக்கை எடுக்கும்.


4.    அனைத்து தேசியப் பிரஜைகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை


இன மத பேதங்களின்றி வாழ்வதற்கு அனைவருக்கும் இருக்கும் உரிமை தமிழர் என்ற காரணத்தினால் மறுக்கப்பட்டு அவர்கள் மீதான அடக்குமுறை நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. நாட்டின் பொதுவான சட்டதிட்டங்களை மீறி தமிழ் மக்கள் கைது செய்யப்படுவது, கடத்தப்படுவது, தடுத்து வைக்கப்படுவது, நாட்டின் ஏனைய பிரஜைகளை வித்தியாசமான விதத்தில் பரிசீலனைக்கு உட்படுத்துவது, பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்வது போன்றவை இன்று சர்வசாதாரண நிகழ்வுகளாக இருக்கின்றன. தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் விஷேட அடக்குமுறை செயற்பாட்டிற்கு எதிராக செயல்படுவதோடு, அனைத்து தேசியப் பிரஜைகளும் இன பேதமின்றி வாழ்வதற்கான உரிமைக்காக செயல்முறை போராட்டத்தில் பங்கேற்கும்.


05.    அரசியலில் சம உரிமை


எந்தவொரு இனப் பிரஜையும் இன பேதமில்லாது தான் விரும்பிய அரசியல் கருத்தைக் கொள்வதற்கு உரிமை இருக்க வேண்டும். என்றாலும் இன்று வடக்கு கிழக்கில் மக்கள் தாம் விரும்பும் அரசியல் கருத்தை ஏற்றுக் கொள்வதையும் அதற்காகச் செயற்படும் உரிமையையும் இழந்துள்ளனர். அரசாங்கத்தோடும், அரசாங்க அனுசரணை பெற்ற குழுக்களோடும் மாத்திரம் அரசியல் செய்வதற்கு அந்த உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டியதோடு, தாம் விரும்பும் எந்தவொரு அரசியல் கருத்தையும் ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது செயற்படுத்துவதற்கோ இனம் தடையாக இருக்கக் கூடாது. இந்த உரிமையை பெற்றுக் கொள்வதற்காக மக்களோடு சேர்ந்து செயல்ரீதியிலான நடவடிக்கையை இயக்கம் எடுக்கும்.


6.  சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் உண்மையான உரிமைகளை வென்றெடுப்பதற்கான பாதை, முதலாளித்துவ சமூக பொருளாதார முறையை விரட்டியடித்து கட்டியெழுப்பப்படும் சமவுடைமை சமுதாயத்திலேயே இருக்கின்றது. ஆகவே இலங்கையின் அனைத்து பிரஜைகiளும் ஒன்றிணைக்கப்பட்டு அதற்காகப் போராடப்படும்.


மேற்படி நோக்கங்களை சாதித்துக் கொள்வதற்காக அனைத்து இன மக்களோடும் கைகோர்த்து இயக்கம் மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டங்களின் வரிசை கீழ் வருமாறு:


செயற்திட்டங்களின் வரிசை   


01. ஆட்கள் பதிவு செய்யும் திணைக்களம், வாகன போக்குவரத்து ஆணையர் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்களில் தமிழ் மொழியில் தமது வேலைகளை செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளுக்காக போராடுதல்.


02.யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிரிழப்புகள், சொத்து அழிப்புகள் போன்றவற்றுக்காக நியாயமான இழப்பீட்டுத் தொகையை பெறும் உரிமையை அவசரத் தேவையாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் போராடுதல்.


03. தமிழ் மக்களின் காணி மற்றும் ஏனைய சொத்துக்கள் அரச தலையீட்டைக் கொண்டு பறிக்கப்பட்டமைக்கு எதிராக செயல்ரீதியில் தலையீடு செய்தல், அதேபோன்று வடக்கு கிழக்கு மக்கள் தமது விவசாயத் தொழில் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் காணி வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தப்படும் போராட்டடத்தின் பக்கம் தமிழ், முஸ்லிம் மக்களை அழைப்பதில் இயக்கம் தலைமைத்துவம் வழங்கும்.


04. யுத்தத்தினால் அழிவுக்குள்ளான வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த மக்களோடு சேர்ந்து போராடுதல், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுக் கொடுத்தல், விவசாயிகளுக்குத் தேவையான காணி, நீர், உரம் உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக போராடுதல்.


05. கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளினதும் தகவல்களை அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்க வற்புறுத்தப்படல்.


06. கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்வதற்காக அவர்களோடு இணைந்து போராடுதல்.


07.  இடம்பெயர் முகாம்களில் இருக்கும் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக அவர்களோடு சேர்ந்து போராடுதல்.


08. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மதத் தலங்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட முதலாளித்துவ அரசாங்கத்தின் தலையீட்டோடு மேற்கொள்ளப்படும் மத துன்புறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்.


09. யுத்தத்தின் காரணமாக கணவரை இழந்த விதவைப் பெண்களின் பொருளாதார வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதோடு, அதற்காக அந்தப் பெண்களோடு சேர்ந்து குரல் கொடுத்தல்.


10. வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களோடு சேர்ந்து போராடுதல்.


11. பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையில் ' இனம் ', சிங்களம், தமிழ்,  முஸ்லிம் மற்றும் இந்தியத் தமிழர் என குறிப்பிடுவதற்குப் பதிலாக 'இலங்கையர்' என குறிப்பிடப்படுவதற்காக மக்களோடு சேர்ந்து அரசாங்கத்தை வற்புறுத்தல்.


12. தோட்டத் தொழிலாளர், மக்கள் விடயத்தில் உண்மையான குடிமகனுக்குறிய அடிப்படை உரிமைகள், அதாவது உணவு, உடை, உறைவிடம், கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக அந்த மக்களோடு சேர்ந்து போராடுதல்.


13. "தோட்டத் தொழிலாளர்" களுக்கு வழங்;கப்படும் நாளாந்த சம்பளத்துக்குப் பதிலாக நிரந்தர சம்பளத்தை வழங்குமாறு வற்புறுத்தும் போராட்டத்துக்குள் அந்த மக்களை இணைத்துக் கொள்ளல், அவர்களுக்கு அதற்குத் தேவையான தலைமையை வழங்குதல்.


14.பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தி வரும் இராணுவ மாதிரியான ஆட்சியை ஒழித்து சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடுதல். இராணுவத்தால் செய்யப்படும் வற்புறுத்தல்கள் மற்றும் அதனோடு சேர்ந்த அடக்குமுறைச் செயற்பாட்டை நீக்குதல். வீடுகளில் குடும்பப் படங்களை தொங்கவிடுதல் போன்ற கொடுமைகள் மற்றும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக மக்களோடு சேர்ந்து நடவடிக்கை எடுத்தல்.


15. அரச நிறுவனங்கள், பாடசாலைகள் போன்றவற்றில் அரசியல் தலையீட்டினால் மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான மதநடவடிக்கைகளையும் நிறுத்தி, லௌகீக இருப்பை உறுதி செய்வதற்காக போராடுதல்.


16. இலங்கை இனப்பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தினால் வாழ்வதற்கான வழிமுறைகள் அழிக்கப்பட்டமையும், இனரீதியிலான அழுத்தமும் காரணமாக  பாரிய அழிவுக்காளான தமது குடும்பங்களின் உயிர் பாதுகாப்புக்காக தமது உயிரைத் துச்சமென மதித்து தமது மண்ணிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் மற்றும் அதன் மூலம் 'அகதிகளாக " வாழ்ந்து வரும் பிரஜைகளுக்கு உண்மையான மனிதாபிமான வாழ்க்கையை பெற்றுக் கொள்வதற்காகப் போராடுதல்.

-சம உரிமை இயக்கம் (Movement for Equal Rights)