Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

ஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

ராஜபக்சே அரசு நடத்திய இன அழிப்புப் போர் தொடர்பாக விசாரிப்பதற்கு, ராஜபக்சே அவர்களால் நியமிக்கப்பட்ட LLRC குழுவின் பரிந்துரைகளை, ராஜபக்சே அரசு விரைந்து நிறைவேற்றியிருக்கிறதா என்பதை, ஐ.நா மனித உரிமைகள் குழு கண்காணிக்க வேண்டும் என்பது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்.

மனித உரிமை என்பது மற்ற நாடுகளின் கையை முறுக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்தும் கருவி என்பதும் ஐ.நா மன்றம் எனப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் ரப்பர் முத்திரை என்பதும் எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு, ராஜபக்சே போன்ற பாசிசக் கிரிமினல்கள், தமது குற்றத்தை மறைத்துக்கொள்ளும் முகத்திரையாக மட்டுமே இறையாண்மை என்ற சொல் பயன்படுகிறது என்பதும் உண்மை.

இலங்கையின் இறையாண்மை விசயத்தில் இலங்கையை விடவும் அதிகமாக இந்திய அரசுதான் கவலைப்பட்டு வருகிறது என்பதே வரலாறு. இப்போதும் கூட அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்தியா. “ராஜபக்சே ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஐ.நா கண்கணிக்கலாம்” என்பது இந்தியா இந்த தீர்மானத்துக்கு கொண்டு வந்திருக்கும் திருத்தம்.

நேற்றைய தினமணியின் முதல் பக்க செய்தியைப் படித்துப் பாருங்கள்:

“போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆன பின்னரும் மனித உரிமை மீறல் பற்றி விசாரித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தீர்மானத்தினை அறிமுகப்படுத்தும் அமெரிக்க பிரதிநிதி பேசுகிறார்.

“போர் முடிந்து 3 ஆண்டுகளே ஆகியுள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் பேசியிருக்கின்றன.

“இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய இந்தியப் பிரதிநிதி, வாக்கை மட்டும் தீர்மானத்துக்கு ஆதரவாக அளித்திருக்கிறார். இந்தியா முன்வைத்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

திருத்தப்பட்ட இந்த தீர்மானம், 2009 நாடாளுமன்றத் தேர்தல் நாளுக்கு முன், கருணாநிதி உண்ணாவிரதமிருந்து பெற்றுத்தந்த “போர்நிறுத்தத்தையும்”, ஈழத்தாய் வாங்கித் தர விரும்பிய “தமிழ் ஈழத்தையும்”  ஒத்ததாக இருப்பதனாலோ என்னவோ, கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே இதனை ஆதரித்திருக்கின்றனர்.

இந்திய அரசின் உதவியும் வழிகாட்டுதலும் இல்லாமல் இன அழிப்புப் போரை ராஜபக்சே துவங்கியிருக்கவும் முடியாது, முள்ளிவாய்க்காலில் முடித்திருக்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்த, மறுக்கவியலாத உண்மை.  எனினும், அமெரிக்க அரசின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று, தமிழக காங்கிரசு தொடங்கி, தமிழுணர்வாளர்கள் வரை அனைவரும் ஓரணியில் நின்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்கள்.

மன்மோகன் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இன அழிப்புப் போர்க்குற்றத்திற்காக ராஜபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணக்குழுவின் நேரடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரினார் பழ.நெடுமாறன்.

ஈழத்தமிழர்களின் கழுத்தில் ஈரத்துணி போட்டு இறுக்கிய இந்திய அரசு, கத்தி வைத்து அறுத்த ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்தால், அது இந்தியா செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகி விடுமா? இன அழிப்புப் போர்க்குற்றத்துக்காக ராஜபக்சே மீது இந்தியா விசாரணை கோரவேண்டும் என்றால், இந்தக் குற்றத்தின் பங்காளியும் வழிகாட்டியுமான இந்தியா மீது யார் விசாரணை கோருவார்கள்? இந்தியக் குடிமகன் என்ற முறையில் இந்திய அரசின் குற்றத்தை அம்பலப்படுத்திக் கூண்டிலேற்றுவது நம்முடைய கடமையா, அல்லது இந்திய ஆளும் வர்க்கத்தை தப்பவைப்பதா?

இந்த விமரிசனம் தமிழுணர்வாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது. அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய வல்லாதிக்கம் பற்றியெல்லாம் தங்களுக்குத் தெரியுமென்றும், ராஜபக்சே அரசை சர்வதேச சமூகத்தின் முன் கூண்டிலேற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் கூறக்கூடும்.

“இது இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து அமுக்கும் ராஜதந்திரம்” என்றும் அவர்கள் இதற்கு விளக்கம் தருவார்கள். இதுவும் 1983 முதல் நாம் பலமுறை கேட்டுப் புளித்த வசனம்தான். இந்திய உதவியுடன் ஈழ விடுதலையை சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக, ஈழ இனவாதிகள் 1983 முதல் நடத்திவரும் சந்தரப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இன்றைய கோரிக்கையும்.

மறுபடியும் முதல்லேர்ந்தாஅமாம்அதுவேதான்.

000

இனி தீர்மானத்துக்கு வருவோம். இரந்தேனும் இந்திய அரசின் ஆதரவைப் பெறவேண்டிய அளவுக்கு அந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைகள் மன்றத்தின் முன் வைக்கப்பட்ட அமெரிக்க அரசின் நகல் தீர்மானம், இலங்கையின் மீது இனக்கொலைக் குற்றமோ, போர்க்குற்றமோ சாட்டவில்லை. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக ஒரு சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கோரவில்லை.

மாறாக, “ராஜபக்சே அரசால் நியமிக்கப்பட்ட Lessons Learnt and Reconcilliation Commission (படிப்பினைகளைக் கற்றல் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குதலுக்கான ஆணையம்) முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்” என்று பாராட்டுகிறது. அதன் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமல்படுத்துமாறும், எல்லா இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதற்கான திட்டவரைவு ஒன்றினை, சாத்தியப்பட்ட அளவு விரைவில் முன்வைக்குமாறும் கோரியிருக்கிறது.

LLRC என்ற அமைப்பை ராஜபக்சே அரசு நியமிப்பதற்கான நோக்கம் என்ன? இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குகளுக்கு இழுக்கப்படுவோமென்பதை இலங்கை அரசு அறியும். நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் அடைபட்டுவிடவில்லை என்று காட்டுவதன் மூலம் சர்வதேச தலையீட்டினை முறியடிப்பதுதான் ராஜபக்சே LLRC என்ற அமைப்பை நியமிப்பதற்கான நோக்கம். இது லாக் அப் கொலை நடந்தவுடன் அரசு போடும் ஆர்.டி.ஓ விசாரணையைப் போன்றது.

போரின் துவக்க காலத்தில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டது மற்றும் பிற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையொட்டி, அவற்றை சமாளிப்பதற்காக, 2007 இல் “சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு” ஒன்றை, ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் இலங்கை அரசு நியமித்தது. அதுவும் LLRC யைப் போன்றதொரு இழுத்தடிப்புத் தந்திரமே. இந்த தந்திரங்கள் அனைத்தையும் இந்தியாதான் இலங்கைக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது.

தற்போது இந்தியா கொண்டுவந்திருக்கும் திருத்தம், “தொழில் நுட்ப உதவி” என்ற ஷரத்தின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா தலையிடுவதற்கான வாய்ப்பையும் அடைத்து விட்டது. தீர்மானத்தை ஆதரிப்பது என்ற பெயரில் இந்தியா கொண்டு வந்திருக்கும் இந்த “சின்ன” திருத்தம், மனித உரிமைக் கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாக செயல்படும். இது இந்திய இலங்கை அரசுகள் பேசி வைத்துக் கொண்டு நடத்தியிருக்கும் கபட நாடகம்.

ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடியவர்கள், இனப்படுகொலைக் குற்றவாளியான மன்மோகன் அரசை, அக் குற்றத்திலிருந்து விடுவித்தது மட்டுமின்றி, நீதிபதியாகவும் நியமித்து விட்டார்கள். தீர்ப்பை “திருத்தி” எழுதி, குற்றவாளி ராஜபக்சேவை விடுவித்து விட்டார் மன்மோகன் சிங்.

இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல்  தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள்.

“உருகு .. உருகு” என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான் மனமுருகினரேயன்றி, வெண்ணெய் உருகவில்லை.

உருகும் என்பது உணர்வாளர்களின் நம்பிக்கை.

நன்றி : வினவு

http://www.vinavu.com/2012/03/24/geneva-resolution-srilanka/