Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்-மண்ணும், யுத்தக் காயங்களும், இன்றைய நிலையும்

யாழ்ப்பாணத்தில் நிலைமைகள் படுமோசமாக உள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. அங்கு நிலவிவரும் இனமறியா அச்சம் காரணமாக, யாழ் குடாநாட்டில் சமூகநிகழ்வுகள் அனைத்தும், மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைபெறுவதாக உணரமுடிகிறது. 2009  தை முதல்   இறுதி  யுத்த நாட்களில் இருத்தது போன்ற  இனம் புரியா அச்சமும், பயமும் சோகநிலையும் யாழ் குடாநாடு முழுவதும் பரவியிருப்பதாக உளவளத்துறையினர் தெரிவிக்கின்றனர். பணிகள் முடிந்த பின் விரைவாக யாழ் நகரை விட்டு வெளியேறித் தமது சொந்தஇடங்களுக்கு விரைந்து  செல்லும் பரபரப்பு யாழ் பஸ்நிலையங்களில் காணக் கூடியதாகவுள்ளது.   இதனால் பிற்பகல் 6 மணிக்கு முன்பே நகரம் வெறிச்சோடி விடுகிறது. மொத்தத்தில், யுத்தின் பின்னாக சிறுது சிறிதாக இயல்புநிலைக்குத்  திரும்பிய யாழ்பாணச் சமூகம்,  இன்று திரும்பவும் பாரிய சமூக மனஅழுத்தத்தை சந்தித்துள்ளது.

இந்நிலைக்கு, பல்கலைகழகத்தில் நடைபெற்ற இலங்கை ராணுவம், ஒட்டுப்படை, புலனாய்வுபடையினர் இணைந்து  நடத்திய தாக்குதல்தான் ஆரம்ப காரணம் என்றாலும், 30 வருடத்துக்கு  மேலான  ஒடுக்குமுறையும்,  யாழ்  சமூகத்தில் யுத்தம் ஏற்படுத்திய காயங்களும், சமூக ஆழ்மனதில்  மனைந்து கொண்டிருக்கும் வடுக்களுமே முதல்மைக் காரணிகளாகும். இந்த யுத்தக்காயங்களும், வடுக்களும் பல்கலைகழகத்தில் நடந்த தாக்குதல்களால் மறுபடியும் சமூக ரீதியான வலிகளையும், உபாதைகளையும், கசப்பான "பழைய" நினைவுகளை அசைபோடும் சமூகஅமுக்க நிலையை யாழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.  


தற்போது யாழில் என்ன நடக்கிறது, ஏது நடக்கிறதென்று எவருக்கும் அதாவது  மக்கள்  எவருக்கும்  தெரியாத, புரியாத நிலை நிலவுகிறது. யாழில் எத்தனை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், யார் யார் கடத்தப்பட்டுள்ளனர் என்ற சரியான விபரங்கள் BBC போன்ற சர்வதேச ஊடகத்துக்கோ அல்லது தமிழ் அரசியலில் செல்வாக்குள்ள உதயன் பத்திரிகைக்கோ தெரியாமல் உள்ளது. இன்று  யாழ் சமூகத்தால் "சரியான" தகவல்களைத் தரும் ஊடகங்கள் என நம்பப்படும் இந்த இரு ஊடகங்ககள் கூட, சரியான  வெளிபடையான தகவல்களை மஹிந்த அரசயந்திரடமிருந்து பெறமுடியாத நிலையிலுள்ளனர் . 


ஏன், யாழில் இன்று பதவியில் இருக்கும் போலிஸ் தலைமை அதிகாரி எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரிக்கு கூட, மேற்படி கைதுகள் பற்றிய எந்த தகவலும் தனக்குத் தெரியாதென கைவிரிகிறார்.  மேலும், யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற  வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரமானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட முடியாது என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.  'யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸ் அதிகாரிகள் தாம் கைது செய்யவில்லை என தெரிவிக்கின்றார்கள்.   

இது ஒருபுறமிருக்க இன்றுள்ள பிரச்சனையின் நடுநாயகமாக விளங்கும் பல்கலைக்கழகச்சமூகம் முற்று முழுதாக பல கூறுகளாக பிரிவடைந்த நிலையிலுள்ளது. அரசியல் சார்புகள், தனிமனித நலன்கள், லஞ்சலாவண்யம், பதவிவெறி போன்ற காரணிகள் மேற்படி பிரிவுகளுக்கான அடிப்படைகளாகும். யாழ்-பல்கலைகழகத் தலைமை இன்று, மாணவர் நலனைக் கவனிக்கும் பணியை விட மஹிந்த அரசின் நலனையும், யாழ்ப்பாணத்தைக் கட்டியாளும் ராணுவத்தளபதி கத்துரு சிங்கவின் நலனையும் முன்னிறுத்தியே இயங்குகிறது. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர், "நமக்கென்ன" என்ற போக்கில் "தாமுண்டு தமது பதவியுண்டு" என்ற போக்கில் இருகின்றனர். வெகுசிலரே அரசியல் வித்தியாசங்களுக்கு அப்பால் சமூகநலனை முன்னிறுத்தி, மாணவர்  நலன்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்களில் சிலர் இன்று காலை (07.12.2012) யாழ்-பல்கலைகழகத்தில் சிலமணிநேர கவனஈர்ப்புப்  போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


தெற்கைப் பொறுத்தளவில், சில பல்கலைகழகங்களில் யாழ்-மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துப் பல்கலைகழக மாணவர் சங்கத்தால்   போரட்டங்கள் நடத்தபட்டது.  குறிப்பாக கண்டி பிரதேனிய பல்கலைகழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இருதடவைகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அத்துடன் , பல தென்னிலங்கை  மாணவர் சங்கங்கள் கண்டன அறிக்கைகளை  வெளியிடுள்ளன.   தற்போது , யாழில் பெரியபோராடங்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையிலும்,    கிழக்கில் ஒருசிறு மாணவர்  ஆர்பாட்டத்துடன் ஆதரவுக் குரல்கள் ஓய்ந்து போயுள்ள நிலையிலும், அரச புலனாய்வு படையினரின் கைதுகள் தொடர்கின்றன. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த கைதுகளை நிறுத்தலாம், கைது செய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யலாம் என நினைத்திருந்த  சில அரசியல்வாதிகளின் நினைப்பில்  அரசும் அதன் படைகளும் மண் போட்டுள்ளன. கைதுகள் தொடர்கின்றன!  


இந்நிலையில் சிறு சிறு ஆர்பாட்டமும், அறிக்கை விடுதலும் இன்று போதுமானவையல்ல.  இயல்பாக, எந்த வித எதிர்ப்பையும் யாழ் சமூகம் காட்ட முடியாத நிலையில், போராட்ட வடிவங்கள் மாற்றப்பட வேண்டும். அது ஏதோவொரு விதத்தில் யாழ் மண்ணிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் அல்லது தமிழ் மக்களிடத்திருந்தே வெளிவர வேண்டும். அது ஆயுதப்  போராட்டம் தவிர்ந்த  எதுவாகவும்  இருக்கலாம்.  ஆனால் அது அனைத்துச் சமூகமும் உணர்வு பூர்வமான வகையில் பங்கு  கொள்ளும் பல வகைப் போரடங்களாக  அமைதல் வேண்டும். அது நாடு தழுவிய கையெழுத்து போராட்டமாகவோ, முழுநாள் கடையடைப்பாகவோ, அமைதியான மனித சங்கிலிப் போரடமாகவோ இருக்கலாம். அதிகாரத்துக்கு எதிரான உலகமக்கள்  போராட்ட வரலாற்றில் பல்லாயிரம் உதாரணங்கள் உள்ளது. அந்நிலையில்,  மக்கள் நலம் சார் தென்னிலங்கை சக்திகளும், புலம்பெயர் மக்களும் துணை நிற்க வேண்டும்!


இதனடிப்டையில், ஒட்டுமொத்த  தமிழ் சமுகமும், சமூக உளவியல் அழுத்தத்திலிருந்து விடுபட்டு, புதிய போராட்ட வடிவங்கள் மூலம் எழுச்சி கொள்வது மட்டுமே, தனது யுத்தக்காயங்களுக்கும்,    வலி கொடுக்கும் வடுக்களுக்கும் போடும் மருந்தாகவிருக்கும்.

-ஜனநாயகம் (இலங்கை)