Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்று நடைபெற்ற சமவுரிமை இயக்கத்தின் போராட்டம் (படங்கள்)

சம உரிமை இயக்கத்தின் போராட்டக்குழுவினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது இன்று கொழும்பில் புறக்கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னராக முதன் முதலில் சிங்கள உழைக்கும் வர்க்கத் தோழர்களினால் சிறுபான்மை இனத்தவரின் உரிமைக்கான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் பின்னால் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் செயல்பாட்டின் ஊடாக காணமுடிகின்றது.

கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை உடன் விடுதலைசெய்!

வடக்கு கிழக்கு காணிக் கொள்ளையை உடன் நிறுத்து!

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!

சம உரிமைக்காக போராடுவோம்!

கடத்தல், காணாமலாக்கல்களை உடன் நிறுத்து!

போன்ற கோசங்களை ஆங்கிலம், தமிழ், சிங்கள ஆகிய மொழிகளில் தாங்கிய வண்ணம் பெருந்தொகையான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் தெற்கில் பல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன ஐக்கியம் பாட்டாளி வர்க்கப் புரட்சி என பம்மாத்து விட்ட முன்னை நாள் ஆயுத இயக்கங்களின் அரசியல் வங்குரோத்துதனமும் மீண்டுமொரு முறை அம்பலத்திற்கு வந்துள்ளது. அரசியல் உரிமைக்காக போராடத் தெரியாத குறுந்தேசியவாத தமிழ் அமைப்புக்களின் அரசியல் வங்குரோத்துதனமும் மீண்டுமொருமுறை அம்பலத்திற்கு வந்துள்ளது.

போராட்டங்களின் ஊடாக எதிரிக்கு இடையூறு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சும்மா அரசியல் அறிக்கைகளையும், இணைய தள வீராப்புக்களையும் வீசுவதால் மாற்றங்கள் நிகழப்போவது இல்லை. மக்களைத் திரட்டி போராட வேண்டும்.

இன்று அனைத்து மக்களின் உரிமையை அங்கீகரிக்கக்கோரும் சிங்களத் தோழர்களுடன் தமிழ் பேசும் உழைக்கும் மக்களும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கைகோர்ப்பதன் ஊடாகவே அனைத்து மக்களின் உரிமையை வென்றெடுக்க முடியும்.