Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

'ஒரே ஆகாயத்தின் கீழ் " - நம்பிக்கை தரும் ஆரம்பம்!!!

கடந்த மாதம் கறுப்பு ஜூலையை  மையப்படுத்தி பல நிகழ்வுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டன. அவை எல்லாம் அந்த துயர்படிந்த மூன்று தினங்களை நினைவு கூறுவதாகவே இருந்தன. இந் நிகழ்வுகளில்  'மாற்றத்திற்கான இளைஞர்கள்"(Youth For Chenge - குவேராவை நினைவுக் கூறும் முகமாக CHANGE ஆனது CHENGE என எழுதப்படுகிறது)   அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட 'ஒரே ஆகாயத்தின் கீழ்"  நிகழ்ச்சி திட்டம் உறுதியான நம்பிக்கையை தருவதாகவும் முற்போக்கனதாகவும் இருந்தது.

ஜூலை 23 அன்று நானுஓய வரை புகையிரதத்தில் பயணித்த Youth For Chenge  அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் வழிநெடுகிலும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுபிரசுரங்களை பகிர்ந்ததோடு நுவரெலிய, ராகலை, ஹிபோறேஸ்ட் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து வீதிநாடகங்கள், தெருகீதங்கள், உரைகள் மூலம் இனவாதத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர். இந்த நிகழ்ச்சி திட்டம் புலனாய்வு பிரிவினரின் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தடைகளுக்கும் மத்தயிலும் வெற்றிகராமாக நடந்து, மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. கறுப்பு ஜூலையை முன்னிட்டு நடந்த பல நிகழ்வுகளில் 'ஒரே ஆகாயத்தின் கீழ்" நிகழ்ச்சி திட்டம் கவனத்தை ஈர்க்க காரணம் தனியே கறுப்பு ஜூலையை நினவுக்கூறும் முகமாக அல்லாமல் நீண்ட கால திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இனவாததிதிற்கு எதிராக சிங்கள, தமிழ் மக்களிடம் தைரியமான கருத்தாடல்களை மேற்க்கொண்டமையே அதன் முக்கியதுவம் ஆகும். இந்தவேளையில் இதன் பின்னணி தொடர்பாக கதைக்க வேண்டியுள்ளது.

மோட்டுச்  சிங்களவன், பரதெமழா  இப்படித்தான் தமிழன் சிங்களவனையும், சிங்களவன் தமிழனையும் தூற்றி கொண்டிருந்தார்கள், துற்றிக்கொண்டிருக்கிறார்கள். சில காலத்திற்கு முன்  20 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், 30 சிங்களவர்கள்  கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளியாகும் போதெல்லாம் எதோ தாங்கள் பெரிதாக சாதித்தது போல் துள்ளிக்குதித்துக் கொன்டிருந்தார்கள். இவ்வாறே 1956 இனக்கலவரம், 1981 யாழ் நூலக எரிப்பு, 1983 இனக்கலவரம், இறுதியாக முள்ளிவாய்க்கால் என தமிழர்கள் மீது பேரினவாதம் மேற்க்கொண்ட அடக்கு முறையின் வடுக்கள் தமிழர்களையும் சிங்களவர்களையும் இரு துருவங்களாக பிரித்து வைத்துள்ளன. தனிப்பட்ட முறையில் தமிழ் பாட்டாளி வர்க்க குடிமகனுக்கும், சிங்கள பாட்டாளி வர்க்க குடிமகனுக்கும் குரோதங்கள் இல்லை. ஆனாலும் தமிழரும், சிங்களவரும்  ஒருவரை ஒருவர் பரம எதிரிகளாக நோக்குகின்றனர். தமிழனை அடக்குவதால் சிங்களவனின் குடும்ப பிரச்சனைகள் ஒருநாளும் தீர்க்க படாது. சிங்களவர்களுடன் பகைமை பாராட்டுவதால் ஒருப்போதும் தமிழர்களின் பிரச்சனை   தீர்க்கப்படாது. ஆனாலும் நாம் ஒருவரை ஒருவர் பரம எதிரிகளாக பார்க்கின்றோம், பார்க்கின்றோம் என்பதை விட பார்க்க பழக்கப்பட்டிருக்கின்றோம். ஏன் எமக்கு இது பிழை என்று உணர முடியாமல் உள்ளது? இந்த இடம் தான் நாம் எம் பகுத்தறிவை பயன் படுத்தவேண்டிய இடம்.  


ஒரு விடயம் தெளிவாகின்றது. தமிழர்களையும் சிங்களவர்களையும் பிரித்து இனவாதத்தை பரப்பி உரமிட்டு வளர்ப்பதன் மூலம் யார் யாரெல்லாம் பயனடைகிறார்களோ, அவர்களின் நிகழ்ச்சி திட்டமே இது. நாம் இவர்களின் வண்டிலையே இதுவரைக்காலமும் மாடுகளாக இழுத்து வந்துள்ளோம். நாம் இதிலிருந்து மீள முடியாத வண்ணம் லாடமிடப்பட்டிருக்கின்றோம்.


தமிழ் மக்கள் மீது பேரினவாத அடக்குமுறையை பிரயோகிப்பதன் மூலம் சிங்கள மக்களை குஷிபடுத்தி, அவர்கள் வாக்குகளை பெற்று தன் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள சிங்கள பேரினவாத முதலாளி வர்க்கத்தினரும், சிங்கள சமூக கட்டமைப்பில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள காவியுடைக்காரர்களுமே இனவாதத்தை உரமிட்டு வளர்க்கும் கீழ்த்தரமான வேலையை செய்கின்றார்கள். இதற்காக கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படியான ஒரு கறைபடிந்த சம்பவம்  தான் 1983 இல் கறுப்பு ஜூலை பயங்கரம் அரங்கேறிய நிகழ்வு. தமிழர்கள் மீது சுதந்திரத்துக்கு பின் தொடர்ச்சியாக மேற்க்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், தமிழ் மொழி புறக்கணிப்புகள் என எல்லாவற்றிற்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்ட சகல ஜனநாயக போராட்டங்களும் தோல்வியடைந்த நிலையில், தமிழர்கள் ஆயுத போராட்டம் தொடர்பாக தயக்கத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. மேலும் யாழ் நூலக எரிப்பு, பல்கலைகழக தரப்படுத்தல் என தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழ் இளைஞர்களை ஆயுத போராட்டத்தை தீவிரமாக நாடச் செய்தது. இந்த நிலையில் தான் 1983 ம் ஆண்டு ஜூலை மாதம் திருநெல்வேலியில் தமிழ் ஆயுத போராளிகளினால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். இச் சம்பவம் ஆயுத போராட்டம் தொடர்பாக தமிழர்களிடம் நிலவிய தயக்கங்களை எல்லாம் தகர்த்தெறிந்ததை விளங்கிக்கொண்ட சிங்கள பேரினவாதம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து பிரச்னையை தீர்ப்பதை விடுத்தது ஆயுத போராட்டம் தொடர்பாக தமிழர்களிடம் தோன்றிய தன்னம்பிக்கையை அடியோடு அழிக்கும் நோக்கிலும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படும் செல்வாக்கிழப்பை சரி செய்யவும் காடையர்களையும் தனது சிங்கள கூலிப்படையையும்   ஏவி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றது. தமிழ் பெண்களை மானப்பங்கப்படுத்தி   மார்பகங்களை துண்டித்தது, அடித்துக்காயப்படுத்தி சொந்த இடங்களை விட்டு விரட்டியடித்தது. ஏராளமான சொத்துக்களை சூறையாடி அழித்தது. 29 வருடங்களுக்கு முன் கறுப்பாக்கப்பட்ட அந்த ஜூலை மாதத்தின் 3 தினங்களுக்குள் கற்ப்பனையில் வாழ்ந்து விட்டு வந்தாலும் உணர்ச்சிகள் இச்தம்பிதம் அடைந்து விடுகின்றன.


இது முதல் கொண்டு தமிழர்களும், சிங்களவர்களும் 26 வருடங்களாக கொடூரமான யுத்தத்திற்கு முகம் கொடுத்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் தம் வாழ்வை இழந்தார்கள். பேரழிவு நடந்தேறியது. ஆனாலும் தீர்வு கிடைத்தப்பாடில்லை. யுத்தத்தை நடத்தியவர்கள் தன் வீட்டு கஜானாக்களை நிரப்பினார்கள். இனவாதம் பெருமுகம் கொண்டு உச்சத்தையடைந்தது. இன்று யுத்தம் இல்லை ஆனால் அடக்குமுறையும், பேரினவாதமும் முன்பைவிட வேகமாக இயங்குகிறது. தற்போது பேரினவாதம் களத்தடுப்பாளர்கள் இல்லாத மைதானத்தில் துடுப்பெடுத்தாடுகிறது. பந்து மட்டையில் படக் கூட தேவையில்லை. விக்கட்டில் படாமல் இருந்தாலே போதும் .... என்ற நிலை. ஒரு சிங்களவன்  இல்லாத இடத்தில் கூட புத்தர் சிலைகள், எங்கும் சிங்கள மயமாக்கல் முயற்சிகள், ஒரு தமிழனுக்கு 5  இராணுவத்தினன் என்ற ரீதியில் இராணுவ ஆட்சி, முஸ்லிம் பள்ளிவாசல்கள் இடிப்பு என  என உசேன், போல்ட்டின் உலகசாதனையை முறியடிக்கும் வேகத்தில் செல்கிறது பேரினவாதம்.  இப்படியே சென்றால் இதற்கு முடிவென்ன? தனிப்பட்ட குரோதங்கள்  கூட இல்லாத தமிழர்களும் சிங்களவர்களும் ஏன் அர்த்தமில்லாமல் பகமை பாராட்ட வேண்டும்?

இந்த வரலாற்றை  மாற்ற வேண்டிய சரியான  நேரம் இது தான். இப்போதும் பகுத்தறிவை     பாவிக்காவிட்டால் நாம் உருத்தெரியாமல் அழிவடைய நேரும். சக மனிதர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் மக்கள் வாழும் சுபீட்சமான தேசமொன்றை கட்டியெலுப்புவது எப்படி?

சிலர் தம்மை நிலைநிறுத்த அரங்கேற்றும், பரப்பும் இனவாதத்திலிருந்து நாம் தப்பி பிழைக்க வேண்டும் என்றால் அந்த இனவாதம் தோற்க்கடிக்கப்படல்  வேண்டும். இந்த முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்தியத்துக்கு முட்டு கொடுக்கும் பொருளாதார முறைக்குள் ஒருநாளும் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியாது. அவ்வாறு உருவாக்கப்படும் தேசிய ஒருமைப்பாடு நிச்சியமாக ஒரு பிரிவின் சுயநிர்ணயத்தை நிராகரித்து அவர்களை அடக்கி ஒடுக்கி ஏற்படுத்தப்படும் தேசிய ஒருமைப்பாடாகவே இருக்கும்.   

எனவே இந்த பிழையான எம்மை அழிவிற்கு அழைத்து செல்லும் சமூக பொருளாதார முறையை மாற்றியமைக்கும் போரரட்டத்தின்  மூலமே இந்த இனவாதத்தை தோற்கடிக்கலாம். இந்த ஒரு போராட்டமே தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளக்கூடிய போராட்டம். இவ்வாறன தமிழர்களும் சிங்களவர்களும் முகம்கொடுக்கும் பிரச்சனைக்கு பொதுவான காரணிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே இனவாதத்தை தோற்கடித்து அடுத்தவரின் சுயநிர்ணயத்தை ஆதரிக்கும் சமூகத்தை நிர்மாணிக்க முடியும். இந்த போராட்த்தை நிச்சியமாக முதலாளித்துவ அமைப்புகளாலோ அல்லது சமூக ஜனநாயகத்தை ஆதரிக்கும் அமைப்புகளினாளோ நடத்த முடியாது. தீவிர இடது சாரி சிந்தனையாலர்களினாலேயே இந்த முற்போக்குத்தனமான போராட்டத்தை சகலரையும் இணைத்துக் கொண்டு  கொண்டு நடத்த முடியும். 

அந்த வகையில் Youth For Chene இளைஞர் இயக்கம் கறுப்பு ஜூலையை மையப்படுத்தி ஆரம்பித்துள்ள ஒரே ஆகாயத்தின் கீழ் எனும் நிகழ்ச்சி திட்டம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. காரணம் இககட்டுரையில் குறித்து காட்டப்பட்ட விடயங்களை மையப்படுத்தியே இந்த இளைஞர் இயக்கம் செயற்படுகின்றது. இவ்வாறன முற்போக்கான வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும். அவ்வாறான முயற்சிகளில் அரசியலை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.


பழ.றிச்சர்ட்.

-